“கடவுள் இல்லாவிட்டால் மனிதன் இருக்க முடியுமா?” என்று கேட்டார், ஒரு வைஷ்ணவ பக்தர்.

kuthoosi gurusamy 263“மனிதன் இல்லாவிட்டால் கடவுள் இருக்க முடியுமா?” என்று பதிலுக்குக் கேட்டாராம், ஒரு வேதாந்தி.

“இந்த உலகத்தை உண்டாக்கியது யார்?” என்று கேட்டான் ஜான் ஸ்டுவர்ட் மில் என்ற இளைஞன், தன் தந்தையைப் பார்த்து.

“கடவுள்தான்” என்றார் தந்தை.

“அவரை உண்டாக்கியது யார்?” என்று கேட்டான் சிறுவன்.

“அவர் தானாகவே உண்டானார்,” என்றார் தகப்பனார்.

“அப்படியானால் உலகம் மட்டும் ஏன் தானாக உண்டாகவில்லை,” என்று திருப்பிக் கேட்டானாம், பிடிவாதக்காரச் சிறுவன்.

இந்த ஜான்ஸ்டுவர்ட் மில்தான் பெரிய தத்துவ ஞானியான பிறகு பின்வருமாறு கடவுள் இலக்கணத்தைப் பற்றிக் கூறினார்;- “கடவுள் என்ற சொல், நம் கருத்துக்களைக் கூறுவதற்கு அல்ல; கருத்து சூன்யத்தைக் குறிப்பிடவே எற்பட்டது.”

“இந்த விசாரணை யெல்லாம் இப்போது ஏனய்யா, குத்தூசியாரே! செலவுக்குப் பணம், வயிற்றுக்குச் சோறு! கட்டுவதற்குத் துணி, தங்குவதற்குக் குடிசை இவைகளைப் பற்றி ஏதாவது வழி இருந்தால் சொல்லுமே! இவைகளெல்லாம் கிடைத்த பிறகல்லவா, தத்துவ விசாரணை, ஆஸ்திக - நாஸ்திக விவாதம், கலை யுணர்ச்சி, ஆகியவைகளைப் பற்றி நினைக்க வேண்டும்?” என்று கேட்கலாம், வாசகர்கள்.

பணக் கஷ்டமும், பசிக் கொடுமையும் இல்லாத சுகவாசிகள்தான் இவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முடியும். உண்மைதான். இதோ படியுங்கள்:-

1. கிருஷ்ண பரமாத்மா இறந்து போனாரா அல்லது சிரஞ்சீவியாக இருக்கிறாரா? - இது பற்றி “ஹிந்து” பத்திரிகையில் விவாதம் நடைபெறுகிறது. கவர்னர் ஸி. ஆர். கிருஷ்ண பரமாத்மாவை ஒரு மனிதன் என்று கூறிவிட்டதால் ஏற்பட்ட வினை இது!

(ஏ, பரந்தாமா! வாசுதேவா! நந்தகோபாலா! நீ சிரஞ்சீவியாயிருந்தால் உடனே வா! ‘ஹிந்து’ ஆபீஸ் எதிரில் காலை 10 மணிக்கு வா! நான் அப்படியேதான் வருவேன்! சந்தித்துப் பேசுவோம்.)

2. சிந்தாதிரிப்பேட்டை ‘காக்ஸ்’ சேரியைத் தரை மட்டமாக்கி விட்டுப் புதிய ரோடுகள் அமைத்து வீடுகளும் கட்டித் தர வேண்டும் என்பது நகர சபையின் திட்டம். இந்தப் பகுதியில் (இதோ எனக்குப் பின்னால்தான்) இரண்டு சிறு பழங்கோயில்கள் இருக்கின்றன. அவைகளை இடிக்கக் கூடாது என்கிறார், ராஜகோபாலய்யர் என்ற கவுன்சிலர். வேறிடத்தில் புதிதாக கட்டப்படுவதனால் கூட ‘கோயிலை இடிக்கும் உரிமை’ கூடாது என்கிறார். மற்ற கவுன்சிலர்கள் பரவாயில்லை என்கிறார்கள்.

(நந்தனர் தரிசனத்திற்காக நந்தியை விலகியிருக்கச் சொன்னாராம் நடராஜர்! அப்படியே விலகினாராம்! நந்தி நல்ல மனுஷரல்லவா? இன்று நந்தனர் சந்ததிகளுக்கு வீடு கட்டுவதற்காக சாமிகளின் வீடுகளையே அப்புறப்படுத்த வேண்டும் என்கிறார்கள், சில ஆசாமிகள். இதை எதிர்த்தார் ஒரு அய்யர். அவருக்கல்லவா தெரியும் சாமியின் மனோநிலை! நான் ஒரு யோசனை கூறுவேன். நகர சபை சட்ட விதிப்படி ‘இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாக உம் வீட்டை இடிக்கப் போகிறேன்; ஆட்சேபனை இருந்தால் அதற்குள் கமிஷனரிடம் நேராகவோ, எழுத்து மூலமாகவோ தெரிவித்துக் கொள்ளலாம்,” என்று ஒரு நோட்டீஸ் எழுதி அவர் வீட்டுக் கதவில் ஒட்டிவிட்டு ஒரு மாதம் கழித்து மேல் நடவடிக்கை எடுக்கலாமே!)

3. காஞ்சிபுரம் ஏகாம்பரநாத ஸ்வாமிக்கு ஒரு வெள்ளி ரதம் செய்யப்படுகிறதாம். பாதிக்கு மேல் ஆகிவிட்டதாம். பூர்த்தி செய்வதற்கு இன்னும் 60,000 ரூபாய் வேண்டுமாம்! 20,000 கையில் இருக்கிறதாம்! பாக்கி 40,000 வேண்டுமாம்! பக்தர்கள் உடனே பணம் அனுப்புமாறு கோருகிறார்கள்!

(யார்? ஏகாம்பர நாதரா? அதுதான் இல்லை. சாமி பெயரைச் சொல்லி சில ஆசாமிகள் கேட்கிறார்கள். அவரே கேட்டால் 40,000 என்ன? எத்தனை லட்சம் வேண்டுமானாலும் கொடுக்கலாமே! குழந்தைக்குப் பசித்தால், தானே அழுகிறதே ஒழிய, வேறு யாரையாவது அழச் சொல்கிறதா? கன்றுக்குட்டி தானே ‘அம்மா’ என்று கத்துகிறதே! ஏகாம்பர நாதருக்கு அதுகூடவா முடியாது? அதுதான் போகட்டும், ஒரு லட்ச ரூபாயில் வெள்ளி ரதம் செய்தால் மணிக்கு ஒரு மைல் கூட போகாதே! நல்ல ‘ராலி’ சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்தால் 300 ரூபாயோடு போகுமே! அவரும் மணிக்கு 10 மைல் வேகத்திலாவது போவாரே!)

“ஏ! சாவ முட்டாள்களே! இந்த உலகத்தையே நான்தானே படைத்தேன்! நான் சிரஞ்சீவியா, செத்துப் போய்விட்டேன் என்றும் என் வீட்டை இடித்தால் என்ன செய்வேனோ என்றும், எனக்கு வெள்ளி ரதம் வேண்டுமென்றும் பிதற்றி திரியும் பித்தர்களே! உங்களுக்கு வேண்டிய பள்ளியையோ, ஆஸ்பத்திரியையோ, கட்டிக் கொள்ள அறிவில்லாத நீங்களா என்னைக் காப்பாற்றப் புறப்பட்டிருக்கிறீர்கள்? உங்கள் முகத்திலேயே விழிக்க மாட்டேன்! நீங்கள் ‘சாமி சாமி என்று சொல்லி ஏமாற்றி - ஏமாந்து - திரியும் ஆசாமிகள்!” என்று என் கனவில் தோன்றிக் கூறினார், எங்கும் நிறைந்த கடவுள்.

நான் கூறுவதில் சந்தேகமிருந்தால் அதோ நிற்கிறாரே, சிரஞ்சீவி அநுமார், அவரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்