சுமார் இரண்டு வருஷ காலமாக பிரஸ்தாபத்திலிருந்து வந்த சுங்கக் கேட்டுகளின் மூலம் சுங்க வரி வசூல் செய்யும் தொல்லைகள் ஒழிந்தது. அதாவது இவ்வாரம் சென்னை சட்டசபையில் சுங்கக் கேட்டுகள் மூலம் சுங்கம் வசூலிக்காமல் இருக்க ஒரு சட்டம் நிறைவேற்றப் பட்டிருக்கின்றது.

periyar 21இதனால் ஜனங்கள் செலுத்தி வந்த வரி எந்த அளவிலும் குறைந்து விட்டதாகச் சொல்ல முடியாது. கவனித்துப் பார்ப்போமானால் முன்னிலும் அதிகமான வரியை கொடுக்கக் கூடியதாக வந்து சேரும். அன்றியும் இதனால் இவ்வரி வசூலினால் பிழைத்து வந்த ஆயிரக்கணக்கான பேர்களுக்கு ஜீவனத்திற்கு வழி இல்லாமல் போகும். ஜனங்களுக்கு இப்போது இருந்து வரும் மோட்டார் போக்குவரத்து பிரயாணக்காரருக்கு சற்று வாடகைத் தொல்லை அதிகமாகும். இன்னும் பல அசௌகரியங்களும் உண்டாகக் கூடும். என்றாலும் ஒரு முக்கியமான அனுகூலம் உண்டு என்பதை நாம் எடுத்துக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றோம். அதாவது சுங்கக்கேட்டுக்குப் பக்கத்தில் வண்டிகளை நிறுத்திக் கொண்டு சுங்கக்காரர்களுடன் தொல்லை கொடுக்கும் காரியம் ஒழிந்தது மிகவும் மகிழ்ச்சியடையத் தக்கதாகும். சுங்கக் குத்தகைதாரர்களில் 100க்கு 50 பேர்கள் சுபாவத்திலேயே யோக்கியப் பொறுப்பில்லாமல் பிரயாணிகளை அலக்ஷியமாய்க் கருதி தொல்லை விளைவித்து வருபவர்களாகின்றார்கள். எஞ்சி உள்ளவர்களிலும் 100க்கு 75 பேர்களுக்கு மேலாகவே ஸ்தல ஸ்தாபன நிர்வாகத் தலைவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு சகிக்க முடியாத தொல்லைகளையெல்லாம் பிரயாணிகளுக்குக் கொடுத்து அதிக வரி வசூல் செய்வதில் மிக்க கஷ்டப்படுத்தி விடுகிறார்கள். இவைகள் ஒழிந்தது மிகமிக திருப்தியைக் கொடுக்கக் கூடியதாகும்.

இதனால் சில ஸ்தல ஸ்தாபன தலைவர்களுக்கும் தலைவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் சில அங்கத்தினர்களுக்கும் வரும்படி குறைந்துவிடும் என்பதை நாம் மறைக்கவில்லை. சுங்கக் குத்தகை ஏலம் விடும் விஷயத்தில் அனேக ஸ்தல ஸ்தாபனக்காரர்கள் ஒழுங்காய் நடந்து கொள்ளுவதே கிடையாது. ஒரு குறிப்பான நபருக்கே ஒன்றுக்குப் பாதியாய் குத்தகைக்கு விட்டு அந்த நபரை சுங்கம் வசூலிக்கும் விஷயத்தில் தன் இஷ்டப்படி அட்டூழியம் செய்ய விட்டுவிடுவதும் வேறு யாராவது வந்து ஏலத்தில் குத்தகைக்குக் கோரினால் தனக்கு வேண்டியவனைக் கொண்டு ஒன்றுக்கு இரண்டாக ஏலத்தில் உயர்த்திக் கேட்கச் செய்வதும், ஏலம் முடிந்த பிறகு வருஷக் கடைசியில் அதிகமாகக் கேட்கப்பட்ட தொகையை தள்ளிக் கொடுத்து விடுவதுமான முறையில் அநேக அக்கிரமங்கள் செய்து வந்ததும், ஒரு சமயம் அதிகமாகக் கேட்டு ஏலத்தில் எடுக்கப்பட்ட தனக்கு வேண்டாதவன் வீண் விஷயத்தில் அதிகமான தொல்லைகளையும் நெருக்கடிகளையும் உண்டாக்கி விட்டுவிட்டு ஓடும்படி செய்து வந்ததும் நமக்கு நன்றாய்த் தெரியும்.

இந்த மாதிரிக் காரணங்களை உத்தேசித்து பல இடங்களில் சுங்கக்கேட்டு குத்தகைதாரர்கள் எலக்ஷன்களில் பிரவேசித்து தனக்கும் ஸ்தல ஸ்தாபன தலைவர்களுக்கும் பொருத்தமான ஆட்களை தேர்தலில் கொண்டு வர முயற்சிப்பதும் அதற்காக 10 ஆயிரம், 20 ஆயிரம் கூட சுங்கக் குத்தகைதாரர் செலவு செய்வதும் அந்தப் பணங்களை யெல்லாம் சுங்கக் குத்தகையில் சம்பாதிக்க முயன்று வருவதும் இத்தியாதி பல காரணங்களால் சுங்கத்தின் மூலம் ஸ்தல ஸ்தாபனங்களை பூரண உரிமையாக்கிக் கொண்டு பலவித அக்கிரமங்கள் செய்து வரும் தன்மைகள் நாம் அறிந்த விஷயமாகும். ஆகவே பல விஷயங்களில் சுங்க வசூலானது நமது நாட்டில் நாணையமில்லாமலும் யோக்கியப் பொறுப்பில்லாமலும் கௌரவமற்ற தன்மையிலும், பிறருக்குத் தொல்லை விளைவிக்கும் தன்மையிலும் நடந்து வந்ததானது ஒரு அளவுக்காவது ஒழிபட்டதற்கு சில ஸ்தல ஸ்தாபனக்காரர்களும், சுங்க குத்தகைதாரர்களும் தவிர மற்றவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டியதே யாகும். இனியும் பல இடங்களில் மார்க்கட்டு சுங்க வசூல் விஷயத்திலும் சில மாறுதல்கள் செய்தால் மிக்க நன்மையாக இருக்கும். அவையெல்லாம் அனேகமாக ஸ்தல ஸ்தாபனங்களுக்கு நிர்வாக அதிகாரிகளை நேமிப்பதன் மூலமாக பெரிதும் சௌகரியமேற்படலாம். நிற்க

இச்சட்டம் செய்யப்பட்டதில் உள்ள முக்கியமான மற்றொரு விஷயம் என்னவென்றால் இச்சுங்கவரி ஒழிப்பு மசோதாவுக்கு மிகுதியும் கவலை யெடுத்து பிடிவாதமாய் வேலை செய்து வெற்றிபெற்ற திரு. ஹில்ட்டன் பிரவுன் துரையவர்கள் சுங்கத்தொல்லையால் ஒரு தடவை கஷ்டப்பட்டவரானதால் அதாவது ஒரு சுங்கச்சாவடியில் அச்சுங்கக்காரனுடன் வாதாடி அடிதடியாக நேர்ந்ததால் தனது அனுபவமும் தனக்கு ஏற்பட்ட தொல்லையும் மற்ற மக்களுக்கும் இருக்கும் என்று கருதி அதை ஒழிக்க கங்கணம் கட்டி அடியோடு ஒழித்து வெற்றி பெற்றது பாராட்டத்தக்கதாகும்.

இப்போது இந்த சட்டத்தால் இனி மோட்டார்காரர்கள் ஒரு அளவுக்கு லைசென்ஸ் வரிகள் கொடுக்க வேண்டியதாவதோடு மோட்டார் பஸ்கள் அதாவது வாடகை மோட்டார்கள் வருஷம் ஒன்றுக்கு ஒரு பிரயாணியின் ஸ்தானத்துக்கு 40 ரூ. வீதம் வரி கொடுக்க வேண்டியதாகின்றது. அதாவது ஒரு மோட்டார் பஸ் 15 பிரயாணிகளை ஏற்றிக்கொள்ள ஸ்தான வசதி ஏற்படுத்தி 15 பிரயாணிகளுக்கு என்று லைசென்சு வாங்கினால் அதற்கு ஒரு வருஷத்திற்கு 600ரூ. வரி கொடுக்க வேண்டியதாகின்றது. இது போலவே 20 பிரயாணிகளுக்கானால் 800 ரூ. கொடுக்க வேண்டியதாகின்றது. மற்றபடி வேறு சில வரிகளும் செலவுகளும் ஏற்படுவதுடன் பெட்றோல் முதலிய எண்ணைக்கும் அதிக விலை கொடுப்பதின் மூலம் தினம் ஒரு பஸ் ஒன்றுக்கு 12 அணா முதல் ஒரு ரூபாய் போல கொடுக்க வேண்டி ஏற்படலாம். எவ்வளவு ஏற்பட்டாலும் “வண்டிபாரம் பூமி சுமக்கின்றது” என்பது போல் இவ்வளவு கஷ்டமும் பிரயாணிகள் தலையில்தான் விழுகப் போகின்றது என்பது மாத்திரம் உறுதி. ஆனாலும் இதில் நமக்கு ஒன்றும் அதிசயமில்லை. ஏனெனில் இன்றைய எவ்வித சுதந்திரமும், சீர்திருத்தமும், புதுச்சட்டமும், ஏழைகளையும், பாமர மக்களையுமே தொல்லை கொடுத்து துன்பத்திற்காளாக்குவதாயிருப்பதால் அந்தக் கிரமப்படி இதுவும் ஏற்பட்டதில் அதிசயமில்லை!

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.03.1931)

Pin It