“சூத்திரன் வேதத்தைக் கேட்பானே யானால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்,” என்று மனுதர்மம் கூறுகிறது!

kuthoosi gurusamyஅந்தப் பாச்சா இப்போ பலிக்காது! சூத்திரனிலும் சூத்திரனான மாக்ஸ்முல்லர் வேதத்தைப் படித்தான். இங்கிலீஷில் மொழி பெயர்த்தான்! அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றாத காரணம் என்னவோ? இப்போது “மிலேச்சன்” என்றாலும், பழைய வரலாற்றுப்படி ஆரியர் இனத்தான் தானே என்று நினைத்தோ? அல்லது ஈயத் தோட்டாவை நெஞ்சுக்குள் பதிய வைப்பானே என்று பயந்தோ? போகட்டும்! தாயாதிகள் விஷயம்!

ஈயத்தைக் காய்ச்சும் நினைப்பு மனுவோடு நின்று விட்டதா? அதுதான் இல்லை! இப்போது புது ஈயத்தைக் கண்டு பிடித்திருக்கிறது, நம்மைப் பீடித்திருக்கும் பார்ப்பனீயம்! அதற்குப் பெயர்தான் தேசீயம்! இதை நன்றாகக் காய்ச்சித் திராவிடன் காதில் ஊற்றுகிறார்கள், அவன் தூங்கும்போது! ஊற்ற வருவதற்கு முந்தியே விழித்துக் கொண்டால் பிழைத்தான்! இல்லாவிட்டால் பார்ப்பனீயத்திற்கு அடிமையாக வேண்டியதுதான், கம்பன் மாதிரி!

பத்திரிகையில் ஒரு செய்தி படித்தேன். திருச்சி தேசீயக் கல்லூரிக்கு (நேஷனல் காலேஷ்) வைர விழா நடத்தப் போகிறார்களாம்! அதற்கு நிதி வேண்டுமாம்! இந்தக் கல்லூரியைப் பற்றி எனக்கும் கொஞ்சம் தெரியும். சொல்கிறேன். கொடைவள்ளல் பெத்தாச்சி செட்டியார் என்று ஒருவர் இருந்தாரே! அவர் சங்கீத உலகத்திற்குப் பணத்தை வாரி இறைத்தது போலவே, கல்விக்காவும் வாரி இறைத்தார். அந்த நீர்ப்பாய்ச்சலால் முளைத்த மரம்தான் திருச்சி நேஷனல் காலேஜ். அதன் ஒவ்வொரு செங்கல்லும், ஒவ்வொரு பிடி சுண்ணாம்பும் பெத்தாச்சி செட்டியாரின் பணத்தால் வாங்கப்பட்டது. யார் பணமாயிருந்தால் என்ன? மூளை குறைந்தவன் கோவில் கட்டினால், மூளை மிகுந்தவன் குடிபுகுந்து விடுகிறான்! புற்றெடுப்பது கறையான் தானே! ஆனால் குடியிருப்பது நல்ல பாம்பல்லவா?

தேசீயக் கல்லூரிக்குச் செட்டியார் பணம் கொடுத்தார். ஆனால் அதை அநுபவிப்பது பூதேவர் கூட்டம், தேசீயத்தின் பேரால்!

இந்தக் கல்லூரிக்கு நிர்வாகக் கமிட்டியொன்று இருக்கிறது. அதில் இரண்டு பேர் தவிர, பாக்கி எல்லோரும் உள்நாட்டு வெள்ளையர்! இதில் திராவிடரும் பங்கு பெற வேண்டுமென்று 2 வருஷங்களுக்கு முந்தி கோயமுத்தூர் பணக்காரர்கள் முண்டிப் பார்த்தார்கள். என்ன ஆச்சு தெரியுமா?

வெளிநாட்டு வெள்ளையன் இந்தியாவை விட்டாலும் விடுவான்! இந்த வெள்ளையனா தன் இடத்தை விட்டுவிடுவான்? “புதிய அங்கத்தினர்களைச் சேர்க்க முடியாது,” என்று சொல்லி விண்ணப்பங்கள் திருப்பி யனுப்பப்பட்டன.

நிர்வாகக் கமிட்டி மட்டும் இவர்களின் ஏகபோக மிராசு என்று நினைத்து விடாதீர்கள்! உபாத்தியாயர்கள் அத்தனை பேரும் ஆரியர்களே! (ஒருக்கால் ஒரே ஒரு தமிழ்ப் பண்டிதர் மட்டும் இருக்கிறாரோ, என்னவோ!)

20 வருஷங்களுக்கு முந்தி தோழர் காந்தியார் வந்திருந்தார், அந்தக் கல்லூரிக்கு! அப்போது சமஸ்கிருதத்தில் வரவேற்பு வாசித்தளித்தார்கள், அவருக்கு. ‘இந்த மொழி எத்தனை பேருக்குத் தெரியும்? கைதூக்குங்கள்!” என்றார் காந்தியார். சமஸ்கிருத ஆசிரியர் மட்டும் கைதூக்கினார்.

“உங்களுக்குத் தெரியாத பாஷையில் படித்துக் கொடுக்க வெட்கமாயில்லையா?” என்று கேட்டார். பல்லை இளித்தார்கள், எல்லோரும். இந்தத் தேசீயக் கல்லூரி மட்டுந்தான் இப்படி இருக்கிறது என்று நினைக்காதீர்கள்! எந்த ஊரிலாவது “தேசீயப் பள்ளிக்கூடம்” என்ற பேரால் ஒன்று இருக்குமேயானால், அது ஒரே பார்ப்பனீய மயமாயிருப்பதைக் காணலாம், நம் மக்களுக்குக் கண்ணிருந்தால்.

தேசீயத்திற்கும் பார்ப்பனீயத்திற்கும் உள்ள இரத்தக் கலப்பு எவ்வளவு அதிகம் என்பதை இப்போதாவது தெரிந்து கொண்டீர்களா?

இம்மாதிரி தேசீயப் பள்ளிக்கூடங்களுக்குப் பண உதவி செய்யும் திராவிடன் தன் தலையில் ஒரு கூடை மண்ணைப் போட்டுக் கொள்வதோடு, தன் குழந்தைகள் வாயிலும் மண்ணைப் போட்ட புத்திசாலியாகிறான் என்பதைப் பெத்தாச்சி செட்டியார் மூலமாகவாவது தெரிந்து கொள்ள வேண்டாமா?

இதைப் படிப்பவர்கள், எடுத்துச் சொல்லுங்கள், திராவிடப் பண மூட்டைகளுக்கு!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It