"இந்து சமூகத்தில் உள்ள தீண்டாமை என்னும் கொடுமையை அடியோடு ஒழித்தாலல்லது இந்தியாவுக்கு சுயராஜ்யம் கிடைக்காது"
"தீண்டாமை ஒழிப்பதற்கு முன் சுயராஜ்ஜியம் கிடைத்தாலும் நிலைக்காது"
"தீண்டாமை ஒழிக்கப்படாததற்கு முன் சுயராஜ்ஜியம் கிடைப்பதாய் இருந்தாலும் அதை நான் ஏற்க மாட்டேன்"
என்பதான இந்த வாக்கியங்களும் மற்றும் இவை போன்ற அனேக வாக்கியங்களும் தோழர் காந்தியாரின் 1920ம் வருஷத்திய "அருள்" மொழிகளாகும்.
இந்த மொழிகள் நாளுக்கு நாள் பலம் பெற்று இன்று தீண்டாமை ஒழிப்புக்குப் பொது மக்களிடம் 20, 30 லட்சக்கணக்கில் ரூபாய்கள் வசூல் செய்து அவற்றைக் கொண்டு ஹரிஜன சேவை என்னும் பேரால் ஒரு "தனி இயக்கத்தையும்" ஏற்படுத்தி வேலைகள் நடத்தப்பட்டு வருவதாக காங்கிரஸ்காரர்கள் சொல்லுகின்றார்கள்.
மற்றும் தோழர் காந்தியார் அரசியல் கைதியாய் சிறையில் இருக்கும் போதும் தனக்குத் தீண்டாமை விலக்கு வேலை செய்ய தாராளமாய் இடம் கொடுக்காவிட்டால் தான் பட்டினி கிடந்து சாகப் போவதாய் சர்க்காருக்குத் தெரிவித்து அதனால் பட்டினியும் கிடந்து அதற்காக விடுதலையும் பெற்று இருக்கிறார்.
ஆகவே காங்கிரசானது தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கு ஆக மிகவும் பாடுபடுவதாகவும், தீண்டாமை விலக்கை மிகவும் முக்கியமாய்க் கருதி இருப்பதாகவும் உலகம் முழுவதும் நம்பும்படியாகச் செய்து கொண்டது.
தோழர் காந்தியாரும் தீண்டாமை விலக்கில் மிகக் கவலையுடன் இருப்பதாகவும் காட்டிக் கொண்டு வந்திருக்கிறார்.
இவைகள் எல்லாம் பேச்சிலும் எழுத்திலும் மாத்திரம் தான் இருந்து வருகின்றனவே ஒழிய காரியத்தில் இல்லை என்பதை பல உதாரணங்களால் சமீப காலமாக பொதுமக்கள் உணர்ந்து வருகிறார்கள் என்பது யாவரும் ஒப்புக் கொள்ளாததாகும்.
வட்டமேஜை மகாநாட்டில் தோழர் காந்தியார் "எனது உயிர் போனாலும் தீண்டப்படாதார் என்பவர்களுக்குப் பிரதிநிதித்துவ ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கவோ பிரித்துக் கொடுக்கவோ சம்மதிக்க மாட்டேன்" என்று சொன்னார். அதே சமயத்தில் "முகமதியர்களுக்குத் தனித் தொகுதியால் தெரிந்தெடுக்கும் சுதந்திரம் கொண்ட பிரதிநிதித்துவமும் ஸ்தானமும் கொடுக்க சம்மதிக்கிறேன்" என்றும் சொன்னார். இப்படிச் சொன்னதானது தோழர் காந்தியார் விஷயங்களை உணர்ந்து பார்க்காமலும், அனுபவங்களை அறியாமலும் சொன்னார் என்று யாரும் சொல்லிவிட முடியாது.
இந்தியாவில் இந்துக்கள் என்று சொல்லப்பட்ட சமூகம் சுமார் 22 கோடி மக்களைக் கொண்டதாய் இருக்குமானால் அதில் 3லீ ல் ஒரு பங்கு மக்கள் தீண்டப்படாதவர்களாய் இருக்கிறார்கள் என்பதும், அவர்களின் ஜனத்தொகை 100க்கு 30 வீதம் பிரதிநிதித்துவம் பெற அருகதை இருந்தாலும் மொத்த பிரதிநிதித்துவங்களில் 100க்கு இருவர், ஒருவர்கூட தனித் தொகுதி இல்லாமலும் ஒதுக்கி வைக்காமலும் சர்க்காராரே பார்த்து, தயவு வைத்து அவர்களுக்கென்றே ஒன்று இரண்டு ஸ்தானங்கள் நியமனம் மூலம் வழங்காமலும், அவர்கள் (தீண்டப்படாதவர்கள்) எந்தப் பிரதிநிதித் துவத்தையும், பொது ஜனங்களின் தயவாலோ, பொதுத் தேர்தல் மூலமாகவோ அடையவில்லை என்பதை நன்றாய்த் தெரிந்து இருந்தும் அவர்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் தனித் தொகுதி மூலமோ, ஸ்தானங்கள் ஒதுக்குவது மூலமோ கூடவே கூடாது என்று சொன்னார் என்றால் இதைத் தெரியாமல் சொன்னார் என்று யாரும் சொல்லிவிட முடியாது.
ஆகவே காந்தியார் மேல்கண்டபடி சொன்ன பிறகு கடைசியாக அரசாங்கத்தார் ஏதோ சில பிரதிநிதித்துவங்கள் கொடுக்க சம்மதித்த பிறகு அதையும் ஒழிக்க தோழர் காந்தியார் பட்டினி கிடந்து அதை ஒழித்து பிறகு ஏதோ ஒரு வகையில் தக்க பயனற்ற முறையில் பிரதிநிதித்துவம் அடைய முடிந்தது என்றே வைத்துக் கொள்ளலாம்.
எனவே தீண்டாமை ஒழிக்கப்படாமல் சுயராஜ்யம் பெற முடியாது என்றும், மற்றும் என்ன என்னமோ சொன்னவர்கள் தீண்டாதவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும்படியாவது ஏதாவது செய்தார்களா என்பதை மேல் கண்ட சம்பவங்களைக் கொண்டு பார்த்தால் அதன் தன்மை விளங்காமல் போகாது.
அரசியலில்தான் அவர்கள் நிலை இந்த கதியானால், சமூக இயலில் அவர்களுக்கு காங்கிரஸ்காரர்கள் செய்த மரியாதை என்ன என்று பார்ப்போம்.
தீண்டாதவர்களுக்கு ஆக வழி நடைப்பாதை விஷயங்களில் இருந்துவரும் குறைகள் சர்க்கார் மூலமாய் ஏதாவது ஒன்று இரண்டு தீர்க்கப்பட்டிருக்கலாம். அல்லது ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் ஏதாவது செய்திருக்கலாம். அல்லது தீண்டப்படாத மக்கள் என்பவர்கள் தாங்களே முயற்சி செய்து சிறிது சிறிதளவாவது தீர்த்துக் கொள்ளப்பட்டிருக்கலாம் என்று சொல்லலாமே ஒழிய காந்தியாராலோ காங்கிரசுக்காரர்களாலோ ஒரு சிறு தடையையாவது நிவர்த்திக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்வதற்கு இன்று வரை தக்க ஆதாரம் ஏதும் இல்லை.
அன்னியத்துணி மறியல், கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு, உப்புக் காய்ச்சுவதற்கு முயற்சி என்கின்ற காரியங்கள் மாத்திரம் வெகு வேகமாகவும், வெகு தியாகமாகவும் நடந்ததே ஒழிய மற்றபடி தீண்டப்படா தவர்களுக்கு தெருவு, குளம், பள்ளிக்கூடம், சத்திரம், கோவில் முதலியவைகள் அனுமதிக்கப்படும் என்பதற்காக பொது மக்களிடம் பணம் வசூல் செய்து கொண்டதே தவிர மேல் கொண்டு ஒரு காரியமும் அவர்களுக்காக நடந்ததாகச் சொல்ல முடியவில்லை.
மற்றும் ஏதாவது நடந்ததாகச் சொல்லக் கூடும் என்றாலோ அது தீண்டப்படாதவர்களின் அசுத்தங்களையும், தீண்டாமை நிலை நிற்க வேண்டிய அவசியத்துக்கு காரணங்களையும் மக்கள் அறியும்படியாக செய்தார்கள் என்றுதான் சொல்லலாம். எப்படியெனில் தீண்டப்படாதவர் களுக்கு சோப்பு கொடுப்பது, எண்ணை சீயக்காய் கொடுப்பது முதலிய காரியங்கள் செய்வதன் மூலம், "தீண்டப்படாதவர்கள் அசுத்தமானவர்கள், முதலில் அவ்வசுத்தங்களை நீக்க வேண்டியது அவசியம்" என்று ஜனங்கள் நினைக்கும்படியாக அவர்கள் காட்டிக் கொடுத்துக் கொண்டு வந்தார்கள்.
அசுத்தமும், அழுக்கும் இன்று தீண்டப்படாதவர்களிடம் மாத்திரம் இருக்கின்றது என்று யாரும் சொல்லிவிட முடியாது. அன்றியும் தீண்டப் படாதவர்களுக்கு சோப்பும், எண்ணை சீயக்காயும் கொடுப்பது சுகாதார வேலையாகுமே ஒழிய, ஒரு நாளும் தீண்டாமை விலக்கு வேலை ஆகு மென்று சொல்ல முடியவே முடியாது.
நிற்க இந்த மாகாணத்தைப் பொருத்த வரையில் தீண்டப்படாத சமூகத்தாருக்கு ஜஸ்டிஸ் கட்சியாரும், சர்க்காரும் எவ்வளவு தூரம் நன்மை செய்ய முடியுமோ அவ்வளவும் செய்திருக்கிறார்கள்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் தீண்டப்படாதவர்கள் கல்வி விஷயத்தைப் பிரத்தியேகமாய் கவனிக்க ஏற்பாடு செய்தார்கள். அவர்களுக்கு குடியிருக்க நிர்பந்தமான இடங்களில் இடவசதி செய்து கொடுத்தார்கள். அவர்களுக்கு சிற்சில இடங்களில் கூடிய வரையில் பூமி அடமானமும் செய்து கொடுத்தார்கள்.
அவர்களுக்கு உத்தியோகங்களிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும் பிரதிநிதித்துவத்துக்கு இடம் ஒதுக்கி வைத்து அமரச் செய்தார்கள்.
இவ்வளவும் செய்தது மாத்திரம் அல்லாமல் பொது ரஸ்த்தா, கிணறு, குளம், குட்டை, மார்கட்டு, கோர்ட்டு ஸ்தலங்கள் ஆகிய எல்லாவற்றிலும் மற்றப் பிரஜைகளுக்கு உள்ள சகல சுதந்திரங்களையும் சட்டபூர்வமாய் ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
"பொதுவாக குளம், கிணறு, ரஸ்தா, மார்க்கட்டு ஆகியவைகளில் தீண்டப்படாதவர்கள் என்பவர்கள் புழங்குவதை யாராவது தடுத்தால் அவர்களுக்கு 100 ரூ அபராதம் விதிக்கப்படும்" என்று கூட சட்டம் செய்து, அதை இன்று லோகல் போர்ட் ஆக்டிலும், முனிசிபல் ஆக்டிலும், பொது மார்க்கட்டு ஆக்டிலும் விதியாக ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மத சம்பந்தமான ஸ்தலங்கள் என்பவைகள் அதாவது கோவில்கள், மடங்கள் என்பவைகள் தவிர மற்றவைகளில் எல்லாம் தீண்டப்படாதவர்களுக்கும், மற்றவர்களைப் போலவே உரிமை உண்டு என்று செய்து விட்டார்கள்.
ஆகவே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரஜா உரிமையில் தீண்டப் படாதவர்கள் என்பவர்களுக்கு எவ்வித வித்தியாசமும், அசௌகரியமும் இல்லாமல் சட்டபூர்வமாய் செய்யப்பட்டுவிட்டது.
ஆனால், இந்துக்கள் என்பவர்களுக்கு மாத்திரம் உள்ள பிரஜா உரிமையில் தீண்டப்படாதவர்களுக்கு உள்ள குறை சிறிதும் நீக்கப்பட வில்லை என்பதோடு அரசாங்கத்தாரோ, மற்றவர்களோ முயற்சிப்பதற்கும் காங்கிரஸ்காரர்களும், காந்தியாரும் உதவி செய்யவில்லை" என்பது மாத்திரமல்லாமல் தங்களால் கூடுமான அளவு தடையும் செய்து வந்திருக்கிறார்கள், வருகிறார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது.
காங்கிரஸ்காரர்கள் கராச்சியில் செய்த பிரஜா உரிமைத் தீர்மானத்தில் அதுவரை சர்க்கார் தீண்டப்படாதவர்களுக்குச் சட்ட ரூபமாக, ஏற்கனவே செய்த காரியங்கள் எவையோ அவற்றை மாத்திரம் அனுமதித்து விட்டு கோயில், மடம், சத்திரம் முதலிய காரியங்களைப் பற்றி ஒன்றும் பேசாமல் விட்டுவிட்டு "கோவில் இதில் சேர்ந்ததல்ல" "பழைய பழக்கத்துக்கு விரோதமாய் எதுவும் செய்யப்பட மாட்டாது" என்றும் சொல்லி வாக்குறுதி கொடுத்து விட்டார்கள்.
அது மாத்திரமல்லாமல் கோயில் பிரவேச விஷயமாய் சட்டசபைக்கு வந்த தீர்மானங்களையும் ஒழித்து இப்பொழுது காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாய் இருக்கும்போது இனி யாரும் அப்படிப்பட்ட தீர்மானங்கள் கொண்டு வரக் கூடாதென்றும், மற்றவர்கள் கொண்டு வந்தாலும் ஆதரிக்கக் கூடாதென்றும் அத் தீர்மானங்களுக்கும் ஜனப் பிரதிநிதிகளுக்கும் இப்போது சம்பந்தமில்லை என்றும் சொல்லி விட்டார்கள்.
ஆகவே காங்கிரஸ்காரர்கள் தீண்டாமை ஒழிப்பு விஷயமாய் பொது ஜனங்களிடம் இருந்து பணங்களை வசூல் செய்து எலக்ஷன் பிரசாரத்துக்குச் செலவு செய்து விட்டு சில காங்கிரஸ் தொண்டர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதல்லாமல் தீண்டாதவர்களுக்கு ஆக இன்ன காரியம் செய்தார்கள் என்று சுட்டிக் காட்டக் கூடிய யோக்கியதையில் அவர்கள் இல்லை என்று தைரியமாகக் கூறலாம்.
தவிர காங்கிரஸ்காரர்களுக்கு தீண்டப்படாதவர்கள் விஷயத்தில் வந்த "அபிமானம்" எல்லாம் ஜஸ்டிஸ் கக்ஷியார்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேழ்க்க ஆரம்பித்த பிறகும், ஜஸ்டிஸ் கக்ஷிக்காரர்கள் தீண்டப்படாதவர்களுக்கு பல நன்மைகள் செய்யப்பட்ட பிரகும் முன் வந்த பிறகும் தானே ஒழிய அதற்கு முன் எந்தக் காங்கிரசாவது எந்தக் காங்கிரஸ் தலைவர்களாவது இவர்கள் விஷயமாய் ஏதாவது காரியம் செய்திருக் கிறதாகவாவது அல்லது செய்ய முயற்சித்ததாகவாவது ஆதாரம் இருக்கிறதா என்று கவனித்துப் பார்த்தால் இதன் உண்மை விளங்காமல் போகாது.
ஜஸ்டிஸ்காரர்கள் கேட்ட சுதந்திரத்தில் அதை தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கும் வழங்கும் நிபந்தனையையும் காட்டித்தான் கேட்டார்களே ஒழிய அவர்களை விலக்கி வைத்துக் கேட்கவில்லை. அவர்கள் கேட்டதை கொடுக்க ஒப்புக் கொண்டார்கள் என்பதோடல்லாமல் கொடுக்கும்படி சர்க்காருக்கும் சிபார்சும் செய்தார்கள்.
ஆனால் காங்கிரஸ்காரர்கள் அவர்கள் கேட்டதை கொடுக்க ஒப்புக் கொள்ளவில்லை என்பதோடு சர்க்காராரும் கொடுக்கக் கூடாது என்பதற்கு தங்களாலான தடையையும் செய்தார்கள்.
சமூக விஷயத்தில்
மற்றும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் தாங்கள் எங்கு மகாநாடு கூட்டின காலங்களிலும் தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டப்படாதவர்கள் என்பவர்களை எல்லாம் சமமாக நடத்தி சமபந்தி சாப்பாடாகவே நடத்தி வந்திருக்கிறார்களே ஒழிய ஒரு இடத்திலாவது ஒரு மகாநாட்டிலாவது அவர்களை ஒதுக்கி வைத்தோ, வெளியில் வைத்தோ சாப்பாடு போட்டு இழிவாய் நடத்த வில்லை என்பது யாவரும் அறிந்ததாகும்.
தீண்டாதவர்கள் என்பவர்களை சரி சமமாக நடத்த வேண்டும் என்பதற்கு ஆகவே ஜஸ்டிஸ் கட்சி ஸ்தாபனங்கள் எங்கு எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் அடிக்கடி சமபந்தி போஜனம் என்று ஏற்பாடு செய்தும் தீண்டப்படாதவர்கள் என்பவர்களைக் கொண்டே பக்குவம் செய்தும் பரிமாரச் செய்தும் விருந்து நடத்தி வருவதும் யாவரும் அறிந்ததாகும்.
காங்கிரஸ்
ஆனால் காங்கிரசுக்காரர்கள் எங்கு மகாநாடு நடத்தினாலும் நாளது வரை பார்ப்பனர்களுக்கு வேறு இடம், பார்ப்பனரல்லாதார்களுக்கு வேறு இடம், தீண்டப்படாதவர்களுக்கு வேறு இடம் என்பதாகப் பிரித்து பிரித்து ஒதுக்கி வைத்தும் வெளியில் வைத்துமே சாப்பாடு போட்டும் வந்திருக்கிறார்கள்.
காங்கிரசின் பண்டில் இருந்து "அதி தீவிர தேச பக்தர்" வி.வி.எஸ். அய்யரால் நடத்தப்பட்ட குருகுலம் என்பது ஒழிக்கப்பட்டதற்கு காரணம் என்ன என்று பார்த்தால் இதன் உண்மை விளங்கும். இது நடந்த பிறகும் நாட்டில் சமூக விஷயமாய் புது கிளர்ச்சிகள் எங்கும் நடந்து வருவதைப் பார்த்த பிறகும், தீண்டப்படாதவர்களது தனித் தொகுதிப் பிரதிநிதித்துவத்தை ஒழிப்பதில் இனி அவர்களை சமமாய் நடத்துகிறோம் என்று வாக்குக் கொடுத்து அதை ஒரு நிபந்தனையாகச் சொன்ன பிறகும், இப்போது 1935ம் வருஷத்தில் காங்கிரஸ்காரர்கள் தீண்டப்படாதவர்கள் விஷயத்தில் அரசியல் சம்பந்தமாக நடைபெறும் காரியங்களிலேயே எப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பொதுஜன கவனத்துக்கு கொண்டுவர ஆசைப்படுகிறோம். அதற்காகவே இதை எடுத்துக் காட்டுகிறோம்.
சன்னாசி
அதாவது சென்ற மாதம் திருச்சி ஜில்லா பெரம்பலூர் தாலூக்கா எசனை என்னும் ஊரில் நடந்த பிரம்பலூர் தாலூக்கா அரசியல் மகாநாட்டில் மகாநாடு நடத்தி வைப்பவர்களும், காங்கிரஸ் சமதர்மத் தொண்டர்களும் ஆனவர்கள் "ஹரிஜன" சமூகத்தைச் சேர்ந்தவரும் "ஹரிஜன" வேலைக்கு நியமிக்கப்பட்ட ஒரு மேல் பார்வை அதிகாரியுமான தோழர் சன்யாசி என்பவர் விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை பொது ஜனங்கள் கவனிக்க வேண்டுகிறோம்.
இது விஷயமாய் தோழர் சன்யாசி அவர்களால் பத்திரிக்கைகளுக்கு எழுதப்பட்ட "ஒரு பகிரங்கக் கடிதம்" என்பதைப் பார்த்தே அதை ஆதாரமாய் வைத்தே அதற்கு நாளது வரை சுமார் 20 நாளாக அந்த மகாநாட்டுக்காரரோ, ஹரிஜன சேவைக்கமிட்டித் தலைவர்களோ, காங்கிரஸ் தலைவர்களோ யாதொரு பதிலும் சொல்லாமல் "மாம்சம் பறிகொடுத்த பார்ப்பனத்தி" போல் மௌனமாய் இருப்பதை அறிந்தே இதைப் பற்றி எழுதுகிறோம்.
தோழர் சன்யாசி அவர்கள் இம்மகாநாட்டுக்கு அழைக்கப்பட்ட போதே மகாநாடு நடத்துவதில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும், மகாநாட்டிற்காக தோழர் சன்னியாசியை அழைக்க வந்தவருமான தோழர் குரும்பலூர் நடேசய்யர் என்னும் பார்ப்பனர் ஒருவர் தோழர் சன்னியாசியை மகாநாட்டுக்கு அழைத்தபோது தோழர் சன்யாசி சாப்பாடு விஷயத்தில் மக்களை எப்படி நடத்துவீர்கள் என்று கேட்டதில் "சமபந்தி முறையைத் தழுவி சாப்பாட்டு வசதி செய்யப்பட்டிருக்கிறது" என்று சொன்னாராம்.
ஆனால் மகாநாட்டு காலை நிகழ்ச்சிகள் நடந்து பகல் சாப்பாட்டிற்கு எல்லோரும் புறப்படும்போது கதர் கடையில் உட்கார்ந்திருந்த தோழர் சன்யாசியை மகாநாட்டுக் காரியதரிசிகளில் ஒருவரான தோழர் நடராஜ பிள்ளை என்கின்ற பார்ப்பனரல்லாதார் வந்து "சமபந்தி போஜனம் நடக்கப் போகின்றது உங்களையும் கூட உட்கார வைத்து சாப்பிடப் போகின்றோம் வாருங்கள்" என்று அழைத்துப் போனாராம்.
அங்கு சாப்பாட்டு விடுதிக்குள் போய் பார்த்ததும் ஏற்கனவே இரண்டு பந்தி நடந்து விட்டதாகவும் சற்று பொருக்க வேண்டும்" என்றும் சொல்லி முன் குறிப்பிடப்பட்ட தோழர் குரும்பலூர் நடேசய்யர் என்பவர் அவசரமாக ஓடி வந்து "உமக்கு சாப்பிட இடம் வேறாக ஏற்படுத்தியிருக்கிறது" என்று சொல்லி வெளியில் அழைத்துப் போய் நாலைந்து வீட்டுக்கு அப்புறம் ஒரு வீட்டு தாழ்வாரத்தில் உட்கார வைத்து விட்டுப் போய்ப் பின் ஒரு மணி நேரம் பொருத்து ஒரு தாம்பாளத்தில் இலை போட்டு அதில் சோறு குழம்பு எல்லாம் சேர்த்து வைத்து அந்த தாழ்வாரத்தை விட்டு வெளியில் அழைத்து திறந்த வெளியில் இலையை இழுத்து விட்டு உட்கார்ந்து சாப்பிடும்படி சொன்னாராம்.
முதல் நாள் இரவு சாப்பாடு சாப்பிட்டதோடு காலை ஆகாரமும் இல்லாது இருந்த தோழர் சன்யாசி அதிக பசியாய் இருந்தும் அவர் தன்னை இந்தப்படி அவமானமாகவும், இழிவாகவும் நடத்திய கொடுமையை எண்ணி தனக்கு பசியில்லையென்றும், சாப்பாடு வேண்டியதில்லை என்றும், சாப்பிட்டாய் விட்டதாகவும் சொல்லி விட்டு வந்து மகாநாட்டின் மற்ற நடவடிக்கைகளையும் கவனித்து விட்டு இரவு 12லீ மணிக்கு திருச்சிக்கு வந்து சாப்பிட்டாராம்.
(இந்த சேதிகள் 7ந் தேதி "நகர தூதன்" பத்திரிகையில் காணப் படுவதாகும்.)
ஆகவே பார்ப்பனர்களின் மனிதாபிமானமும், சமத்துவத் தன்மையும், காங்கிரசின் தீண்டாமை ஒழிக்கும் தத்துவமும், ஹரிஜன வேலையின் உண்மையும் எப்படி இருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
தோழர் சன்யாசி அவர்களின் பகிரங்கக் கடிதத்தில் "நான் 1916ம் வருஷ முதல் 1932ம் வருஷ வரை ஒவ்வொரு ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டுக்கும் சென்று இருக்கின்றேன். அவைகளில் இந்த மாதிரி ஒரு இடத்திலும் நடந்ததில்லை. காங்கிரஸ் கட்சி மகாநாட்டுக்கு போனது இதுதான் முதல் தடவை" என்று கூறுகின்றார்.
பார்ப்பனர்கள் காங்கிரசைப் பற்றிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதும், காந்தியாரை மகாத்மாவாக்கி பாமர மக்களுக்கு விளம்பரப்படுத்துவதும், தங்கள் ஆதிக்கத்தைப் பலப்படுத்திக் கொள்ளவும் மற்ற மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தவுமேதான் என்று இந்த 10 வருஷ காலமாக நாம் கூப்பாடு போட்டுக் கொண்டு வருவதும் அது விஷயமாய் ஒவ்வொரு நாளும் பேசி வருவதும், எழுதி வருவதும் ஒரு வார்த்தையாவது, ஒரு எழுத்தாவது பிசகுபட்டிருக்கின்றதா என்பதைப் பிரத்தியேகமாய் அலசிப் பார்க்க வாசகர்களை வேண்டிக் கொள்ளுகிறோம்.
கடைசியாக காங்கிரசுக்காரர் ஜஸ்டிஸ் கட்சியாரை ஒழித்துவிட்டு தாங்கள் தான் ஆதிக்கத்துக்கு வரவேண்டும் என்று சொல்லுவதின் கருத்து என்ன என்பது இப்போதாவது விளங்குகிறதா என்று கேட்க்கின்றோம்.
(குடி அரசு தலையங்கம் 21.07.1935)