"குதிரை ஒரு முட்டையிட
கோழி அதை அடைகாக்க
குட்டி யானை பிறக்கும்
குரங்கு வயிற்றினில்
புனுகு, சவ்வாது, குங்குமப் பூவிருக்கும்
மதுரை ஓர் நாளில் வானில் பறந்தோடி
மான்செஸ்டர் அருகில் இறங்கும்
அதிசயம் காணலாம் "உலகமயமாக்கலில்''
அடையவா என் தோழனே,
ஆறறிவில் ஓரறிவு போனவர்கள்
அனைவரையும் அழைக்கின்றேன் வருகவென்றே!...''

-கவிஞர் கண்ணதாசன் உயிரோடிருந்தால் இப்படித்தான் பாடியிருப்பார்.

19 மற்றும் 20ஆம் நூற்றாண்டில் வளர்ந்த நாடுகள், மற்ற நாடுகளை ஆக்கிரமித்து அதன் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தும், மனித வளத்தைச் சுரண்டியும் தமது நாட்டை வளப்படுத்திக் கொண்டன. காலனியாதிக்கத்திற்குட்பட்ட பல நாடுகள் போராடி விடுதலை பெற்று 50 ஆண்டுகளே கடந்துள்ளது. தற்போது உலகமயமாக்கல் என்ற பெயரில், அதே வல்லாதிக்க நாடுகள் பொருளாதாரச் சுரண்டலை மிக எளிதாகச் செய்ய முற்படுகின்றன. இது வளர்ந்த நாடுகளின் மூலதனம் செயல்படவும், தொழில்நுட்ப மேம்பாடு என்ற பெயரில் வளரும் நாடுகளைக் கொள்ளையடிக்கவும், அங்கு தங்களது கைப்பாவையான ஆட்சியாளர்களை நிறுவி அந்நாட்டின் இறையாண்மையை அழிக்கவும் முயலுகின்றன.

சோவியத் கூட்டமைப்பு சிதைந்து பல நாடுகளாகப் பிரிந்த இச்சூழலில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் வளரும் நாடுகளை அடிமையாக்க முனைப்புடன் செயல்படுகின்றன. ஐக்கிய நாடுகள் அவை உலக வர்ததக மையம், உலக வங்கி போன்ற நிறுவனங்களின் வழியாக இதை மிக எளிதாகச் செயல்படுத்துகின்றன. உலகத்தில் எந்தப் பகுதியிலிருந்தும் மூலதனம் தங்கு தடையின்றி வேறு எந்தப் பகுதிக்கும் கொண்டு செல்லப்பட வாய்ப்பளிக்கும் உலகமயமாக்கல் கோட்பாடுகள், மனிதவளம் அவ்வாறு செயல்பட அனுமதிப்பதில்லை என்பதே இந்நடைமுறை வஞ்சகமானது என்பதை தெளிவாக்கு கின்றது. ருசியாவும், சீனாவும் கூட இதில் மவுனமாக இருக்கின்றன என்பது வருந்தத்தக்க நிலை. அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் உலகமயமாக்கல் கொள்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், நடைமுறையில் எந்தப் பயனுமில்லை. எனவே உலகமயமாக்கல் தவிர்க்க முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையை சீனாவும், இந்தியாவும் எப்படி எதிர்கொண்டுள்ளன என்பதை புரிந்துகொள்வது அவசியம்.

மக்கள்தொகை, தட்பவெப்பநிலை, கனி வளங்கள் மற்றும் அண்டை நாடுகள் என்ற நிலையில், இந்தியாவும் சீனாவும் ஒப்பிட்டு ஆய்வதற்குரிய நாடுகள் என்பதன் அடிப்படையிலேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது. இந்தியா 1947 ஆண்டிலும், சீனா 1949லும் விடுதலையடைந்தன. இந்தியாவை ஆண்ட பிரிட்டானியர்கள், பயிற்சி அளிக்கப்பட்ட ராணுவம், திறமையான நிர்வாகிகளைக் கொண்ட கட்டமைப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள் எனப் பலவற்றை விட்டுச் சென்றனர். அதிகார மாற்றம் இணக்கமான சூழலில் நடைபெற்றது. கல்வித்துறையில் சென்னை, கல்கத்தா, பம்பாய் நகரங்களில் பல்கலைக்கழகங்கள் திறம்படச் செயல் பட்டுக் கொண்டிருந்தன.

சாலைகள், ரயில்வே, துறைமுகம், வானூர்தி நிலையம் எனப் பல கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் பயன்பாட்டிலிருந்தன. மற்றும் அந்நியச் செலாவணியும், இங்கிலாந்தின் நாணயமான ஸ்டெர்லிங் பவுண்டும் நம்மிடம் இருந்ததால் நிதிநிலை சீராக இருந்தது. வரையறுக்கப்பட்ட சட்டம், நிர்வகிக்க நீதித்துறை, இதழியல் துறை ஆகியவை நன்கு செயல்பட்டுக் கொண்டிருந்தன. 1975ம் ஆண்டு முதலே பம்பாயில் முதன்மை பங்குச் சந்தையும் மற்றும் நாட்டின் பல்வேறு இடங்களில் வட்டாரப் பங்குச்சந்தையும் செயல்பட்டு நீதித்துறை வலுப்பெற உதவின. எனவே இந்தியா ஓரளவுக்கு (ஒப்பீட்டளவில்) வசதியான நிலையிலேயே தனது பயணத்தைத் தொடங்கியது. ஆனால், நாம் விடுதலை பெற்று இரண்டு ஆண்டுகள் கழித்து விடுதலை பெற்ற சீனாவின் நிலையோ மிகவும் மோசமாக இருந்தது.

தொடர்ந்த உள்நாட்டுப் போரினால் அங்கு குழப்பமும், நிர்வாகத்தில் ஒழுங்கின்மையும் மிகுந்திருந்தது. அதுவரைப் பொறுப்பிலிருந்த கோமிங்டாங் அலுவலர்கள் பார்மோசாவிற்குத் (தற்போது தைவான்) தப்பியோடினர். எனவே ராணுத்தைக் கொண்டே நாட்டை நிர்வகிக்க வேண்டிய இக்கட்டான சூழலையே புரட்சியாளர் மா.சே.துங் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. "தொழிலாளி வர்க்கமே எழுச்சி பெறுக'' என்ற இயக்கமும், ""மாபெரும் பண்பாட்டுப் புரட்சியும்'' சீனாவின் சமூக வாழ்வைப் பெரிதும் தாக்கத்துள் ளாக்கியது. இதுபோன்ற குழப்ப நிலையிலிருந்து மீட்டெடுக்கும் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று, 1980ம் ஆண்டுவாக்கிலேயே, சீனாவின் சமூகப் பொருளாதார நிலை சீர்பட்டு தோழர் டெங்ஜியோபிங் தலைமையில் முன்னேற்றப் பாதையில் நடைபோடத் தொடங்கியது. 1985ம் ஆண்டுவரை இந்தியாவின் தனிமனித வாங்கும் சக்தியும், வாழ்நிலையும் சீனாவைவிட உயர்வாக இருந்தது.

ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் (1985-2005) சீனாவின் ஒட்டுமொத்த உற்பத்தி இந்தியாவைப் போல் மும்மடங்காகியுள்ளது. இந்த வியக்கத்தக்க சாதனை அந்நாடு மேற்கொண்ட சோசலிச ஆட்சி முறையினா லன்றி வேறல்ல.

அட்டவணை-1 :

சில பொருளாதார ஒப்பீடுகள்-இந்தியா/சீனா-2005

வ.         பொருள்                                                             இந்தியா           சீனா
எண்.
1.           மக்கள்தொகை (மில்லியன்)                           1095                        1314
2.           ஒட்டுமொத்த உற்பத்தி                                     720                         2225
(அமெரிக்க டாலர்-பில்லியன்)
3.           உள்நாட்டு சேமிப்பு விகிதம்(%)                      24                            42
4.           மின்சக்தி உற்பத்தி (பில்லியன் யூனிட்)   557                         2190
5.           தொலைபேசி இணைப்பு (மில்லியன்)          50                           350
6.           தொலைக்காட்சி பெட்டி (1000 பேருக்கு)      61                           314
7.           கைபேசி (1000 பேருக்கு)                                      12                           161
8.           தனிநபர் கணினி (1000 பேருக்கு)                     07                           28
9.           உழைக்கும் தொழிலாளர்கள் (மில்லியன்) 496                        791
10.         வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள
மக்கள்தொகை (%)                                                36                            06

வறுமைக்கோடு-மாதவருவாய் ரூபாய் 1400க்குக் குறைவாக.

விடுதலை அடைந்து, முதல் 35 ஆண்டுகளில் (1950-1985) பல்வேறு சிக்கல்களை சந்தித்து, சீன நாடு இந்தியாவைவிட பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தது. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் (1985-2005) சீனாவின் வளர்ச்சி விகிதம் 12% ஆகியுள்ளது. இந்தியாவோ 9% அடைவதற்கே திணறிக் கொண்டுள்ளது. சீனாவின் மக்கள்தொகையில் 6% மட்டுமே வறுமைக் கோட்டிற்குகீழ் உள்ளனர். ஆனால் இந்தியாவிலோ அதைப்போல் ஆறுமடங்கு (36%) மக்கள் வறுமையில் உழல்கின்றனர். இதுவே சோசலிச கொள்கை சார்ந்த ஆட்சிமுறை சிறந்தது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

1965-80 ஆண்டுகளில், இந்திய அரசு உணவு அமைச்சர் திரு.சி.சுப்ரமணியம் அவர்களால், பசுமைப் புரட்சி வழியில், அரிசி, கோதுமை உற்பத்தி அதிகரித்து, இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்தது. இந்திய மக்கள்தொகையில் 70% மக்கள் வேளாண்மையை தங்களது தொழிலாகக் கொண்டுள்ளனர். இந்திய அரசு பெரிய கனரக தொழிற்சாலைகளை நிறுவ முன்னுரிமை அளித்து, கடந்த 25 ஆண்டுகளில் வேளாண்மைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க தவறிவிட்டதே, நமது மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்து, மக்கள், பசி, பட்டினியால் வாடும்நிலை ஏற்பட்டதற்கு முதன்மையான காரணமாகும். 1970களில் சீனாவின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்து மூன்று கோடி மக்கள் மடியநேர்ந்தது. ஆனால் அந்தச் சீரழிவிலிருந்து சீனா மீண்டு, இன்று உயர்ந்த நிலையை அடைந்துள்ளது,

சோசலிச ஆட்சிமுறையின் சிறப்பாக இந்தியாவைப் போலன்றி, சீன அரசு வேளாண் தொழில்சார்ந்த மக்களுக்கு, குறுந்தொழில்கள் தொடங்கவும், ஆடு, பன்றி, கோழி வளர்க்கவும் வழிவகை செய்து அம்மக்களின் வருவாயைப் பெருக்கி வாங்கும் சக்தியை அதிகரித்தது. இவ்வுற்பத்தி நாட்டின் மொத்த உற்பத்தியில் 23% என்பது நமக்கு வியப்பை அளிக்கிறது.

சீனாவின் பரப்பு இந்தியாவைப்போல் மூன்று மடங்கு என்றாலும் பயன்படக்கூடிய நிலப்பரப்பு இந்தியாவைவிட குறைவு என்பதே உண்மை. ஆனால் சீனா சிறந்த அறிவியல் பூர்வமான வேளாண்மை முறைமைகளைப் புகுத்தி உற்பத்தித் திறனை வெகுவாக அதிகரித்தது.

சில உணவுப் பொருட்களின் உற்பத்தி திறன் குறித்த பட்டியல் :

அட்டவணை-2 (ஆண்டு 2003)

வ.எண்.            பொருள்                                                   இந்தியா                சீனா
1.                          நெல் (மில்லியன் டன்)                           3000                          6070
2.                          கோதுமை (மில்லியன் டன்)                &nbsp2620                          3910
3.                          வேர்க்கடலை (மில்லியன் டன்)           940                          2620

அட்டவணை-3 (ஆண்டு 2001)

வேளாண்மை & அதுசார்ந்த தொழில் மொத்த உற்பத்தி

வ.எண்.                                                                              இந்தியா                சீனா
1. தானியங்கள் (மில்லியன் டன்களில்)                210                400
2. காய்கறிகள் (மில்லியன் டன்களில்)                  75                390
3. பழங்கள் (மில்லியன் டன்களில்)                          50                150
4. கோழி (மில்லியன்)                                                       490                4100
5. ஆடு (மில்லியன்)                                                         120                160
6. பன்றிகள் (மில்லியன்)                                               20                  470
7. மீன் (மில்லியன் டன்களில்)                                   07                 45

மேற்கண்ட தகவல்கள் வழியே இந்தியாவை விட சீனா அதிக அளவு உற்பத்தி செய்கிறது என்பது தெளிவாகிறது. அதைவிட அந்நாட்டு உற்பத்தி அந்நாட்டு மக்களால் நுகரப்படுகின்ற வகையில் சீனாவின் ஆட்சிமுறை மக்களிடையே வாங்கும் சக்தியை உயர்த்தியுள்ளது என்பது மிகமிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ள போதிலும், நாட்டில் மூன்றில் ஒரு பகுதியினர் வாங்கும் சக்தி இன்மையால் பசி பட்டினியால் வாடுகின்றனர். இந்நிலைமைகளே இந்தியா, சீனா கடைப்பிடித்து வரும் ஆட்சி முறைகளின் வெளிப்பாடாகும்.

Pin It