உலகமயத்தின் உப விளைவுகளில் ஒன்று ஹைடெக் சாமியார்கள். மனதை ஒரு கேணி என்றார் வள்ளுவப் பேராசான். அதில் தோண்டத் தோண்ட அறிவு ஊற்றெடுக்க வேண்டும் என்றார் அவர். ஆனால் இப்போது புதிது புதிதாக முளைக்கும் சாமியார்கள் மனதைத் தோண்டித் தோண்டி மாயையை வெட்டி யெடுக்கச் சொல்கிறார்கள். பன்னாட்டு, மென்பொருள் நிறுவனங்களில் பணி யாற்றும் இளைஞர்கள் நவீன கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு வருகின்றனர். பணிச்சுமையால் அவர்களது மனக் கிணறு வறண்டு போகிறது. மதுவிருந்து வைத்து அவர்களை மயங்கவைக்க முயல்கின்றனர். அதில் மயங்காத இளைஞர்களே ஆன்மீகம் எனும் கயிறு கொண்டு கட்டிப்போடுகின்றனர்.

மூச்சுவிடுவது எப்படி என்று சொல்லிக்கொடுக்கிறார் ஒரு பூஜ்யஸ்ரீ. பிரசாதத்தில் லாகிரி வஸ்துகளை கலந்துகொடுத்து மூளையை முனை மழுங்க வைக்கிறார் கல்கி சாமியார் என்பவர்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று ஆங்கிலத்தில் பட்டிணத்தாரை படியெடுக்கிறார் சுகபோதானந்தா.

இவர்களில் சத்குரு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஜக்கி வாசுதேவ் தனி ரகம். அவரது பேச்சும் எழுத்தும் ஒரு மயக்க நிலைக்கு தள்ளும். அவ்வப்போது இவர், அரசியலும் பேசுவார். அன்மையில் இவர் அளித்த நேர்காணல் ஒன்றிற்கு “கறுப்புப்பணம் பதுக்கியோர் தேசத் துரோகிகள்... பாய்கிறார் ஜக்கி வாசுதேவ்” என்று தலைப்பு கொடுத்திருந்தது ஒரு நாளேடு. அடப் பரவாயில்லையே... என்று படிக்கத் துவங்கினால் அழகாக முடிச்சு அவிழ்க்கிறார் இந்த சத்குரு.

தலைவர்கள் சரியாக இருந்தால் தேசம் முன்னேறும் என்பதற்கு குஜராத் ஒரு முன்னூதாரணம் என்று மோடிக்கு முட்டுக்கொடுக்கிறார் இவர். பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்மக்களைக் கொன்று குவித்ததுதான் மோடியின் சாதனை. அவர் சரியாக இருக்கிறார் என்று சான்றிதழ் கொடுப்பதிலிருந்தே இவர் சரியான ஆள் இல்லை என்பது சட்டெனத் தெளிவாகிவிடுகிறது.

பாபா ராம்தேவ் அறக்கட்டளைக்கு ரூ.1000 கோடி சொத்து இருப்பதாக அவரே சொல்லியிருக்கிறாரே என்று ஜக்கியிடம் கேட்டதற்கு, இவர் கேள்வி முடிவதற்கு முன்பே “இதில் என்ன தப்பு. அறக்கட்டளைக்கு ஆயிரம் கோடிகள் இருந்தால் என்ன? அவர் எளிமையாகத்தானே இருந்தார்?” என்று பதில் சொல்லியிருக்கிறார். இது ராம்தேவ் அறக்கட்டளைக்கு வக்காலத்து வாங்கி சொன்ன பதிலாக மட்டும் தெரியவில்லை. இவர் நடத்தும் அறக்கட்டளைக்கு எத்தனை ஆயிரம் கோடி சொத்து இருக்கிறதோ தெரியவில்லை. இவரும் எளிமையாகத்தான் இருக்கிறார்.

பற்றற்ற ஞானிகள் வளைத்து வளைத்து சொத்து சேர்ப்பதன் மர்மம்தான் விளங்கமாட்டேன் என்கிறது. அறக்கட்டளை என்று சமாளிப்பதெல்லாம் இவர்கள் வைத்திருக்கும் தாடியைப் போன்றது தான். கேட்டால், எனக்கும் அந்த தாடிக்கும் சம்பந்தம் இல்லை என்பார்கள்.

சாய்பாபா படுக்கையறையிலிருந்து 12 கோடி ரூபாய் ரொக்கம் எடுக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, “அவரது உயரத்திற்கு 12 கோடி ரூபாய்யெல்லாம் ஒன்றுமே இல்லை. பக்தர்கள் கொடுத்தது, அப்படியே வாங்கி ஓரமாக வைத்திருக்கிறார்” என்று வாசுதேவ் விளக்கமளித்திருக்கிறார். வாங்கி ஓரமாக வைத்ததுதான் 12 கோடி ரூபாய். மையமாக வைத்தது எவ்வளவு என்பது குறித்து தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

பாபா பயன்படுத்திய படுக்கையறையை திறந்து பார்த்தபோது அதில், 11.57 கோடி ரொக்கம், 98 கிலோ தங்கம், 307 கிலோ வெள்ளி இருந்திருக்கிறது. அடுத்த அறையை திறந்தபோது ரூ.76லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கிடைத்துள்ளன. அடுத்தகட்டமாக மேலும் ஒரு அறையை திறந்தபோது 34.5 கிலோ தங்கம், மற்றும் 340 கிலோ வெள்ளி, ஒரு கோடியே 90லட்சத்து 53ஆயிரத்து 899 ரூபாய் ரொக்கம் கிடைத்துள்ளது. மேலும் ஒரு அறையை திறந்தபோது 1.5 கிலோ தங்கம், ரூ.32லட்சம் ரொக்கம், 734 கிலோ வெள்ளிப்பாத்திரங்கள், வெள்ளி சிம்மாசனம், வெள்ளி பாதுகைகள் கிடைத்துள்ளன.

இதெல்லாம் ஜக்கியின் வார்த்தையில் சொல்வதானால் பாபா ஓரமாக வாங்கி வைத்தவை. பாபாவின் மகா சமாதி திறக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்று தரிசனம் செய்துள்ளனர். ஆனால் அதற்கு முன்பாக ஆசிரம நிர்வாகிகள் சிலர் பல லாரிகளில் தங்கத்தையும் ரொக்கத்தையும் கடத்தியுள்ளனர். அவ்வாறு மக்கள் கொடுத்த பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு ஓடியவர்களை பாபாவின் சக்தி தடுக்கவில்லையா? போலீசார் சிலரை பிடித்திருக்கின்றனர்.

பாபா உயிருடன் இருக்கும்போது அவரை கொலை செய்ய சில சீடர்கள் முயற்சித்துள்ளனர். பாபா ஓடிச்சென்று அறைக்குள் தாழிட்டுக் கொண்டார். தனது உயரத்தை பயன்படுத்தி அந்த சீடர்களை பஸ்பமாக்கவில்லை.

பாபா ஆசிரமத்தில் இப்போது கிடைக்கும் ஆபரணங்களில் சின்ன சின்ன மோதிரங்கள் அதிகமாக இருக்கிறதாம். பாபா பலருக்கு மோதிரம் வரவழைத்துக்கொடுத்ததை இந்தச் செய்தியோடு இணைத்துப்பார்த்து குழப்பிக் கொள்ளக்கூடாது. பாபாவின் உயரமே வேறு.

சி.டி.புகழ் நித்தியானந்தா சாமிக்கும் உலகம் முழுவதும் சொத்து உள்ளது. அமெரிக்காவிலும் கூட ஆசிரம் இருக்கிறது. கதவைத் திற காற்று வரட்டும் என்று உபதேசித்த இவருக்கு சிறைக்கதவும் திறந்தது. ஜாமீனில் வெளியே வந்த இவர், குண்டலினியோகத்தை பயன்படுத்தி அந்தரத்தில் பக்தர்களை மிதக்கவிடப் போவதாக பெருமளவு விளம்பரம் செய்தார்.

பெரும் கூட்டம் கூடியது. அந்தரத்தில் பறக்கும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு விடக்கூடாது என்பதற்காக சிலர் ஹெல்மெட் கூட அணிந்திருக்கிறார்கள். கடைசியில் நித்தியானந்தா ஒரு பிரம்பை வைத்து ஆட்ட பக்தகோடிகள் உட்கார்ந்த இடத்திலேயே தவளையைப்போல குதித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் உருண்டு புரண்டார்கள். ஆனால் யாரும் அந்தரத்தில் பறக்கவில்லை. கடைசியில் நான் சொன்னதை யாரும் சரியாக கேட்கவில்லை. அதனால்தான் பறக்கமுடியவில்லை என்று நித்தி நெத்தியடியாக அடித்து விட்டார். இவர் அமெரிக்கா உட்பட வெளிநாடுகளுக்கு சென்றபோது பாஸ்போர்ட், விசாவோடு விமானத்தில் பறந்தாரா அல்லது குண்டலினி சக்தியை பயன்படுத்தி அந்தரத்தில் பறந்து அப்படியே போய்விட்டாரா என்று தகவல் இல்லை.

கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் தேசத் துரோகிகள் என்று ஜக்கி வாசுதேவ் கூறுவதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை. ஆனால் சாமியார்கள் பதுக்கிவைத்துள்ள பணம் கறுப்புப்பணம் இல்லை போலிருக்கிறது. கேட்டால் இது காவிப்பணம் என்பார்கள்.

Comments

5 comments

5
saranya
indha padaipu saamiyargaluku mattumalla arasial vadhigalukum porudhum.... saamiyargal vaithrupadhu karuppu panam endral ivargal vaithirupadhu vellai panamo enavo yaruku terium elam andha kadavuluke vellicham...
கி.பிரபா
காவி உடை,பொட்டு, தாடி,அடர்மீசை இவைகள் நிறைந்த சாமியார்கள் ஒருவகை.வெள்ளுடை,சமயம் சார்ந்த புத்தகம் இவைகளுடன் ஒருவகை சாமியார்.ஆம்! பலவகைகளில் கொள்ளைக்கூட்டம்.ஆக இப்பேற்பட்ட கொள்ளையர்களுக்குத் துணை இருப்பவர்கள் அரசியலாளர்கள் அல்லவா.கறுப்புபணம் வைத்துள்ளவர்களுக்குக் காவலும் ஏவலும் செய்பவர்கள் அரசியலாளர்கள் தானே.ஓடும் செம்பொன்னும் ஒக்கவே தோன்றும் மனம் கொண்டவர்களே பற்றற்ற துறவி.ஆனால் இன்றோ துறவிகளுக்குத் தான் பஞ்சுமெத்தை,பாலும்பழமும் மனைவிமக்கள்,அசையும்,அசையா சொத்துகள் போன்றவை அடங்காநிலையில் உள்ளன.
Raja
பெரியார் கடவுள் மறுப்பு மட்டுமே செய்தார் என்று நினைப்பது எவ்வளவு பெரிய மடத்தனமோ அதைவிடவும் பெரிய மடத்தனம் அவரது கடவுள் மறுப்பை மட்டும் விட்டுவிட்டு பிற கொள்கைகளை ஆதரிக்கிறோம் என்று சொல்வதும். வசதியாக சில ஆன்மீகவாதிகள் இவ்வாறு சொல்வதுண்டு. நாம் அவ்வாறு அல்லாமல் பெரியாரை முழுதும் தொழுகிறோம். கடவுளுக்கே நாம் அவ்வளவுதான் மதிப்புத் தருகிறோம் எனும் போது இந்த ஆன்மீகவாதிகளுக்கு என்ன மரியாதை தரப்போகிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஆன்மீகப்போர்வையிலே மக்களின் அறியாமையை போற்றிப் பாதுகாத்து தன்னம்பிக்கையை துளிர்விடாது செய்யும் அயோக்கியத்தனத்தையே பலரும் செய்துவரும் வேளையில் எப்போதாவது அரிதாக சில மனிதர்களையும் நாம் பார்க்க நேர்கிறது.

திரு. ஜக்கி வாசுதேவையும் நான் அவ்வாறே காண்கிறேன். அவரின் அழகழகான கருத்துக்களை ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்ற விகடன் வெளியீட்டுப்புத்தகத்தில் காணலாம். அவர் ஆய்ந்தறிந்த ஈஷா யோகா கலையைப்பற்றிய ஒரு விளம்பர சிடி இப்போது எல்லா பிரபல புத்தகக்கடைகளிலும் விகடன் மற்றும் நய்ஹா உபயத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.

துள்ளலான இசையோடும் கவிதைத்தனமான காட்சிகளோடும் ஆரம்பிக்கும் அந்த சிடியில் ஆரம்பக்காட்சிகள் நிறைவடைந்து ஜக்கியின் பேட்டி துவங்குகிறது.. ‘தனியொரு மனிதன்’ என்பதை ‘ப்ரத்யொரு மனிதன்’ என்றும் ‘தொழில்நுட்பம்’ என்பதை தொழிர்நுற்பம்’ என்றும் கூறும் அவரது கொஞ்சும் தமிழ் நம்மை கவர்கிறது. அற்புதமான மயக்கும் குரலில்,

ஜனனம் சகதம்..
மரணம் கருணம்..

என்ற ஸ்லோகத்தோடு (எனக்குப் புரியவில்லை) துவங்கி பேட்டியை இவ்வாறு ஆரம்பிக்கிறார்,

“ நாம் எப்போ ஒரு மனிதனா பிறந்தோம்.. அப்பவே நமக்கு ஒரு பிரச்சினை வந்துடுச்சு.. நாம மற்ற ம்ருகங்கள் மாதி வந்திருந்தா நமக்கு சாப்பாடு, இனப்பெருக்க செயலு இது ரெண்டு நடந்தா வாழ்க்கை முடிஞ்ச மாதிரி இருக்கும். எப்போ மனிதனா வந்துட்டோமோ ஒரு பிரச்சினை.. வயிறு. வயிறு காலியா இருந்தா.. சாப்பாடு. வயிறு புல்லாயிருச்சுன்னா.. நூறு பிரச்சினை.. நமக்கு.! ”

முதல் முறையாக கேட்கும்போது களுக்கென சிரித்துவிட்டேன். எவ்வளவு எளிமையான வரிகள். தொடர்ந்து ஆனந்தத்தேடல் குறித்தும், ஈஷா யோகா குறித்தும் சில விளக்கங்கள் தருகிறார். கடவுள் நம்பிக்கையை அவர் கொண்டிருந்தாலும், அல்லாதோரையும் வற்புறுத்தாமல் அரவணைத்துச்செல்வதை இவரது சிறப்பாக நான் காண்கிறேன். கட்டுக்கள் இல்லாத ரசனைகள் நிரம்பிய இயல்பான சிந்தனாவாதியாக இருக்கிறார். உடலைப்புரிந்துகொள்வதை முன்நிறுத்துகிறார். யோகாவைப்பற்றிய இவரது கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன. ஜக்கி வாசுதேவைப் புகழ்வது இந்தப்பதிவின் நோக்கமல்ல என்றாலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களைக்கொண்ட ஆன்மீகவாதிகள் அனைவருமே இவரைப்போலவே தெளிந்த சிந்தனையோடு இருக்கக்கூடாதா.. என்ற ஏக்கம் எழவே செய்கிறது.

பி.கு : அந்த சிடியில் இடையிடையே நய்ஹாவின் புண்ணியத்தில் டிவியில் நாம் பார்த்திராத ‘பெண்மையைப்போற்றுவோம்’ விளம்பரங்கள் வருகின்றன. அனைத்திலும் விதவிதமான வசனங்களோடு திரு. சாலமன் பாப்பையா நம்மை மயக்குகிறார்.

“ ஒருவரோட வலிய இன்னொருவர் உணர முடியுமா..
ஒருத்தரோட பசிய இன்னொருத்தர் புரிஞ்சுக்க முடியுமா..
முடியுதே..
ஒருத்தரால முடியுதே.. யாரு.. யாரு? அம்மா.!
குழந்த வலியில அழுவுதா, பசியில அழுவுதான்னு தாய்க்கு மட்டுந்தானேய்யா தெரியுது. அந்த ஒடம்புக்கு ஏதாவது ஒண்ணுன்னா இவ ஒடம்பு பதறுதே.. குழந்தைக்கு பசிச்சா.. இவ நெஞ்சுல பாலூறுதே.! விந்தைய்யா..விந்தை. இந்த அபூர்வ பெண்மணிய தினமும் வணங்கணும்யா.. ”

என்று அவர் கம்பீரமாக கூறும் போது ஆமா.. ஆமா.. என்று சொல்லத்தோன்றுகிறது.

“சொல்லச்சொல்ல இனிக்கிற சொல் அம்மா.
ஒரு சொல்லுக்குத்தான் எத்தனை பரிணாமம்.
இது இயற்கையின் ஒலி.
நினைச்சா தியானம்.
உச்சரிச்சா மந்திரம்.
அந்த மூன்றெழுத்து மந்திரத்தை உச்சாடனம் செய்வோம்.
அம்மாவை கையெடுத்து வணங்குவோம்”
raja
ஜக்கியின் பல் செயல்கள் ஏற்புடையதாக இல்லாவிடினும், மூச்சு பயிற்சி மற்றும் தியானம் உடல்நலன் மற்றும் மனநலன்களுக்கு உகந்ததுதான்.
அவரின் பல கருத்துக்கள் மற்றும் பொது சேவைகள் : பாராட்டப்பட வேண்டியவையே.

அவர் தன்னை ஒரு அவதாரப்புருசன் அல்லது கடவுளின் தூதுவன் என்று சொல்லிக்கொள்ளும் போலி சாமியார் அல்ல. மனிதர் தான். கார்பரேட் சாமியார் என்பது மேலோட்டமான மதிப்பீடு. சிறைகைதிகள் பல்லாயிரம் பேர்களுக்கு இலவசமாக யோகப்பயிற்சி அளிக்கும் அவரின் முயற்சிகளும், மரம் நடும் முயற்சிகளும் பாராட்டபட வேண்டியவை.
(அல்லது நிறுத்தப்பட வேண்டிய தவறுகளா ?)
அன்பே சிவம்...
உண்மையான பகுத்தறிவு என்பது அனைத்து உயிர்கள்மேலும் பேதமற்ற அன்புசெலுத்துவதே. அதை அன்று பெரியார் சரியாக செய்தார். அதனால்தான் அவர் பெரியார் ஆனார். ஆனால் இன்று... பகுத்தறிவுவாதிகளும் சமயத்தில் போலி ஆண்மீகவாதிகளைவிட மோசமாக தோற்றம் தரும், போலி காம்ரேடுகளைவிட நிச்சயம் ஜக்கி பாராட்டப்பட வேன்டியவர்தான்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.