தேசீயத்தின் பேராலும், காங்கிரசின் பேராலும், இதுகாறும் சென்னை மாகாண பார்ப்பன அரசியல்வாதிகள் செய்து வந்த சூழ்ச்சிகளையும் புரட்டு களையும் நாம் அப்போதைக்கப்போது வெளிப்படுத்தி வந்திருக்கிறோம். இப்பொழுது தோழர் காந்தி முதலியவர்கள் காங்கிரசுக்கு தகனக் கிரியை செய்து பார்ப்பன தேசீயப் புரட்டுக்கு ஆதரவு இல்லாமல் செய்து விட்டதால். ஒரு புதிய ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் பட்டம் பதவிகளை நாடும் காங்கிரஸ் அரசியல் வாதிகளுக்கு ஏற்பட்டு விட்டது. அதற்காகவே தோழர்கள் சத்தியமூர்த்தி, சி.எஸ். முத்துரங்க முதலியார், எம்.பக்தவத்சலம் ஆகியோர்களால் “காங்கிரஸ் சுயராஜீயக் கட்சி” என்ற பேருடன் ஒரு புதிய கட்சி பழயபடி சென்னையில் ஸ்தாபித்திருப்பதாகத் தெரிகிறது.periyar 350 copy“அடுத்த தேர்தலிலே சட்டசபை ஸ்தாபனங்களையும், ஸ்தல ஸ்தாபனங்களையும் கைப்பற்ற முயற்சி செய்வதும், வெள்ளை அறிக்கையையும், சமூக தீர்ப்பையும் எதிர்த்துப் பிரசாரம் செய்வதும், சுயராஜ்யத்துக்காகப் போராடுவதும் இந்தக் கட்சியின் நோக்க” ங்களென்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதை ஊன்றிக் கவனிக்கும் பொழுது இது மக்களுக்கு இப்பொழுது நன்றாய் தெரிந்து போய் விட்டிருக்கிற, பழய பார்ப்பனீய சூழ்ச்சியின் புதிய வேஷமேயன்றி வேறல்ல என்பது தெற்றென விளங்கும். இதுவரையில் இப்பார்ப்பன காங்கிரஸ்வாதிகளும், அவர்களுடன் சேர்ந்து “ஒத்துக்கு மத்தளம் போடும்” சில முடத்தெங்குகளும் செய்து வந்த “தேசியப் பிரசாரத்தாலும்”, “சுயராஜ்யப் போராட்டத்தாலும்” நமது மாகாணத்திலுள்ள பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்ட நஷ்டங்கள் சொல்லுந்தரமல்ல. அப்படியிருக்க, மீண்டும் இவ்வித சூழ்ச்சிக்கு இடம் கொடுக்கலாமா என்று கேட்கிறோம்.

தங்களுடைய சொந்தப் பிழைப்புக்காகவும், தங்கள் சொந்த வகுப்பு நலத்துக்காக அதிகாரத்தையும், அரசாங்க பதவிகளையும் கைப்பற்றுவதற்காகவும் பார்ப்பனர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இவ்வித புரட்டுகளையும் சூழ்ச்சிகளையும் செய்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் சுயநல முன்னேற்றத்தைக் கருதியோ, அல்லது ஏமாளித்தனத்தினாலோ மற்றவர்கள் இவ்வித மோச முயற்சிகளுக்கு ஆதரவு செய்வதைப்பற்றித் தான் மனம் வருந்துகிறோம்.

எனவே இந்தப் புதிய கட்சிக்கு ஆதரவு கொடுக்காமல், அதற்கு “கர்ப்பத்திலே இறந்த குழந்தை”யின் கதியே நேரிடும்படி செய்வது பார்ப்பனரல்லாத மக்களின் கடமையாகும் என்று எச்சரிக்கை செய்கிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.11.1933)