“கந்தா! கடம்பா! கார்த்திகேயா! கருணாகரா! காபிக் கொட்டை விலை ஏறி விட்டதேடா! என் செய்வேன்? ஏது சொல்வேன்? இறைவா!” என்று புலம்புகிறார்கள் காபிப் குடியர்கள்.

kuthoosi gurusamy 263காபிக் கொட்டை பருத்திக் கொட்டை விலை(!) விற்கிறது! இரண்டுமே அகப்படுவதில்லை பள்ளிக்கூடத்தில் ‘ட்ரில் கிளாஸில்’ ட்ரில் மாஸ்டரை ஏமாற்றி விட்டு, கால்கட்டை வீரலில் பொய்யாகத் துணியைச் சுற்றிக் கொண்டு உட்கார்ந்திருந்தவர்களெல்லாம் இன்றைக்கு (டிரில் வாத்தியார்கள் சாபமாக இருந்தாலும் இருக்கலாம்) ஒருவர் பின் ஒருவராக (கியூ வரிசை தெருவில் நின்று கால் பவுண்ட் காபித் தூள் (பொட்டலத்தின் மேல் அப்படித்தான் அச்சிட்டிருக்கிறது) வாங்கிப் போகும் காட்சி கண் கொள்ளாக் காட்சி! “என் பேச்சைக் கேட்காவிட்டால் நீ நாலு பேர் சிரிக்க நடுத் தெருவில் நிற்கத்தான் போகிறாய்” என்று பெரியவர்கள் திட்டுகிறார்களே! அது அப்படியே பலித்து விட்டது!

‘டேய்! ஏண்டா இந்தக் காபியைக் குடித்துத் தொலைக்கிறாய்? உடம்புக்கு கெடுதீடா! நல்ல நீர் மோர்! எலுமிச்சம் பழத் தண்ணீர்! கொத்தமல்லிக் கியாழம்! பசும் பால்! பழஞ் சோற்று நீர்! சுகந்தரும் இளநீர்! எத்தனையோ இருக்கே! ஏதாவது ஒன்றைக் குடிச்சுத் தொலைக்கப்படாதா?” என்று என் அப்பா தலை தலையாய் அடித்துக் கொண்டார்! என் அம்மா திருட்டுத்தனமாய் எனக்குக் காபியைக் கொடுத்து வளர்த்தார்! (பையன்களைக் கெடுப்பது அவர்களுடைய தாய்மார்கள் என்பது பொய்யா மொழியை விடப் பல மடங்கு பொய்யா மொழி!) அதன் பலனை இப்போது அநுபவிக்கிறேன்! ஒரு வேளை காபி இல்லாவிட்டால் தலையை உடைக்கிறது! வேலை ஓடவில்லை! பித்துப் பிடித்தது போலிருக்கிறது! நானும் மற்றக் குடியர்களும் அதாவது காபிக் குடியர்கள்) கள் குடியர்களைக் கேலி செய்கிறோமே! வெட்கக் கோடு!

எனக்கு அதிகாரமிருந்தால் காபிக் கொட்டையை அபின் ரகத்தில் சேர்த்து விடுவேன். ஊருக்கு ஒரு கடைதான் இருக்கும்; 4 பெரிய டாக்டர்கள் கையெழுத்திட்டால், மருந்துக்காக என்று, 40 கொட்டை தருமாறு உத்தரவிடுவேன்.

‘திராவிடம்’ என்ன சொல் என்று கேட்பவரை “காபி” என்ன சொல், அதை ஏன் குடிக்கிறாய்? என்று கேட்டார் பெரியார். அது முதல் தனித் தமிழ்ப் பிரியர்கள் எத்தனை பேர் ‘காபி’ குடிப்பதை விட்டு விட்டார்களோ எனக்குத் தெரியாது.

உத்தமர் காந்திக்கு காபி என்றாலே பிடிக்காது. அவரும் குடிப்பதில்லை; மற்றவர்களையும் குடிக்க வேண்டாம் என்றே சொல்வார். அவர் கொலை செய்யப்பட்ட நாள் முதல் இந்த நாட்டில் காபிக் கொட்டை ஒழிந்து விட்டது என்று ஏற்பட்டிருந்குமேயானால், அது ஒன்று
கூடப் போதும்! நாம் உருப்படக் கூடிய ஒரு காரியமுந் தான் செய்ய மாட்டோமே!

ராமசாமி அய்யரைக் கண்டேன். தன் குடும்பச் செலவைக் கூறி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். ‘காபி குடிப்பதால் மட்டும் மாதம் 45 ரூபாய் ஆகிறது, ஸார்!” என்றார்.

“அப்படியானால் அந்தச் சனியனை விட்டுத் தொலைக்கிறதுதானே!” என்றேன், நான் காபியைத் துறந்துவிட்ட கர்மவீரன் போல!

“அதுதானே ஸார் முடியவில்லை! காயத்ரியை விடச் சொன்னாலும் சரி! காராக்கிரகம் போகச் சொன்னாலும் சரி! கதர் உடையையே கட்டச் சொன்னாலும் சரி! எதைச் செய்யச் சொன்னாலும் செய்து விடுவேன்! ஆனால் காபியை மட்டும் விடமுடியாது. அதுதான் எங்களுக்கு நவயுக சோமபானமாக இருந்து வருகிறது. அது இல்லாத பிராமணாள் வீடே கிடையாது! ‘அடுத்த மாதம் 10 -ந் தேதிக்குள் பிராமணர்கள் பூணூல்களைக் கழற்றிவிட வேண்டும்’, என்று உத்தரவு போட்டால்கூட கழற்றி எறிந்து விடுவோம். ஆனால் ‘காபிக் கொட்டை விற்பனை தடை செய்யப்பட்டது’ என்ற உத்தரவைப் பார்த்தால் அத்தனை பிராமணரும் மயக்கம் போட்டு விழுந்து விடுவோம்; அல்லது தடையை மீறி ஜெயிலுக்குப் போய்விட்டு வந்து சட்டசபைக்கு அபேட்சகராய் நிற்போம்,” என்றார்.

இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே! நான் ஒரு யோசனை சொல்லட்டுமா? ‘இனிமேல் கடவுளுக்கு பால் அபிஷேகம் கிடையாது! காபி அபிஷேகம்தான் நடக்கும்! ‘கலியுகத்தில் காபி அபிஷேகம்தான் வேண்டும்’ என்று கனவில் சொல்லி விட்டார் கடவுள்’ என்று எங்கு பார்த்தாலும் பரப்பி விடுங்கள். பால் காவடிக்குப் பதில் காபிக் காவடிகள் வரும். எல்லாம் எங்கள் கூட்டத்தார்தானே காவடி எடுக்கிறவர்கள்? உங்கள் கூட்டந்தான் புத்திசாலியாச்சே! உங்களில் ஒரு முழுப் பைத்தியக்காரன் கூட காவடி தூக்குவதில்லையே! இப்படி ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டால் எல்லாரும் காபி அபிஷேகமே செய்வார்கள். நல்ல உயர்ந்த காபித் தூளாகத் தேடிக் கலந்து கொண்டு வருவார்கள். வழக்கம்போல கடவுளுக்குப் பின்னால் அண்டாவை வைத்து காபியைப் பிடித்து அக்கிரகாரத்துக்கு அனுப்பி பங்கு போட்டுக் கொள்ளலாம்! காபி கஷ்டமே இருக்காது,” என்று யோசனை கூறினேன்.

‘நல்ல யோசனை சார்! ஆனால் உங்கள் கூட்டத்தாருக்குச் சொல்லி விடுவீர்களோ?” என்று கேட்டார்.

“ஆஹா! அது என் கடமையல்லவா? சொல்லத்தான் போகிறேன். ஆனால் அதற்காகக் கவலைப்பட வேண்டாம்! எங்கள் கூட்டத்தாருக்கு என்ன சொன்னாலும் இந்தக் காதினால் வாங்கி அந்தக் காதினால் விட்டு விடுவார்கள். ரொம்பப் பேர் எங்கள் பேப்பர்களைப் படிப்பதேயில்லை; உங்கள் பேப்பர்களைத்தான் படிப்பார்கள். நீங்கள் சொல்வதுதான் அவர்களுக்குத் தெய்வ வாக்கு! உங்களுக்குப் பயமே இல்லை! நல்ல வேட்டைதான், போங்கள்" என்றேன்.

என்ன சொல்கிறீர்கள்? நான் சொன்னது சரி தானே?

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It