திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் மூலஸ்தான லிங்கத்தின் மீதிருந்த 20 பவுன் மதிப்புள்ள தங்கப் பட்டை திடீரென்று காணாமற் போய்விட்டதாம்! போலீஸார் புலன் விசாரித்து வருகிறார்களாம்!

kuthoosi gurusamy 268போன மாதம் 23 -ந் தேதியன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோவிலிலுள்ள அம்மனின் மூக்கிலிருந்த வைர மூக்குத்தியையும், தங்கக் கழுத்துப் பட்டையையும் யாரோ திருடி விட்டார்களாம்! போலீசார் புலன் விசாரித்து வருகிறார்களாம் (ஒரு மாதமாக!)

இந்த மாதிரியாக வருஷத்தில் 10 சாமிகளாவது தங்கள் நகைகளைத் திருட்டுக் கொடுத்துவிட்டுப் பேந்தப் பேந்த விழிக்கின்றன! சில ஊர்களில், படுபாவிகள், அம்மனின் தாலியையே அறுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள்!

“இந்தியாவில் பெண்ணாய்ப் பிறப்பதைவிட மாடாகக் கூடப் பிறக்கலாம்!” என்பார், ஒரு தோழியர் அடிக்கடி.

உங்கள் பாடு எவ்வளவோ மேலாச்சே! பெண் தெய்வங்ளை விடவா நீங்கள் அவமானப்படுகிறீர்கள்? ஆண் அர்ச்சகர் குளிப்பாட்டுவதையும், (அபிஷேகஞ் செய்வது) புடவை யுடுத்தி விடுவதையும் கண்ணை மூடிப் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள், பாவம் நமது அம்மன்கள்! அவர்கள் தான் அடக்கத்தினால், “பெண்டிர்க்கழகு எதிர் பேசாதிருத்தல்” என்று கருதி, சும்மாயிருந்தாலும் அவர்களை மணந்த மணவாளர்களின் இரத்தம் கூடவா (இருந்தால் தானே) கொதிக்கவில்லை?

நம் சாமிகளின் மேலுள்ள நகைகளை இப்படி இஷ்டம்போல் திருடுவதென்றால், இனிமேல் நம் சாமிகள் சும்மா இருக்க முடியாது. “அலைகளெல்லாம் வெறும் கல், செம்பு, பித்தளை உருவங்கள்தானே! என்ன செய்து விடும்?” என்று நினைத்துக் கொண்டு சிலர் இந்தத் திருட்டுத் தொழிலில் பிரவேசிப்பதாகத் தெரிகிறது! சர்க்கார் உத்யோகஸ்தர்களைப்போல நீண்டநாள் சும்மாவே இருந்த இந்தச் சாமிகள், இனிமேல் சர்க்கார் மீதாவது, பொதுமக்கள் மீதாவது, 'நேரடியான நடவடிக்கை'யில் இறங்கி விட்டாலும் இறங்கி விடலாம்! எல்லோருக்கும் எச்சரிக்கை!

சரி! எவ்வளவோ திருட்டுக்களைக் கண்டுபிடிக்கும் தீரர்களான போலீஸார், சாமி நகைத் திருட்டை மட்டும் ஏன் கண்டுபிடிக்க முடிவதில்லை? அடிப்படையான இரகசியம் ஒன்றில் இவர்கள் ஏமாந்து போகிறார்கள். நான் ஸி.அய்.டி. வேலை பார்த்துப் பழக்கமில்லை! ஆனாலும் போலீஸாருக்குத் தெரியாத விஷயம் ஒன்று எனக்கு மட்டுமல்ல, என்னைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்குமே தெரியும்! அதைச் சொல்லி விடுகிறேன்.

சிலையின் மேலிருக்கும் நகையைத் திருடுவதென்றால், பரம்பரையான பக்காத் திருடன்கூட நடுங்குவான்! ஏன் தெரியுமா? அந்தச் சிலையை 'கடவுள்' என்றும், தொட்டாலே கண் அவிந்து போகும் என்றும், மகா பாபம் என்றும், பயப்படுகிறவன் அவன்! அதுமட்டுமா? பெரிய கொள்ளைக் கூட்டத்தார்கூட, மக்களிடம் திருடிய நகைகளில் ஒன்றைத்தான் அய்யனாருக்கோ, முனியனுக்கோ, காட்டேரிக்கோ, காணிக்கையாகப் போட்டுவிட்டு ஓடுவார்களே தவிர, அதன் மேலிருக்கும் நகையை இவர்கள் எடுக்க மாட்டார்கள். அவ்வளவு பயம் அதனிடத்தில்!

ஆகையால் பரம்பரைத் திருடர்களோ, சாமியைத் தொட்டால் கண் அவிந்து போகும் என்று பயப்படும் இனத்தைச் சேர்ந்தவர்களோ, நகையை எடுக்கவே துணிய மாட்டார்கள்!

அப்படியானால் வேறு யார்தான் திருடுவார்கள்? கோவிலுக்கு அடிக்கடி போகிறவர்களாகவும் இருக்க வேண்டும்; இன்ன நகை இன்ன இடத்தில் இருக்கிறது என்பதை நன்றாக அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்; உள்ளே லிங்கமாயிருப்பது கல்தான், கடவுளல்ல என்பதையும், செம்புச் சிலைதான், அம்மனல்ல என்பதையும், பக்கத்திலேயே இருந்து பார்ப்பவர்களாகவும் இருக்க வேண்டும்; லிங்கத்தையும், சிலையையும் தொட்டால் பயமில்லை! ஒன்றும் செய்துவிடாது! என்பதை ஒரு தடவைக்கு நூறு தடவை பரீட்சை பார்ப்பவர்களாகவும் இருக்க வேண்டும்! “கடவுளுக்கு” என்று பிறரால் கொடுக்கப்பட்ட, வேறு சில பொருள்களை வீட்டுக்கு எடுத்துச் செல்வதால், “கடவுள்” ஒன்றும் செய்து விடவில்லை என்பதையும் பல நூறு தடவைகளில் பரீட்சித்துப் பார்த்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

இப்படியெல்லாம் இருப்பவர் யாரோ, அவர்களுக்குள்தான் நகைத் திருடர்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். போலீஸ்காரர்களே, இனிமேல் பாருங்கள், ஒரு மூச்சு!

ஆனால் ஒன்று! இவர்களில் எவரையாவது கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டாலோ, என்ன சொல்வார்கள் தெரியுமா?

"ஏ, பக்தா! பணத்திற்காகக் கஷ்டப்படாதே! இந்தா, என் தாலியையே எடுத்துக் கொண்டு போ! அதை விற்றுவிட்டு வீட்டு வாடகையைக் கொடு! என்று அம்மனே என்னிடம் கூறிவிட்டு மறைந்துவிட்டார்! என்ன ஜகஜ்ஜோதி, போங்கள்! இன்றே தன்யன் ஆனேன்! அம்பிகா! மற்றொரு முறையும் காட்சி தர மாட்டாயா? இன்றே சிரேஷ்ட நாள்! அன்னையே! லோக மாதா! அகிலாண்டேஸ்வரி!” என்று கூறிக் கொண்டே மயங்கி விழுந்து விடுவார்.

பிறகு போலீஸ்காரரே அவரை எழுப்பி, நகையையும் அவர் கையிலேயே கொடுத்து, “சாமி! நீங்கள் பத்திரமாக வீட்டுக்குப் போங்கள்! நான் முன்ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணினேனோ, இந்த ஜென்மத்தில் இந்த ஜாதியில் பிறந்தேன்! அதுவும் போலீஸ் வேலைக்கும் வந்தேன்! உங்களையும் தொட்டு விட்டேன்! மன்னித்துக் கொள்ளுங்கள்! நான் மகா பாபி!” என்று சொல்லிவிட்டு அம்மன் சந்நிதிக்கு முன்பு அறுபது தண்டால் போட்டு விட்டுப் போய் விடுவார்!

- குத்தூசி குருசாமி (23-08-1946)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It