அக்கிராசனாதிபதியவர்களே! சகோதரர்களே! நேற்று நான் இங்கு வந்து பிரசங்கம் செய்தேன். இன்றும் என்னை வரும்படி சிலர் அழைத்தார்கள். நான் இன்று ஊருக்குப் போகிற படியால் என்னால் அதிக நேரம் பேசமுடியாது. இன்றைய மாநாட்டில் சில தீர்மானங்கள் தீர்மானிக்கப் போகிறார்கள். அதில் முதல் தீர்மானம் “ஆறரைக்கோடி ஆதிதிராவிட மக்களை இந்து மதஸ்தர்கள் என்று அரசாங்கத்தில் பதிவு செய்திருப்பதால் எங்களுக்கு இந்து மதத்தில் சமத்துவமில்லாததால் எங்களை இந்து மதத்திலிருந்து நீக்கிவிடும்படி சட்டசபை அங்கத்தினர்களை வேண்டிக் கொள்ளுகிறது.”
இத்தீர்மானத்தை நானும் ஆதரிக்கிறேன், எனக்கும் சம்மதம்தான். ஆதிதிராவிடர்களுக்கு சுதந்திரமும் சமத்துவமும் கொடுக்கவேண்டும் என்றால், ஒரு கூட்டத்தார் எங்களை நாஸ்திகர்கள் என்றும், மதத்துரோகிகள் என்றும், தேசத்துரோகிகள் என்றும் சொல்கின்றனர். அதோடல்லாமல் இரத்தக் குறியிட்ட சிவப்புக் கடிதங்களும் எங்களுக்கு வருகின்றது. அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறதென்றால், “ஏ! ராமசாமி நாயக்கரே! நீ மதத்தை அடியோடு அழிக்க வேண்டுமென்று பார்க்கிறாய். ஆகையால், உன்னைக் கொல்லப் போகிறோம்” என்று எழுதியிருக்கிறது. (வெட்கம், வெட்கம்) இப்பேர்ப்பட்ட கடிதங்கள் அனுப்பியும் வருகிறார்கள்; அனுப்பிக் கொண்டும் வருகிறார்கள். அதைப்பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை.
நான் ஒருவன் போய்விட்டால் ‘பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேடனுக்கு சிறிது பாரம் குறையும்’ என்றுதான் நினைக்கிறேன்! நாம், தேசத்திற்கு நன்மை செய்வதற்காகவே இந்த இயக்கத்தைத் தோற்றியுள்ளோம். ஆகையால், இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் சுயமரியாதைக்காரர்கள் பயந்தவர்களுமல்லோம், சிறிதும் இளைத்தவர்களுமல்லோம், தேசியத் தலைவர்கள் நமக்குச் சம்பாதித்துக் கொடுக்கும் பெருமையையோ, உரிமையையோ விட சுயமரியாதைக்காரர்கள் ஒன்றும் செய்துவிட முடியாதென்று நினைக்கிறார்கள். நாம் இதுவரை சுயமரியாதை என்னும் பெயரால் ஒரு கெடுதியும் ஜனங்களுக்குச் செய்ததாகத் தெரியவில்லை. ஜாதி வித்தியாசம் ஓட்டலிலும், ரயில்வே ஸ்டேசன்களிலும், மற்றும் ஒவ்வொன்றிலும் இருக்கின்றது. அதை ஒழிக்க வேண்டுமென்று கேட்டால், அவன் மதத்துரோகி, நாஸ்திகன் என்கிறார்கள்.
தற்காலம் வெள்ளையர்கள் ஆண்டு வரும் பொழுதுகூட நம் இந்துக்களில் உயர்ந்த ஜாதியெனப்படுபவர்கள் சிலர் வீதிகளில் நடக்கக் கூடாதென்று சொல்லிவரும் பொழுது, வெள்ளையர்கள் நமக்கு சுய ஆட்சி கொடுத்துவிட்டுப் போய்விட்டால் நாம் என்ன கதியாகுவோமென்பதையறிந்து கொள்ளுங்கள் (கரகோஷம்). வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை விட்டு அவர்கள் நாளைப் போகட்டுமென்று காங்கிரஸ்காரர்கள் சொன்னால், நான் இன்றே போகட்டும் என்று சொல்லுகிறேன். அதுவும் எனக்கு சம்மதம் (கரகோஷம்). வெள்ளையருக்கு நாங்கள் உள்ளாளாக இருப்பதாகச் சிலர் சொல்லுகிறார்கள். நாங்கள் உள் ஆளா? அவர்கள் உள் ஆளா? என்று கேட்கிறேன். நாங்கள் பிற மதஸ்தர்களுக்கனுகூலமாகப் பிரசாரம் செய்வதாகவும் சொல்கிறார்கள். நமக்கு நம் மதத்திலேயே சுயமரியாதையில்லையே. அப்படியிருக்க, அம்மதம் நமக்கு எதற்கு? ஒரு அப்துல் ரகிமானோ, ஜோசப்போ வந்துவிட்டால் தொலைந்துபோ என்கிறார்கள். எங்களுக்கு உங்கள் இந்து மதத்தில் உரிமை கொடு என்றால், மதத்துரோகி, தேசத்துரோகி என்கிறார்கள்.
துரோகிகள் யார்? நாமா? அவர்களா? இந்து மதம் என்றால் பொருளும் ஆதாரமுமில்லையே! அப்படியிருக்க, இந்து மதம் எங்கிருந்துண்டானது? ஒரு கிறிஸ்துவனை ஒரு அனுகூலம் செய்து கொடுக்கும்படி கேட்டால், அதை அவன் செலவிலே செய்து வைப்பான். அதுபோலவே, மகமதியனும் (கரகோஷம்). இதைக் கேட்டால் நாஸ்திகர்கள் என்கிறார்கள். இந்துமதம் என்பதற்கே ஆதாரமுமில்லை; இந்துக்கள் என்று ஒரு சாதியுமில்லை. திருவண்ணாமலைக் கோயிலுக்குள் திரு. கண்ணப்பர் சென்று வழக்கு நடக்கும் போதுகூட ஜஸ்டிஸ் சதாசிவ அய்யர் நீதிமன்றத்தில் இந்து மதம் என்று ஒரு மதம் இல்லை என்றும், இந்து மதத்தை நம்புகிறவர்கள் இந்துக்கள் என்றும், ஆதிதிராவிடர்களும் இந்துக்களே என்றும், அவர்களும் கோயிலுக்குள் போக அனுமதியுண்டு என்றும் சாட்சியம் கொடுத்திருக்கிறார். அதற்கும் தேசியப் பார்ப்பனர்கள் அவரைத ் தூற்றினார்கள்.
வேதங்கள் அநாநிக் கடவுளால் சொல்லப்பட்டவைகளே என்றும், அதில் சொல்லியிருக்கும் சட்டங்கள் நியாயமானது என்றும், அவர்கள் கேட்டால் இனி பெண்களை சிறு வயதில் மணம் செய்து கொடுத்தல் கூடாது என்றும், 15 வயதிற்கு மேல்தான் மணம் செய்வித்தல் வேண்டுமென்றும், அதற்காக ஓர் கமிட்டியும் ஏற்படுத்தி விசாரணை புரிந்து வந்தனர். அக்கமிட்டியில் திரு. ஏ. ராமசாமி முதலியாரும் ஓர் அங்கத்தினராக நியமிக்கப்பட்டிருந்தார். அப்பொழுது சில வருணாசிரம தர்மப் பார்ப்பனர்களும், தேசியப் பார்ப்பனர்களும் மதம் போச்சு; கடவுள் போச்சு; இது மத சம்பந்தமானது; இதில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்று கூக்குரலிட்டனர். இதை நீங்கள் யோசித்து இம்மணத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.
ஆதிதிராவிடர்கள் சுத்தமில்லாததாலும், மதுபானம், மாமிசம் முதலியவைகள் சாப்பிடுவதினாலும், அவர்களைத் தீண்டக் கூடாதென்று சொல்லுகிறார்கள். அப்படிப் பார்த்தாலும் மயிலாப்பூரும் உங்களோடு சேர வேண்டியதுதான். மயிலாப்பூரிலுள்ள பெரும்பான்மையான பார்ப்பனர்கள் மது, மாமிசம் உண்ணாமலில்லை. சமீபத்தில் கும்பகோணத்தில் யாகம் ஒன்று நடத்தினார்கள்; பத்திரிகையிலும் நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் ஆடு, மாடுகளின் பீஜத்தை நசுக்கி யாகத்தின் பேரால் சாப்பிட்டார்கள். அதைப்பற்றி பத்திரிகையில் எழுதினோம். அதற்காக நம்மை நாஸ்திகர்களென்றும், மதத்துரோகிகளென்றும் தூற்ற ஆரம்பித்துவிட்டார்கள். இது என்ன அறிவீனம் பாருங்கள்.