நாடுகள் பல சுற்றி தன்னை நாடோடியாகவே தகவமைத்துக் கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2014 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம்” என்று வாக்குறுதி அளித்தார். ஊடகங்களின் கவர்ச்சி வலையில் வீழ்ந்த மக்களும் பாரதிய சனதா கட்சிக்கு வாக்களித்து நரேந்திர மோடியை அரியணையில் ஏற்றினார்கள். கடந்த மே 26-ஆம் தேதியுடன் மோடி தனது நான்காண்டு ஆட்சியை நிறைவு செய்து, ஆட்சிக் கட்டிலின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் இன்றைய நிலையிலும்கூட தான் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றாதவராக பொய்மை முகத்தோடு பொழுதைக் கழித்து வருகிறார்.
மோடி ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் அறிவித்த “திறன்மிகு இந்தியா”, “டிஜிட்டல் இந்தியா”, “ஸ்டார்ட் ஆப் இந்தியா”, “மேக் இன் இந்தியா”, “ஸ்டாண்ட் ஆப் இந்தியா” ஆகிய முழுக்கங்கள் வெறும் புகழ்ச்சியுரைக்காக மட்டுமே பயன்பட்டதேயொழிய, இன்றைய இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான ஆரோக்கியமான செயல் உத்தியைக் கொண்டதாக அது இல்லை. இந்த நிலைமைகளுக்கு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்புதான் முதன்மையான காரணியாக அரசியலாளர்கள் கருதுகிறார்கள். இன்று நமது பொருளாதாரம் ஏகாதிபத்தியத்தின் ஆக்டோபஸ் கரங்களில் சிக்குண்டு விழிபிதுங்கி நிற்கிறது. இத்தகைய சீரழிவுப் போக்கிற்கு 1990-களில் உலக வாணிக நிறுவனத்துடன் இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் புகுத்தப்பட்ட, புதிய பொருளாதாரக் கொள்கையே அடிகோலிட்டது. ஏகாதிபத்திய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளின் மீதான தமது ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்யும் நோக்குடன் தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் ஆகிய மயங்களை பொருளாதாரச் சீர்த்திருத்தம் என்ற பெயரில் திணித்தன. இந்திய ஆட்சியாளர்களும் அதற்கு இசைவளித்தார்கள்.
புதிய பொருளதாரக் கொள்கை செயலுக்கு வந்தபோது இனி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி தாறுமாறாக உயரும் என்றும், வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும், மருத்துவம் - கல்வி- உள்ளிட்ட சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் புளகாங்கிதமடைந்த ஆட்சியாளர்கள் இன்று நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைக் கண்டு திகைத்து நிற்கிறார்கள். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் பன்னாட்டு நிறுவனங்களை தொழில் செய்ய கதவைத் திறந்து விடுவதன் மூலம் இவர்கள் தெரிந்தே நாட்டை பேரழிவுக்குள்ளாக்கி வருகிறார்கள். ஏனெனில் நமது ஆட்சியாளர்களுக்குத் தேவையெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் வாரி இறைக்கும் பெருந்தொகை மட்டுமே. மக்கள் நலனைப் பற்றி சிந்திப்பது என்பதெல்லாம் தேர்தல் திருவிழாக்களின் போது அரங்கேறும் ஓர் அபூர்வ நிகழ்வு அவ்வளவே.
புதிய உயர்தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட புதிய பொருளாதாரக் கொள்கையால் பொதுத்துறை நிறுவனங்கள் மிகுதியாக தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டன. இந்தியச் சந்தை அந்நிய நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறியது. முக்கியமான - அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தொழில் வளங்கள் தனியார் கைகளில் தஞ்சம் புகுந்தன. கிராமப்புறங்கள் நலிவடைந்தன. மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி - மருத்துவம் ஆகியவை வணிகப்பண்டமாகிப் போனது. இந்திய முதலாளிகள் உலக முதலாளிகளாக பரிமாணம் அடைந்து பகட்டாக வலம் வந்தார்கள். ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நெற்கதிர்கள் விளைத்த நிலத்தில் பணப்பயிர் உற்பத்தி செய்ய மக்கள் தூண்டப்பட்டார்கள். அதற்கே அரசு மனியமும் குவிந்தது. விவசாயம் மூன்றாம் தர தொழிலாகப் பார்க்கப்பட்டது. விவசாயிகள் மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டார்கள். தக்க தருணத்தில் விவசாயிகளை நிலத்தைவிட்டு அப்புறப்படுத்த காலம் குறித்துக் கொண்டிருக்கிறது நம்ம ஆளும் அரசுகள். ஆனால் மத்திய அரசு கொடுக்கும் ஊடக விளம்பரங்களோ, “விவசாயமே நமது நாட்டின் முதுகெலும்பு” என்பதாக நாடகமாடிக் கொண்டியிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 2 ½ இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுள்ளார்கள். சுமார் 75 இலட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் விளைநிலங்களில் இருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள்.
கல்வித்துறை வேலைவாய்ப்பைப் பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 இலட்சம் மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாகவும், சுமார் 9 இலட்சம் மாணவர்கள் தொழிற்கல்வி பயின்றும் வெளிவருகின்றார்கள். மேலும் தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து விட்டு காத்திருப்போர் எண்ணிக்கை சுமார் 98 இலட்சம் என்கிறது ஒரு புள்ளிவிபரம். தொழிற்கல்வி பயின்ற மாணவர்கள் ஆண்டுக் கணக்கில் வேலை வருமெனக் காத்துக்கிடக்க, தொழில்நிறுவனங்களோ, மத்திய அரசின் பயிற்சி பணியாளர் திருத்தச் சட்டத்தின் கீழ் அடிப்படைக் கல்வி தெரிந்த இளைஞர்களுக்கு தற்காலிகப் பயிற்சியளிப்பதன் மூலம் குறைந்த ஊழியத்தில் அவர்களைப் பணியமர்த்திக் கொள்கிறார்கள்;. இதனால் படிப்புக்கேற்ற வேலை என்பது மறுக்கப்படும் நிலையில், முறையாகத் தொழிற்கல்வி பயின்று வேலைக்காக காத்திருப்போருக்கு உலகமயம் வேட்டு வைக்கிறது.
இந்தியா மேற்கொண்ட தாராளமயமாக்கல் கொள்கையால் உலகின் எந்த மூலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையும் இந்திய சந்தையில் விற்றுக் கொள்ளலாம் என்ற சூழலில், நாட்டில் இறக்குமதி பொருள்கள் அதிகரிக்கத் தொடங்கின. அந்நிய முதலீடும் அதிகரித்தது. இதனால் நெசவாளார்கள் நெருக்கடிக்குள்ளானார்கள். கைவினைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். ஆடை தயாரிக்கும் நிறுவனங்கள் உலகமயத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் நலிவடைந்தன. இப்படியாக சிறுதொழில் அனைத்தும் சிக்கலுக்குள்ளாயின. இதனை நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கனோர் வாழ்வாரத்தை இழந்து வீதியில் திரிகிறார்கள்.
2014- இல் மேற்கொள்ளப்பட்ட தொழில்துறை கணக்கொடுப்பின் படி, சுமார் 9 இலட்சம் சிறுதொழிற்சாலைகள் மூடப்பட்டு, அவற்றில் பணிசெய்த சுமார் 40 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கிறார்கள். இதனால் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக புலம்பெயரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் உலகமயமாக்கலால் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாள்தேறும் அதிகரித்த வண்ணமுள்ளது. நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைத்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் இலட்சக்கணக்கான ஊழியர்களின் பாதுகாப்பான வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. ஆட்குறைப்பு, வேலைக்குறைப்பு, ஊதியக்குறைப்பு, ஊக்க ஊதிய நிறுத்தம் இவைகளால் அன்றாடம் அச்சத்தோடே பணிக்கு வந்து போக வேண்டிய நிலைக்கு ஆளாயிருக்கிறார்கள்.
இந்தியாவின் ஏற்றுமதியை உயர்த்துவதற்காக நிறுவப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்களாலும், துணைநகரங்களாலும் 10 பேருக்கு வேலை கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இன்று 1 இலட்சம் பேர்தான் அதில் பணி செய்கின்றார்கள். அதுவும் 5 ஆண்டுகள் மட்டுமே. அங்கு வரிச்சலுகை என்ற பெயரில் அரசின் பணம் விரையமாகிறதே தவிர நிரந்தர வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை. மாறாக தொழிலாளர்கள் அதிகப்படியான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல் போன்ற நிறுவனங்களில் 2018 மார்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டில் 13,972 ஊழியர்கள் புதிதாக பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 2016-17 ஆம் ஆண்டில் நிதியாண்டில் 59,427 ஊழியர்களை பணியமர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய தொழிற்நுட்பத் துறையின் நான்கு முன்னணி நிறுவனங்கள் 2017-18 நிதியாண்டில் 76 விழுக்காட்டிற்கு மேல் ஆள்குறைப்பு செய்துள்ளது. இதன் விளைவாக முறையான வேலை கிடைக்காததால் இளைஞர் முறைசாரா தொழிலை நோக்கி நகரத் தொடங்கிருக்கிறார்கள். ஒட்டுமொத்த இந்தியாவில் வேலை வாய்ப்பில் 81 விழுக்காட்டினர் முறைசாரா தொழிலில் ஈடுப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கை கூறுகிறது. இந்திய “கார்ப்பரேட்” முதலாளிகளின் சங்கமான “நாஸ்காம்” தனது ஆண்டு பரிசீலனைக் கூட்டத்தில் 2016-17 நிதியாண்டில் தொழிற்சாலைகளின் வளர்ச்சி விகிதம் 8.6 விழுக்காட்டு அளவில் இருந்த போதும், வேலை வாய்ப்பு வளர்ச்சி 5 விழுக்காடுதான் உயர்ந்திருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 20% முதல் 25% வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயமுள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இப்படியான சிக்கலான சமூகச்சூழலில், “வேலையிழப்பு, பொருளாதாரத்திற்கு நல்ல அறிகுறி” என்று மத்திய தொடர்வண்டித் துறை அமைச்சர் பியூஸ் கோயல் திருவாய் மலர்ந்திருக்கிறார். இப்படியான ஆட்சியாளர்களாலேயே நாம் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் “இந்திய உலகச் சந்தையோடு போட்டி போட்டால்தான் தரமான பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்" என்று உலகமயத்திற்கு வீணை வாசித்தார். அதற்கு ஒரு படி மேல் போய், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், “வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது பன்னாட்டு நிறுவனமாக இருக்கட்டும்” என்று ஏகாதிபாத்தியத்திற்கு காவடி தூக்கினார். இப்போது நம்மை ஆண்டு கொண்டியிருக்கும் மோடியோ, “நாட்டில் வேலைவாய்ப்பு பெருகவில்லையே?” என்ற கேள்விக்கு, “சாலையோரத்தில் கடை அமைத்து ஒருவர் பக்கோடா விற்று தினமும் 200 ரூபாய் எடுத்துச் செல்வது வேலைவாய்ப்பு இல்லையா?” என பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வழிகாட்டுகிறார்.
இப்படியாக, இலாபமே வெறியாய், மனிதநேயம் சிறிதுமற்ற கோரமுகத்தைத் தன்னகத்தே கொண்ட உலகமயமாக்கலையும், அதன் ஊதுகுழலாக விளங்கக்கூடிய ஆட்சியாளர்களையும் வீழத்தி, தேசிய இன விடுதலைக்கான போராட்டத்தைக் கட்டமைப்பதன் மூலமே இந்த சுரண்டல் அமைப்பை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியெறிய முடியும்!
- தங்க.செங்கதிர்