இந்திய மரபில் குறிப்பிட்ட சாதியினரிடம் குற்றேவல் செய்வதற்கு என்றே சில சாதியினர் இருந்தனர். பெரும்பாலும் இந்த சாதிக்காரர்கள் தாங்கள் குற்றேவல் செய்யும் சாதியினரின் ஒரு பிரிவினராக இருந்தனர்; இந்த நடைமுறை இப்போது இல்லை என்றாலும் இதுபற்றிய செய்திகளைத் தொகுக்க முடிகிறது.

நாஞ்சில் நாட்டு வேளாளர்களில் பெரும் நிலச்சுவாந்தார்களின் வீட்டில் நல்லது, கெட்டது காரியங்களை (இறப்பு, திருமணம்) நடத்துபவர்களை விசாரிப்புக்காரன் என்று அழைப்பார்கள். இவர் வேளாளராக இருந்தாலும் அங்கீகாரம் உடையவர்களாய் இருக்கவில்லை. இது குறித்து அழகிய பாண்டியபுரம் பெரிய வீட்டு முதலியார் ஆவணங்களில் சான்று உள்ளது.

மராட்டிய கணிகர் சாதியினரிடம் 12 உட்பிரிவுகள் உண்டு. இவர்களில் மண்லிக்கர் என்ற பிரிவினர் மற்ற பதினோரு பிரிவினருக்கும் அடிமையாய் இருந்து பணி செய்திருக்கின்றனர். திருமணம், இறப்பு சடங்குகளில் இவர்களே உதவினர். மண்லிக்கர் பிரிவில் மற்ற பிரிவினர் மண உறவு வைத்துக் கொள்வதில்லை. இப்போது இந்தப் பிரிவு இல்லை; இவர்கள் மற்ற உட்பிரிவுகளுடன் கலந்துவிட்டனர்.

நாஞ்சில் நாட்டு வேளாளர் கிராமங்களில் நிர்வாக அமைப்பில் குற்றேவல் செய்ய ஒருவர் இருந்தார். அவர் மொறையான் என அழைக்கப்பட்டார். ஊரில் நடக்கும் இறப்பு காரியங்களுக்கு இவரே செய்தி சொல்லப் போவார்; இவர் வேளாளர் சாதியினராக இருந்தாலும் வேளாள நில உடைமையாளர்கள் இவர்களை அடிமை போலவே நடத்தினர்.castism in hinduஉடுப்பி பிராமணர்களுக்கு அடிமையாக இருந்த துளு மொழி பேசிய ஒரு சாதியினர் கேரளம்-கொடுங்கல்லூர் கோவிலின் மீன பரணி விழாவிற்கு வருகின்றனர். இந்த சாதியினர் இப்போது துளு பிராமணர்களுக்கு அடிமையாக இருக்கவில்லை என்றாலும் கடன் பட்டவர்களாகவே சொல்லிக் கொள்கிறார்கள். இது போன்று வேறு சான்றுகளைச் சொல்லலாம்

அடிமைப் பிரிவினருக்கும் அவர்களின் எஜமான சாதிகளுக்கும் முரண்பாடு அல்லது மாறுபாடு வருவதும்; அடிமை சாதியைத் தண்டிப்பதுமான செய்திகள் நாட்டார் வழக்காற்றில் உண்டு.

இப்படியான ஒரு நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், திருவிதாங்கோடு ஊரில் கிடைத்த கல்வெட்டில் உள்ளது. இந்த ஊரிலுள்ள பெண்கள் பள்ளியின் முன்பகுதியில் உள்ள கல்வெட்டில் இருந்தது. இக்கல்வெட்டு இப்போது பத்மநாபபுரம் அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ளது.

இந்தக் கல்வெட்டைத் திருவிதாங்கூர் தொல்லியல் துறையினர் 1921இல் படி எடுத்திருக்கின்றனர். திருவிதாங்கூர் தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்த எ.எஸ்.ராமநாதஐயர் இக்கல்வெட்டைப் படியெடுத்திருக்கிறார். 1924இல் இக்கல்வெட்டு Travancore Archaeological Series தொகுதி 5இல் (பக் 90) சிறு விளக்கத்துடன் வெளியாகி உள்ளது.

இக்கல்வெட்டை திருவிதாங்கோட்டிலிருந்து பத்மநாபபுரம் அரண்மனை அருங் காட்சியகத்திற்கு 1960 அளவில் கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கே இப்போது பாதுகாப்பாய் இருக்கிறது.

தமிழக அரசு தொல்லியல் துறையினர்

இக்கல்வெட்டை 2004இல் படி எடுத்திருக்கின்றனர். இது கன்னியாகுமரி மாவட்ட கல்வெட்டுத் தொகுப்பு ஆறில் வெளியாகி இருக்கிறது (2008 எண் 514). இதில் கல்வெட்டு பற்றிய குறிப்பு மட்டுமே உள்ளது. வேறு விளக்கம் இல்லை.

இக்கல்வெட்டின் முதல் பக்கத்தில் 26 வரிகளும் இன்னொரு பக்கத்தில் 25 வரிகளும் மூன்றாம் பக்கத்தில் 15 வரிகளும் ஆக 66 வரிகளும் உள்ளன. ஒரு வரியில் 3 அல்லது 4 சொற்கள் மட்டுமே உள்ளன 2022ல் இக்கட்டுரை ஆசிரியர் கல்வெட்டு ஆய்வாளர் செந்தி நடராஜன் உதவியுடன் படி எடுத்தார்.

இக்கல்வெட்டு ஸ்வஸ்திஸ்ரீ என தொடங்குகிறது. மலையாள ஆண்டு, 628, சித்திரை மாதம் 9 ஆம் தேதி (1452) வெட்டப்பட்ட இக்கல்வெட்டு இப்போதும் நல்ல நிலையில் உள்ளது.

இந்த ஆவணம் ஜாதி மோதல் தொடர்பான முக்கியமான செய்தியைக் கூறுகிறது. நாட்டின் தென் பகுதியில் வெள்ளநாடார் என்பவருக்கும் வேளாளர் ஜாதியினருக்கும் இடையே பகைமை இருந்தது. இதனால் மோதல் வந்திருக்கிறது, இது தீவிரமான பிறகு ஆட்சியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்திருக்கிறது. இதில் வேளாளர் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

இந்தக் கல்வெட்டு அரசரின் உத்தரவு செய்தியை அறிவிப்பது போன்று அமைந்தது. ஏற்கனவே இந்த உத்தரவு அறிக்கையாக வெளியிடப் பட்டிருக்கலாம் இந்த தொனி கல்வெட்டில் உள்ளது இந்த உத்தரவில் வெள்ளநாடாரைக் கட்டுப்படுத்த வேண்டிய செய்தி சொல்லப்படுகிறது.

வெள்ளநாடார் பிரிவினருக்கு எச்சரிக்கை, விலக்கு, தண்டனை தொடர்பான செய்திகள் கல்வெட்டில் உள்ளன. இந்த உத்தரவு வேணாட்டார் வாழும் பகுதிக்கு உட்பட்டது என்று எடுத்துக் கொள்ளலாம் செய்தி வருமாறு.

வெள்ள நாடார் தமிழ் பேசும் பகுதி மக்களிடம் மண உறவு வைத்துக் கொள்ளக் கூடாது; தமிழ் பகுதியில் உள்ளவர்கள் வெள்ள நாடாருக்குப் பெண் கொடுக்கக் கூடாது, வெள்ள நாடார் மக்கள் தமிழ் பேசும் பகுதியில் கூலி வேலை செய்யப் போகக்கூடாது.

தமிழ் பகுதி மக்கள் வெள்ள நாடார் மக்களைக் கூலிக்கு அமர்த்தக் கூடாது. தமிழ் பேசும் ஊர்களிலும் கோவில்களிலும் நிர்வாகப் பொறுப்பிலோ கணக்கு எழுதவோ வெள்ள நாடாரை அமர்த்தக்கூடாது. இதுபோல் வேறு வேலைகளும் இவர்கள் செய்யக்கூடாது.

வெள்ள நாடார்கள் வேளாள மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் பிழை செய்தார்கள். இப்படிச் செய்தவர்கள் 23 பேர்களின் பெயர்கள் கல்வெட்டில் உள்ளன இவர்களைக் கண்டதும் கொல்லலாம் என்பது கல்வெட்டின் உத்தரவு (பெயர்கள் பின் இணைப்பில் உள்ளன).

இந்தக் கல்வெட்டு வெட்டப்பட்ட காலத்தில்(கி.பி. 1452) வேணாட்டு அரசர் யார் என்று சரியாகத் தெரியவில்லை. இக்காலகட்ட அரசன் வீர ராம வர்ம குலசேகரன் என்று ஸ்ரீதர மேனன் ஊகிக்கிறார். இந்த அரசன் காலத்தில் வேணாடு திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஊர் வரை பரவியிருந்தது.

இந்தக் காலகட்டத்தில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் நிர்வாகிகளான யோகக்காரர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிட்டனர். அரசனுக்கு ஒன்றும் செய்ய முடியாத நிலை. வேணாட்டு அரசர்களின் பெரிய பிரச்சினையே அதுதான். இது 1740 வரை நீடித்தது. திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மா இதற்கு முடிவு கட்டினார்.

இது கோவில் நிர்வாகிகள், அரசியல் நிர்வாகிகள் ஆகியோருக்கு இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனை மட்டும் அல்ல; கோவில் நிர்வாகிகள் ஊர் நிர்வாகத்திலும் அரசியல் நிர்வாகத்திலும் சாதி பிரச்சினைகளிலும் தலையிட்டனர். சாதி மோதல் வருவதற்கு இதுவும் ஒரு காரணம். இது போன்ற ஒரு நிலை மதுரை நாயக்கர் காலத்தில் நடந்திருக்கிறது. சாதிகளின் உட்பிரிவுகள் உரிமை வேண்டி வழக்கு நடந்து இருக்கிறது.

திருவிதாங்கோட்டில் கிடைத்த கல்வெட்டின் சுருக்கமான செய்தியைத் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கிடைத்த கல்வெட்டு ஒன்றும் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு இந்த ஊர் கோட்டை தெருவில் தனிக் கல்தூணில் உள்ளது. தமிழில் அமைந்த இந்தக் கல்வெட்டு திருநெல்வேலி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி ஒன்றில் வெளியாகியிருக்கிறது (2009 எண் 219). இதில் மலையாள வருஷம் 628 சித்திரை மாதம் 5 ஆம் தேதி (1452) வெட்டப்பட்டது என்ற குறிப்பு உள்ளது. ஒருவகையில் இந்தக் கல்வெட்டு நடப்பட்டு நான்கு நாட்கள் கழித்துதான் திருவிதாங்கோடு கல்வெட்டு நடப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.

கல்லிடைக்குறிச்சி கல்வெட்டில் வேளாளர்களுக்கு வெள்ள நாடார்கள் பிழை செய்து விட்டனர். தவறு செய்தவர்கள் கணக்கு கோளரி ஐயப்பன், ஐயப்பன் குமரன், அண்டூர் செழியங்கன் ஆகியோர்.'' வேறு சிலரும் இருக்கலாம் இப்படியாக வேளாளரில் பிழைத்த மூன்று பேர்களைக் கொன்று பரிகாரம் செய்ய வேண்டும்.

தமிழ் பேசும் பகுதிகளில் வெள்ள நாடார்களைக் கூலி சேவகத்திற்கு அமர்த்தக்கூடாது. அவர்களுடன் மண உறவு வைக்கக்கூடாது. அவர்களுக்கு ஊர் அல்லது கோவில் நிர்வாகத்தில் பதவி கொடுக்கக் கூடாது. தேசநலன் காரியமாக இவர்களைப் பணியில் அமர்த்தக்கூடாது என்னும் செய்திகள் உள்ளன.

இந்தக் கல்வெட்டு 44 வரிகள் கொண்டது. ஒரு வரி சரியாகத் தெரியவில்லை. திருவிதாங்கோடு கல்வெட்டில் குற்றவாளிகள் என குறிப்பிடப்படும் பெயர்கள் இக்கல்வெட்டில் இல்லை.

இந்தக் கல்வெட்டில் வேளாளருக்கு வெள்ள நாடார் பிழைத்தது, மலையாள வருஷம் 561 மீன மாதம் ஞாயிறு 29 ஆம் தேதி என உள்ளது. இதை கி.பி 1386 பங்குனி மாதம் என எடுத்துக்கொள்ளலாம். அப்படியானால் வெள்ள நாடார் வேளாளரைப் பிழைத்து 166 வருடங்கள் கழித்து இந்த உத்தரவு வந்தது என ஆகும். இது பொருந்தவில்லை, இதனால் கல்லிடைக்குறிச்சி கல்வெட்டில் கொடுக்கப்பட்ட ஆண்டு தவறு எனக் கருதலாம்.

திருவிதாங்கோடு கல்வெட்டை முதலில் படி எடுத்த இராமநாத ஐயர், இந்த மோதலுக்குக் காரணமான சாதியினர் வெள்ள நாடார் என்பவரே! கல்வெட்டில் அப்படியே உள்ளது. இவர் வெள்ள நாடார் அல்லர் வெள்ள நாடர் என்பதே சரி. இவர்கள் வேளாளரின் ஒரு பிரிவினராக இருக்கலாம். திருவனந்தபுரம் அருகே வெள்ளநாடு என்ற ஒரு பகுதியில் உள்ள வெள்ளாளரின் உட்பிரிவினர் ஆக இருக்கலாம் என்கிறார்.

இந்தக் கல்வெட்டு இருந்த இடம் (திருவிதாங்கோடு) தமிழ் பேசிய பகுதி அல்ல; நாஞ்சில் நாட்டு வேளாளர்கள் திருவிதாங்கோடு வேளாளருடன் உறவு வைத்துக் கொள்வதை குறைவாகக் கருதினர். இவை எழுபதுகளில்கூட இருந்தது. இது முரண்பாடான புரியாத புதிர்.

திருவிதாங்கூர் வரலாற்றை எழுதிய டி.கே.வேலுப்பிள்ளை "வேணாட்டில் குறிப்பிட்ட ஜாதியினர் தலையெடுத்து மேலே சென்றபோது, அவர்களின் உட்பிரிவினர் சிலரை விலக்கி, வைக்கும் அளவுக்கு நிலை மோசமாக இருந்தது என்கிறார் வெள்ள நாடார். வேளாளர் பகைமையும் அதன் விளைவையும் இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.

பின் இணைப்பு

கல்வெட்டில் குறிப்பிடப்படும் குற்றவாளிகள்

ஐயப்பன் மார்த்தாண்டன், குமரன் ராமன், ஐயப்பன் ஆண்டி, மார்த்தாண்டன் மழவராயன், தும்பிச்சில் மார்த்தாண்ட மழவராயன், நம்பன் தொண்டைமான், மார்த்தாண்ட பணிக்கன், காரைக் குன்றன், சொட்டூர் முதலியார், பார்பன்பார்பன் மக்கள் இரண்டு பேர், படைக்கல முத்தையன், மாடம்பி, நிரப்பார ஈச்சம்பி, பேரூர் நாயர், அய்யன் பாப்பன், மார்த்தாண்டன், ஆரு செம்பிய பணிக்கன், சடையன் கோதை, வளவன் கண்ணன், இழிகம் முருகன், தூவத்து ராமன்.

- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.

Pin It