Sendhoorapuve 1988பழக்கப்பட்ட வீட்டு முகம். ஆனால் பேரழகு. பக்கத்து வீட்டுக் குரல். ஆனால் வசீகரம். ஹேர் ஸ்டைலுக்கே தனித்த குறியீடு என்று அத்தனை உயரத்தில் ஆணழகன்.

திடும்மென ஒரு இளைஞர் கூட்டம் திரைப்படக் கல்லூரியில் இருந்து வெளி வருகிறது. அதுவரை இருந்த சினிமா லுக்கை மாற்றுகிறது. அதில் முக்கியமான ஒருவராக இருக்கிறார் ராம்கி.

முதல் படமே "சின்ன பூவே மெல்ல பேசு" பிரபுவோடு இணைந்து நடிக்கிறார். ஆட்டம் பாட்டம்....சண்டை, காதல் என்று ஒரு ஹீரோவின் கனக்கச்சிதமான வேலையை அத்தனை இயல்பாக அழகியலோடு செய்கிறார்.

"யார் இந்தப் பையன்...!" என்று புருவம் உயர....மூன்றாவது படம் விஜயகாந்த் அவர்களோடு சேர்ந்து "செந்தூரப்பூவே...."

நிரோஷாவும் ராம்கியும் இறுதிக் காட்சியில்... வில்லன்களிடம் இருந்து தப்பித்து ரயில் ஏறும் முன் ஓடி வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம்.. சீட்டின் நுனிக்கே இழுத்துப் போனது. எப்படியாவது இவர்கள் சேர்ந்து விட மாட்டார்களா சென்று ஏக்கம், படம் முடியும் வரையும் ஏன் படம் முடிந்த பிறகும்...... கூட இருந்தது. அந்த ஜோடி நிஜத்திலும் இன்று வரை இணைந்திருப்பது பேரழகு. சில ஜோடிகள் தான் காதலுக்காக படைப்பட்டிருப்பார்கள். அப்படி ஒரு ஜோடி இவர்கள்.

சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடிக்கும் ராம்கி... காதல் காட்சிகளில்... பளீர் புன்னகையால்.... போகிற போக்கில் இயல்பாக கொள்ளை அடித்து விடுவார். காமெடியும் பொருந்தி வரும். "இணைந்த கைக"ளைத் தொடாமல் இவரைப் பற்றி சொல்வது முழுமை பெறாது. தன் நண்பனான அருண்பாண்டியனோடு சேர்ந்து அடித்தாடிய ஆட்டமெல்லாம் இணைந்த கைகளின் உச்சம். இன்றைய கால கட்டமாக இருந்தால்... இன்னும் இன்னும் மிகப்பெரிய சினிமாவாக அது மாறி இருக்கும். அப்போதே அத்தனை பிரம்மாண்டம். இடைவேளைக் காட்சியில் இரண்டு மலைகளுக்கு இடையில் மாட்டிக் கொண்டு தவிக்கையில்... ராம்கியின் பாவனைகள்... பிரமிப்பு. அநேகமாக அது டூப் போடாமல் அவரே செய்த காட்சி என்று நினைக்கிறேன். சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட பெரும்பாலய சண்டைக்காட்சிகளில் தான் டூப் போடுவதில்லை என்று கூறி இருந்தார். ஸ்டண்டும் தெரிந்த நடிகர். நன்றாக கம்பு சுற்றுவார் என்பது கூடுதல் செய்தி.

Ramkiநிறைய ஸ்க்ரீன் ஷேரிங் உள்ள நடிகர் என்று இவரை சொல்லலாம். 80களின் முடிவில் தமிழ் சினிமாவுக்கு வந்த இந்த ஹீரோ எந்த ஈகோவும் இல்லாமல் எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் திரையைப் பகிர்ந்து கொண்டது எல்லாக் காலத்துக்கும் முன்மாதிரி.

தங்கச்சிக்காக வதம் எடுக்கும் "மருதுபாண்டி" படமெல்லாம்... ரத்தம் தெறிக்க சதம் அடித்தவை. நிரோஷா ஒரு பக்கம் செத்துக் கொண்டிருக்க ஒரு பக்கம் அடியாட்களிடம் அடிபட்டு "பாடிப் பாடி அழைத்தேன்.... ஒரு பாச ராகம் இசைத்தேன்" என்று பாடுவதெல்லாம்... உள்ளே அதிரும் காதலின் சுவடுகள். சிறு வயதில் அக்காக்கள் மத்தியில் ராம்கியின் ரசிகன் என்பதே மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்ததை.... காதலின் பிராம்மாண்டத்தோடு நினைத்துக் கொள்கிறேன்.

படம் ஆரம்பித்து, கிட்டத்தட்ட இடைவேளை வரும் சமயத்தில் ஹீரோ அறிமுகம் ஆகும் "கருப்பு ரோஜா " அட்டகாசமான மேக்கிங் உள்ள பிக்சர். அப்படி ஹீரோ என்ட்ரியே புது முயற்சி தான். பில்லி சூனியம் பற்றிய தமிழில் அரிதாக எடுக்கப்பட்ட சில படங்களுள் ஒன்று. சினிமாவில் எடுக்கப்பட்ட நிறைய புது முயற்சிகளில் ராம்கியின் பங்கு இருப்பதை சற்று உற்று நோக்கினால் கண்டுணர முடியும்.

"மாயா பஜார் 1995, ஆத்மா" என்று அப்போதே முகம் மாற்று சிகிச்சை, ஆவி உலகம், முன் ஜென்மம் என்று வேறு கதைக் களத்தைக் கொண்டிருந்தது.

"என் கணவர்" என்றொரு படத்தில்....ஒரே அறையில் மனைவி இறந்து விட, அந்த உடலை மறைத்து விட்டு, படும் பாடுகள் தான் திரைக்கதை. சட்டில் ஆக்டிங்- ல் பிரமாதப்படுத்தி இருப்பார். தமிழில் மிகச் சிறந்த திரில்லர் என்று சொல்லலாம். ஆனால் அந்த படத்தின் காப்பி எங்குமே கிடைக்காதது தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டம்.

ராம்கியின் படங்களில் பாடல்கள் எப்போதுமே அற்புதமாய் அமைந்து விடும்.

"கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக..." -ஆத்மா

"நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்" -இரண்டில் ஒன்று

"மலையோரம் குயில் கூவ கேட்டேன்..." - இணைந்த கைகள்

"இனிய தென்றலே இரு கைகள் வீசி வா " - அம்மா பிள்ளை

"சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக ஒரு தேவதை வந்ததது நீராட"-செந்தூரப்பூவே

"உன்னை விட மாட்டேன்... காதல் வரம் கேட்டேன் " -இரட்டை ரோஜா

நடனம் சண்டை... நடிப்பு.. டைமிங் என்று ஒரு நடிகருக்கு என்னெல்லாம் தேவையோ அதுவெல்லாம் உள்ள நடிகர். இயக்குனர் ஆவதற்குத் தகுதி அதிகம். இருந்தும்... ஒரு கட்டத்தில் அவர் தமிழ் சினிமாவில் மெல்ல காணாமல் போனார் என்பது தமிழ் சினிமாவின் சோகம். இன்னும் நிறைய நல்ல படங்களைத் தேடித் தேடி நடித்திருக்க வேண்டும்.

இன்னமும் வெள்ளை பேண்ட் வெள்ளை சட்டையில் சிவப்புத் துணியை கழுத்தில் சுற்றியபடி கையில் பறையை வைத்துக் கொண்டு "செந்தூரப்பூவே தேன் சிந்த வா..." என்று மலை உச்சியில் நின்று பாடும் ஒரு காதலனின் குரலின் வழியே, காதலின் வரமென வரும் அந்த பாவனை வழியே, எல்லாருக்கும் பிடிக்கும் கம்பீரமான உடல் மொழி வழியே, ஹேர் ஸ்டைலுக்கென்றே தனித்த குறியீடென இருக்கும் அந்த தலையாட்டல் வழியே ராம்கி என்ற நடிகனின் முகம் தமிழ் சினிமா உள்ளவரை கலா ரசனையோடு நினைவு கூறப்படும் என்பதை மிகப் பெருமையோடு கூறுகிறேன்....

சிறுவயதில் இருந்தே ரசித்த, தகுதியுள்ள ஒரு நடிகனை என்னால் கொண்டாடாமல் இருக்க முடியவில்லை. தீராக்காதலோடு தான் இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன். ராம்கியைப் பற்றி எழுதுவது கொண்டாட்டங்களின் வழியே கண்டடையும் சினிமாத் திரையின் வண்ணங்களைப் பற்றியது. அது எப்போதும் புது புது வண்ணங்களால் ஆனது.....!

- கவிஜி

Pin It