கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 IV

திரு. காந்தியின் தீண்டாமை எதிர்ப்பு இயக்கம் தோல்வி யடைந்தது என்பது தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட விஷயம். காங்கிரஸ் பத்திரிகைகளே கூட இதனை ஒப்புக் கொண்டன. அவற்றிலிருந்து சில மேற்கோள்களை இங்கு தருகிறேன்.

mahatma gandhi ambedkar1939 ஆகஸ்டு 17-ஆம் தேதி பம்பாய் சட்டமன்ற உறுப்பின ரான ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்த திரு. பி.கே. கெய்க்வாடு ஒரு கேள்வி கேட்டார்: 1932ல் திரு. காந்தி தமது ஆலயப்பிரவேச இயக் கத்தைக் தீண்டப்படாதவர்களுக்குத் திறந்து விடப்பட்டன என்பதே அந்தக் கேள்வி.

காங்கிரஸ் அமைச்சர் அப்போது தந்த புள்ளி விவரங்களின்படி, தீண்டப்படாதவர்களுக்கு மொத்தம் திறந்துவிடப்பட்ட கோவில்கள் 142, இவற்றில் 121 கோவில்கள் சாலையோரத் தில் அமைந்திருப்பவை; அவை உரிமையாளர்கற்றா கோவில்கள்; அவற்றைக் கவனித்துக் கொள்வதற்கும் பராமரிப்பதற்கும் எவரும் இல்லை; அவற்றை வழிபாட்டுத் தலங்களாக யாரும் பயன்படுத்து வதும் இல்லை.

மற்றொரு உண்மையையும் இங்கு அம்பலப்படுத் துவது அவசியம்; திரு. காந்தியின் தாயகமான குஜராத்தில், அவ ருடைய சொந்த மாவட்டத்தில் ஒரு கோவில்கூடத் தீண்டப்படாத வர்களுக்குத் திறந்து விடப்படவில்லை.

திரு. காந்தியின் குஜராத்து பத்திரிகையான ஹரிஜன பந்து 1940 மார்ச் 10 ஆம் தேதிய இதழில் பின்வருமாறு எழுதிற்று:

“ஹரிஜனங்களைப் பள்ளிக் கூடங்களில் அனுமதிக்கும்  விஷயத்தில் குஜராத்தில் போல் வேறு எங்குமே இவ்வளவு  மோசமான முறையில் தீண்டாமைக் கடைப்பிடிக்கப்பட்ட  தில்லை.” (சஞ்சனாலின் அரசியலில் அர்த்தமும் அனர்த்தமும் என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்ட மேற்கோள்.)

 பம்பாய் கிராணிக்கல் தனது 1940 ஆகஸ்டு 27ஆம் தேதிய இதழில் ஹரிஜன சேவா சங்கத்தின் மாதாந்திர கடிதத்திலிருந்து ஒரு பகுதியை வெளியிட்டிருந்தன. அது கூறுவதாவது:

“ஆமதாபாத் மாவட்டத்திலுள்ள கோதாவியைச்  சேர்ந்த ஹரிஜனங்கள் தங்கள் குழந்தைகளை ஸ்தல ஸ்தா  பனப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பியமைக்காக சாதி இந்துக்  களால் மிகுந்த அடக்குமுறை அட்டுழீயத்துக்கு ஆளாக்கப்  பட்டனர். இந்த வன்நெஞ்சக் கொடுமை தாங்க முடியாமல்  42 ஹரிஜனக் குடும்பங்கள் அந்த இடத்தைக் காலி செய்து  விட்டு சானந்த் என்னும் தாலுகா நகரத்தில் போய்த் தஞ்சம்  புகுந்தன.”

1943 ஆகஸ்டு 27ஆம் தேதியன்று, பம்பாய் மாகாணம் தானா வில் வசிக்கும் தீண்டப்படாதவர்களின் தலைவரும், தானா நகர சபையின் முன்னாள் துணைத்தலைவருமான திரு. எம்.எம். நந்த் கவுன்கருக்கு ஓர் இந்து உணவகத்தில் தேநீர் தர மறுத்துவிட்டனர். பம்பாய் கிராணிக்கல் இந்த நிகழ்ச்சியை விமர்சித்து தனது 1948 ஆகஸ்டு 28-ம் தேதி இதழில் எழுதும்போது பின்கண்டவாறு குறிப் பிட்டது.

“1932ல் காந்திஜி உண்ணாவிரதம் மேற்கொண்டபோது, சில கோவில்களையும் உணவு விடுதிகளையும் ஹரிஜனங் களுக்குத் திறந்துவிடுவதற்கு சில பரபரப்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஆலயப் பிரவேசம் சம்பந்த மாகவும், உணவு விடுதிகளில் தீண்டப்படாதவர்களை அனு மதிப்பது சம்பந்தமாகவும் முன்பு என்ன நிலைமை நிலவியதோ கிட்டத்தட்ட அதே நிலைமைதான் இப்போதும் நிலவு கிறது. மிகவும் சுத்தமான ஹரிஜன கூட கோவில்களிலும் உணவுவிடுதிகளிலும் அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி யிருக்கும்போது தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த பல ஊழியர்கள் இத்தகைய தடைகள் குறித்து ஏனோதானோ வென்ற போக்கையே கடைப்பிடிக்கின்றார்; ’முதலில் ஹரி ஜன்ங்களைக் கைதூக்கிவிடுவது’ பற்றி மிகவும் பாவனை யோடு, பசப்போடு பேசுகின்றனர்; ஹரிஜனங்கள் சுத்தமான இருக்கக்கற்றுக்கொண்டு விட்டால் சமுதாயத்தில் அவர் களுக்குள்ள தடைகள் எல்லாம் தாமாகவே மறைந்து விடும் என்று கூறுகின்றனர். இது அருவருப்பு தரும் சுத்த பிதற்ற லாகும்”

1944 ஜனவரியில் கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய ஹெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனக் கூட்ட நடவடிக்கைகள் பற்றி  1944 பிப்ரவரி 4ஆம் தேதியிட்ட தனது இதழில் எழுதும்போது பம்பாய் கிராணிக்கல் பின்வருமாறு குறிப்பிட்டது:

“இந்து சமுதாயத்தின் இத்தகைய செயலாக்கமின்மை  காரணமாக சாதி அமைப்பும், தீண்டாமையும் இன்னமும்  செழித்துக் கொழித்து வருகின்றன. இன்னும் சொல்லப்  போனால் அநேக இந்துத் தலைவர்களே குறிப்பிட்ட சில  பிரிட்டிஷாரின் பிரசார வலையில் வீழ்ந்து, இந்துக் கலா  சாரம் இன்றளவும் உயிர்வாழ்ந்து வருகிறதென்றால் சாதி  அமைப்பு முறையில் ஏதோ ஓர் மர்மமான ஆற்றல், சிறந்த  பண்பு, நற்கூறு இருக்க வேண்டும் என்று வாதிட்டு வருகின்றனர்; இல்லையென்றால் சாதி அமைப்பு முறை பல  நூற்றாண்டுக் காலமாக எத்தனை எத்தனையோ அதிர்ச்சி  களிலிருந்து, குழப்பங்களிலிருந்து மீண்டு வந்திருக்க  முடியாது என்றும் விடாப்பிடியாக சாதிக்கின்றனர்.

காந்தியும் ஏனைய சீர்திருத்தவாதிகளும் எவ்வளவோ செய்தும்.  தீண்டாமை இன்னமும் பெரிய அளவுக்கு நிலவிவருவது  உண்மையிலேயே மிகவும் வருந்தத்தக்க, இரங்கத்தக்க அவல  நிலையாகும். அதிலும் கிராமங்களில் அது கொடி கட்டிப்  பறந்து வருகிறது.... அது மட்டுமல்ல, பம்பாய் போன்ற ஒரு  நகரத்திலேயே கூட ஒரு தோட்டியோ அல்லது துப்புரவுத்  தொழிலாளியோ என்னதான் தூய்மையான, சுத்தமான  உடை உடுத்திருந்தாலும் ஒரு சாதி இந்து உணவு விடுதி  யில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டான், அதிகம் போவா  னேன் தேநீர் அருந்த ஓர் ஈரானி உணவகத்தில் கூட அவன் அனுமதிக்கப்படுவதில்லை.”

திரு. காந்தியின் தீண்டாமை எதிர்ப்பு இயக்கம் தோல்வி யடைந்து விட்டது என்று தீண்டப்படாதவர்கள் எப்போதுமே கூறி வந்திருக்கின்றனர். இந்த இயக்கம் 25 வருடகாலம் பாடுபட்ட பிறகும் தீண்டப்படாதவர்களுக்கு உணவு விடுதிகள் இன்னமும் மூடப்பட் டிருக்கின்றன. கிணறுகள் இன்னமும் மூடப்பட்டு இருக்கின்றன, கோவில்கள் இன்னமும் மூடப்பட்டிருக்கின்றன, இந்தியாவின் மிகப் பலப் பகுதிகளில் குறிப்பாக குஜராத்தில் பள்ளிக்கூடங்கள் கூட இன்னமும் மூடப்பட்டிருக்கின்றன. இது சம்பந்தமாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்திகள், அதிலும் அவை குறிப்பாக காங்கிரஸ் பத்திரிகைகளாக இருக்கும் நிலைமையில் அவற்றில் பிரசு ரிக்கப்பட்டிருக்கும் செய்திகள் தீண்டப்படாதோரின் கூற்றுக்கு மிகவும் வரவேற்கத்தக்க சான்றுகளாக அமைந்துள்ளன. இது விஷயம் குறித்து தீண்டப்படாதவர்கள் கூறிவருவதை முற்றிலும் உறுதி செய்வதாக இச்செய்திகள் இருப்பதால் ஒரு கேள்வியைக் கேட்பதைத் தவிர மேற்கொண்டு எதுவும் கூறத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.

இந்த விஷயத்தில் திரு. காந்தி ஏன் தோல்வியடைந்தார்? இந்தத் தோல்விக்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.

முதல் காரணம், தீண்டாமையை ஒழித்துக்கட்டும்படி இந்துக் களுக்கு அவர் விடுத்த வேண்டுகோளுக்கு அவர்கள் செவிசாய்க்க வில்லை. இது ஏன்? ஒருவர் பயன்படுத்தும் சொற்களும் அவை ஏற்படுத்தும் விளைவும் எப்போதும் ஒத்தவையாக இருப்பதில்லை என்பது பொதுவான அனுபவம். அவர் என்ன கூறுகிறாரோ அதன் தாக்கம் ஒன்று வரைமுறையற்று மிகுதியாகிறது அல்லது அறவே பயனற்றதாகி விடுகிறது; பேச்சாளரின் மனோபாவம் கேட்பவரை யும் ஆட்கொள்வதே இதற்குக் காரணம்.

தீண்டாமையைப் பற்றிய திரு. காந்தியின் உபதேசங்கள் இந்துக்களிடம் உணர்ச்சி ஊட்டி அவர்களைக் கவர்வதில் ஏன் படுதோல்வியடைந்தன. பிரார்த் தனைக்குப் பின்னர் அவர் ஆற்றும் சொற்பொழிவுகளை ஒரு சில நிமிடங்கள் கேட்டுவிட்டு பிறகு அவர்கள் பழைய குருடி கதவைத் திறடி என்று ஏன் பழைய நிலைமைக்கே திரும்புகிறார்கள், இதைத் தவிர அவரது உபதேசங்களால் ஏன் வேறு எதுவும் நிகழ்வதில்லை என்ற புதிர்களுக்கு எல்லாம் இது விடை அளிக்கிறது. தவறு முற்றி லும் இந்துக்களினுடையது என்று கூறமுடியாது. தவறு காந்தியினுடையதே ஆகும்.

திரு. காந்தி மகாத்மா என்ற பட்டத்தை, புகழைப் பெற்றது அரசியல் சுதந்திரத்தின் முன்னோடி, கட்டியக்காரர் என்ற முறையிலே அன்றி ஆன்மிகப் போதனையாளர் என்ற அடிப்படை யில் அல்ல. திரு. காந்தியின் நோக்கங்கள், குறிக்கோள்கள் எவை யாக இருந்தபோதிலும் அவர் சுயராஜ்யத்தின் திருத்தூதவராகக் கருதப்படுகிறார். அவரது தீண்டாமை இயக்கமோ ஏதோ ஒரு நாடக மாக எண்ணப்படுகிறது. இதனால்தான் இந்துக்கள் அவரது அரசியல் உபதேசங்களைச் செவிமடுத்துக் கேட்கிறார்களே தவிர அவரது சமூக அல்லது சமய உபதேசங்களுக்கு மதிப்பு அளிப்பதில்லை. இதனால் அவரது தீண்டாமை எதிர்ப்பு இயக்கம் சூடுபிடிக்காமல் மந்தகதியில் இருந்து வருகிறது.

திரு.காந்தி ஓர் அரசியல் வித்தகர்; அவர் இறுதிவரை பிடிவாதமாக இருந்தாக வேண்டியிருக்கிறது. சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பணியை மேற்கொள்ளலாம் என்று நினைத்தார். அது தவறாகி விட்டது. ஓர் அரசியல்வாதி இப் பணிக்கு தகுதியானவர் அல்ல. இதனால்தான் திரு. காந்தியின் உப தேசங்கள் பல அற்புதங்கள் புரியும் என்று தீண்டப்படாதவர்களிடம் தெரிவிக்கப்பட்ட நம்பிக்கை பொய்த்து விட்டது.

இரண்டாவது காரணம் இந்துக்களைப் பகைத்துக் கொள்ள திரு. காந்தி விரும்பவில்லை; தமது தீண்டாமை எதிர்ப்புத் திட் டத்தை நிறைவேற்ற இந்துக்களைப் பகைத்துக் கொள்வது தவிர்க்க முடியாதது என்றாலும் அதை அவர் விரும்பவில்லை. திரு.காந்தி யின் மனப்பேக்குக்கு ஒரு சில உதாரணங்களை இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும்.

தீண்டப்படாதோரின் நலனுக்காக திரு. காந்தி உண்மையி லேயே பாடுபடுகிறார் என்ற பெருமையை அவருடைய பெரும் பாலான நண்பர்கள் அவருக்கு அளிக்கின்றனர்; தீண்டாமையை ஒழித்துக்கட்ட வேண்டிய அவசியத்தை இந்துக்களுக்கு இடைவிடாது உபதேசித்துக் கொண்டிருக்கும் ஒரே மனிதர் திரு. காந்திதான் என்ற அடிப்படையில் தீண்டப்படாதவ்ர்களும் இதை நம்புவார்கள் என்று எதிர்பார்த்தனர். ஓர் அவுன்ஸ் நடைமுறைச் செயல் ஒரு டன் உப தேசத்துக்குச் சயம் என்ற மூதுரையை இந்தக் கனவான்கள் மறந்து விட்டார்கள் போலும்.

மேலும், தீண்டாமையை ஒழிக்க வேண்டிய அவசியம் பற்றி இந்துக்களும் ஓயாது ஒழியாது உபதேசம் செய் வதை விடுத்து, நீங்கள் ஏன் ஒரு சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்கக் கூடாது அல்லது உண்ணாவிரத்தை மேற்கொள்ளக் கூடாது என்று திரு. காந்தியிடம் விளக்கம் கேட்கவும் இவர்கள் ஒருபோதும் கவலைப்பட்டதோ, அக்கறை எடுத்துக் கொண்டதோ இல்லை. இத்தகைய ஒரு விளக்கத்தை கேட்டிருந்தால் திரு. காந்தி தீண்டாமையைப் பற்றி வெறும் உபதேசம் செய்வதோடு ஏன் நிறுத்திக் கொண்டு விடுகிறார் என்பதைத் தெரிந்து கொண்ருப் பார்கள்.

உபதேசங்களுக்கு அப்பால் திரு. காந்தி ஏன் செல்லுவதில்லை என்பதற்கான உண்மையான காரணங்கள் 1929ல் முதல் தடவை யாக அம்பலமாயின (திருவாங்கூரில் ஒரு பொது சாலையை தீண்டப்படாதவர்களும் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்பதே 1924-ல் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் குறிக்கோளாக இருந்தது. அவ்வாறிருக்க சத்தியாக்கிரகிகளுக்காக சீக்கியர்கள் ஒரு சமையலறையைத் திறந்து விடுவதை திரு. காந்தி ஆட்சேபித்தார்.

இதற்கு திரு. காந்தி கூறிய காரணங்கள் அத்தனை தெளிவானவையாக, ஐயத்துக்கிடமற்றவையாக இல்லை.); அப்போது ஆலயப்பிரவேச விஷயத்திலும், பொதுக் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்கும் விஷயத்திலும் தங்க ளுக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளும் பொருட்டு பம்பாய் மாகாணத்தில் இந்துக்களுக்கு எதிராக தீண்டப்படாதோர் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்கினார். சத்தியாக்கிரகம் என்பது அநீதியை ஒழித்துக்கட்டுவதற்கு திரு. காந்தி பிரயோகிக்ககும் ஆயுதம் என்பதால் இதில் அவரது ஆசியைப் பெறமுடியும் என்று அவர்கள் நம்பினர்.

ஆனால் அவர் ஆதரவளிக்க வேண்டுமென்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தபோது அவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி தான் காத்திருந்தது. இந்துக்களுக்கு எதிராக தீண்டப்படாதோர் நடத்தும் சத்தியாக்கிரகத்தைக் கண்டித்து திரு. காந்தி ஓர் அறிக்கை வெளியிட்டு அவர்களைத் திகைக்க வைத்துவிட்டார். இதற்கு ஆதர வாக திரு. காந்தி முன்வைத்த வாதம் மிகவும் குள்ள நரித்தனமானது.

சத்தியாக்கிரகத்தை அயல்நாட்டினருக்கு எதிராகத்தான் பயன்படுத்த வேண்டும்; தமது சொந்த நாட்டினருக்கு எதிராக அதனைப் பயன் படுத்தக்கூடாது; இந்துக்கள் தீண்டப்படாதவர்களின் சொந்த நாட்ட வர்களாதலால் சத்தியாக்கிரக விதிகளின்படி இந்த ஆயுதத்தை முந்திய வர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்படுகிறது என்று அவர் ஒரு பெரிய பாணத்தைத் தொடுத்தார்!! உச்சி பீடத்தி லிருந்து எத்தகைய அவமானகரமான வீழ்ச்சி! இதன் மூலம் திரு. காந்தி இதனை ஏன் செய்தார்? இந்துக்களுக்கு தொந்தரவு கொடுக்கவும், எரிச்சலூட்டி அவர்களைச் சினங்கொள்ளச் செய்யவும் அவர் விரும் பாததே இதற்குக் காரணம்.

இனி, அடுத்த சம்பவத்தைப் பார்ப்போம். கவிதா நிகழ்ச்சி என  இது அறியப்படுகிறது. கவிதா என்பது குஜராத்தில் ஆமதாபாத் மாவட் டத்திலுள்ள ஒரு கிராமம். 1935ல் அக்கிராமத்தைச் சேர்ந்த தீண்டப் படாதவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த சாதி இந்துக்களிடம் ஒரு

கோரிக்கையை முன்வைத்தனர்; அதாவது கிராமப் பொதுப் பள்ளிக் கூடத்தில் ஏனைய இந்து குழந்தைகளுடன் தங்கள் குழந்தைகளை யும் அனுமதிக்க வேண்டுமென்று கோரினர். இது கேட்டு சாதி இந்துக்கள் அடக்க முடியாத சினம் கொண்டு எரிமலையாகக் கொதித் தெழுந்தனர். இதற்குப் பழிக்கு பழிவாங்கத் துடித்தனர்; தீண்டப் படாதவர்களுக்கு எதிராக முழு சமூகப் பகிஷ்காரத்தைப் பிரகடனம் செய்தனர். இதன பேரில் தீண்டப்படாதவர்களுக்கு ஆதரவாக இந்துக் களிடம் பரிந்து பேசும் பொருட்டு திரு. ஏ.வி. தாக்கர் கவிதா கிராமத் துக்குச் சென்றார். இந்தப் பகிஷ்காரம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை திரு. ஏ.வி. தாக்கர் பின்வருமாறு விவரிக்கிறார்:-

“கவிதாவிலுள்ள கிராமப்பள்ளியில் ஹரிஜன சிறுவர் களை அனுமதிப்பதற்கு கவிதா கிராமத்தைச் சேர்ந்த சாதி இந்துக்கள் சம்மதித்து விட்டார்கள் என்றும், விவகாரம் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு விட்டது என்றும் 10ஆம் தேதி அன்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் அறி வித்தது, ஆனால் 13ஆம் தேதி அன்று ஆமதாபாத் ஹரிஜன சேவா சங்கத்தின் செயலாளர் இதற்கு மறுப்பு தெரிவித்தார், அது சம்பந்தமாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறிய தாவது:- தங்களுடைய குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதில்லை என்று ஹரிஜனங்கள் (தனிப்பட்ட முறை யில்) ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் இந்த ஒப்புதலை அவர்கள் தாங்களே முன்வந்து தரவில்லை; மாறாக சாதி இந்துக்கள் கட்டாயப்படுத்தித்தான் இந்த ஒப்புதலைப் பெற் றுள்ளனர்.

கராசியர்கள் என்ற சாதி இந்துக்கள்தான் இந்த ஏழை ஹரிஜன்ங்களுக்கு எதிராக சமூக பகிஷ்கரிப்பைப் பிரகடனம் செய்வதர்கள். நெசவாளர்கள், சமார்கள் (செருப்புத் தைப்ப வர்கள்) என்று 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் இங்கு இருக்கின்றன. விவசாயிக் கூலி வேலை அவர்களுக்கு மறுக்கப்பட்டது; அவர்களது கால்நடைகள் மேய்ச்சல் நிலத் தில் மேய்வது தடுக்கப்பட்டது; அவர்களுடைய குழந்தை களுக்கு மோர் வழங்குவது நிறுத்தப்பட்டது. அது மட்டு மல்ல, இனி மேல் தங்களுடைய குழந்தைகளை பொதுப் பள்ளிக் கூடத்தில் சேர்க்க எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று ஒரு அரிசனத் தலைவர் மகா தேவன் பெயரால் சத்தியம் செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். மேலே கூறிய உடன்பாடு என்பது இவ்வாறுதான் ஏற்பட்டது.

”ஆனால் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த போலியான, மோசடியான உடன்பாட்டிற்குப் பிறகு கூட, ஏழை ஹரிஜனங்கள் முற்றிலும் சரணடைந்த பிறகுகூட 19ஆம் தேதிவரை பகிஷ்காரம் விலக்கிக் கொள்ளப்படவில்லை; நெசவாளர்களைப் பொறுத்தவரை யில் 22ஆம் தேதி வரை கூட அது நீடித்தது. இதற்கு சற்று முன்னதாக சமார்களுக்கு எதிரான பகிஷ்காரம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஏனென்றால் செத்த விலங்குகளின் அழுகி நாற்றமெடுத்துப்போன பிணங்களை கராசியர்களால் அப்புறப்படுத்த முடியாததால் அவர் கள் சமார்களுடன் உடன்பாட்டிற்கு வரவேண்டியதாயிற்று.

ஹரி ஜனங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இந்த அட்டூழியங்கள், அரா ஜகங்கள், கோரக் கொடுமைகள் போதாது என்று ஹரிஜனங்களின் கிணறுகளில் 15ஆம் தேதியும் மீண்டும் 19ஆம் தேதியும் மண்ணெண் ணெய் ஊற்றப்பட்டது. ஹரிஜனங்கள் தங்களுடைய குழந்தைகளை கிராமத்தின் பொதுப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புவதற்கும், அங்கு ‘இளவரசர்கள்’ போன்ற கராசியர் குழந்தைகளுடன் சேர்ந்து அமரச் செய்வதற்கும் துணிந்தமைக்காக ஏழை ஹரிஜனங்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட அடக்குமுறை ஒடுக்குமுறை கணைகள், குரூர பாணங்கள் சொல்லத் தரமன்று.

“22ஆம் தேதி காலை கராசியர்களின் தலைவர்களைச் சந் தித்துப் பேசினேன். தெத்கர் மற்றும் சமார்களின் குழந்தைகள் தங்கள் குழந்தைகளுடன் அருகருகே சேர்ந்து அமரும் காட்சியைத் தங்க ளால் சகித்துக் கொள்ள முடியாது என்று அவர்கள் பிடிவாதமாகக் கூறினார். 23ஆம் தேதி ஆமதாபாத் மாவட்ட மாஜிட்ரேட்டையும் சந்தித்துப் பேசினேன். சிக்கலைத் தீர்ப்பதற்கு அவரால் ஏதேனும் செய்ய முடியுமா என்று முயற்சித்துப் பார்த்தேன். ஆனால் பலன் ஏதும் கிட்டவில்லை.

“இவ்வாறு ஹரிஜனக் குழந்தைகள் கிராமப்பள்ளியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்; அவர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. இது ஹரிஜனங்களுக்கு இடையே மிகுந்த சோர்வையும் மனத்தளர்ச்சியையும் உண்டு பண்ணியுள்ளது. இதனால் கூண் டோடு வேறு ஏதேனும் கிராமத்திற்குச் சென்றுவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.”

இதுதான் திரு. காந்தியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை. அப்போது திரு. காந்தி செய்தது என்ன? கவிதா கிராமத்தைச் சேர்ந்த  தீண்டப்படாதவர்களுக்கு அவர் பின்கண் அறிவுரையை வழங்கினார்.

”தன் கையே தனக்கு உதவி. இதைவிடச் சிறந்த உதவி வேறு எதுவும் இல்லை. தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்பவர்களுக்கு ஆண்டவன் உதவுகிறார். சம்பந் தப்பட்ட ஹரிஜனங்கள் கவிதாவின் மண்ணை தங்கள் காலடி களிலிருந்து துடைத்துவிடத் தீர்மானித்திருப்பதாகக் கூறப் படுகிறது. இவ்வாறு செய்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவ தோடு, இதே போன்று நடத்தப்படும் இதரர்களுக்கும் பாதை செப்பனிட்டுத் தந்தவர்களாவார்கள். வேலை தேடுவதற்கே இடம் விட்டு இடம் செல்ல வேண்டியிருக்கும்போது சுய மரியாதையைத் தேடி அவர்கள் இவ்வாறு செய்வதில் தவறு என்ன இருக்க முடியும்? அன்பாதரவற்றா இந்தக் கவிதா விலிருந்து வெளியேறுவதற்கு ஹரிஜன்ங்களின் நலத்தில் அக்கறை கொண்டவர்கள் இந்த ஏழை எளிய குடும்பங் களுக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கவிதாவிலிருந்து வெளியேறுமாறு அக்கிராமத்தைச் சேர்ந்த ஹரிஜனங்களுக்கு திரு. காந்தி ஆலோசனை கூறினார். ஆனால் கவிதாவின் சாதி இந்துக்கள்மீது வழக்குத் தொடரும்படி யும், தீண்டப்படாதவர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கு அவர்களுக்கு உதவும்படியும் திரு. தாக்கருக்கு திரு. காந்தி ஏன் ஆலோசனை கூறவில்லை? இந்துக்களின் மனம் புண் படாதபடி தீண்டப்படாதவர்களைக் கைதூக்கி விட அவர் எண்ணினார் போலும்! இத்தகைய ஒரு மனிதரால் தீண்டப்படாதவர்களின் நல்வாழ்வுக்கான என்ன நன்மை செய்து விட முடியும்? இந்துக் களிடம் நற்பெயர் சம்பாதித்துக் கொள்வதில் அவர் மிகவும் ஆர்வ மாக இருந்தார் என்பதையே இவை யாவும் காட்டுகின்றன.

இதனால் தான் இந்துக்களுக்கு எதிராக சத்தியாக்கிரகம் நடத்துவதை அவர் எதிர்க்கிறார். இதனால்தான் தீண்டப்படாதவர்களின் அரசியல் கோரிக்கைகளை அவர் எதிர்த்தார்; அந்தக் கோரிக்கைகள் இந்துக் களுக்கு எதிரானவை என்று அவர் கருதினார். இந்துக்களின் நன் மதிப்பைப் பெறுவதில் அவர் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண் டிருக்கிறார்; இதனால் தீண்டப்படாதவர்கள் அவரை ஒன்றுக்கும் உதவாதவர் என்று சாடினாலும் அதைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை. இதனால் தான் தீண்டாமையை ஒழித்துக்கட்டுவதற்கான அவரது வேலைத்திட்டம் முழுவதுமே சொற்கள், சொற்கள், வெறும் வாய்ச்சொற்களைத் தவிர அவற்றுக்குப் பின்னால் செயல் ஏதும் இல்லாதிருப்பதைப் பார்க்கிறோம்.

மூன்றாவது காரணம் தீண்டப்படாதவர்கள் ஸ்தாபன ரீதியாக அணி திரண்டு, வலுவடைவதை திரு. காந்தி விரும்பவில்லை. இதன் மூலம் அவர்கள் இந்துக்களிடமிருந்து சுதந்திரமானவர்களாகி, இந்துக் களின் அணியைப் பலவீனப்படுத்தக்கூடும் என்று அவர் அஞ்சி னார். ஹரிஜன சேவா சங்கத்தின் நடவடிக்கைகளிலிருந்து இதனைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். தங்களுடைய இந்து எசமானர்கள் பால் ஓர் அடிமை மனப்பான்மையை தீண்டப்படாத வர்களிடையே ஊட்டி வளர்ப்பதே சங்கத்தின் முழுமுதல் குறிக் கோளாகும். சங்கத்தின் செயற்பாடுகளை எந்தக் கோணத்திலிருந்து பரிசீலித்துப் பார்த்தாலும் தீண்டப்படாதவர்களிடம் அடிமை மனப் பான்மையை வளர்ப்பதே அதன் பிராதன நோக்கம் என்பது தெரிய வரும்.

சங்கத்தின் பணி மகாபாரதம் பாகவதத்தில் வருணிக்கப் பட்டிருக்கும் பூதகி என்னும் அரக்கியின் செயலையே நினைவுப் படுத்துகிறது. மதுராவின் மன்னன் கம்சன் கிருஷ்ணனைக் கொல்ல விரும்பினான்; கிருஷ்ணனால் கம்சன் கொல்லப்படுவான் என்று அசரீரி கூறியதே இதற்குக் காரணம். கிருஷ்ணன் எங்கு பிறந்திருக் கிறான் என்பதை கம்சன் தெரிந்து கொண்டான்; அப்போது பூதகியை அழைத்து கிருஷ்ணன் குழந்தையாக இருக்கும்போதே அவனைக் கொன்ரு விடும்படிப் பணித்தான். அவ்வாறே பூதகி எழில்மிக்க ஒரு மங்கையாக மாறி கிருஷ்ணனின் வளர்ப்புத் தாயான யசோதையிடம் சென்றாள்; போகும்போதே தன் மார்பகத்தில் திரவ வடிவத்திலுள்ள விஷத்தைத் தவிடக் கொண்டாள்; தன்னை பாலூட்டும் செவிலி யாக வேலைக்கு அமர்த்துக்கொள்ளும்படி அவளிடம் கேட்டுக் கொண்டாள். விஷம் கலந்த பாலை ஊட்டிக் கிருஷ்ணனைக் கொல் வதே அவளது தீட்டம். இதற்கு மேல் நடந்த கதையைச் சொல்ல வேண்டியதில்லை; அது அனைவருக்கும் தெரியும்.

உண்மையான நோக்கமும் பாசாங்குத் தனமான நோக்கமும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில்லை, ஒரு செவிலித்தாயும் கூட ஒரு கொலைகாரியாக இருக்க முடியும் என்பதையே இந்தக் கதையின் மூலம் எடுத்துக்காட்ட முயன்றிருக்கிறோம். கிருஷ்ணனுக்குப் பூதகி எப்படியோ அப்படித்தான் தீண்டப்படாதவர்களுக்கு சங்கம் என்று சொல்லலாம். சேவை என்ற பெயரால் தீண்டப்படாதவர்களின் சுதந்திர உணர்வைக் கொல்வதற்கு சங்கம் முயல்கிறது. தீண்டப்படாதவர்கள்

தங்களது போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் நல்லெண்ணம் படைத்த சில இந்துக்களின் ஆதரவை நாடிப் பெற்றனர்; அவர்களது தலைமையையும் பின்பற்றினர். எனினும் வட்ட மேசை மாநாடு நடைபெறும் காலத்திற்குள் தீண்டப்படாதவர்கள் முற்றிலும் தன் னம்பிக்கையும் சுதந்திர உணர்வும் கொண்டவர்களாகி விட்டனர். இந்துக்களின் அருளிரக்கத்திற்காக இனியும் அவர்கள் காத்துக் கொண் டிருக்கவில்லை. தாங்கள் கூறுவது சரியென்று சொல்லுவதற்குத் தங்களுக்கு உரிமை உண்டு என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினர்.

தீண்டப்படாதவர்களிடைய கருவாகி உருவாகி வந்த இந்த சுதந்திர உணர்வை முளையிலேயே கிள்ளியெறிவதற்கே திரு. காந்தி ஹரிஜன சேவா சங்கத்தைத் தொடங்கினார். ஹரிஜன சேவா சங்கம் சிறு சிறு சேவைகளின் மூலம் நன்றி விசுவாசமுள்ள தீண்டப்படாதவர்களின் ஒரு பெருந்திரளையே திரட்டி விட்டது; திரு. காந்தியும் இந்துக்களும் தான் தீண்டப்படாதவர்களின் கண்கண்ட ரட்சகர்கள் என்று பிர சாரம் செய்தற்கு அவர்கள் அமர்த்தப்பட்டனர். எந்த ஒரு மனிதனும் தனது சுயமாரியாதையைப் பறிகொடுத்து நன்றி காட்ட முடியாது.

எந்த ஒரு பெண்ணும் தனது கற்பைப் பறி கொடுத்து நன்றி காட்ட முடியாது, எந்த ஒரு நாடும் தனது சுதந்திரத்தைப் பறிகொடுத்து நன்றி காட்டமுடியாது என்று அயரிஷ் தலைவரான டேனியல் ஓ ’அன்னம் ஒரு சமயம் குறிப்பிட்டார். ஹரிஜன சேவா சங்கம் செய்யும் சேவைக்குத் தாங்கள் கொடுக்கும் விலை சுதந்திர இழப்பு என்பதை பாவம் அப்பாவியான, சூதுவாதில்லாத பல தீண்டப்படாதவர்கள் அறிய மாட்டார்கள், இதைத்தான் திரு. காந்தி விரும்பினார்.

 ஹரிஜன சேவா சங்கத்தின் செயற்பாடுகளிலேயே மிக மோச மானது சங்கம் நடத்தி வந்த விடுதியில் தங்கியிருந்த தீண்டப்படா தோர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அது அளித்து வந்த உதவியேயாகும். இந்த மாணவர்களை எண்ணிப் பார்க்கும்போது மகாபாரதத்தில் வரும் இரண்டு முக்கிய பாத்திரங்களாக பீஷமர், கசன் ஆகிய வர்கள்தான் என் நினைவுக்கு வருகின்றனர். பாண்டவர்கள் பக்கம்தான் நியாயமிருக்கிறது, கௌரவர்கள் செய்வது தவறு என்று பீஷ்மர் பாரறிய, படாடோபமாகப் பறைசாற்றினார்.

ஆனால் இவ்விரு தரப்பினருக்கும் இடையே யுத்தம் மூண்டபோது பீஷ்மர் என்ன செய்தார் தெரியுமா? அவர் கௌரவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டு பாண்டர்களை எதிர்த்துப் போரிட்டார். இது எவ்வாறு நியாயம் என்று கேட்ட போது கௌரவர்கள் என்னைப் பராமரிக்கிறார்கள், அவர்கள் போட்ட உப்பைத் தின்றுதான் நான் வளர்ந்தேன், எனவே தான் அவர்களுடன் சேர்ந்து போரிடுகிறேன் என்று கூறுவதற்கு அவர் வெட்கித் தலைகுனியவில்லை. கசன் தேவர் குலத்தைச் சேர்ந்தவன்.

ராட்சதர்களுக்கு எதிரான போராட்டத்தில் அவன் ஈடுபட்டிருந்தான். ராட்சதர்களின் குருவுக்கு ஒரு மந்திரம் தெரியும். இறந்துபோன ராட்ச தர்களை இந்த மந்திரத்தின் உதவியால் உயிர் பிழைக்க வைக்க முடியும். தேவேந்திரனுக்கு இந்த மந்திரம் தெரியாததால் இறந்து போன தேவர்களை அவர்களால் மீண்டும் உயிர்ப்பிக்க முடிய வில்லை. இதனால் போரில் தேவர்கள் தோல்வியைத் தழுவிவந்தனர். கசனை ராட்சதர்களின் தலைவனிடம் அனுப்பி எப்படியாவது மந்தி ரத்தை கற்றுக் கொண்டு வருவதற்குத் திட்டமிட்டனர். கசன் இந்த முயற்சியில் ஆரம்பத்தில் வெற்றி பெறவில்லை.

இறுதியில் அவன் ராட்சதர்களின் தலைவனுடைய புதல்வியான தேவயானியுடன் ஓர் உடன்பாடு செய்து கொண்டான்; இந்த மந்திரத்தைக் கற்றுக் கொள்ள தேவயானி உதவி செய்தல் அவளைத் தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக கசன் தெரிவித்தான். ஒப்பந்தப் படி தேவயானி தன் பங்கை நிறைவேற்றி விட்டாள். ஆனால் கசன் தன் பங்கை நிறைவேற்ற மறுத்து விட்டான்; அவளுக்கு அளித்த தனது வாக்குறுதியைவிட தனது சமூகத்தின் நலன்களே தனக்கு மிக முக்கியமானவை என்று கூறி கைவிரிந்து விட்டான்.

அறநெறி வழுவிய பாத்திரங்களுக்கு பீஷ்மரும் கசனும் உதா ரணங்களாவர் என்பது என் கருத்து; தங்களது சுயநலத்தைப் பூர்த்தி செய்து கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்தக் குறிக்கோளும் இல்லை. ஹரிஜன விடுதியில் தங்கியுள்ள தீண்டப்படாத இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் பீஷ்மர், கசன் ஆகிய இரு பாத்திரங்களையும் ஏற்று நடித்துவருகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். விடுதியில் தங்கியிருக்கும் அவர்கள் பீஷ்மராக நடித்து திரு. காந்தியை யும் காங்கிரசையும் மண்ணுக்கும் விண்ணுக்குமாக ஏற்றிப் போற்றிப் புகழ்கின்றனர். ஆனால் விடுதியிலிருந்து வெளியே வந்ததும் கசன் பாத்திரத்தை ஏற்று திரு. காந்தியை காங்கிரசையும் கருமையாக சாடுகின்றனர். இதனைக் காண எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.

இந்தத் தார்மிக ஒழுக்கக் கேட்டைவிட தீண்டப்படாத இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மிக மோசமானது வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் அதேசமயம் இது ஹரிஜன சேவா சங்கம் தீண்டப்படாதவர்களுக்குச் செய்துள்ள மிகப் பெரிய தீங்காகும். இது அவர்களது சுதந்திரத்தையே ஆழக் குழிதோண்டிப் புதைத்து விட்டது. இவ்வாறு நடைபெற வேண்டும் என்பதுதான் திரு. காந்தி யின் விருப்பமாகும்.

நான்காவது உதாரணத்தை எடுத்துக் கொள்வோ, சங்கம் சாதி இந்துக்களால் நடத்தப்படுகிறது. இந்த அமைப்பு தீண்டப் படாதவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், அவர் களால் நடத்தப்பட வேண்டும் என்றும் தீண்டப்படாதோரில் சிலர் கோரினர். சங்கத்தின் நிர்வாகக் குழுவில் தீண்டப்படாதவர்களுக் கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று வேறு சிலர் வலி யுறுத்தினர். ஆனால் இவ்விரு கோரிக்கைகளில் எதையும் ஏற்பதற்கு திரு. காந்தி அறவே மறுத்த விட்டார். வேறு எவரும் கையாள முடியாத குயுக்தியோடு இதற்கு இரண்டு தந்திரமான காரணங்களைக் கூறி னார். ஹரிஜன சேவா சங்கம் என்பது தீண்டாமையை அனுஷ்டிக்கும் பாவத்திற்கு இந்துக்கள் செய்யும் ஒரு பிராயச்சித்தம் என்பது அவரது முதல் வாதம்.

இந்துக்கள்தான் இதற்குக் கழுவாய் தேட வேண்டும். ஆதலால் சங்கத்தை நிர்வகிப்பதில் தீண்டப்படாதவர்களுக்குப் பங்கு ஏதும் இருக்க முடியாது. இரண்டாவதாக தான் திரட்டியுள்ள பணம் இந்துக்கள் தந்த்தேயாகும், தீண்டப்படாதவர்கள் அளித்த பணம் அல்ல, எனவே, நிர்வாகக் குழுவில் இடம் பெறுவதற்கு தீண்டப் படாதவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

இவ்வாறு திரு. காந்தி மறுதத்தை வேண்டுமானால் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இதற்கு ஆதரவாக அவர் முன்வைத்த வாதங்கள் மிகவும் அவமதிப் பானவை, மனத்தைப் பெரிதும் புண்படுத்தக்கூடியவை; இதற்குப் பிறகு சுயமரியாதை உள்ள தீண்டப்படாதவன் எவனும் சங்கத்துடன் எத்தகைய ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ளமாட்டான்; அவ்வாறு செய்வதில் எத்தகைய தவறுமில்லை. ஹரிஜன சேவா சங்கம் என்பது ஓர் அறக்கட்டளை நிறுவனம். தீண்டப்படாதவர்கள் அனுபவ பாத் தியம் உடையவர்கள்.

எனவே, அறக்கட்டளையின் குறிக்கோள் கள், நோக்கங்கள், அதன் நிதி வசதிகள் முதலியவற்றையும் அதன் குறிக்கோள்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றவா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு அனுபவபாத்தியஸ்தர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு என்பதை எந்தச் சட்டம் வல்லுநரும் கூறுவார். இன்னும் சொல்லப்போனால் நம்பிக்கை துரோகம் செய்தமைக்காக தருமகர்த்தாவை நீக்குவதற்குக் கூட அவர்களுக்கு உரிமை உண்டு.

எனவே, நிர்வாகக் குழுவில் தீண்டப்படாதவர்களுக் குப் பிரதிநித்துவம் அளிப்பதற்கு மறுக்க முடியாது. காந்தி இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பது தெளிவு. அதேசமயம் எவருக்கும் அடங்கி ஒடுங்கி தாழ்ந்து போக விரும்பாத, மற்றவர்களின் தர்ம சிந்தனையில் தனது எதிர்காலத்தைப் பணம் வைக்க விரும்பாத சுயமரியாதை உள்ள எந்தத் தாழ்த்தப்பட்டவனும் இது விஷயத்தில் திரு. காந்தியுடன் எத்தகைய சச்சரவும் வைத்துக் கொள்ள மாட்டான்.

கயமைத்தனம் என்பது ஒரு நற்பண்பு என்றால் திரு. காந்தியின் வாதம் பிரமாதம் என்பதில் ஐயமில்லை, அதன் பலனை அவரே அனு பவிக்கட்டும் என்று கூற அவன் முற்றிலும் தயாராக இருக்கிறான்.

ஆனால் சங்கத்தை நிர்வகிக்க தீண்டப்படாதவர்கள் அனு மதிக்கப்படாததற்கு இவை உண்மையான காரணங்களாக இருக்க முடியாது. உண்மையான காரணங்கள் வேறு. முதலாவதாக, சங்கம் தீண்டப்படாதவர்களின் பொறுப்பில் விடப்பட்டால், தீண்டப்படாத வர்களைக் கட்டுப்படுத்த திரு. காந்திக்கும் காங்கிரசுக்கும் எந்த வழியும் இருக்காது. தீண்டப்படாதவர்கள் இந்துக்களைச் சார்ந் திருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இரண்டாவதாக, தீண்டப்படாதவர்கள் சுதந்திரமானவர்களாகி விட்டால் இந்துக்களிடம் நன்றி விசுவாசம் காட்டுவதை நிறுத்தி விடுவார்கள். இதன் விளைவுகள் திரு. காந்தி என்ன நோக்கத்துக்காக இச்சங்கத்தை ஆரம் பித்தாரோ அந்த நோக்கத்துக்கு முரண்பாடானவையாகி விடும். இந்தியக் கிறித்தவர்கள் செய்வது போல் ஒரு சமயநோக்கு மனோ பாவத்தை தீண்டப்படாதவர்களிடையே தோற்றுவிக்கவே அவர் விரும்புகிறார்.

இதனால்தான் சங்கத்தை தீண்டப்படாதவர்களின் கட்டுப்பாட்டிலும் நிரவாகத்திலும் ஒப்படைக்க திரு. காந்தி விரும்ப வில்லை. தீண்டப்படாதவர்களுக்கு விமோசனம் கிட்ட வேண்டு மென்ற உண்மையான ஆர்வத்தை இது காட்டுகிறதா? திரு. காந்தியை தீண்டப்படாதவர்களின் விடுதலை வீரர் என்ப போற்ற முடியுமா? இந்துக்களின் ஆதிக்கத்திலிருந்து தீண்டப்படாதவர்களை விடுவிப் பதைவிட இந்துக்களின் முந்தானையுடன் அவர்களைப் பிணைக் கும் முடிச்சை மேலும் இறுக்குவதிலேயே திரு. காந்தி மிகுந்த அக் கறை காட்டுகிறார் என்பதை இது காட்டவில்லையா?

 திரு. காந்தி தீண்டாமை எதிர்ப்பு இயக்கம் தோல்வி யடைந்ததற்கு இதுவே காரணங்கள்.

 V

இரத்தினச் சுருக்கமாகக் கூறினால், தீண்டப்படாதவர்கள் இழந்துவிட்ட உடைமையுரிமை ஆவணங்களை திரு. காந்தி மனித குலத்துக்கு திரும்பப் பெற்றுத் தந்தார் என்று கூற முடியுமா அவ்வாறு அவர் செய்யவில்லை என்பது தெள்ளத்தெளிவு. அந்த உடைமை யுரிமை ஆவணங்கள் இன்னமும் இந்துக்களிடம்தான் இருந்து வரு கின்றன. அவற்றை மீட்டுத் தருவதற்கு அவர் எதுவும் செய்யவில்லை.  

தீண்டப்படாதவர்கள் அவற்றைப் பெறுவதற்கும் எவ்விதத்திலும் உதவவில்லை. அதற்குமாறாக, இது விஷயத்தில் எல்லா வகை யான முட்டுக்கட்டைகளைத்தான் போட்டு வந்திருக்கிறார். மனித குலத்துக்கு தாங்கள் அளிக்கக் கடமைப்பட்டுள்ள உடைமை யுரிமை ஆவணங்களை – அதாவது இந்துக்களின் ஆதிக்கத்திலிருந்து தாங்கள் விடுதலை பெறுவதை – அரசியல் அதிகாரத்தால்தான் பெற முடியுமே அன்றி வேறு எதாலும் முடியாது என்பதை தீண்டப்படாத வர்கள் உணருகின்றனர். ஆனால் மறுபுறம் திரு. காந்தியோ தமது உபதேசமும் இந்துக்களின் ஈகையும் விருப்பார்வமும் எல்லாவித மான தீண்டாமை நோய்களுக்கும் சஞ்சீவி மருந்தாக சர்வரோக நிவா ரணியாக இருக்கும் என்று நம்புகிறார்.

இந்துக்களின் ஈகையும் விருப் பார்வமும் வற்றாது வரையாது இருந்துவரும் என்று தீண்டப்படா தோர் நம்ப முடியாது? சீற்றத்துடன் கூடிய ஈகையால் என்ன பயன்? பழிவாங்கத் துடிக்கும் விருப்பார்வத்தால் என்ன பலன்? இந்துக் களின் மகிழ்ச்சியற்றா ஈகையையும் விருப்பார்வத்தையும் நம்பியிருக்கும் படி தீண்டப்படாதவர்களின் எந்த நண்பர்தான் அவர்களுக்கு அறி வுரை கூற முடியும்? தீண்டாமை என்னும் சாபக்கேடு கடந்த இரண் டாயிரம் ஆண்டுகளாகவே இருந்து வருகிறது; இந்த ஆண்டுகளில் இந்துக்கள் தீண்டப்படாதவர்களின் இரத்தத்தை அட்டைகள் போல் உறிஞ்சிக் குடித்துள்ளனர்; அவர்களைச் சிதைத்துச் சின்னாபின்ன மாக்கியுள்ளனர்; சொல்லொண்ணா கோரக் கொடுமைகளுக்கு உள் ளாக்கி இருக்கின்றனர்; எல்லா வழிகளிலும் அவர்களை அடித்து மிதித்து துவைத்திருக்கின்றனர்; இரும்புக் காலில் போட்டு நசுக்கி யிருக்கின்றார்.

இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இந்துக்கள் தீண்டப் படாதவர்களில் துன்பத்தைத் துடைக்க என்ன செய்துவிட்டனர்? அவர்களது நல்வாழ்வுக்காக, மேம்பாட்டுக்காக என்ன சாதித்து விட்டனர்? வெறும் பிச்சைக்காசு 8 லட்சம் ரூபாயை சங்கத்திற்கு வழங்கியுள்ளனர். அதுவும் திரு. காந்தி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து கையில் கப்பறை ஏந்தி வசூலித்த பணம் இது! தீண்டாமையை ஒழிக்கும் திட்டத்தை உண்மையிலேயே செயல்படுத்தும் நல்லெண் ணம் திரு. காந்திக்கு இருந்திருக்குமானால் தீண்டப்பாட்தவர்களின் அரசியல் அதிகாரக் கோரிக்கையை ஏற்றிருக்க வேண்டும்; இதுதான் அவர்களுக்கு உண்மையிலேயே விடுதலையை, விமோசனத்தைத் தந்திருக்கும். இந்தக் கோரிக்கை மிக நியாயமானது என்பது வெள்ளிடை மலை.

தீண்டப்படாதவர்களின் கரங்களில் மட்டும் நிர்வாகம் இருக்குமானால் ஒரு நூற்றாண்டுக் காலம் உபதேசம் செய்து சாதிக்க முடியாத்தை ஒரே ஆண்டில் சாதித்துக் காட்ட முடியும் என்பதை ஆறறிவு படைத்த எந்த மனிதனுமே புரிந்து கொள்வான். ஆனால் தீண்டப்படாதவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை அளிக்கும் கருத்தே திரு. காந்திக்கு வேப்பங்காயாகக் கசக்குகிறது. தீண்டப்படாதவர்களுக்கு உதவி செய்யும் விஷயத்தில் திரு. காந்தி சமூக வழி முறை களில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கை முற்றி லும் பொய்த்துவிட்டதை அவர் நன்கு அறிவார்.

இவ்வகையில் இனி அரசியல் வழிமுறைகள் மூலம்தான் தீண்டப்படாதவர்களுக்கு விமோசனம் கிட் முடியும். ஆனால் இந்த வழிமுறைகளைப் பயன் படுத்த திரு. காந்தி அனுமதிக்க மாட்டார் என்பதை தீண்டப்படாத வர்கள் நன்கு அறிவார்கள். அப்படியிருக்கும்போது ‘திரு. காந்தியைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்’ என்று அவர்கள் கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது கூட்டரசு, அடிமைத் தனம் எனும் இரண்டு பிரச்சினைகளின்பால் ஜனபதி லிங்கன் கடைப்பிடித்த போக்கை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுகூருவது பொருத்தமாக இருக்கும். 1862ல் திரு. ஹோரேஸ் கிரிலேக்கும் ஜனாதிபதி லிங்கனுக்கும் இடையே நடைபெற்ற கடிதப் போக்கு வரத்து (ஆப்பிரகாம் லிங்கன் நூல்கள், தொகுதி XI, பக்கங்கள் XII-XIII )இந்தப் போக்கை துலாம்பரமாக வெளிப்படுத்துகிறது. “இரண்டு கோடி மக்களின் வேண்டுகோள்” என்று தலைப்பிட்ட அந்தக் கடிதத்தில் திரு. கிரிலே குறிப்பிட்டிருந்ததாவது:

”திரு. ஜனாதிபதி அவர்கள், கலகத்தை ஒடுக்குவதற்கு  மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளும், அதனைக்  கிளறிவிடும் இலட்சியத்தை ஆதரிப்பதும் பகுத்தறிவுக்கு  ஒவ்வாதவையும் வீணானவையுமாகும் என்பதை உணராத  தன்னலமற்ற, திடஉறுதி கொண்ட, மதிநுடபம் வாய்ந்த  கூட்டரசு ஆதரவாளர் எவருமே இந்த விரிந்துபரந்த உலகில்  இல்லை எனக் கூறலாம்.”

 இந்தக் கடிதத்திற்கு ஜனாதிபதி லிங்கன் பின்கண்டவாறு பதிலளித்தார்:

“அடிமைத்தனதத்தைப் பாதுகாத்தாலொழிய கூட்டரசைப் பாதுகாக்க மாட்டோம் என்று கூறுபவர்கள் இருந்தால் அவர்கள் கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை.

“அடிமைத்தனத்தை அழித்தொழித்தாலொழிய கூட்டரசைப் பாதுகாக்க மாட்டோம் என்று கூறுபவர்கள் இருந்தால் அவர்கள் கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை.

“எனது தலையாய் லட்சியம் கூட்டரசைப் பாதுகாப்பதே அல்லாமல் அடிமைத்தனத்தைப் பாதுகாப்பதோ அல்லது அழிப் பதோ அல்ல.

“எந்த ஓர் அடிமையையும் விடுவிக்காமல் கூட்டரசைப் பாதுகாக்க முடியுமானால் அதனைச் செய்வேன். எல்லா அடிமை களையும் விடுதலை செய்து குடியரசைப் பாதுகாக்க முடியுமானால் அதனைச் செய்வே – ஒரு சிலரை மட்டுமே விடுவித்து மற்றவர் களை நிர்க்கதியாகி விட்டு விட்டு குடியரசைப் பாதுகாக்க முடியு மானால் அதனையும் தாராளமாகச் செய்வேன்.”

நீக்ரோக்களின் அடிமைத்தனத்துக்கும் கூட்டரசுப் பிரச் சினைக்குமுள்ள உறவு பற்றி ஜனாதிபதி லிங்கன் கொண்டிருந்த கருத்துகள் இவை. நீக்ரோக்களுக்கு விமோசனம் அளித்தவர் என்று புகழ்பெற்றா ஒருவரைப் பற்றி இவை மிகவும் வேறுபட்டதோரு கண் ணோட்டத்தை அளிக்கின்றன. உண்மையைக் கூறுவதானால் நீக் ரோக்களின் விடுதலையை ஒரு தவிர்க்க முடியாத அத்தியாவசிய மாக அவர் கருதவில்லை.

புகழ் பெற்ற கெட்டிஸ்பெர்க் பேருரையை ஆற்றியவர் அரசாங்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறும் போது மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்கள் அரசாங்கமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இதையே கூட்டரசு இருக்கு மானால் வெள்ளையர்களால் வெள்ளையருக்காக நடத்தப்படும் கறுப்பர் அரசாங்கம் என்று மாற்றிக் கூறலாம் போலிருக்கிறது.

சுய ராஜ்யம் மற்றும் தீண்டப்படாதவர்கள் சம்பந்தமாக காந்தி மேற் கொண்டிருக்கும் போக்கு நீக்ரோக்கள், கூட்டரசு ஆகிய இவ் இரு பிரச்சினைகள் சம்பந்தமாக ஜனாதிபதி லிங்கன் கடைப்பிடித்தப் போக்கை ஒத்ததாக இருக்கிறது. ஜனாதிபதி லிங்கன் எவ்வாறு கூட் டரசை விரும்புகிறாரோ அவ்வாறே திரு. காந்தி சுயராஜ்யத்தை விரும்புகிறார். ஆனால் இந்து சமூக அமைப்பைச் சீர்குலைப்பதை யும், தீண்டப்படாதவர்களின் விமோசனத்தையும் விலையாகக் கொடுத்து சுயராஜ்யத்தைப் பெற விரும்பவில்லை. ஆனால் அதே சமயம் ஜனாதிபதி லிங்கனோ கூட்டரசைப் பாதுகாப்பதற்கு அவசிய மாயின் நீக்ரோ அடிமைகளை விடுதலை செய்யத் தயாராக இருக்கிறார்.

ஆனால் திரு. காந்தியின் போக்கு இதற்கு முற்றிலும் மாறு பட்டதாக இருக்கிறது. சுயராஜ்யம் பெறுவதற்கு அத்தியாவசியமான தாக இருந்தால்கூட தீண்டப்படாதவர்கள் அரசியல் விடுதலை பெறு வதை அவர் விரும்பவில்லை. தீண்டப்படாதவர்களுக்கு அரசியல் சுதந்திரம் வழங்குவதை விலையாகக் கொடுப்பத்தைவிட சுயராஜ்யம் மாண்டுமடிந்து போவதே மேல் என்பதுதான் திரு. காந்தியி மனப் போக்கு. இதெல்லாம் நடந்து போன கடந்தகால விஷயம், புனா ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுவிட்ட நிலையில் திரு. காந்தி தீண்டப் படாதவர்களில் அரசியல் கோரிக்கைகளை எதிர்க்க முடியாது, புனா ஒப்பந்தத்தின் உடந்தையாளர்களில் ஒருவர் என்ற முறையில், தீண்டப்படாதவர்கள் இந்தியாவின் தேசிய வாழ்க்கையில் ஒரு தனி சக்தியினர் என்பதை திரு. காந்தி ஏற்றுக் கொண்டிருக்க வேண்டியதே நியாயம். ஆனால் அவ்வாறு நிகழவில்லை.

புனா ஒப்பந்தம் திரு. காந்தியின் மனப்போக்கில் எத்தகைய மாறுதலையும் ஏற்படுத்த வில்லை; அரசியல் பாதுகாப்புகள் சம்பந்தமான தீண்டப்படாதவர் களின் கோரிக்கைகள் குறித்து வட்டமேசை மாநாட்டிலும், அதற்கு முன்னரும் பின்பற்றிய அதே போக்கையே இப்போதும் அவர் கடைப்பிடிக்கிறார் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. தீண்டப் படாதவர்கள் இந்தியாவின் தேசிய வாழ்வில் ஒரு தனி சக்தியினர், அரசியலமைப்புச் சட்டத்துக்கு அவர்களது ஒப்புதல் தேவை என்று 1940 இல் பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்தபோது திரு. காந்தி அதனை ஆட்சேபித்தார். வைசிராய் லின்லித்கோ, தீண்டப்படாதவர்களை ஒரு தனி சக்தியினராகக் குறிப்பிட்டு அரசியலமைப்புச் சட்டத் துக்கு அவர்களது ஒப்புதல் வேண்டும் என்று கூறியபோது திரு. காந்தி பின்கண்டவாறு குறிப்பிட்டார்:

“சுதேச மன்னர்களுடனும், முஸ்லீம் லீகுடனும், ஷெட்  யூல்டு வகுப்பினருடனும் கூட காங்கிரஸ் உடன்பாட்டுக்கு  வர வேண்டுமென்று வைசியராயும், பிரிட்டிஷ் ராஜாங்க  மந்திரியும் கூறியிருப்பது சுதந்திரம் பெறுவதற்கு இந்தியா  வுக்குள்ள உரிமையை பிரிட்டன் அங்கீகரிப்பதற்கு ஒரு  தடையாக இருக்கிறது. இது காங்கிரசுக்கும் மக்களுக்கும்  இழைக்கப்படும் பெருத்த அநீதியாகும்.”

“ஷெட்யூல்டு வகுப்பினரை இந்த சர்ச்சையில் சிக்க வைத்திருப்பது பிரிட்டிஷ் அரசாங்கம் எதார்த்தத்தைக் காண மறுப்பதையே காட்டுகிறது. இவர்கள் காங்கிரசின் விசேட அக்கறைக்குரியவர்கள், பிரிட்டிஷ் அரசாங்கத்தைவிட இவர் களுடைய நலன்களை மிகச் சிறப்பாகப் பாதுகாக்கும் ஆற்றல் காங்கிரசுக்கு உண்டு என்பதை அவர்கள் அறிவார் கள், தவிரவும், ஷெட்யூல்டு வகுப்பினர் சாதி இந்துக்களைப் போலவே மிகப் பல சாதியினராகப் பிரிந்துள்ளனர். எந்த ஒரு ஷெட்யூலடு வகுப்பு உறுப்பினரும் அவர்களது எண் ணற்ற சாதியினரை உண்மையிலேயே பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறமுடியாது.”

 இவ்வாறு திரு. காந்தி முன்வைத்த வாதம் உப்பு சப்பற்றது. ஷெட்யூலடு வகுப்பினர்களுக்கு வைசிராய் ஒதுக்கியிருக்கும் பாத்தி ரத்தை எதிர்க்கும் அவசரத்தில் திரு. காந்தி ஒரு விஷயத்தை மறந்து விட்டார்: ஷெட்யூல்டு வகுப்பினர்கள் மிகப் பல சாதிகளாகப் பிரிந் துள்ளனர், இவற்றில் எந்த ஒரு சாதியும் அவர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று வாதிடும் திரு. காந்தி முஸ்லீம் களும் இந்தியக் கிறித்தவர்களும் இவ்வாறே பிரிந்துள்ளனர் என் பதை மறந்து விட்டார்.

முஸ்லீம்கள் (1) சன்னிகள், (2) ஷியாக்கள், (3) மோமின்கள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிந்துள்ளனர். இவை ஒவ்வொன்றிலும் ஏராளமான சாதிகள் அடங்கியுள்ளன; இவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவார்களே தவிர தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்ள மாட்டார்கள். இதே போன்ற இந்தியக் கிறித் தவர்கள் (1) கத்தோலிக்கர்கள், (2) புராட்டஸ்டென்டுகள் என்று பிரிந்திருக்கிறார்கள்.

இது மட்டுமல்ல, கத்தோலிக்கர்கள் (1) சாதி கிறித்தவர்கள், (2) சாதி கிறித்தவர்கள் அல்லாதவர்கள் என இரு உபபிரிவுகளாகப் பிரிந்துள்ளனர். கத்தோலிக்கர்களுக்கும் புராட்டல் டென்டுகளுக்கும் இடையே உள்ள பல சாதியினர் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை; சாதி கிறித்தவர்களும் சாதி கிறித்தவர் கள் அல்லாதவர்களும் ஒன்றாக உணவு அருந்தாதது மட்டுமன்றி, ஒரே கிறித்தவத் திருக்கோவிலுக்கும் செல்லுவதில்லை. திரு. காந்தி புனா ஒப்பந்தம் ஏற்பட ஓர் உடந்தையாளராக இருந்தபோதிலும் ஷெட்யூல்டு வகுப்பினருக்கு ஒரு தனி இன் அந்தஸ்து அளிக்கப்படு வதை அனுமதிப்பதில்லை என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்;

இந்த எதிர்ப்புப் போக்கை நியாயப்படுத்த எத்தகைய வாதத்தை யும் முன்வைக்கத் தயாராக இருக்கிறார்.

சுருக்கமாகக் கூறினால், தீண்டப்படாதவர்களைப் பொறுத்த வரையில் திரு. காந்தி இன்னும் போராடும் நோக்குடனேயே இருந்து வருகிறார். அவர் மீண்டும் தொல்லை கொடுக்க முனையக்கூடும். அவரை நம்புவதற்குரிய காலம் இன்னும் வரவில்லை. தீண்டப் படாதவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான மிகச் சிறந்த வழி ‘திரு. காந்தியைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்’ என்னும் போக்கை மிக உறுதியாகக் கடைப்பிடிப்பதுதான்.

  ("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, இயல் 10)