“மேகங்களின் மீது கால்ஷ்யம் க்ளோரைட் என்ற தூளைத் தூவி, மழை பெய்விப்பதற்காக ஆஸ்ட்ரேலியாவில் முயற்சி நடைபெறுகிறது” என்கிறது 11-ந் தேதி செய்தியொன்று.

kuthoosi gurusamy 300“அவன்கள் கிடக்கிறான்கள், நாஸ்திகப் பயல்கள்! ஆயிரக்கால் மண்டபத்தில் பிராமணோத்தமர்களைக் கொண்டு வருண ஜெபம் பண்ணினால், மழைதானா பிரமாதம்? பால் மழை கூடப் பொழியுமே,” என்கிறார், ஆஸ்திக சிகாமணி! மேலே காட்டிய ஆஸ்ட்ரேலியா செய்தியின் கீழே, அதே பத்தியில் ‘நாளைய நிகழ்ச்சிகள்’ என்ற தலைப்பில் வெளி வந்திருக்கும் செய்திகளைத் தருகிறேன், படியுங்கள்:-

1. சிந்தாதிரிப்பேட்டை கிருஷ்ணப்ப செட்டித் தெருவில் தண்டு மாரியம்மனுக்குத் தூப தீப நைவேத்தியம்!

2. பவழக்காரத் தெருவில் கீதாச்சரவண பக்தசபை ஆதரவில் வடுவூர் ரெங்கனாதாச்சாரியாரால் “ராமாயணம்” பற்றிப் பேச்சு.

3. சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ண செட்டித் தெருவில் ரா. சக்ரபாணி அய்யங்காரால் “சாருவாக மதம்” என்பது பற்றிப் பேச்சு.

4. ஹைகோர்ட் கடற்கரையில், “ஹிந்து லட்சியமும் உபய பதார்த்தமும்,” என்பது பற்றி சத்யானந்த சரஸ்வதி உபநயாசம்.

5. மல்லிகேஸ்வரம் ஆலயத்தில் லக்ஷிமி நாராயண பாகவதரால், “இந்திரஜித்வதம்” என்பது பற்றிப் பேச்சு.

6. பெத்துநாயக்கன்பேட்டை திருப்பள்ளித் தெருவில் “குமாரசுவாமியம்” என்பதுபற்றி ரத்தினசபாபதி நாயக்கர் பேச்சு.

7. மயிலாப்பூர் கச்சேரி ரோடு மாலதி கிரஹத்தில் சாம்பமூர்த்தி பாகவதரால் “பாதுகா பட்டாபிஷேகம்” என்பது பற்றிப் பேச்சு.

எப்படியிருக்கிறது விஷயம், பாருங்கள்! ஆஸ்ட்ரேலியாக்காரன் இலக்கியச் சுவை தெரியாத தற்குறிப் பயல்! மழை பெய்ய வைக்கிறானாம், மழை! அதற்காக ஆராய்ச்சியாம்! ‘கால்ஷியம் க்ளோரை’ மாம்! ஒரு பூதேவரைப் பிடித்து ஓமகுண்டத்திற்கு எதிரே குந்த வைத்து, ஒரு டின் நெய்யையும் வைத்து, நாலு கூடை குச்சிகளையும் கொட்டி விட்டால் போதாதோ? கொட்டு கொட்டு என்று கொட்டாதா மழை?

தமிழ் நாட்டில் பாருங்கள்! ஒரு பக்கம் பாதுகா பட்டாபிஷேகம்! ஒரு பக்கம் பூட்ஸ் அபிஷேகம்! ஒரு பக்கம் குமாரசாமீயம்! ஒரு பக்கம் காரீயம்! கலையை வளர்க்கத் தெரியாத கசடர்கள்! அவர்கள் கிடக்கிறார்கள்! தமிழர்களே! நீங்கள் கலையை வளருங்கள்! புராணத்தை விடாதீர்கள்! காலையிலும் மாலையிலும் கதறுங்கள்! கடவுள் காலைச் ‘சிக்’கெனப் பிடியுங்கள்! மழை உற்பத்தி, அரிசி, துணி, வீடு, படிப்பு எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார்!

‘அவனன்றி ஓரணுவும் அசையாது,’ கண்டீர்!

- குத்தூசி குருசாமி (18-09-1947)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It