சென்ற ஜூன் 14 - 19 தேதிகளில் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அற்புதமான கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதையொட்டிய கருத்தரங்கொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நிர்வாகம், அரசு ஆகியவற்றின் பெரிய உதவிகள் ஏதுமின்றி முழுக்க முழுக்க மாணவர்கள் முன்னின்று அந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

திருநெல்வேலியை ஒட்டியுள்ள பகுதிகளில் அலைந்து திரிந்து நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளைச் சேகரித்து குறிப்பு விளக்கங்களுடன் காடசிப்படுத்தியிருந்தனர். அருகி வரும் ‘அட்டை (leech) மருத்துவம்’ (அட்டையைக் கொண்டு ரத்தத்தை உறிஞ்சி நோயாற்றுதல்), வர்மக் கலை ஆகியன எல்லாம் செய்து காட்டப்பட்டன.

பண்டைய அறுவை சிகிச்சைக் கருவிகளின் பெரிய அளவிலான மாதிரிகளைப் பார்க்க முடிந்தது. அமிர்தாதி சூரணம் என்றொரு சித்த மருந்து. அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகக் கற்களை அது வெளியேற்றி விடுகிறது. பாளையங்கோட்டைச் சித்த மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளில் இவ்வாறு வெளியேற்றப்பட்ட கற்களைக் காட்சிக்கு வைத்திருந்தனர். பிரமிப்பாக இருந்தது. மரபு வழிப்பட்ட நமது சித்த மருத்துவத்தின் மீது தீராத நம்பிக்கையும், உலகமயச் சூழலில் வெகுவேகமாக மாறிவரும் மருத்துவத் தொழிலில் அதன் இடம் குறித்த கவலையும் ஒருசேர இளம் மாணவர்களின் துடிப்பான கண்கள் ஒளிர்ந்ததைக் கண்டேன். ‘டெலிமெடிசின்’ என்றெல்லாம் உயர் தொழில் நுட்பங்களையும் ‘சூப்பர் ஸ்பெஷலிஸ்டுகளையும் கிராமங்களுக்கு இடம் பெயர்க்காமலேயே அத்தகைய சேவைகளை மட்டும் தர முடியும் என அலோபதி மருத்துவம் எக்காளமிடும் சூழலில் அதனுடன் போட்டியிடக் கூடிய அளவிற்கு சித்த மருத்துவத்தை நவீனப்படுத்த வேண்டிய கவலை அம் மாணவர்களிடம் இருந்தது.

பல்வேறு சித்த வைத்திய அணுகுமுறைகள், தயாரிப்பு முறைகள், மருந்துப் பெயர்கள் என்பனவற்றையெல்லாம் ஒரு சீர்படுத்தி எளிதில் எங்கும் மருந்துகளைக் கிடைக்கத்தக்கதாகச் செய்ய வேண்டும். புடம் போடுதல், காய்ச்சி வடித்தல் முதலிய தொழில் நுட்பங்கள் நவீனப்படுத்தப்படவேண்டும். ஒப்பந்தம், காப்புரிமை ஆகியவற்றின் யுகத்தில் வாழும் நாம் இவற்றை வெறுமனே வாயளவில் எதிர்த்துக் கொண்டு வாளாவிராமல் நமது பாரம்பரிய மருந்துகளுக்கும், தயாரிப்பு முறைகளுக்கும் உரிய காப்புரிமைகளைப் பெற முன்னுரிமை அளிக்க வேண்டும். பஜாஜ், ஹிமாலயா, எஸ்.கே.எம். போன்ற நிறுவனங்கள் சித்த மருத்துவத்துறையில் புகுந்துள்ள நிலையில் இயற்கையில் விளைந்து கிடக்கும் பாரம்பரிய மூலிகைகள் சூறையாடப்படுவது தடுக்கப்பட்டு அவற்றைச் சாகுபடி செய்து தேவையைப் பூர்த்தி செய்யச் சட்டம் கொண்டு வர வேண்டும். ஆனால் அரசோ, நிர்வாகமோ, சித்த மருத்துவமரபு வழியாளர்களோ இவை குறித்தெல்லாம் சிந்திக்கிறார்களா எனத்தெரியவில்லை. நமது அரசுகள் இன்றும் கூட சித்த மருத்துவத்தின் தனித்துவத்தை ஏற்காமல் ஆயுர்வேதத்தின் ஓரங்கமாகவே அதைப் பார்க்கின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நூலொன்றிலும், தமிழ்நாட்டுப் பாடநூல் ஒன்றிலும் கூட இவ்வாறே பதிவு செய்யப்பட்டுள்ளது என மாணவர்கள் விஜய், பாஸ்கர், கரிகாலன் முதலியோர் வருத்தம் தெரிவித்தனர்.

‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ எனத் திருமூலரின் குரலைப் பாடுவதன் மூலம் ஆன்மீக மரபிற்கு எதிராக உடம்பை, இயற்கையின் பொருளியற் பண்பை விதந்தது சித்த மருத்துவம். எனினும் இன்றும் அதனை சிவனிடமிருந்து அகத்தியருக்கும், அவரிடமிருந்து திருமூலருக்கும், சித்தர்களுக்கும் அளிக்கப்பட்டதாகவே சொல்லித் தரப்படுகிறது. மரபு வழி அணுகல் முறைகளைச் சற்றே ஒதுக்கிவிட்டு நவீனமாய்ச் சிந்திக்க நமது சித்த மருத்துவர்கள் பழகிக்கொள்ள வேண்டும்.

அத்தகைய சூழல் மாணவர்களிடம் உள்ள அளவிற்கு மரபு வழியாளர்களிடம் இல்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு: கடந்த பல பத்தாண்டுகளாகப் பொதுச் சுகாதாரம் குறித்த ‘நோயில்லா நெறி’ என்ற நூல் இக்கல்லூரியில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. பொது நலத்தை மரபு வழிப்பட்ட முறையிலேயே இந்நூல் அணுகுகிறது. டாக்டர் கோ. துரைராசன் எழுதி ‘இந்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்கத்தால்’ (சென்னை - 100) இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது (1993). ‘மனைத் தேர்வு’ என்றொரு அத்தியாயம். அதாவது எங்கே வீடுகள் அமைய வேண்டுமென நமது மரபு வழி மூதறிவை (வாஸ்து மற்றும் சில்ப சாஸ்திரம்) மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறது இது. எங்கெல்லாம் வீடுகள் அமையக்கூடாது என்கிற பட்டியல், “பல பேர்களுக்குப் பார்வையாய் இருக்கும் நிலம், பாழடைந்த தேவாலயம், மலசலம் கழிக்குமிடம், பறையர், சக்கிலியர் குடிசை கட்டியிருக்கும் இடம்... ஆகிய இடங்களில் வீடு கட்டக்கூடாதென இந்த நூல்கள் கூறுகின்றன’’ (இயல் 6, பக்கம் 25) என முடிகிறது.

கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாக இதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. சென்ற ஆண்டு இதற்கு எதிராக மாணவர்கள் போராடியுள்ளனர். இவ் வரிகளை நீக்குவதாக அமைச்சர் உறுதியளித்ததன் பேரில் போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இன்றும் இவ்வரிகள் தொடர்கின்றன.

Pin It