கர்நாடகத்தில் நடைபெறவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது பாரதிய ஜனதா கட்சியின் அம்மாநிலத் தலைவர்களில் ஒருவரான ஈஸ்வரப்பா சிமோகா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், உங்கள் வாக்குகள் எங்களுக்கு தேவையில்லை என்றும் ஒரு மத வெறுப்புப் பேச்சைப் பேசி இருக்கிறார். இது இந்தியாவினுடைய அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதாக இருக்கிறது.

அதே கர்நாடகத்தில் இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித்ஷா, கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் கலவரம் வெடிக்கும் என்று பேசியிருக்கிறார். ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் இப்படி மதவெறிப் பேச்சைப் பேசலாமா? இது அரசியல் சாசனத்திற்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் எதிரான பேச்சு.

அதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்காத ஒவ்வொருவரும் தேசத்துரோகிகள் என்றும் பேசியிருக்கிறார் அமித்ஷா. இந்தப் பேச்சு மதவெறியின் உச்சமாக இருக்கிறது. தந்தை பெரியார் சொன்னார், சர்வாதிகாரியின் கடைசி புகலிடம் தேச பக்தி என்று . அதாவது சர்வதிகாரர்களின் கருத்துக்கு எதிராக, மாறாக யாராவது பேசினாலோ, எழுதினாலோ அவர்கள் தேசத் துரோகிகள் என்றும், தேச அபிமானம் இல்லாதவர்கள் என்பதும் பெரியாரின் கூரிய பார்வை.

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் என்பது ஆளும் கட்சியினுடைய லகானை கையிலே வைத்திருப்பது போன்றதாகும். “இடிப்பாரை இல்லாத ஏமாரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்” என்றார் பெரும் புலவர் திருவள்ளுவர்.

கர்நாடகத்தில் தோல்வி பயம் சங்கிகளைப் பற்றிக் கொண்டது. கடந்த 10 ஆண்டுகளாக கர்நாடகத்தில் இஸ்லாமிய மக்களுக்கு நான்கு சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த இட ஒதுக்கீட்டினைத் தரக்கூடாது என்று பேசி கர்நாடகத்தின் ஆளும் பா.ஜ.க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அரசு, இட ஒதுக்கீட்டைத் தடை செய்து உத்தரவு போட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அந்த வழக்கில் நான்கு நாட்களுக்கு முன்னாள் ஒரு தற்காலிகத் தீர்வு வந்திருக்கிறது. அதாவது கர்நாடக சட்டமன்றத் தேர்தல்கள் நிறைவு பெற்று புதிய அரசு அமையும் வரை, குறிப்பாக மே மாதம் முதல் வாரம் வரை இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் எந்த விதமான மாற்றமும் செய்யக் கூடாது என்று இந்த அரசினுடைய தலையில் குட்டு வைத்திருக்கிறது.

இந்திய ஒன்றியம் 2024 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர் நோக்கி நகர்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் மதவெறி இந்துத்துவத்தின் கொடுங்கரத்தில் திரும்பவும் இந்த நாடு சிக்கிவிடக் கூடாது.

நாடும், சமூக நீதியும், மனித நேயமும் காக்கப்பட வேண்டும். பாரதிய ஜனதா கட்சியை 2024 தேர்தலில் வீழ்த்த அனைத்து மாநில எதிர்கட்சிகள் ஒன்று சேர வேண்டும். இதற்கான முயற்சிகளும் தென்படுகிறது.

மதவாதப் பிரிவினையாளர்களின் கைகளில் நாடு போகக் கூடாது, பாசிசத்தை வீழ்த்துவது அனைவரின் கடமை.

- சிற்பி செல்வராசு

Pin It