சென்ற வாரக் “குடியரசு” பத்திரிகையின் தலையங்கத்தில் “இரகசியம் வெளிப்பட்டதா? என்ற தலைப்பில் காந்தியவர்களினுடையவும், காங்கிரசினுடையவும், அரசியல், சட்டமறுப்புக் கிளர்ச்சியின் தத்துவம் இன்னது என்பதை ஒருவாறு விளக்கினோம். ஆனால் அத்தலையங்கத்தின் இறுதியில் காந்தியின் வருணாச்சிரமத்தைப் பற்றி மற்றொரு சமயம் எழுதுவதாக எழுதியிருந்தோம். அந்தப்படியே இவ்வாரம் “வருணாச்சிரமம்” என்பது பற்றி சில விஷயங்கள் எழுதுகின்றோம்.

வருணாச்சிரமம் என்பதைப் பற்றி இதற்கு முன் பல தடவை எழுதி இருக்கிறோம். ஆதியில் நாம் வருணாச்சிரமத்தைப் பற்றி எழுதிய காலத்தில் சில தேசீயவாதிகள் காந்தியின் வருணாச்சிரமம் இன்னது என்பதை நாம் அறியாமையால் குற்றம் சொல்லுவதாக பல “தேசியவாதிகளும்” “தேசீயப் பத்திரிகைகளும்” நம் மீது பழி சுமத்தி வந்தன. ஆனால், தோழர் காந்தியவர்களே தனது வருணாச்சிரமத்துக்கு நன்றாய் வெளிப்படையான வியாக்கியானம் செய்த பிறகு, அதாவது தேசியவாதிகள் வேதத்தைப் போல் வாசித்து வந்த “யங் இந்தியா” என்ற பத்திரிகையில் எழுதிய பிறகு “இந்த ஒரு விஷயத்தில் வருணாச்சிரம தர்ம விஷயத்தில் மாத்திரம் காந்தியாருடன் அபிப்பிராயப் பேதம் கொள்ளுகின்றோம்” என்று வெளிப்படையாக எழுத ஆரம்பித்து விட்டன. ஆனால் இந்தப்படி எழுதிய தேசீய பத்திரிகைகள் எல்லாம் முழுவதும் பார்ப்பனரல்லாத “தேசியவாதிகளின்” பத்திரிகைகளே ஒழிய ஒரு பார்ப்பன தேசியப் பத்திரிகையாவது இது சரியென்றோ, தப்பு என்றோ சொல்லாமல் திருடனைத் தேள் கொட்டியதுபோல மௌனம் சாதித்தன.

periyar 330காந்தியாரின் பரம சீஷர்களான தோழர்கள் ராஜகோபாலாச்சாரி, ஜவஹர்லால் நேரு முதலியவர்கள் கூட இந்த காந்தி வருணாச்சிரம தர்மத்தைப் பற்றி ஒரு வார்த்தையும் நாளது வரையும் பேசாமல் இருக்கின்றார்கள். பார்ப்பனரல்லாத தேசீயவாதிகள் என்பவர்கள் காந்தி வருணாச்சிரமத்தை ஒப்புக் கொள்ளவில்லையானாலும் கண்டித்து வந்தாலும் காந்திக்குள்ள செல்வாக்கினாலும் அவரை விட்டுப் பிரிந்து தனித்து நிற்க சக்தியற்றதினாலும், பாமர மக்களின் அறிவின்மைக்கு பயந்தும், காந்தியாரின் திருவிளையாடல்களுக்கெல்லாம் பின்தாளம் போட்டே ஆக வேண்டி இருந்ததால் இதை போதிய அளவு வெளியாக்கி அதன் கெடுதிகளை எடுத்துச் சொல்ல தைரியமற்றவர்களாகவும் மனமற்றவர்களாகவும் இருக்க வேண்டியவர்களாகி விட்டார்கள். “தமிழ் நாடு” மாத்திரம் ஏதோ ஒரு அளவுக்குத் துணிந்து எழுதிற்று என்னவாம்.

காந்தியார் வருணாச்சிரம தர்மத்துக்கு அவர் “யங் இந்தியா” பத்திரிகையில் எழுதிய வியாக்கியானத்தை இப்பொழுதும் ஒரு முறை எடுத்து எழுதுகிறோம். அதாவது :-

1. “வருணாச்சிரம தர்மங்களில் கூறப்படும் நான்கு வருணாச்சிரம தர்மங்களிலும் எனக்கு நம்பிக்கை உண்டு.

2. அந்த வருண தர்மப் பாகுபாடுகள் பரம்பரையான தொழில்களைப் பொருத்தே ஏற்பட்டவை.

3. அதாவது, 1. பிராமணர், 2. க்ஷத்திரியர், 3. வைசியர், 4. சூத்திரர்.

4. அவர்களின் தொழில்களாவன.

A. பிராமணர் உபதேசம் செய்தல், கல்வி கற்பித்தல்.

B. க்ஷத்திரியர் பகைவர்களினின்று காத்தல்.

C. வைசியர் வியாபாரம், விவசாயம் செய்தல்.

D. சூத்திரன் சரீரத்தால் உழைத்து மேல் கண்ட மூன்று வருணத்தாருக்கும் ஏவல் வேலை செய்தல்.

இது தான் எனது வருணாச்சிரம தர்ம முறை. இந்த முறையை இந்து சமுகம் தவறி நடந்ததாலேயே வருண தருமம் அழிந்து விட்டது. கலப்பு விவாகத்தால் நாட்டில் ஒற்றுமையும், சாந்தமும் ஏற்பட்டு விடாது என்று எழுதி இருக்கிறார்.

இந்த அபிப்பிராயமோ, வியாக்கியானமோ தோழர் காந்தியார் தன்னுடைய சொந்த வியாக்கியானம் என்று சொன்னாலும், இதே அபிப்பிராயம் தான் மனுதர்ம சாஸ்திரத்திலும் மற்றும் பல ஸ்மிருதிகளிலும், புராணங் களிலும் இருந்து வருகின்றது. ஆகவே இதில் காந்தியார் அபிப்பிராயத்தால் வியாக்கியானத்தால் எவ்வித மாறுதலும் ஏற்பட்டுவிடவில்லை. ஒரு சமயம் ஏதாவது மாறுதல் உண்டா என்று ஆழ்ந்து கவனித்தால், மனுஸ்மிருதியில் வருணதர்மம் கெடாமல் அரசன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இருக்கின்றது. ஆனால் காந்தியாரின் ஸ்மிருதியானது, “வருணதர்மத்தைப் பற்றி அரசன் கவனிக்காததால் அரசனைத் தள்ளிவிட்டு வருண தர்மத்தைக் காப்பாற்றும் அரசாங்கத்தை ஏற்படுத்தி, வருணாச்சிரம தர்மிகள் கையில் ராஜியத்தை ஒப்புவிக்க வேண்டும்” என்கிறது. அதற்காகவே அதாவது “வருணாசிரம தர்ம முறையைக் காப்பாற்றவே நான் சுயராஜியத்திற்கு பாடுபடுகிறேன்” என்கிறார். ஆகவே காந்தியவர்களின் வருணாச்சிரம தர்மம் என்பது எப்படிப்பட்ட வியாக்கியானத்தையும், தத்துவ அடிப்படையையும் கொண்டிருந்தாலும் அவற்றின் தத்துவமெல்லாம் பொருளாதாரத்தையும் மற்றவன் உழைப்பால் சிலர் வாழும் சோம்பேரி வாழ்க்கையையுமே அடிப்படையாகக் கொண்டது என்பதே நமதபிப்பிராயம். எப்படியெனில் பார்ப்பான் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழ வேண்டியதற்கு தகுந்தபடியே அவனுக்கு உபதேசம், கல்வி கற்பித்தல் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. கல்வி கற்பித்தலும், உபதேசமும் யாருக்காக என்று பார்த்தோமேயானால், உபதேசம் பெறவும் கல்வி கற்று கொள்ளவும் ஆளுகளே கிடையாது என்றுதான் விளங்கும். பெரும்பான்மையான வருணத்தார் என்னும் “சூத்திரர்கள்” என்பவர்கள், மற்றவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்கிற உபதேசத்தைத் தவிர வேறு என்ன இருக்கிறது. மற்றவர்கள் சொல்படியே நடக்க வேண்டியவனுக்கு என்ன உபதேசம் என்ன கல்வி வேண்டியிருக்கிறது? என்பதை யோசித்துப் பாருங்கள்.

க்ஷத்திரியர்களால் தான் “சூத்திரர்களுக்கு” என்ன பிரயோஜனம்? யார் வந்தாலும், எந்த ராஜா வந்தாலும் சூத்திரன் முதல் மூன்று பேருக்கும் தொண்டு செய்ய வேண்டியவனாகத்தானே இருக்கிறான். ஆதலால் க்ஷத்திரியன் என்பவனாலும் சூத்திரனுக்கு பலன் இல்லை.

வைசியனும் அப்படியேதான். ஆனால் வைசியனுக்குத் தான் பணம் சேர்த்துக் கொள்ள அதிகாரம் உண்டு, சூத்திரனிடம் வேலை வாங்க அதிகாரம் உண்டு. அதனால்தான் சூத்திரனை பணம் சேர்க்கவிடக் கூடாது என்றும், சேர்த்து விட்டால் பிராமணன் பலாத்காரமாய்க்கூட பிடுங்கிக் கொள்ளலாம் என்றும் மனுதர்மம் சொல்லுகின்றது. ஆனால் பிரிட்டிஷ் தர்மத்தில் சூத்திரன் பணம் சேர்க்கலாம். ஆனாலும் அதை வரி, கோர்ட்டு வக்கீல், கோயில், குளம், சடங்கு, பண்டிகை முதலியவைகளின் மூலம் பிடிங்கிக் கொள்ளலாம் என்று இருந்து வருகின்றது. ஆனால் காந்தி தருமத்தில் சூத்திரன் கைக்கு பணம் வந்து சேரவே முடியாதபடி சூத்திரர்கள் கையில் ராட்டினத்தைக் கொடுத்தாய் விட்டது.

அதுமாத்திரமல்லாமல் சூத்திரர்களுக்குக் காந்தியாரால் செய்யப்படும் உபதேசமும் அதை அனுசரித்தே செய்யப்பட்டிருக்கிறது. அதென்னவென்றால்:-

1. ராட்டினத்தையே சுற்ற வேண்டும்.

2. கைத்தரியில் நெய்ய வேண்டும்.

3. மாடு மேய்த்து பால் தயிர் விற்க வேண்டும்.

4. செருப்புத் தைக்க வேண்டும்.

5. பணப் பெட்டிகளில் வெள்ளி நாணையம் இருக்கக்கூடாது.

6. பம்பாய் மில் முதலாளிகள் (வைசியர்கள்) போல் பணக்காரர்களாக ஆசைப்படக் கூடாது.

என்றெல்லாம் உபதேசம் செய்திருப்பதோடல்லாமல் “இது தான் எனது சுயராஜ்ய வேலைத்திட்டம்” என்றும் இந்த 2, 3 வருஷ சட்டமறுப்பு, சத்தியாக்கிரகம் எல்லாம் இதற்காகத்தான் செய்யப்பட்டதென்றும் சொல்லியிருக்கிறார். (இந்த உண்மை அறிய வேண்டியவர்கள் 1931-ஜூன் மாதம் 12, 13-ந் தேதி “இந்து” “சுதேசமித்திரன்” “தமிழ்நாடு” பத்திரிகைகளைப் பார்த்தால் நன்றாய் விளங்கும். இதில் சிறிதும் தப்பில்லை. இன்றைக்கு தோழர் காந்திக்கு எழுதிக் கேட்டாலும் ஒப்புக் கொள்ளுவார்).

ஆகவே இந்தவித சுயராஜ்ஜியம் யாருக்கு நல்லது என்பதை யோசித்துப் பாருங்கள்?

இன்றைய தினம் உலகம் முழுவதும் எவ்வித வகுப்பு வித்தியாசமும் கூடாது என்றும், குறிப்பாக ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி, சோம்பேரி, பாட்டாளி என்பவை கூடாதென்றும் சொல்லி முயர்ச்சித்து உலகையே புதிய உலகம் ஆக்க வேண்டுமென்று பாடுபடுகின்ற காலத்தில், இந்தியாவில் “அன்னிய ஆட்சியை விரட்டுவது” என்ற தந்திர வார்த்தையை உபயோகித்துக் கொண்டு, அன்னிய ஆட்சி மாத்திரமல்லாமல் உலகத்தில் உள்ள எந்தவித கேடான ஆட்சியைவிட கேடான ஆட்சியானதும் 2500 வருஷங்களுக்கு முன் இருந்த பழைய ஆட்சிக்கும், வருணாச்சிரம ஆட்சிக்கும் கொண்டு போகப் பாடுபடுவதென்றால் இதை எப்படித்தான் சுயமரியாதையும், சுதந்திர வீரமும் உள்ள மனிதன் ஒப்புக் கொள்ள முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

மற்றும் காந்தியார் வட்டமேஜை மகாநாட்டிற்குப் போனதும் கூட வருணாச்சிரமும், ஜாதி முறையும் மேல் நிலையில் பரம்பரையாய் மேல் நிலையில் இருக்கவும், கீழ் நிலையில் இருப்பவர்கள் பரம்பரையாய் கீழ் நிலையில் இருக்கவும் ஏற்பாடு செய்வதற்கே ஒழிய மக்கள் யாவரும் சமமாய் இருக்க ஏற்பாடு செய்வதற்கென்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேள்கின்றோம். தோழர் காந்தி தனது ’வருணாச்சிரமத்திலும் ஜாதி முறையிலும், உயர்வு தாழ்வு இல்லை, எல்லாரும் சமமாய் பாவிக்கப் படுவார்கள்’ என்று சொல்லுகின்றார் என்றாலும் பிரிவு உண்டு என்றும் அவனவனுக்கு ஆதியில் விதித்த வருணத்தொழில், ஜாதித் தொழில் என்பதையே தான் அவனவன் செய்தாக வேண்டும் என்றும் சொல்வது சமதர்மத்திற்கும், சமத்துவத்திற்கும் ஏற்றதாகுமா என்பதை யோசித்துப் பாருங்கள்

முதலாளியும், தொழிலாளியும் இருப்பான், பார்ப்பானும் பறையனும் இருப்பான்; ஆனால் மேல் நிலையில் உள்ளவனைப் பார்த்து கீழ் நிலையில் உள்ளவன் வித்தியாசம் பாராட்டப்படாது என்றும் கீழ் நிலையில் உள்ளவனைப் பார்த்து மேல் நிலையில் உள்ளவன் வித்தியாசம் பாராட்டப்படாது என்றும் சொன்னால் இதற்கு என்ன அருத்தம்? என்பதை வாசகர்கள்தான் யோசித்து முடிவு கட்ட வேண்டும். மேல்நிலையில் உள்ளவன் பாடுபடாமல் சுகமாய் கூட கோபுரம் மாடமாளிகை கட்டிக்கொண்டு மக்கள் மீது பல்லக்கு சவாரி செய்வது அவன் வருணதர்மமென்றும், கீழ் நிலையில் உள்ளவன் ஓட்டைக் குடிசையில் வசித்துக் கொண்டு போதிய ஆகாரமும் சௌகரியமும் இல்லாமல் பல்லக்கு சுமப்பது இவனது வருண தருமமென்றும் சொல்லி இந்த இரண்டு நிலைக்கும் வித்தியாசம் பாராட்டக்கூடாது என்று சொன்னால், இது யாருக்கு சுகம் யாருக்கு கஷ்டம் என்பதை யோசித்துப் பாருங்கள். பல்லக்கு சுமப்பவன் இரண்டுக்கும் வித்தியாசமில்லை என்று கருதினாலும் பல்லக்கு சுமப்பவன் பாரமானது சவாரி செய்பவனுக்கும், சுமப்பவனுக்கும் யாதொரு வித்தியாசமும் இல்லாமல் ஒன்றுபோல் சமமாய் இருக்குமா என்பது தான் நமது கேள்வி.

இந்த வருணாச்சிரமம், ஜாதி முறை, ஏழைகள் இருக்க வேண்டிய தன்மை, ராட்டினம் ஆகிய விஷயங்களைப் பொறுத்த காந்தியாரின் அபிப்பிராயங்களேதான் நம்மை காந்தி சுயராஜ்ஜியத்தை விட “அன்னிய ஆட்சி” என்பது ஆயிரம் மடங்கு மேலானது என்று கருதச் செய்கின்றது.

காந்தி சுயராஜ்ஜியப்படி இந்த நாட்டில் தப்புக்கொட்ட பறையரும், செருப்புத் தைக்க சக்கிலியும், மலமெடுக்கத் தோட்டியும், மாடு மேய்க்க குடி மக்களும் பல்லக்கு ஏறப் பார்ப்பானும், கொள்ளை அடிக்கச் செட்டியும், குதிர்களில் தானியங்களைக் கொட்டிக் கொள்ள ஜமீன்தாரனும், மிராசுதாரனும் இருந்தே தீருவான், அதுவும் தலைமுறை தலைமுறையாய் இருந்தே தீருவான். ஆனால் அன்னிய ஆட்சியிலும், இந்த நிலை இருக்குமென்று யாராவது சொல்லலாம். ஆனாலும் காந்தி சுயராஜியம் மாதிரி இந்த நிலைகள் ஜாதி முறைப்படி வருணதருமப்படி இருக்காது. பறையனுக்கு பல்லக்கேற சந்தர்ப்பம் வந்தாலும் வரும், பார்ப்பானுக்கு செருப்பு தைக்க சந்தர்ப்பம் வந்தாலும் வரும், செட்டிக்கு மாடு மேய்க்க சந்தர்ப்பம் வந்தாலும் வரும் க்ஷத்திரிய சிங்குக்கு பங்கா இழுக்க சந்தர்ப்பம் வந்தாலும் வரும். ஆதலால் அன்னிய ஆட்சி முறையாலாவது எல்லோருக்கும் பந்தயத்தில் இடமேற் படும். காந்தி ஆட்சி முறைப்படி பந்தயமே கிடையாத பாரம்பரிய அனுபவம் தான் நிலைக்கும்.

ஆனால் இந்த முறையாகிய போட்டியும் சாந்தமற்று சதா மேல் நிலையைப் பற்றி கவலை இருப்பதும் மனித சமூகத்துக்கு நல்லதா என்று கேழ்க்கலாம். நல்லது என்றே நாம் சொல்லுவோம். ஏனெனில் எல்லாருக்கும் கஷ்டம் இருக்கின்றது என்று தோன்றினால் தான் கஷ்ட நிவர்த்திக்கு மார்க்கம் கிடைக்கும். மார்க்கம் தேடவும் மனம் வரும். நமது நாட்டு பழைய வழக்கங்களும் மக்கள் பலர் ஜாதியின் பயனாய் மனிதத் தன்மையற்று மிருகங்கள் போல் பாடுபடவும் அது வெகுகாலமாய் நிலைத்திருக்கவும் காரணமே இந்த வருண தருமமும் ஜாதி முறையுமேயாகும். வருண தருமமும் ஜாதி முறையும் இந்த நாட்டில் இல்லாம லிருந்திருந்தால் இன்று காணப்படும் ராட்டினங்கள் நெருப்பில் எறிக்கப்பட்டு எத்தனை காலமாயிருக்கும் என்பதை யோசித்தால் தானாகவே விளங்கும். ஆதலால் வருணாச்சிரமமும் ஜாதி முறையும் ஏழைகளை ஏமாற்றவும் அவர்கள் செல்வவான்களுடையவும் சோம்பேரிகளுடையும் சூழ்ச்சிகளையும் அறியாமல் இருக்கச் செய்யவும் பணக்காரர்களையும் பார்ப்பனர்களையும் காப்பாற்றவும் செய்யப்படும் தந்திரங்களே ஒழிய வேறில்லை. ஆகவே என்ன விலை கொடுத்தாவது இன்றைய காந்தியவர்களின் வருணாச்சிரம சுயராஜ்ஜியத்தையும் ஜாதிமுறை தொழில் ஆட்சியையும் அதையே திட்டமாக ஏற்றுக் கொண்ட காங்கிரசையும் மக்கள் ஒழித்தாக வேண்டியது சுயமரியாதையின் சமதர்மத்தின் முதல் கடமையாகும்.

(குடி அரசு - தலையங்கம் - 26.02.1933)

Pin It