காலங்காலமாய் எங்களுக்கு சோறிட்ட தாயை (நிலத்தை) எங்களிடமிருந்து பறித்துவிட்டார்கள். ராய்கட்டில் பாதிக்கப்பட்ட 35,000 விவசாயிகளும் தலா ஒரு ரூபாய் சேகரித்து 35,000 ரூபாய் கொடுத்து, இந்தத் தொழிலதிபரின் தாயை விலைக்கு வாங்கவிருக்கிறோம். இது எங்கள் பேரம். அவர்கள் சம்மதித்தாக வேண்டும்.
- அருண் சிவ்கர், தலைவர் ‘சாவக்'

அணுகுண்டு வெடிப்பு சோதனை நடத்தப்பட்ட பொக்ரான் கிராமத்தில், பலருக்கு மூக்கில் ரத்தம் வடிந்ததைப் பார்த்து அகமகிழ்ந்து போனார் வாஜ்பாய்; சடலங்கள் மீது நின்று முழங்குகிறார் நரேந்திர மோடி; கலிங்கா நகர் ஆதிவாசிகளின் ரத்தத்தை தன் உடலில் பூசி நடனமாடுகிறார் பட்நாயக்; வாக்குச் சீட்டுகளை காலில் மிதித்து சென்னை அண்ணா சலையில் டப்பாங்குத்து ஆடுகிறார் கருணாநிதி; தினமும் பன்னாட்டு நிறுவன அதிபர்கள் முன்பு உக்கி போடுகிறார் மாறன்; அம்பானியின் தோட்டத்தில் நடக்கும் ‘கேட் வாக்'கில் பங்கெடுக்காத முதல்வர்களே கிடையாது. டாடாவின் ஒரு லட்சம் ரூபாய் கார் கிளப்பிய புகை மூட்டத்தில் மூச்சுத் திணறுகிறார் புத்ததேவ் பட்டாச்சார்யா; தற்கொலை செய்து கொண்ட விதர்பா விவசாயிகளின் எலும்புகளை மாலையாக அணிந்து கொண்டு அமர்ந்திருக்கிறார் விலாஸ் ராவ். இந்தக் கொடூரங்களை எல்லாம் பார்த்து பூரித்துப் போய் செய்வதறியாது அலைகிறார் மன்மோகன்.

2006 ஆம் ஆண்டு முழுவதும் இந்தியா மெல்ல மெல்ல மனநோய் கூடத்தைப் போல் உருமாறிக் கொண்டேயிருந்தது. அந்தக் கூடத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அரூபமான நடனத்தில் ஈடுபட்டிருந்தனர். ஊடகங்கள் இந்த நடனத்தை காசாக்குவதில் மும்முரமாக அலைந்தன. சனவரி மாதம் கலிங்கா நகர் தொடங்கி நொய்டா பிணக்குவியல்கள் வரை, எங்கும் பிண நாற்றம். நாடு முழுவதும் பிணவாடை மூளையின் நரம்புகளை குத்திக் கிழித்தன. அரசாங்கங்கள் இந்தப் பிண வாடையில் வாழ கச்சிதமாகப் பழகிவிட்டன.

இந்தியாவின் வரலாற்றில் அதன் மக்கள் இத்தனை கேவலமாக நடத்தப்பட்டதில்லை. கிழக்கிந்திய கம்பெனியின் எல்லைகளை எல்லாம் தகர்த்துவிட்டனர் அதன் வாரிசுகள். மூன்றாம் உலக நாடுகள் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள், தங்கள் பூர்வ வசிப்பிடங்களிலிருந்து பெயர்த்தெறியப்பட்டனர். அதே வேளையில் தாராளமய தாளவாத்தியத்துடன் சேர்ந்திசையாக அமைச்சர்கள், உயரதிகாரிகள், பன்னாட்டு அதிபர்கள், இந்திய முதலாளிகள் லயித்து நட்சத்திர இரவை நடத்தி வருகிறார்கள். இவர்களின் விருப்பம் போல் பங்குச் சந்தை காளை சீறிப்பாய்கிறது.

அன்னிய முதலீடுகளை சீனாவுக்குச் செல்லவிடாமல் தடுப்பதற்கு, இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அவசியம் என மத்திய அமைச்சகம் கருதினாலும், காங்கிரஸ் கட்சியில் பலர் அடுத்த தேர்தலில் மக்களை சந்திப்பதே சிரமம் என வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்கள். சோனியாவின் பேச்சுகள்கூட எந்த செயல்பாடும் இல்லாத வெற்று வார்த்தைகளாகிப் போனது. இடதுசாரிகள் இந்த சட்டத்தில் பல திருத்தங்கள் கோரி வந்தாலும், அவர்கள் அரசுக்குப் போதிய நெருக்கடியை கொடுக்கவில்லை. மறுபுறம் மேற்கு வங்கத்தில் முழு வீச்சில் விமர்சனங்கள் எதையும் பொருட்படுத்தாமல், அந்நிய முதலாளிகளின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவது கடைந்தெடுத்த முரண்பாடாக உள்ளது.

கடந்த ஆண்டு மத்திய அமைச்சகம் பொருளாதார வாசல்களை எல்லாம் தகர்த்து, அகலமான பாதைகளை ஏற்படுத்தியது. இனி பல துறைகளில் அன்னிய முதலீடு தடையற்று வரலாம் என பச்சைக் கொடிகள் வானில் பறக்கவிடப்பட்டன. ஏராளமான சலுகைகள், இலவசங்கள் அறிவிக்கப்பட்டும் இவர்கள் நினைத்த அளவு மூலதனம் நாட்டிற்குள் நுழையவில்லை. பன்னாட்டு நிறுவனங்கள் இன்னும் இன்னும் என புதிய நிர்பந்தங்களை, நெருக்கடிகளை, விதிகளை, வாக்குறுதிகளை கோரிய வண்ணமிருக்கின்றனர். எதற்கு வம்பு என மத்திய அமைச்சகம் கடந்த ஆட்சியில், முரசொலி மாறனால் முன்மொழியப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான வரைவுகளைப் புனரமைத்து, சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

1990களில் உலகமயம் என்கிற வார்த்தை ஊடகங்களின் வாயிலாக மக்களிடையே நெருங்கி புழங்கத் தொடங்கியது. 1992களில் அது இந்தியாவில் தனது அதிகாரப்பூர்வ செயல்பாட்டைத் தொடங்கியது. 90கள் முழுவதிலும் உலகமயம் குறித்து ஏராளமான மாயைகள் மக்கள் மனங்களில் பதிக்கப்பட்டன. உலகமே ஒரு கிராமமாக மாறப்போகிறது. உலக மக்களின் சமூக பொருளாதார நிலை தகவமைக்கப்பட்டு, அனைவருக்கும் அனைத்தும் அருகிலேயே கிடைக்கும்; பண்டங்கள், சேவைகள், திட்டங்கள் என பரிவர்த்தனைகள் பிரமாதமாக நடைபெறும்; மக்கள் எங்கு வசித்தாலும் தொலைவுகள் குறைந்து கலாச்சாரங்கள் இணையும்... என உலகமயம் என்கிற தலைப்பில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள், கல்விசார் கருத்தரங்குகள், தொலைக்காட்சி நிகழ்வுகள், இணைய தளங்கள் என எங்கும் ஓயாத இரைச்சல். இப்பெருத்த ஓசையின் மறைவிலிருந்து வேறு ஒரு தகவல் திடமாக மூளைகளில் தங்கிப்போனது - உலகமயம் என்கிற நடைமுறையிலிருந்து யாரும் பின் வாங்க இயலாது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic) வெளிநாட்டு, உள்நாட்டு மூலதனங்களின் சொர்க்கமாக விளங்கும். அந்தப் பகுதியில் நீங்கள் விரும்பிய தொழிலை தொடங்கலாம். மத்திய அரசாங்கத்தின் வணிக அமைச்சகத்தால் நீங்கள் இதற்கான அனுமதியை ஒற்றைச் சாளர முறை மூலம் பெற்றுவிடலாம் (ஒரு சாதாரண குடும்ப அட்டை பெறுவதற்கே, இங்கு 78 அதிகாரிகளை சந்திக்க வேண்டும் ஓர் இந்தியக் குடிமகன்). ஏற்கனவே 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, 220 திட்டங்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டு விட்டது. இந்த திட்டங்களுக்கு சுற்றுப்புறச் சூழல், ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம் என எந்த அனுமதியும் வாங்க வேண்டிய அவசியமில்லை. இந்த திட்டங்கள் இந்தியா முழுவதும் விரவிக்கிடக்கும். ஒவ்வொன்றும் தலா 1,000 முதல் 40,000 ஏக்கர் வரை நிலத்தை விழுங்கும்.

இங்கு தயாரிக்கப்படும் பொருட்களுக்கு எந்த வரிகளையும் நீங்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியதில்லை. மத்திய மாநில அரசுகளின் எந்த சட்டங்களும் இந்த எல்லைக்குள் செயல்படாது. இறக்குமதிக்கான உரிமங்கள் பெறத் தேவையில்லை. இந்தப் பகுதியிலிருந்து இறக்குமதி/ஏற்றுமதி செய்யப்படும் எந்தப் பொருளையும் இந்திய அரசு சோதனை செய்ய இயலாது. தொழிலாளர் சட்டங்கள் என்றால் அங்கு கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். சங்கம் அமைக்கும் உரிமை, பணி நிரந்தரம், ஓய்வூதியம், பேறுகால விடுப்பு என எதைப் பற்றியும் அங்கு பேச இயலாது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் 2008க்குள் ஏற்படவிருக்கும் வரி இழப்பு 90,000 கோடி. 2010க்குள் 1,60,000 கோடியை அது மிஞ்சம். இதனை அரசு வரி விடுமுறை (Tax Holiday) என அழைக்கிறது.

முதல் அமைச்சர்கள், பன்னாட்டு நிறுவன அதிபர்கள், இந்திய முதலாளிகள், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் என இந்தப் படை, உள்நாட்டுத் தரகர்களின் துணையுடன் நாடு முழுவதும் நிலம் தேடி அலைகிறது. தொடு வானத்தை மிஞ்சி இவர்களின் கருவிழி விரிகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் மும்பையில் 35,000 ஏக்கர், அலி குழுமம் நந்திகிராமில் 12,500 ஏக்கர், ரிலையன்ஸ் அரியானாவில் 25,000 ஏக்கர் என நீண்டு செல்லும் இப்பட்டியலைப் பார்த்தால் தலை சுற்றுகிறது. இது தவிர லட்சுமி மிட்டல், ஸ்வராஜ் பால், டாடா போன்ற முதலைகள் சில மாநிலங்களை மொத்தமாக கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்திட்டங்களுக்கான நில ஆர்ஜிதம் வெள்ளையர்களால் 1894இல் இயற்றப்பட்டு, இன்று வரை எந்த மாற்றமும் பெறாத பலம் பொருந்திய சட்டத்தின் நல்லாசியுடன் நடைபெறுகிறது. இந்தியா முழுவதிலும் நிவாரணம் கிடைக்காத மக்கள் தெருக்களில் அணிதிரள, அரசாங்கம் செல்லமாக துப்பாக்கி சூட்டை நடத்தி, நக்சல் பட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் வனங்களிலிருந்து, வயல்களிலிருந்து, கிராமங்களிலிருந்து துரத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். வருங்காலங்களில் நீங்களாக வெளியேறாவிட்டால் - விமானப்படை, கடற்படையின் துணையுடன் வங்கக் கடலிலோ, அரபிக் கடலிலோ தூக்கி வீசப்படுவீர்கள். தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொடங்கப்பட உள்ளன. அதற்கான அனுமதி பெறப்பட்டு, வெகு வேகமாக வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த புதிய மண்டலங்கள் மற்றும் இதை நடைமுறைப்படுத்துவதில் அரசுகள் காட்டும் அவசரம் குறித்து நாடு முழுவதிலும் பெரும் அதிருப்தி அலை வீசி வருகிறது. முதலில் இத்திட்டங்களுக்கு இத்தனை விரிந்த நிலப்பரப்பு தேவையில்லை. இங்கு நடக்கும் நில ஆக்கிரமிப்பில் 75 சதவிகிதம் தொழில் சார் பயன் பாடுகளுக்கானவை அல்ல. அந்த இடங்களில் குடியிருப்புகள், மருத்துவமனைகள், கேளிக்கை பூங்காக்கள், திரையரங்குகள், அங்காடிகள், கோல்ப் மைதானங்கள் எனப் புதிய நகரங்கள் உருவாக இருக்கின்றன. யாரை விரட்டிவிட்டு, யார் குடியிருப்பது? எல்லாம் விளையாட்டாகப் போய்விட்டது. அவர்களின் தேவை போல் 25 பங்கிற்கும் மேற்பட்ட நிலத்தை கையகப்படுத்தி வருகிறார்கள்.

அடுத்து, சுதந்திர சந்தை எனத் தொடர்ந்து பிதற்றும் இவர்கள் ஏன் அதைக் கடைப்பிடிக்கவில்லை? நில உரிமையாளர்களிடம் சென்று நேரடியாக விலை பேசலாம். நிலத்தை காலங்காலமாக உழுபவனுக்கு அதற்கு விலை நிர்ணயம் செய்யத் தெரியாதா? இந்த அதிபர்களின் கொள்ளை லாப வெறிகளுக்கு ஏன் அரசுகள் தரகு வேலை பார்க்கின்றன? சுதந்திர சந்தை தத்துவத்தை நடைமுறைப்படுத்தாதது ஏன்? நிலத்திற்கு நிர்ணயித்த தொகைகளுக்கு தரப்படும் ரொக்கப் பணத்திற்கு பதிலாக, இந்த நிறுவனங்களின் பங்கு பத்திரங்களை ஏன் அரசுகள் பெற்றுத் தரவில்லை? சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இயங்கும் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு கிடைக்கும் லாபங்களுக்கு, வருமான வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகைகளை அறிந்த பல முதலாளிகள் தங்கள் தொழில் நிறுவனங்களை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் மாற்றவும் முனைந்து வருகிறார்கள். இதனால் அரசுக்கு கூடுதல் பற்றாக்குறை ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, அரசு பல மக்கள் நலத் திட்டங்களிலிருந்து விலகி வருகிறது. அரசு தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் ஒவ்வொரு துறையிலும், தனியார் முதலைகள் தங்கள் பாதங்களைப் பதித்து வருகிறார்கள். மருத்துவம், கல்வி என அனைத்தும் பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தொண்டு புரியும் நிறுவனங்களாக உருமாறிவிட்டன. தனியார் துறைகளின் சாதனைகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி, இந்தியா ஒளிர்வதாக காட்ட முயல்கின்றன, இன்றைய பெரு ஊடகங்கள்.

மின்னணு சாதனங்கள், செல்போன்கள், தேசிய நெடுஞ்சாலைகள், அழகு சாதனங்கள், அழகிப் போட்டிகள், மென்பொருள் துறையின் சாதனைகள், சம்பளங்கள், மனமகிழ் பூங்காக்கள், மல்டிப்ளக்ஸ்கள், லாப் டாப்கள் எனத் தொடர்ந்து பல பிம்பங்களை சாமான்ய மக்களின் மீது வீசி - மிகப்பெரிய அராஜகத்தை ஊடகங்கள் அரங்கேற்றி வருகின்றன. மறுபுறம் இந்த நூற்றாண்டு தொடங்கியபொழுது நாள்தோறும் அய்ம்பது ரூபாய்க்குக் குறைவான வருமானம் பெறுவோர் 1.2 பில்லியன் மக்கள்; தினமும் 30,000 குழந்தைகள் உணவின்றி செத்து மடிகிறார்கள். நிமிடத்திற்கு ஒரு பெண் குழந்தை போரில் சாகிறாள். 800 மில்லியன் மக்கள் ஊட்டக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகமயம் சமூகத்தில் பெரும் பிளவுகளை ஏற்படுத்தி வருகிறது. நாடுகளிடையே இடைவெளிகள் அதிகரித்துள்ளன. குடும்பங்கள் சிதறுகின்றன. ஒவ்வொரு நாளும் வாழ்க்கை எங்கோ தொலைவுகளில் தொலைந்து போகிறது. இந்த மாறும் உலகம் யாருக்கானது? இது யாருடைய வளர்ச்சி? விலை கொடுப்பது யார்? மீண்டும் மீண்டும் ஒரே கேள்விதான். இது யாருக்கான அரசு, யாருடைய அரசு?

சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதிகள் தூதரக வளாகங்கள் போலவே கருதப்படுமாம்! அங்கு எந்தவித இந்திய சட்டங்களும் செயல்படாது. மலிவான கூலிக்கு ஆட்கள் கிடைப்பதால், நிறுவனங்கள் போட்டிப் போட்டு இங்கு குடிவருகின்றன. அடுத்து வேலை நிறுத்தங்கள், கடை அடைப்புகள் என எதுவும் இந்தப் பகுதியின் செயல்பாட்டை பாதிக்காது என இடதுசாரி தொழிற்சங்கங்கள்கூட நேரடியாகவே அறிவித்திருக்கின்றன. இது, கண்டிப்பாக குறைவற்ற மறு காலனியமே என்பதில் அய்யமில்லை. நாட்டின் விளிம்புகளை அவலம் தனது இருப்பிடமாக மாற்றிக் கொண்டது. அவலம் வாழ்க்கைப் பாடாக உருமாறிக் கொண்டிருக்கிறது. அவலம்... அவலம்... அவலம்... அவலத்தின் கொடிய நாற்றம் நம் நம்பிக்கைகளை கரைத்து தாழ்வு கொள்ளச் செய்கின்றது. இருப்பினும் எதிரிகளை வீழ்த்து வதற்காகவாவது நாம் ஒன்றுபட்டாக வேண்டும்.

.
-அ.முத்துக்கிருஷ்ணன்