periyar with dog 437இப்பொழுது காங்கிரஸ்காரர்களும் சிறப்பாக காந்தியார், ஜவகர்லால் பண்டிதர் முதலியவர்களும் புதிய மார்க்கம் ஒன்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். தீண்டாமை, மதுவிலக்கு, இந்து முஸ்லீம் ஒற்றுமை, கதர் ஆகிய காரியங்கள் சுயராஜ்ஜியத்துக்கு மார்க்கம் என்று சொன்னவைகள் இப்பொழுது மக்களின் பகுத்தறிவு என்னும் சண்டமாருதத்தில் சிக்கி சின்னா பின்னப்பட்டுப் போயிற்று. இனி இவைகளின் பேரால் மக்களை ஏய்க்க முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது. புதிய வழி அதாவது தீண்டாதவர்கள் முன்னேற்றம் என்பதும் ஒரு 20, 30 லக்ஷம் ரூபாய் சம்பாதிக்க முடிந்ததே ஒழிய மற்றபடி அது தீண்டாதவர்கள் இந்து மதம் விட்டு வேறு மதம் புக வேண்டியதுதான் மார்க்கம் என்னும் நிலைக்கு வந்து விட்டது. இப்போது பார்ப்பனர்களுக்கு சமதர்ம வீரர் என்னும் பண்டித ஜவஹர்லால் நிழலில் வாழ வேண்டியதைத் தவிர வேறு மார்க்கம் இல்லாமல் போய் விட்டது என்றாலும் புதிய முறையில் மக்களை ஏமாற்ற கிராமப் புனருத்தாரணம் என்கின்ற ஒரு புரட்டைக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அப்புரட்டை வெளியாக்க எழுதிய ஒரு வியாசம் அளவுக்குமேல் பெரியதாக ஆகி விட்டதால் அதை மே மாத பகுத்தறிவில் சுமார் 40 பக்கமாகப் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஆகவே மே மாத பகுத்தறிவை 10 பாரங்களாகப் பிரசுரித்திருக்கிறோம். ஆகையால் குடி அரசு சந்தாதாரர்கள் அபிமானிகள் ஒவ்வொருவரும் மே மாத பகுத்தறிவு பத்திரிகை ஒன்று வாங்கி வாசிக்க விரும்புகிறோம். அது ஒரு பெரிய ஆராய்ச்சி வியாசமாகும்.

ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டியதுமாகும்.

(குடி அரசு வேண்டுகோள் 26.04.1936)

***

தோழர் டி.வி. பிரிவு

ஜஸ்டிஸ் கட்சி ஊழியர்களில் தலை சிறந்தவரான தோழர் டி.வி. சுப்பிரமணியம் சென்ற 21ந் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9.20 மணிக்கு சென்னையில் காலமானதை யறிந்து வருந்துகிறோம். ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பமான நாள் முதல் இறக்கும் வரை கட்சிக்கு இடையறாத தொண்டாற்றியவர்களுள் தோழர் டி.வி.யும் ஒருவர். கட்சிக்கும் தனக்கும் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள் நேர்ந்த காலத்தும் அவர் கட்சியைக் காட்டிக் கொடுக்கவில்லை; கட்சியை விட்டுப் பிரியவுமில்லை. வசைமாரியையும், கல்மாரியையும், மண்மாரியையும் பொருட்படுத்தாமல் மேடையேறி வீரமுழக்கம் செய்வதற்கு அவருக்கு இருந்தது போன்ற நெஞ்சழுத்தம் அதிகப் பேருக்கு இருக்க முடியாது. கட்சிப்பிரசாரம் செய்ய தீரமும் திறமையும் உடைய ஊழியர்கள் ஏராளமாகத் தேவைப்படும் இக்காலத்தில் அவரது பிரிவு கட்சிக்கு நஷ்டமேயாகும்.

(குடி அரசு இரங்கற் செய்தி 26.04.1936)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.