நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்தால் முடியுமா? முடியவே முடியாது என்பதில் ஒரு சதவீதம் கூட மாற்றுக்கருத்தோ, சந்தேகமோ யாருக்கும் வரப்போவதில்லை.சுவர் விளம்பரங்களை அழிப்பது, கொடிக்கம்பங்களில் வெண்மை தீட்டுவது, சாப்பாடு கணக்கு பார்ப்பது, சுங்கச் சாவடிகளில் வாகன பரிசோதனை போன்ற நடவடிக்கைகளை வேகப்படுத்துவதன் மூலம் தேர்தல் ஆணையம் செயல்படுவதுபோன்ற தோற்றம் நம்முன் தெரிகிறது. முயற்சிகளை வரவேற்கலாம். ஆனால், நேர்மையான, முறையான தேர்தலை உறுதிப்படுத்த இது போதுமா என்றும் கெடுபிடிகள் மட்டும் பயன்தருமா என்றும் சற்று பரிசீலிக்க வேண்டியுள்ளது.வேட்பாளர் தேர்தல் கணக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பது புதிதல்ல. கடந்த பல தேர்தல்களில் உள்ள நடைமுறைதான். ஆனால், இதுவரை ஒரு வேட்பாளர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்படியெனில் எந்தவொரு வேட்பாளரும் உச்சவரம்பைவிட கூடுதலாக செலவழிக்க வில்லையென்று அர்த்தமாகிவிடுமா?

திருமங்கலம் இடைத்தேர்தல் பார்முலா என்று தமிழகத்தில் ஒரு பார்முலாவே இப்போது உள்ளதாக அனைத்து ஊடகங்களும் எடுத்துரைக்கின்றன. ஆனால் அத்தேர்தலில் தானே தமிழக தேர்தல் தலைமை அதிகாரி திரு. நரேஷ்குப்தா அவர்கள் நேரடியாக கள ஆய்வுகளை மேற்கொண்டார். பின் எப்படி பார்முலா உருவாயிற்று? யார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒருவர் கூட தண்டிக்கப்பட்டதாக அல்ல நீதிமன்றம் வரை சென்றதாகக்கூட செய்திகள் வரவில்லையே ஏன்?இத்தனை கெடுபிடிகளையும் இவர்கள் மேற்கொள்வது யார்மீதோ அவர்கள் தான் ஆட்சியாளர்களாக வருகிறார்கள். தேர்தல் காலத்தில் சட்டமீறல்களில் ஈடுபடுபவர்கள் என யார் கெடுபிடிகளோடு கண்காணிக்கப்படுகிறார்களோ அவர்கள் தான் நாளைய ஆட்சியாளர்கள் எனில், நடவடிக்கை என்ற வார்த்தைக்கு என்ன மதிப்புள்ளது? இத்தகைய ஆட்சியாளர்களே, தேர்தல் அதிகாரிகள் முதல் தேர்தல் நடைமுறைவரை அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள் சட்டமியற்றுகிறார்கள். பின் அவர்களே மீறுகிறார்கள். ஏனிந்த நிலை?

மக்கள் தரும் நன்கொடைகளில் இருந்து அரசியல் கட்சி நடத்தப்படும் நிலை மாறி இன்று அரசியல் கட்சிகள் தான் பேரணி முதல் தேர்தல் வரை என அனைத்திற்கும் மக்களுக்கு பணம் தருகிறார்கள். இடதுசாரிகள் மட்டுமே இன்றுவரை கட்சிச்செலவு முதல் தேர்தல் செலவு வரை அனைத்துக்கும் மக்களை நம்பி செயல்படுகின்றனர். இத்தகைய முதலாளித்துவ ஜனநாயக அரசியல் அமைப்பு முறையை மாற்றாமல் தேர்தல் கெடுபிடிகள் வெறும் ஒரு கண்துடைப்பே.வாகன சோதனைகளில் இன்றுவரை ஒரு அரசியல்வாதி கூட பிடிபடவில்லை. சேமிப்புக் கணக்கில் பணம் எடுத்து வருபவர்களைக் கூட விரட்டி விசாரிக்கும் இந்த விசாரணை அதிகாரிகள் அரசியல்வாதிகள் பக்கம் மட்டும் போவதேயில்லை. அப்படியே தப்பித்தவறி கண்டுபிடித்தாலும் மன்னிப்பு, விளக்கம் கேட்டல், எச்சரித்தல், மீண்டும் எச்சரித்தல் என நடவடிக்கை எடுக்கிறார்களேயொழிய சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால் தான் இன்றுவரை ஒரு அரசியல்வாதியைக்கூட தண்டிக்க இயலவில்லை. விதி அமலுக்கு வந்தது தெரியாது என மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பதில்கூறும் அளவுக்குதான் தேர்தல் ஆணையத்துக்கு மதிப்புள்ளது.

அனைத்து அதிகாரிகளும் இந்த அரசியல்வாதிகளின் கீழ் பணிபுரிவது என்பதால் மறப்போம் மன்னிப்போம் என்பதே அதிகாரிகளின் நடைமுறையாக உள்ளது.விளைவு இன்று மக்கள் காசுகொடுத்து வாங்குபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். அறுபதாண்டு இந்திய ஜனநாயகத்தின் வெற்றி என எதைச்சொல்ல? கேள்விகள் எழாமல் இருக்கப்போவதில்லை. அதிகாரிகள் கூட கண்டிக்காமல் மன்னிக்கலாம், மறக்கலாம். ஆனால் மக்கள் மன்னிக்கமாட்டார்கள், மறக்கமாட்டார்கள். நிச்சயம் தண்டிப்பார்கள்.

-ஆசிரியர் குழு

Pin It