எல்லா மரியாதைகளுடனும், எல்லா போலித்தனங்களுடனும், எல்லா சடங்குகளுடனும் கொண்டாடப்பட்டு விட்டது, புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாள். நூற்றுப் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஒரு மனிதனை, அம்மனிதன் பிறந்த சமூகமும், பிற சமூகங்களும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் நினைவில் வைத்திருப்பதே பெரிய விடயம்தான் என்று சில நேரங்களில் தோன்றுகிறது. இந்தக் கசப்பான சொற்களுக்குப் பல் வேறு காரணங்கள் விரவிக் கிடக்கின்றன. அம்பேத்கரின் பிறந்த நாளின் போதும், நினைவு நாளின்போதும், அவரின் சிலைகள் முன்பாக நடந்தேறுகின்ற நாடகார்த்தமான செயல்பாடுகளைப் பார்க்கின்றபோது, கசப்பு இன்னும் கூடுகிறது. மராத்தியக் கவிஞர் ஹீரா பன்ஸோடெவின் கவிதை ஒன்று உண்டு. அவர் எழுதுகிறார் :

ஓ! மாமனிதனே / உனது பாதையில் முட்களைத் தூவியவர்கள் / இன்று உனக்கு மலர்களை வழங்குகிறார்கள் / உனது புகழ் பாடுகிறார்கள் / இது என்ன வினோதம்?

ஹீராவின் வரிகள் சுமந்து வரும் உண்மை, வேலிக்காத்தான் முள் போல நெஞ்சில் நறுக்கென தைக்கிறது. அம்பேத்கரை காலமெனும் இருண்ட ஊர்வலத்தில் விளக்கேற்றியவராக உருவகப்படுத்துகிறார் ஹீரா. ஆனால், அந்த விளக்கு அணைக் கப்படுகிறது. காலத்தை இருட்டிலேயே வைத்திருக்க வேண்டும் என்பது, இந்தியாவில் பலருடைய விருப்பம். அம்பேத்கரை கோயில் கதவுகளை உடைத்தெறியும் யானை என்றும் சித்தரிக்கிறார் ஹீரா. ஆனால், கோயில் நொறுங்கித் தகரும்போது உள்ளிருக்கும் கடவுளர்களைக் காண வில்லை. அவர்கள் நெடுங்காலத்துக்கு முன்பே ஆதிக்க சாதியினரால் அடிமைப்படுத்தப்பட்டுவிட்டதால் தப்புவிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படியே தனது ஆத்திரம் தெறிக்கும் கூரிய பார்வையில், உண்மைகளை சொல்லிக் கொண்டே போகும் கவிஞர், இறுதியில் இப்படி குமுறுகிறார் :

இது என்ன நியாயம்?/ இயற்கை எல்லார்க்கும் சொந்தமானது / என்பதைச் சொல்லத் தேவையில்லை / ஆனால் அவர்கள் அதையும் வாங்கிவிட்டார்கள் / சவுதார் குளத்தின் ஒவ்வொரு சொட்டு நீரிலும் / அவர்கள் தங்கள் முத்திரையைக் குத்திவிட்டனர் / இந்த கலாச்சாரத்தின் எச்சரிக்கை மிகுந்த காவலாளி / சிறைபிடிக்கப்பட்ட தண்ணீரைப் பாதுகாத்தான் / நீ தொட்டால் தண்ணீர் நஞ்சாகிவிடும் என்று / அவர்கள் அஞ்சினார்கள் / நீ தாகத்தால் செத்துக் கொண்டிருந்தபோது / உன்னுடைய ரத்தத்தால் உனக்குத் திருமுழுக்காட்டினர் / இப்போதோ அவர்கள் / கல்லில் வடித்த உன் கொடும்பாவியின் வாயில் / தண்ணீர் ஊற்றுகிறார்கள் ("தலித் முரசு', மே 2002 தமிழில் : எஸ்.வி. ராஜதுரை).

ஹீரா பன்சொடே, கல்லில் வடித்த கொடும்பாவி என்ற அம்பேத்கரின் சிலையை எழுதும்போது மனம் துணுக்குறுகிறது. ஆனால், நிலைமை அப்படிதான் ஆகிவிட்டது என்ற உண்மையும் உறைக்கிறது. அம்பேத்கரின் சிலையை ஆதிக்கச் சாதியினர் கொடும்பாவி என்று நினைப்பதால்தானே இழிவுபடுத்தத் துணிகிறார்கள்? ஹீரா, கவிதை நெடுக குறிப்பிடும் "அவர்கள்' என்ற விளிச்சொல், ஆதிக்க சாதியினரின் தலைவர்களை குறிப்பிடுகிறது. அவர் அம்பேத்கரின் பிறந்த நாட்களின்போதும், நினைவு நாட்களின்போதும் நடந்தேறும் சடங்குகளைப் பார்த்துதான் இக்கவிதையை எழுதியிருக்கிறார்.

ஆனால், சாதி உணர்வுமிக்க ஆதிக்க சாதியினரை மட்டும் குற்றம் சாட்டுவதில் பயனில்லை. அவர்களோடு தலித் உணர்வற்ற தலித்துகளையும் இணைத்துப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. சாதிய உணர்வும், தலித் உணர்வின்மை யும் எதிர்மையுடைய கருத்துருக்களாகத் தோன்றலாம். ஆனால், இரண்டு கருத்து நிலைகளும் அடிப்படையில் ஒன்றுதான். சாதிய உணர்வுக்கு மாற்றாக இருக்கும் தலித் உணர்வு, சாதியத்தைத் தகர்க்கின்ற ஆயுதமாக விளங்குகின்றது. தலித் உணர்வின்மை, சாதியுணர்வின் எதிரில் பணிந்து போய் தோற்று விழுகிறது. தோற்று விழு கிறது என்பதுகூட சரியல்ல, ஏனெனில் அங்கு போட்டியே இல்லை. இற்று விழுகிறது என்பதே சரி. இற்று விழுதல் என்பதற்கு இரண்டுமே இங்கு பயன்பாட்டு அளவில் தலித் உணர்வற்றோரை குறிப்பதற்கான சரியான சொல்தான்.

சாதிய உணர்வு கொண்ட பலரும் அம்பேத்கரை தலைவராக ஏற்றுக்கொள்ள விரும்பாத நிலை நீடித்து வருவது உண்மை எனில், அம்பேத்கர் என்ற தலைவனால் உருவான பலர் அவரை மெல்ல மறக்க விரும்புவது, உண்மையிலும் உண்மை (சிலர் நினைப்பதே இல்லை என்பதால், மறக்க வேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லை).

அம்பேத்கரை நினைவில் வைத்திருப்போராலும், மெல்ல மறந்து வருவோராலும், போலியாக நினைப்போராலும், ஏப்ரல் 14இன் காலை சலனம் கொள்ளத் தொடங்கிவிடுகிறது. பெரும்பாலான சிலைகள் புது வண்ணப்பூச்சுடன் மிளிர்கின்றன. சில அதே நிலையில் நீடிக்கவும் செய்கின்றன. சிதிலமடைந்து, கவனிப்பாரற்று இருக்கும் சிலைகளுக்கு எந்த மாற்றமும் இருப்பதில்லை (ஓர் எடுத்துக்காட்டு : காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டையில் உள்ள முதன்மை மின் பொறியாளர் அலுவலகம் முன்பு தலையில்லாமல் ஒரு அம்பேத்கர், பல ஆண்டுகளாய் நிற்கிறார். அதை அங்கு நிறுவ முயன்ற "தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலச் சங்க மின் ஊழியர்கள்' தடுக்கப்பட்டிருக்கிறார்கள். காவல் துறையே அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியிருக்கிறது. பாலுசெட்டி சத்திரத்தில் மூடிக்கிடக்கின்ற அம்பேத்கர் சிலையை இன்னும் திறக்க முடியவில்லை).

கவனிப்பாரற்று அப்படியே பெட்டிகளில் தூங்கிக் கொண்டிருக்கும் சலவை செய்து தேய்க்கப்பட்ட கரைவேட்டிகளும், இன்னபிறவும் வெளியில் எடுக்கப்படுகின்றன. மாலையுடனும் மேளதாளங்களுடனும் ஊர்வலங்கள் தொடங்குகின்றன. வெயில் உச்சிக்கு ஏறுவதற்குள் அம்பேத்கரின் சிலை சுமக்க முடியாதபடி எண்ணிலடங்காத மாலைகளை சுமந்து கொள்கின்றது. அந்த மாலைகளின் எண்ணிக்கைகளை வைத்தே எத்தனை தலித் கட்சிகளும், அமைப்புகளும் இருக்கின்றன என்று துல்லியமாக கணக்கிட்டு விடலாம். மாலை அணிவிப்பதில்தான் எத்தனை நுண் அரசியல்கள். அந்தந்தப் பகுதிகளில் செல்வாக்கு செலுத்தும் அமைப்புகளோ, தலைவர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ முதலில் மாலை அணிவித்த பிறகுதான் பிறர் அணிவிக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டங்கள் உண்டு. அந்த சட்டத்திற்கு உட்படாத சட்டம் மீறப்படுமானால், சட்டமேதையின் சிலை முன்பாகவேகூட, சட்ட ஒழுங்கு பிரச்சினை உருவாகிவிடலாம். மாலை அணிவித்தலோடு வேறு நிகழ்ச்சிகள் ஏதேனும் இருப்பின் கொஞ்சம் கூட்டம் அங்கே இடம்பெறும். அதிலும் சில உள் விவகாரங்கள் நடக்கும். விழா துண்டறிக்கையில் பெயர் இல்லை என்றாலோ, உரிய இடத்தில் அச்சிடப்படவில்லை என்றாலோ, விழா புறக்கணிப்பு நடைபெறும்.

இப்படியாக சடங்காகப் போகக்கூடிய அளவிலேதான் பல்வேறு இடங்களிலும் மாலை அணிவிப்பும் மற்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்த வழிபாட்டு மனோநிலைக்கும், சடங்குத்தனமான சிந்தனைக்கும் பெரும்பாலான தலித் மக்கள் மாறி வெகுநாட்களாகிவிட்டன. எல்லாம் முடிவுற்ற பிறகு கட்சித் தோழர்களும், அமைப்பின் செயல்பாட்டாளர்களும் கலைந்து விடுகிறார்கள். தலித் அரசியல் அமைப்புகள் கவனிக்க வேண்டிய வேறு பணிகள் காத்திருக்கின்றன. தலித் விமரிசகர்களால், சிறு தலைமைத்துவம் மற்றும் சிறு அதிகாரம் (Petty Leadership and Petty Power) என்கிற நிலையினைக் கொண்டே இந்த "கலைந்து போதலை' நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். சிறு அதிகாரமும், சிறு தலைமையும் மட்டுமே போதும் என்ற நிலைக்கு; தலித் அரசியல் அமைப்புகள் மட்டுமே போதும் என்ற நிலைக்கு, தலித் அரசியல் அமைப்புகள் வந்துவிட்டன. அம்பேத்கரின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்ட அரசியல் திட்டங்களுக்கு மாற்றாக, இன்னும் சொல்லப்போனால் அவற்றிற் குள்ளாகவே வராத பல்வேறு திட்டங்கள், தலித் அரசியல் அமைப்புகளுக்கு இன்று இருக்கின்றன.

தலித்துகளிடையே சுயமரியாதைக்கான இயக்கமோ, சமூக சீர்த்திருத்த இயக்கமோ கட்டி எழுப்பப்படுவதற்கு, எந்தவிதமான முயற்சிகளையும் இந்த அமைப்புகள் எடுக்காமல் இருக்கின்றன. அதனால் இன்று இந்திய அளவிலேயே ஒரு தலித் இயக்க மறுமலர்ச்சி இல்லாமல் போய் இருக்கிறது. தலித்துகள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் தலித் உணர்வு மங்கியும்; தலித்துகள் குறைவõக இருக்கும் பகுதிகளில் தலித் உணர்வு பொங்கியும் இருக்கின்றன. இது, மாநில அளவுகளிலேயும்கூட பொருந்தக்கூடிய ஒன்று. உத்திரப்பிரதேசம் (3 கோடி), மேற்கு வங்கம் (2 கோடி), பீகார் (1.5 கோடி), தமிழ் நாடு (1.10 கோடி) ஆகிய மாநிலங்களில் தலித்துகள் அதிகம் இருந்தாலும், தலித் உணர்வும், இயக்க எழுச்சியும் இங்கெல்லாம் மந்தமாகவே இருக்கின்றன.

ஆனால், மகõராட்டிரம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மேற்கண்ட மாநிலங்களை விடவும் தலித் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன. இருப்பினும், அங்கே தலித் உணர்வும், இயக்க எழுச்சியும் அதிகமாக இருக்கின்றன. பஞ்சாப் (28.3%), இமாச்சாலப் பிரதேசம் (25.4%) ஆகிய மாநிலங்களில் தலித் மக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்தாலும், அங்கு நிலைமை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. தலித் மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களிலும், மாநிலங்களிலும் தலித் உணர்வு குறைந்து இருக்கிறது. பெரும்பான்மை உணர்வு, ஒரு மெத்தனப் போக்கை உருவாக்கிவிட்டிருக்கிறது. ஆனால், இந்தியச் சூழலில் தலித்துகளின் மனோநிலையும், இருப்பும் பெரும்பான்மையாக இருந்தது இல்லை; கருதப்பட்டதும் இல்லை.

தலித் அரசியல் அமைப்புகளுக்கு சிறிதும் மாற்று இல்லாத வகையில்தான், தலித் அரசு ஊழியர் அமைப்புகளும் இருக்கின்றன. சொல்லப்போனால், அமைப்புகளைக் காட்டிலும் சுயநலத்துடனும், எழுச்சியற்றும் இருக்கின்றன அவை. அரசு சலுகைகள், பணி ஒதுக்கீடு ஆகியவை தவிர்த்த வேறு எதுவும் அவர்களுக்கு முக்கியமல்ல. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் உணவு வழங்கல் துறையில் பணிபுரிந்து வருகிறார். மிகுந்த நேர்மையும் கொள்கைப் பிடிப்பும் கொண்டவர் அவர். தான் பணிமாற்றலாகிப் போகும் இடங்களில், ஒரு மாதத்துக்கு நூற்றுக்கும் குறையாமல் போலி உணவு வழங்கல் அட்டைகளைப் பிடித்து விடுவார். ஆனால், அப்படி எதுவும் நமது அரசில் சாத்தியமில்லை. அந்த நண்பர் மீது புகார்கள் பறந்தன. மாவட்ட உயர் அதிகாரி உடனே அவரை அழைத்தார். நண்பருக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. விசாரணைக்கு அழைக்கும் அதிகாரி ஒரு தலித், நேர்மையானவர், எனவே எதுவும் நடக்காது என்று. ஆனால், அந்த அலுவலரின் அறைக்குள் போனதும் அவரின் நம்பிக்கைகள் வறண்டு போயின.

“நீ போலி ரேஷன் அட்டையை பிடிச்சிட்டா நாங்கல்லாம் வேல செய்யறதில்லன்னு அர்த்தமா?'' முதல் கேள்விக்கே தடுமாறிய நண்பர் "இல்லை' என்று மறுத்துவிட்டு, “நான் அம்பேத்கர், பெரியார் கொள்கையில் வந்தவன். அதனால் குறைந்த பட்சமாவது நேர்மையாக இருக்க விரும்புகிறேன்'' என்று கூறியிருக்கிறார். உடனே அந்த அலுவலர், “உன்னுடைய அரசியல் கட்சியைப் பத்தியெல்லாம் இங்க கேக்கறதுக்கு உன்ன கூப்பிடல. ஒழுங்கா என் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு'' என்றிருக்கிறார். அதற்கு மேல் தலையாட்டிக் கொள்வதைத் தவிர, வேறு பதில் இல்லை என்ற நிலைமைக்கு நண்பர் போய்விட்டிருக்கிறார். அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை ஓர் உயர் தலித் அதிகாரி "வெறும் அரசியல்' என்று புரிந்து கொண்டிருக்கிறார் என்பது சாதாரண அதிர்ச்சி அல்ல.

அம்பேத்கரியம், பெரியாரியம், மார்க்சியம் என்பவையெல்லாம் வெறுமனே அரசியல் மட்டுமல்ல, அவை சமூக வாழ்க்கையின் நெறிகளும் ஆகும் என்கின்ற சிந்தனை இல்லாத தலித்துகள், எத்தனை உயர் பதவிகளுக்குப் போனாலும் பலன் விளையப் போவதில்லை. ஆந்திர பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை பேராசிரியராக இருக்கும் கே.எஸ். சலம், தலித்துகளில் படித்தவர்களை இரு கூறுகளாகப் பிரிக்கிறார். வேரோட்டமான அமைப்பியல் சார்ந்த அறிவாளிகள் (Organic Intellectuals), பொறுப்பற்ற மழுங்கடிக்கப்பட்ட அறிவாளிகள் (Lumpen Intellectuals). அக்கறையுடனும், தலித் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் சிந்தனையுடனும் இருக்கிறவர்களை – முதல் வகையினராகவும், பொது சமூகப் படிநிலைகளுக்கு ஏற்றவராகத் தன்னை மாற்றிக் கொண்டு, உடனடி சலுகைகளைப் பெற்று வாழ்பவராக இரண்டாம் வகையினரையும் நாம் புரிந்து கொள்ளலாம் ("உலகமயமாக்கலும், தலித்துகளின் எதிர்காலமும்' கே.எஸ். சலம், விகாஸ் அத்யாயன் கேந்திரா, பக். 12).

இந்த இருவகையினரில் இரண்டாம் வகையினர் அதிகமாக இருக்கின்ற நிலை இன்று உருவாகியிருக்கிறது. இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் விடுதலைக்குப் பிறகு, அம்பேத்கருக்குப் பின் ஒரு தலித் சமூக சீர்த்திருத்த இயக்கம் என்பது இங்கே இல்லாமல் போனது. தலித் அரசியல் அமைப்புகளின் திட்டமிடப்படாத செயல்பாடுகளும், சமூக அக்கறை இல்லாத தலித் படிப்பாளிகளின் எண்ணிக்கை பெருக்கமும் – இன்று தலித் உணர்வு அற்ற, அம்பேத்கரிய தெரிவு அற்ற இளைய தலித் சமூகத்தை உருவாக்கிவிட்டிருக்கின்றன. இந்த உண்மைகள்தான் அம்பேத்கரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகளில் பிரதிபலிக்கின்றன. அவ்விழாக்கள் சடங்காக தீர்ந்து போக காரணமாகி இருக்கின்றன.

இந்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று நான் கலந்து கொண்ட அம்பேத்கரின் பிறந்த நாள் விழா கூட்டம் ஒன்று, நெஞ்சை விட்டு அகலாததாக இருக்கிறது. நகரின் இதயப் பகுதியில், பேருந்து சதுக்கத்திற்கு அருகில் அக்கூட்டம் நடந்தது. எதிரில் போடப் பட்டிருந்த நூற்றுக்கணக்கான நாற்காலிகள் வெறுமையாக இருந்தன. மேடையில் இருப்பவர்களைத் தவிர, வேறு ஆளில்லை என்று சொல்லும் நிலை. பேருந்தை எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கிறார்கள். கூப்பிடு தொலைவில் உள்ள தலித் குடியிருப்புகளிலிருந்து யாரும் வரவில்லை. அய்.ஏ.எஸ். முதற்கொண்டு ஆசிரியர்கள் வரை நிறைந்த பகுதி அது. ஆனால், யாரும் வரவில்லை.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வீட்டு வீட்டுக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து அழைக்க வேண்டும் என்று அந்த படிப்பாளிகள் எதிர்பார்த்தார்களோ என்னவோ தெரியவில்லை. யாரும் வரவில்லை. நேரம் செல்லச் செல்ல, மேளம் முழக்கியபடி ஓர் இளைஞர் கூட்டம், அம்பேத்கர் படத்துடன் வந்து சேர்ந்தது. அவர்கள் வந்தபோது மூத்த அம்பேத்கர்வாதி ஒருவர் உணர்வுப்பூர்வமாக பேசிக் கொண்டிருந்தார். அய்ந்து நிமிடங்கள் கடந்திருக்கும். போதையின் களிப்புடன் ஓர் இளைஞர் எழுந்து, “யோவ் பெருசு. போதும் முடிய்யா. நம்ம தலைவரைப் பேச வுடு'' என்றார்.

இத்தனை இயக்கங்கள், இத்தனை தலைவர்கள், இத்தனை படிப்பாளிகள் இருந்தும், இதுபோன்ற இளைஞர்களை இன்னும் அம்பேத்கரியல் ஏன் சென்றடைய முடியவில்லை? கல்வியில் நாட்டமின்மை, திரைப்பட மோகம், லட்சியமின்மை, தலித் உணர் வின்மை, குழு மனப்பான்மை, அம்பேத்கர் பற்றிய அறியாமை ஆகியவற்றுடன் இன்னும் பல ஆயிரம் தலித் இளைஞர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இப்படி எழுந்து நின்று சத்தம் போடுகிறõர் என்று நான் நினைத்துக் கொண்டேன்.

பேராசிரியர் சலம் சொல்வதை இங்கு நாம் மிகவும் ஆழமாக யோசிக்கத் தோன்றுகிறது. அவர் ஒரு வினாவினை எழுப்புகிறார். “நாம் ஒவ்வொரு கிராமத்திலும் அம்பேத்கர் மன்றங்கள் வைத்திருக்கிறோம். ஆனால், தலித் பேரமைப்பை வைத்திருக்கிறோமா?'' தலித் சிக்கல்களை முன்னிறுத்தி சில இயக்கங்களே முழுவதற்குமாக இயங்குகின்றன. ஆனால், தலித் முழுமை யும் அவற்றில் ஈடுபடுவதில்லை. இது ஒருவகையான பின்னடை வாகவும் வெற்றிடமாகவும் உருமாறி இருக்கிறது. தலித்துகளின் எதிர்காலம் குறித்து, சட்டென்று நம்மால் இன்று நம்பிக்கையாக எதுவும் சொல்லிவிட முடியாது. புதிய பொருளாதாரம், உலகமயமாக்கல், இடஒதுக்கீடு மறுப்பு, சலுகைகளின் சொக்கு, இன்னும் தொடரும் வன்கொடுமைகள், கைக்கு எட்டாத அதிகாரம் என்று எந்தெந்த திசையில் நகர்ந்தாலும் முட்டுகிறது.

பேராசிரியர் சலம், தலித் எழுச்சியுடன் கருப்பின மக்களின் எழுச்சியை பொருத்திப் பேசுகிறார். ஒரு நீண்டகால சமூகப் போராட்டங்களின் விளைவாக, இன்று கருப்பின மக்கள் அமெரிக்காவில் ஓர் உறுதிப்பாடான இடத்தை அடைந்திருக்கிறார்கள். 1980லிருந்து 2000 வரையிலான காலகட்டத்தில், ஆண்டுக்கு 7.3 சதவிகித கருப்பின வணிக வளர்ச்சியும், 11 சதவிகித கருப்பின வேலைவாய்ப்பு வசதியும் அங்கு பெருகியிருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் கருப்பர்களின் வாணிபம் பல லட்சம் டாலர்களாக உயரும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வகையான பொருளாதார வளர்ச்சிகளும், சமூக வளர்ச்சியும் வெள்ளை அரசின் தாராள கொள்கைகளால் உருவானதல்ல. மாறாக, மிகவும் வலுவான கருப்பின அரசியல் அமைப்புகளால் உருவானது என்கிறார் சலம்.

1973இல் அட்லாண்டா நகரின் மேயராக மேநார்ட் ஜாக்சன், முதல்முதலாக கருப்பினத்தவரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, இந்தப் பொருளாதார வளர்ச்சி துளிர்விட்டிருக்கிறது. போக்குவரத்து, கட்டுமானம், சேவைகள் போன்ற மிக முக்கியமான ஆறு துறைகளில் இன்று கருப்பர்கள் அங்கு தலைசிறந்து விளங்குகிறார்கள். இதற்குக் காரணம், இந்த வளர்ச்சியை எட்டிப் பிடிக்க அம்மக்களை தயார்படுத்திய சமூக இயக்கமும், அதன் உடன் நின்ற படிப்பாளிகளும், செயற்பாட்டாளர்களுமே. இந்த நிலை ஏன் இங்கே நம்மால் எட்டப்படவில்லை என்பதை நாம் ஆழமாக விவாதிக்க வேண்டும். எல்லா ஊர்களிலும் இருக்கும் அமைப்பியல் சார்ந்த, அக்கறை உடைய தலித் படிப்பாளிகள், அவர்தம் பகுதிகளில் இருக்கும் இளைஞர்களை அரசியல்படுத்தும் வேலைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வகையான வேலைகள் தொடர்ந்தால், அடுத்த ஏப்ரல் 14 அன்று, அம்பேத்கர் மிகப் பெரிய ஒரே ஒரு மாலையோடு கம்பீரமாக நிற்பார். அதைத் தொடர்ந்து அர்த்தம் பொதிந்த, அறிவு சார்ந்த பிறந்த நாள் நிகழ்ச்சிகள் தொடரும்.

இதுவரையிலும் பாபாசாகேப் அம்பேத்கர் குறித்து கவனப்படுத்தப்படாத சில செய்திகளை கவனப்படுத்த வேண்டும் (ஏப்ரல் 14 கூட்டங்களுக்காக) என்ற எண்ணத்தில், வசந்த் மூன் எழுதிய "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்' எனும் ஆங்கில நூலைப் படித்துக் கொண்டிருந்தபோது, சில அரிய செய்திகள் கிடைத்தன. வரலாற்றில் இருண்ட பகுதிகளாக மறைக்கப்படும் பல பகுதிகளைப் போன்றுதான் அம்பேத்கரின் வரலாற்றிலும் பல பகுதிகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. வரலாற்றின் மவுனங்களைப் போன்ற அவற்றைப் பேச வைக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்காகவும், இந்தியாவின் உள்நாட்டு கட்டமைப்பு வளர்ச்சிகளுக்காகவும் அம்பேத்கர் ஆற்றியுள்ள பணிகள், இங்கு முதன்மைப்படுத்தப்படாமலேயே உள்ளன. 1936இல் சுதந்திரத் தொழிலாளர் கட்சியை தொடங்கிய மறு ஆண்டே, தேர்தலில் நின்று பம்பாய் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார் அம்பேத்கர்.

17.9.1937 அன்று அம்பேத்கர் சட்டமன்றத்தில் கொண்டுவந்த முதல் சட்ட முன்வரைவு, விவசாயிகளின் நலன் காக்கும் ஒன்றாகும். கொங்கணப் பகுதியில் நிலச்சுவாந்தார்கள் கடைப்பிடித்து வந்த "கோட்டி' எனும் அடிமை முறையை ஒழிக்கவும், முறையான கூலி வழங்கவும், நீர் வரியை ரத்து செய்யவும் அச்சட்ட வரைவு முன்மொழிந்திருக்கிறது. அதை பம்பாய் நிர்வாகம் ஏற்காமல் போகவே அப்பகுதிகளில் ஏற்பட்ட மாபெரும் விவசாயப் பேரணிகளுக்கும், மாநாடுகளுக்கும் அம்பேத்கர் சென்றிருக்கிறார். அவர் பங்கேற்ற அத்தகைய விவசாயிகளின் மாநாடுகளுக்கு, இருபது ஆயிரத்திற்கும் குறையாத விவசாயத் தொழிலாளர்கள் ஆங்காங்கே திரண்டிருக்கிறார்கள். 1938இல் பம்பாய் மாகாண அரசு, தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை சட்ட விரோதம் என்று அறிவித்தபோது, அம்பேத்கர் அவர்கள் அதை மிகக் கடுமையாக எதிர்த்திருக்கிறார். அவருடைய எதிர்ப்பு சொற்கள், அவருக்கே உரிய மேதமையுடன் சொல்லப்பட்டிருக்கின்றன :“விடுதலை என்பது உன்னதமானதோர் உரிமை எனில், உரிமைகளுக்காக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதும் உன்னதமானதுதான். அதுவும் தொழிலாளர்களின் உன்னதமான உரிமைகளில் ஒன்று.''

அம்பேத்கரின் பல பணிகளில் குறிப்பிடத்தகுந்த பணியாக, அவர் வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில், தொழிலாளர் நல அமைச்சராக இருந்ததை சொல்ல வேண்டும். 20.7.1942 அன்று அக்குழுவில் பொறுப்பேற்கும் அவர் 1946 சூன் வரை இருந்திருக்கிறார். பொறுப்பிலிருந்து விலகுவதற்கு முன், 1946 பிப்ரவரியில் அதுவரையில் 10 மணிநேர வேலை என்று இருந்த நிலையை 8 மணி நேர வேலையாக மாற்றி, தொழிலாளர்களின் சுமையைக் குறைத்தது மட்டுமின்றி, தனது பதவிக்காலம் முடிய எண்ணற்ற பணிகளை ஆற்றியிருக்கிறார். அவர் தொழிலாளர் நல அமைச்சராக இருந்தபோது, அவருடைய நிர்வாகத்தின் கீழ்தான் இந்தியாவில் பல விமான நிலையங்களும் கட்டப்பட்டிருக்கின்றன.

இந்திய நதிகளை இணைக்கின்ற கனவுடன் அம்பேத்கர் அவர்களுக்கு அரபிக் கடலையும், வங்காள விரிகுடாவையும் இணைக்கின்ற எண்ணமும் இருந்திருக்கிறது. தொழிற்சங்கங்களும், அரசும், தொழிற்சாலை நிர்வாகமும் பேசித் தீர்க்கின்ற வகையிலான மும்முனைப் பேச்சுவார்த்தை திட்டத்தை அறிமுகம் செய்ததுடன், தொழிலாளர் நல அலுவலகம் நாட்டிலேயே முதன்முதலாய் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களுக்கான ஆயுள் காப்பீடு, பெண் தொழிலாளர்களுக்கு ஆண்களுக்கு இணையான ஊதியம், ஆயுள் பேறுகால விடுப்பு போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

"தொழிலாளர்களுக்கு வீடு, உடை, உணவு, சுகாதார வாழ்க்கை, கண்ணியமான – பாதுகாப்பான வாழ்க்கை இன்றி விடுதலையில் பொருள் இல்லை. அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை. தேச வளத்தில் பங்கு தேவை' என்று விரும்பிய அவர், சுரங்கத் தொழிலாளர், தேயிலை தோட்டத் தொழிலாளர் நலனில் அதிக அக்கறை செலுத்தியிருக்கிறார். அன்றைக்கு இருந்த இந்தியாவின் அனைத்து சுரங்கங்களுக்கும் சென்று பார்வையிட்டதுடன், சுமார் 400 அடி ஆழம் வரை சுரங்கங்களுக்குள் சென்று நேரடியாக தொழி லாளர்களின் நிலையை ஆய்ந்தறிந்திருக்கிறார். தொழிலாளர் நலத்துறையுடன் அவர் வகித்த கூடுதல் பொறுப்பு கள் நமக்கு வியப்பை அளிக்கின்றன.

நிலக்கரி சுரங்கத்துறை, அச்சு மற்றும் எழுது பொருள் துறை, ராணுவம் மற்றும் உள்நாட்டு அலுவலர் தொழில்நுட்பப் பயிற்சித்துறை, விளம்பரத்துறை, ராணுவத் தேர்வு, வீடு மற்றும் பொதுப் பணித்துறை, பிலானி தொழிற் பயிற்சி மய்யம், மய்ய ஆற்றல் துறை ஆகிய துறைகள் அம்பேத்கரால் அன்று நிர்வகிக்கப்பட்டுள்ளன. அத்துறைகளில் அவருடைய முனைப்பான பங்களிப்பினால், பல சிறந்த திட்டங்கள் செயற்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், அவை குறித்து நமக்கு இன்று போதிய தகவல்கள் இல்லை. இப்பணிகளிலே சிகரம் வைத்தது போன்ற ஒரு பணி அம்பேத்கரால் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் முதன்முறையாக அவரால் தொடங்கப்பட்ட "மய்ய ஆற்றல் துறை' என்கிற துறைக்கு அவர் வித்திட்ட பணி.

தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் என்ற மாபெரும் திட்டமே அது. ஒவ்வோர் ஆண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, பல ஆயிரம் மக்களை பலிவாங்கிய தாமோதர் நதியை எப்படி கட்டுப்படுத்துவது என்று எண்ணியிருக்கிறார் அம்பேத்கர். அவருக்கே உரித்தான பண்புடன் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்த அணை திட்டங்களை மட்டும் அல்லாது, வெளிநாட்டு அணை திட்டங்கள் பலவற்றையும் ஆழ்ந்து படித்தறிந்தபிறகு, இத்திட்டத்திற்கான அடிப்படைப் பணிகள், அம்பேத்கர் அவர்களால் தொடங்கப்பட்டுள்ளன. எகிப்து நாட்டில் ஆஸ்வான் ஆற்றின் மீது இதுபோன்ற அணை கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ஆங்கிலேய பொறியாளரை அழைக்கலாம் என்று வைஸ்ராய் வேவல் சொன்ன ஆலோசனையை நிராகரித்திருக்கிறார் அம்பேத்கர்.

இங்கிலாந்திலே பெரும் நதிகள் இல்லாததால், அந்த அணை நுட்பம் அப்பொறியாளருக்கு கை வராது என்பது அவர் எண்ணமாக இருந்திருக்கிறது. ஆங்கிலேயப் பொறியாளர்களை விடவும் அமெரிக்கப் பொறியாளர்கள் இப்பணியினை மேற்கொள்ள பொருத்தமுடையவர்களாக இருக்கக்கூடும் என்று அவர் எண்ணியிருக்கிறார். ஆனாலும் அவரின் விருப்பம் வேறாக இருந்திருக்கிறது. ஒரு இந்தியப் பொறியாளர் இப்பணியினை மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பமே அது.

பஞ்சாபில் இருந்த தலைமைப் பொறியாளர் ஏ.என். கோசலா அவர்களிடம் இப்பொறுப்பை அளிக்க முன்வந்தபோது, அப்பொறியாளர் அம்பேத்கரின் தலைமையின் கீழ் பணியாற்ற முடியாது என்று மறுத்திருக்கிறார். இந்தியர் ஒருவரால்தான் இப்பணி நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அம்பேத்கரின் பார்வையைப் புரிந்து கொண்ட பின்னரே கோசலா அப்பணியினை ஏற்றுக் கொள்ள சம்மதித்திருக்கிறார். இன்று பீகார், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங் களுக்கு மிகப்பெரும் நீர் மற்றும் ஆற்றல் ஆதாரமாக விளங்கும் தாமோதர் நதி பள்ளத்தாக்கு திட்டம், அம்பேத்கரால் தொடங்கி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இந்திய வரலாறு அத்திட்டத்துடன் அத்திட்டத்தின் தந்தையான அம்பேத்கரை இணைத்துப் பேச மறுத்து, கள்ள மவுனம் சாதிக்கிறது.
Pin It