மேலே எழுதியுள்ள மூன்று பத்திகளும் சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னர் ‘உயிர்மை’ ஆகஸ்டு மாத இதழுக்காக எழுதப்பட்டவை. ‘இம்ரானா’ குறித்த பத்தியில் தமிழ்நாட்டிலுள்ள முஸ்லிம் அறிஞர்கள் பத்வாவை எதிர்த்துள்ள பகுதியையும், கலாச்சாரக் கண்காணிப்புகள் குறித்த பத்தியில் ‘சுஜாதா’ குறித்த வரியையும் நீக்கி வெளியிடுவதாக இதழாசிரியர் மனுஷ்ய புத்திரன் சொன்னதை அடுத்து அவற்றை நீக்கிப் பத்திகளை வெளியிட வேண்டாம் எனக் கூறித் திரும்பப் பெற்றுக் கொண்டேன்.

இந்த இடத்தில் நான் ‘உயிர்மை’ இதழில் எழுத நேர்ந்த கதையைக் கொஞ்சம் சொல்ல வேண்டும். அந்த இதழ் தொடங்கிய நாளிலிருந்தே அதில் எழுதுமாறு மனுஷ்யபுத்ரன் வற்புறுத்திக் கொண்டிருந்தார். ‘காலச்சுவடு’ இதழின் அணுகல் முறைகளில் பெரியதாக வேறுபட்டு அவர் வெளியேறி வரவில்லை என்பது எனக்குத் தெரியும். தவிரவும் ‘உயிர்மை’ இதழும் கூட ‘காலச்சுவடு’லிருந்து பெரிதும் வேறுபடவில்லை என்பதையும் கவனித்து வந்ததால் அதில் எழுத எனக்கு ஆர்வமில்லை. எனினும் எழுதுவதற்கான தளம் எனக்குக் குறைந்து கொண்டே போனதாலும் பெரிய பொருளாதாரப் பின்புலங்கள் அதிகாரங்கள் ஏதுமில்லாத ஒரு இதழ் என்பதாலும், காலச்சுவடு போல ஒரு கார்பரேட் தன்மை அதற்கு இன்னும் வாய்க்கவில்லை என்பதாலும், என்ன இருந்தாலும் மனுஷ்யபுத்ரன் ஒரு முஸ்லிம் அல்லவா என்று நினைத்ததாலும் ‘உயிர்மை’யில் எழுதத் தொடங்கினேன். நண்பர்களின் விமர்சனத்திற்கு என்னால் பதில் அளிக்க இயலாத போதும் எழுதுவதைத் தொடர்ந்தேன்.

பத்தி வடிவில் தொடர்ந்து எழுதுங்கள் என அவரே கேட்டுக் கொண்டதற்கிணங்கி நான் எழுதத்தொடங்கியபோது தான் பிரச்சினை எழுந்தது. பார்ப்பனர்கள்தான் தமிழ்ச் சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதாக அசோகமித்திரன் கண்ணீர் மல்கிய விவகாரம் சர்ச்சையான போது, அவர் சாவர்க்காரைப் புகழ்ந்தும் திராவிட இயக்கத்தை இகழ்ந்தும் எழுதியுள்ள சில சந்தர்ப்பங்களை நினைவு கூர்ந்து சில வரிகள் எனது பத்தியில் இடம் பெற்றிருந்தது. இதழ் வந்தபோது அதிர்ச்சி. அந்த வரிகள் நீக்கப்பட்டிருந்தன. என்னை அது குறித்து அவர் கேட்கவுமில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது ‘இடமில்லை’ என்றார். ஒரு பிரதிக்கு இரண்டு பக்கங்களுக்கு மேலும் ஒதுக்க முடியாது என்றார். என்னிடம் கேட்டு வேறு ஏதாவது பகுதியை நீக்கியிருக்கலாம் என்றேன். அவர் பதில் சொல்லவில்லை. சரி அடுத்த இதழில் அப்பகுதியை வெளியிடுவீர்களா என்றேன்.

வேண்டுமானால் அ.மி. பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதித் தாருங்கள். அதில் விமர்சனம் இருந்தாலும் பரவாயில்லை. இப்படி போகிற போக்கில் விமர்சனங்கள் செய்ய வேண்டாம் என்றார். முழுக் கட்டுரைகளும் அவர் இதழில் எழுதிக் கொண்டுதான் இருந்தேன். எல்லாவற்றையும் ஆய்வுக் கட்டுரைகளாக எழுதிவிட இயலாது. அதனால்தான் பத்தி என்கிற வடிவமே உருவாகிறது. தவிரவும் உயிர்மையில் ஆய்வுக் கட்டுரை வடிவில் மட்டும்தான் விமர்சனங்கள் செய்யப்படுகிறதா?

நான் பெரிதாக அவரிடம் வம்பு செய்ய விரும்பவில்லை. எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். நண்பர்கள் விமர்சித்த போதெல்லாம் நான் சொன்ன ஒரே சமாதானம்: “நான் எழுதுவதை முழுமையாக வெளியிடுவதாக அவர் உத்தரவாதமளித்துள்ளார். எப்பொழுது இந்த நிலை மாறுகிறதோ அப்போது எழுதுவதை நிறுத்திவிடுவேன்’’ என்று தான் பதில் கூறினேன். அதேபோல நிறுத்திக்கொண்டேன்.

மீண்டும் சில மாதங்கள் கழித்து ‘தீராநதி’ இதழில் பெண் கவிஞர்களின் எழுத்துக்கள் குறித்த என் கட்டுரை வந்தபோது அவரே என்னைக் கூப்பிட்டு ரொம்பவும் பாராட்டினார். ‘உயிர்மை’யில் எழுதுமாறு மீண்டும் பலமுறை வற்புறுத்தினார். சரி இன்னொரு முறை பார்க்கலாம் என எழுதத் தொடங்கிய போதுதான் சுஜாதா பற்றிய விரிவான அவர் நீக்கிய பத்தியை எழுதிக் கொண்டிருந்தபோதே அவருடன் போனில் தொடர்பு கொண்டு பக்க அளவு பற்றிக்கேட்டேன். எத்தனை பக்கங்கள் எழுதுங்கள் என்றார். கட்டுரை அனுப்பப்பட்ட இரண்டாம் நாள் அவரே தொடர்பு கொண்டு பக்கங்கள் அரிதாகிவிட்டது எனவே சில பகுதிகளை நீக்குகிறேன் என்றார். சுள்ளென்று கோபம் வந்தது எனக்கு. எந்தப் பகுதிகளை அவர் நீக்கியிருப்பார் என்று எனக்குத் தெரியும் கேட்டேன். நான் எதிர்பார்த்த பதிலே கிடைத்தது. தொடர்பான பல அம்சங்களை எழுதி வரும் போது சுஜாதாவை மட்டும் விட்டு விடுவது என்பது எப்படிச் சரியாக இருக்கும். அசோகமித்திரன், சுஜாதா போன்ற பார்ப்பனர்களின் மானம் காக்கும் கோவணமாக மனுஷ்யபுத்ரன் வேண்டுமானால் அவதாரம் எடுக்கலாம். என்னால் இயலாது, அல்லது சாரு நிவேதிதாவைப்போல அசோகமித்திரன், சுஜாதா ஆகியோரைத் திட்டுவதென்றால் ‘தீராநதி’, ரவிக்குமாரைத் திட்டுவதென்றால் ‘உயிர்மை’ என வேலைப் பிரிவினை செய்து கொண்டும் என்னால் எழுத முடியாது. கட்டுரையைத் திருப்பி அனுப்பிக் கொண்டனர்.

குமுதம் போன்ற நிறுவனங்களால் வெளியிடப்படும் ‘தீராநதி’யில் அளிக்கப்படக்கூடிய எழுத்துச் சுதந்திரம் கூட உயிர்மையில் இல்லாமற் போனதேன்? தலையங்கங்களில் அநீதிகளுக்கு எதிராகத் தர்மாவேசம் பொங்குவதற்கு எப்படி இவர்களுக்குச் சாத்தியமாகிறது? அடல் பிகாரி வாஜ்பேயிக்கு அப்புறம் கவிதை எழுதும் இரட்டை நாட்டுப் பேர்வழி மனுஷ்யபுத்ரன் தானா? இவருடைய கோமண எல்லைக்குள் நின்றுதான் எல்லோரும் ‘உயிர்மை’யில் எதிக் கொண்டுள்ளார்களா? ‘காலச்சுவடை’ விமர்சித்து இவர் எழுதுபவற்றைக் கவனியுங்கள். அந்தக் கும்பலுடன் சேர்ந்து சிலர் செய்த காரியங்கள் குறித்தும், அவர்களின் பலான வேலைகளில் உடந்தையாக இருநத்து குறித்தும் கிஞ்சிதித்தும் குற்ற உணர்வு இல்லாமல் ‘எவ்வளவு விசுவாசமாக இருந்த என்னை இப்படி ஆக்கிப்புட்டீங்களே’ என்கிற பச்சாதாப ஓலம் மட்டுமே அதில் வெளியிடப்படும் இல்லையா?

Pin It