உலகத்தில் மக்கள் தங்கள் தங்கள் வாழ்க்கைக்கு விதாயங்கள் ஏற்படுத்திக் கொள்ளுவதில், பலர் பொது நல சேவை என்பதையும் ஒரு மார்க்கமாக உபயோகப் படுத்திக் கொண்டு வருகின்றார்கள் என்பது யாவருமறிந்த விஷயமாகும். அந்த முறையிலேதான், இன்று எல்லா விதமான பொது நல சேவைகள் என்பவைகளும், ஒரு தனித்தனி மனிதனின் சுயநல வாழ்க்கையை முக்கிய நோக்கமாகவும், அடிப்படையாகவும் கொண்டதாகவே இருந்து வருகின்றன.

periyarஇந்த நிலைமையானது, இந்நாட்டின் மக்களின் உண்மையான பொது நலம் என்பதை அடியோடு கெடுத்து விட்டதுமல்லாமல், இம்மாதிரி தன்மைகளால் பொது நல வாழ்வானது உண்மை, ஒழுக்கம், நாணயம் என்பவைகள் சிறிதும் இல்லாத புரட்டுக்கும், பொய்யுக்கும், வஞ்சகத்திற்கும், நிலையாயுள்ள ஒரு வியாபார சாலை போல் ஏற்பட்டு விட்டது. இதன் பயனாகவே மக்கள் மிகவும் ஏமாற்றப்பட்டு, கஷ்டத்திற்கும், கொடுமைக்கும் ஆளாகி முற்போக்கடைய சிறிதும் இடமில்லாமல் போய் விடுகின்றார்கள். இந்த மாதிரியான காரியங்கள், சமீப காலம் வரை மதம், கடவுள், மோக்ஷம், சன்மார்க்கம் முதலாகியவைகளின் பேராலேயே பெரிதும் நடந்து வந்திருந்தாலும், கொஞ்ச காலமாய் தேசம், தேசீயம், சுயராஜ்யம் என்பவைகளின் பேரால் வியாபாரமாகவே துவக்கப்பட்டு, மக்களுக்கு பெருத்த இடையூறையும், கஷ்டத்தையும் கொடுத்து வருகின்றது. ஆகவே, இந்த தத்துவத்தையே முக்கியமாய் எடுத்துக்கொண்டு இதை எழுதுகின்றோம்.

ஏனெனில், சாதாரணமாக மற்ற பல நாடுகளில் பொது நலசேவை என்பதில் ஈடுபடுகின்றவர்கள் பலர் கஷ்டத்திற்கும், நஷ்டத்திற்கும், கவலைக்கும் உள்ளாகி, அநேகவித தொல்லைகளை அனுபவிக்கின்றார்கள். ஆனால், இந்த நாட்டிலோ, சிறிதும் கஷ்டமும், நஷ்டமும், தொல்லையும், கவலையும் இல்லாமல், நேருக்கு நேராகவே, உடனுக்குடனே, பதவி, உத்தியோகம், பணம், கீர்த்தி, அதிகாரம் முதலியவைகள் மாற்றுப் பண்டமாக அடையப்பட்டு வருகின்றன. இவற்றிற்கு காரணம், பொது மக்களை ஒரு கூட்டத்தார், மேலே குறிப்பிட்டபடி ஏற்கனவே மதம், கடவுள், மோக்ஷம், விதி முதலாகியவைகளால் மூட நம்பிக்கைக்கு ஆளாக்கி வைத்திருப்பதால், அந்த மூடநம்பிக்கையானது, அந்த மக்களை, தேசீய வியாபாரிகளிடமும் சிக்கி, ஏமாந்து, கஷ்டப்படும்படி செய்து வருகின்றது.

உதாரணமாக, இந்திய தேசீய காங்கிரஸ் என்னும் ஒரு தேசீய வியாபார லிமிடெட் கம்பெனியானது, அது ஏற்படுத்தப்பட்ட நாள் முதலாகவே, அந்த தேசீய வியாபாரக் கம்பெனியில் நிர்வாக ஸ்தானம் வகித்தவர்களுக்கெல்லாம், பெரும்பான்மையாய், ஹைகோர்ட் ஜட்ஜ் உத்தியோகமும், நிர்வாக சபை அங்கத்தினர் பதவியும், மற்றும் அதில் சேர்ந்த பங்காளிகளுக்கெல்லாம், ஜில்லா ஜட்ஜ், சப் - ஜட்ஜ் முதலிய உத்தியோக பதவிகளும், மற்றும் பட்டம், கௌரவ உத்தியோகங்கள், தொழில் விர்த்தி ஆகியவைகளும் தாராளமாய்க் கிடைத்து வந்தது யாவரும் அறிந்ததே யாகும்.

இந்த நிலைமையானது நாளுக்கு நாள் பெருகி, அநேகர் இவ் வியாபாரத்தில் பங்கெடுக்க நேர்ந்ததின்பின், லிமிடெட் கம்பெனியாய் இருந்ததானது அன்லிமிட்டெட் கம்பெனியாகி அதாவது ஒரு வகுப்பாருக்கு மாத்திரம், ஒரு தரத்தாருக்கு மாத்திரம் என்று வரையறுக்கப் பட்டிருந்ததானது மாறி, எல்லா வகுப்பாருக்கும், எல்லாத் தரத்தாருக்கும் அதில் பங்கு எடுத்துக் கொள்ள சௌகரியம் ஏற்பட்டு, பிறகு, அதற்கு அநேக (பிரான்ச்சு) கிளை ஸ்தாபனங்களும் உண்டாகி, இப்போது வரவரப் பெருகி, ஏறக்குறைய சிறிது கல்வியும், தந்திரமும் உள்ள எல்லா மக்களுமே, தேசீய வியாபாரத்தில் கலந்து, அளவுக்கு மீறிய அதாவது தங்கள் யோக்கியதைக்கும், தகுதிக்கும் எத்தனையோ பங்கு மீறியதான லாபத்தை- பயனை அடையும்படியாகச் செய்து விட்டது.

ஆகவே, இன்றைய தினம் இந்த நாட்டில், பொது மக்களின் சௌக்கியத்திற்கும், பத்திரத்திற்கும், ஒழுக்கத்திற்கும் விரோதமானது என்று சொல்லத் தகுந்த கள்ளு, சாராயக்கடை, சூதாடுமிடம், விபசாரிகள் விடுதி, கொள்ளைக் கூட்டத்தார் முதலாகிய எல்லா வித ஒழுக்கமும், நாணையமும், கெட்ட துறைகள் ஸ்தாபனங்கள் என்பவைகளை யெல்லாம் விட, மிக்க மோசமான துறையாகவும், ஸ்தாபனமாகவும் உள்ள ஸ்தானத்தை மேல்படி தேசீய வியாபாரம் அடைந்து விட்டது.

இன்னும் விளக்கமாய் பேச வேண்டுமானால், வேறு எந்தக் காரியத்தாலும் பிழைக்க முடியாதவர்களும், ஒழுக்கமும், நாணயமும் அற்றவர்களும், மக்களை ஏமாற்றி வாழும் மோசக்காரர்களும் கடைசியாய்ப் போய் அடைக்கலம் புகுவதற்கு இன்று தேசீய வியாபாரத்தைவிட வேறு சுலபமான வழி நாட்டில் ஒன்றுமே இல்லை என்று சொல்லும்படியானதாகி விட்டது. இந்த அபிப்பிராயம், இன்னும் பலமாய் வலியுறுத்தத்தக்க மாதிரியில், முதல் முதல் ஆங்கிலத்தில் அகராதி எழுதின ஒரு ஆங்கில அறிவாளியான, டாக்டர் சாமியல் ஜான்சன் என்பவர், தேசபத்தி என்பதை, “Patriotism is the last refuge of the scoundrel” என்று எழுதி இருக்கின்றார். இதன் பொருள் என்னவென்றால், “தேசீயம் - தேசபக்தி என்பது வேறு எந்த விதத்திலும் பிழைக்க முடியாத அயோக்யர்களின் பிழைப்புக்கு கடைசி மார்க்கமாகும்” என்பதாகும்.

ஜார்ஜ் பர்நார்டு ஷா என்னும் மற்றொரு ஆங்கில அறிஞர், இதே விஷயமாய், “நிரந்தரமாய் ஒரு வேலையில் இருந்து வாழ முடியாதவர்கள், தங்களை அரசியல்வாதியாக ஆக்கிக் கொண்டு, அதிலேயே தங்களது வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளுவார்கள்” என்று எழுதி இருக்கிறார். இந்த அறிஞர்களின் அபிப்பிராயங்கள் பெரிதும் மேல் நாட்டு அனுபவத்தைப் பொருத்தது என்று சொல்லலாம். ஆனாலும், கீழ் நாட்டு தேசியம் என்பதும், பெரிதும் மேல் நாட்டு நடப்பைக் கண்டே ஆரம்பிக்கப் பட்டிருப்பதாலும், ஏதோ சில பெரியார்கள் தவிர, மற்றபடி பெரும்பான்மையான மக்கள், நமது நாட்டிலும் அப்படிப் பட்டவர்களுக்காகவே ஏற்பட்டு, அதுபோலவே தங்கள் வாழ்க்கைக்கு, தேசீயத்தை ஆதாரமாய் உபயோகப்படுத்தி, மக்களை ஏமாற்றி, நாணையம் சிறிதுமற்ற தன்மையில், சுயநலமிகளாய் இருந்து பயனடைந்து வருவதாலும், தப்பித் தவறி யோக்கியமானவர்கள் ஒருவர், இருவர் இதில் சேர்ந்தாலும், அவர்களும் அந்தத் துறையிலேயே இழுக்கப்படுகின்ற படியாலும், மேல் குறிப்பிட்ட அறிஞர்கள் கண்ட உண்மைகள் இந்தியாவுக்கு அடியோடு பொருத்தமற்றது என்று சொல்லி விடுவதற்கில்லை என்றே சொல்லுகின்றோம்.

இதற்கு உதாரணமாக, கொஞ்சகாலமாய் நமது நாட்டில் உள்ள ஜனப் பிரதிநிதி ஸ்தாபனங்கள் என்பவைகளில், ஜனப்பிரதிநிதிகளாய் நியமனம் - தேர்தல் முதலியவை பெற்ற கிராமப் பஞ்சாயத்து, தேவஸ்தானப் பஞ்சாயத்து வகையறாக்கள் முதல், மந்திரிகள், நிர்வாக சபையார்கள், கவர்னர்கள் என்கின்றவர்கள் வரையிலும், மற்றும், இந்த முறையில் அதிகாரம், சர்க்கார் சம்பள உத்தியோகம் முதலியவை பெற்ற சிப்பந்திகள், தலையாரி உத்தியோகம் முதல் கலெக்டர், ஹைகோர்ட் ஜட்ஜ் உத்தியோகம் வரையிலும் அவற்றில் உள்ளவர்களில் பெரும்பான்மையோர்கள் என்பது மாத்திரமல்லாமல், முக்காலே மூணுவீசம் முக்காணி அரைக்காணி வரையில் உள்ளவர்களின் யோக்கியதையும், அவர்களின் தேசீயம் - பொதுநல சேவை ஆகியவற்றின் தன்மைகளை சுத்தமான நடுநிலைமையிலிருந்து பார்த்தால் விளங்காமல் போகாது. ஆகவே, இந்தப்படி நாம் மேலே விவரித்தெழுதியதின் நோக்கம் எல்லாம் முக்கியமாய் தேசீயம் என்பது பதவியும், உத்தியோகமும், பணமும் சம்பாதிக்கும் மார்க்கமான வியாபாரத் துறையாகும் என்பதை, மக்களுக்கு வெளிப்படுத்தவே எழுதியதாகும். பொதுவாக, சுயநலமில்லாமலும், மோசம், ஏமாற்றுதல் ஆகியவை இல்லாமலும், தகுதிக் கும், தேவைக்கும் மேல் அடைய ஆசையில்லாமலும், நாணையமாய் உழைக்கக்கூடிய பெரியார்களும் இதில் உண்டு என்பதை நாம் மனமார ஒப்புக் கொள்ளுகின்றோமாயினும், அவர்கள், வெகு, வெகு, வெகு சிலரேயாகையால், அதைப்பற்றி கவனித்துக்கொண்டு, இவ்வளவு கெடுதலான விஷயத்தில் சிறிதும் தாக்ஷண்ணியம் காட்டுவது தவறு என்று கருதி மொத்தமாக எழுதுகின்றோம்.

இந்திய மக்களின் நிலைமை ஏழ்மை என்பதிலும், தரித்திரத்தால் கஷ்டப்படுகின்றார்கள் என்பதிலும், தினம் ஒன்றுக்கு, ஆள் ஒன்றுக்கு 2 அணா வரும்படிக்கும் குறைவாயுள்ள வரும்படிக்காரர்கள் என்பதற்கும், ஆட்சேபனை சொல்லுகின்றவர்கள் யாருமே காணோம். அப்படிப்பட்ட நாட்டில், தேசீயத்தின் பேரால், µ ஒன்றுக்கு 4333-5-4, 5333-5-4 6000-0-0, 7000-0-0 ரூபாய்கள் சன்மானமாக சம்பாதிப்பதும், பொதுநல சேவையின் பேரால் மாதம் ஒன்றுக்கு 1000, 2000, 3000, 4000 ரூபாய்கள் வீதம் சம்பளம் சம்பாதிப்பதும், பொது ஜன நன்மைக்கு உபகாரமான வேலை (வக்கீல் தொழில்) முதலியவைகள் என்னும்பேரால் µ 1க்கு 10000, 20000, 30000 ரூபாய்கள் வரையில் சம்பாதிப்பதும், மற்றும் பல சாதாரண உத்தியோகங்களிலும், இதுபோலவே, µ ஒன்றுக்கு 100, 500, 1000, 2000 வீதம் சம்பளம் பெறுவதுமான காரியங்கள் எப்படி தேசபக்தியானதும், தேசீயமானதும், யோக்கியமானதுமான காரியங்களாகும் என்று கேட்கின்றோம்.

ரூ 1க்கு பட்டணம் பக்காவில் 6 படி அரிசி விற்கின்ற இந்தக் காலத்தில், வெள்ளாமை விளைபொருள்களுக்கு விலை இல்லாத காலத்தில், கைத் தொழில் தொழிலாளர்களுக்கு போதிய தொழிலும், கூலியும் கிடைக்காத காலத்தில், வியாபாரிகளுக்கு வியாபாரமும், பணப்புழக்கமும், வறும்படியும் இல்லாமல் கஷ்டப்படும் இக்காலத்தில், ஒரு பெரிய நாடு கண்கள் பிதுங்க, தத்தளித்துக் கொண்டு கஷ்டப்படுகின்ற நெருக்கடியான நிலைமையில், தேசீயத்தின் பேராலும், பொது நல சேவையின் பேராலும், இந்தப்படி ஒரு கூட்டம் மக்களை கொள்ளை அடித்தால், இந்த மாதிரி தேசீயமும், பொது நல சேவையும், யோக்கியமானதும், மதிக்கத் தகுந்ததும் ஆகுமா என்றும் கேட்கின்றோம்.

இந்த மாதிரியான அயோக்கியத் தனங்களையும், பித்தலாட்டங்களையும், ஏழைகளை, பாமரமக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தந்திரங்களையும், தந்திரத்திற்கு ஆதாரமானவைகளையும், தேசீயம், தேச சேவை, பொதுநல சேவை என்று ஒப்புக்கொண்டு, அவற்றிற்கு உதவி புரிய வேண்டுமென்றால், அயோக்கியனாகவோ, முட்டாளாகவோ இருந்தால் ஒழிய, எப்படி முடியும் என்றும், நாம் மறுபடியும் கேட்கின்றோம். தேசீயம் என்பது, வியாபாரம் என்பதாக நாம் குறிப்பிட்டதற்கு யார் கோபித்துக் கொள்வதானாலும், தேசீயத்தில் ஈடுபட்ட பெரும்பான்மையானவர்கள். அதை ஒரு வியாபாரம் போல் பாவித்து, கை முதல் போட்டு, தேசீயத்தையோ பொதுநல சேவையையோ அல்லது இவை செய்வதற்கு ஆதரவானது என்ற தேர்தல்களையோ நடத்தி, வெற்றி பெற்று, மேல்கண்ட முதலுக்கு 100க்கு 100 வட்டியுடன், சில சமயங்களில் அதற்கு இரட்டிப்பு லாபத்துடன் பயன் அடைந்து, நாணையம், ஒழுக்கம் எல்லாவற்றையும் துறந்து, வாழ்க்கை நடத்துகின்றார்களா? இல்லையா? என்றும் கேட்கின்றோம். அன்றியும், இப்படிப்பட்ட காரியம், இனி மேல் நடக்காமல் இருக்கவாவது யாராவது எந்த உண்மை தேசீயவாதியாவது முயற்சிக்கின்றார்களா? கருதுகின்றார்களா? என்றும் கேட்கின்றோம்.

தேசீயக் கிளர்ச்சி என்னும் பேரால், இந்தியமக்களுக்கு இன்று கிடைத்துள்ள ஒவ்வொரு சீர்திருத்தமும் இந்தக்காரியத்திற்கே உபயோகப்பட்டிருப்பதல்லாமல், வேறு ஏதாவது ஒரு காரியத்திற்கு உபயோகப்பட முடிந்ததா என்றும் கேட்கின்றோம். அன்றியும், பதவியில் இருக்கும் நபர்கள் மேல் - அவர்களது கூட்டத்தின் மேல் போட்டி போட்டு, குற்றம் சொல்லித் திரியும் ஆட்களோ, அன்றி, மற்றொரு கூட்டத்தாரோ, தாங்கள் எப்படியாவது அந்தப் பதவியைப் பெற்று, அந்த லாபத்தை அடைய முயற்சி செய்வதைத் தவிர, மற்றபடி வேறு ஏதாவது நாணயமோ, யோக்கியப் பொறுப்போ உடையவர்களாக இருக்கின்றார்களா என்றும் கேட்கின்றோம்.

உதாரணமாக, நாளது வரையில், எந்த மந்திரி சபையை யார் கவிழ்க்க முயற்சித்தாலும், எந்த வித நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து கலைக்க முயற்சித்தாலும், எந்த நிர்வாக சபை அங்கத்தினரை எப்படி தாக்கினாலும், அந்தந்த நபர்கள் மீதோ, கூட்டத்தின் மீதோ, நடவடிக்கைகள் மீதோ குற்றம் சொல்லுவதைத் தவிர, அவருக்கு ரூ. 4333-5-4-ம், 5333-5-4-ம் எதற்கு என்றாவது ஏன் ரூ. 1000 போறாது ரூ. 500 போறாது என்றாவது யாரும் கேட்பதேயில்லை. உதாரணமாக, இன்றையத் தினம், சென்னை சட்ட சபையில் உள்ள மந்திரிகள் மீது பொறாமை கொண்டு, அவர்களைக் கவிழ்க்க ஒரு கூட்ட ஆசாமிகள் ஆகாயத்திற்கும், பூமிக்குமாய் முயற்சி செய்து கொண்டுவருவது யாவரும் அறிந்ததே யாகும். அது போலவே, இப்பொழுது மந்திரியாயிருக்கும் ஆசாமிகளைச் சேர்ந்த கூட்டமும் முன் மந்திரியாய் இருந்தவர்களைக் கவிழ்க்க முயற்சி செய்து, பயனடைந்ததும் யாவருக்கும் தெரியும். ஒவ்வொரு கூட்டமும் இந்த முயற்சியில் வரும்படியை உத்தேசித்து, தக்க பணச்செலவு செய்து, பலாபலன் அடைந்தது யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். ஆனால், இதிலுள்ள தந்திரமும், புரட்டும், சுயநலமும் என்னவென்றால், இரண்டு கூட்டமும், இன்னும் இரண்டொரு வெளவால் கூட்டமும், தேசீயத்திற்காகவும் பொதுஜன நன்மைக்காகவுமே மந்திரியாக வேண்டுமென்று சொல்லிக் கொண்டு பாடுபட்டும், நாளதுவரை ஒருவராவது மந்திரிகள் சம்பளத்தை தேவைக்குள்ள அளவுக்குக் குறைத்துக் கொள்வதாய்ச் சொல்லவே இல்லை என்பதும், அந்தத் துறையில் இதுவரை யாரும் பாடுபடவில்லை என்பதுமாகும்.

மந்திரிகள் சம்பளத்தால், வெகுபணம் மீதியாகிவிடும் என்கின்ற எண்ணத்தின் மீதே, நாம் இந்தப்படி எழுதவில்லை. ஆனாலும், மந்திரிகள் சம்பளம் குறைவுபட்டு அது ஒரு குடும்பத்தின் கவலையற்ற வாழ்க்கைக்கு போதுமான அளவுக்கு குறைக்கப் பட்டாலொழிய மந்திரி பதவி என்பது நாணயமாகவும், யோக்கியமாகவும், நடுநிலைமையாகவும், ஒழுக்கமுள்ளதாகவும் இருக்க முடியாது என்பதோடு, மற்ற ஜனங்களுக்கும் தேசீயத்தின் பேராலும், பொதுநல சேவையின் பேராலும் செய்யப்படும் ஒழுக்க ஈனமான காரியங்கள் நிறுத்தப்பட முடியாது என்கின்ற எண்ணத்தின் மீதே எழுதப்படுவதாகும்.

சென்னை மாகாணத்தைப் பொருத்தவரை, நமக்கு மூன்று கிளர்ச்சி களின் அனுபோகமும், நான்கு தேசிய ஸ்தாபனங்களின் அனுபோகமும், அநேக தேச பக்தர்கள் அனுபோகமும், நான்கு மந்திரி சபைகள் அனு போகமும், பல ஜனப்பிரதிநிதி சபைகள் அனுபோகமும், அநேக மேல்தர, கீழ்தர உத்தியோக சேவைக்காரர்களின் நெருங்கிய பழக்கத்தால் ஏற்பட்ட அனுபோகமும் உண்டு. இவைகளின் கொள்கைகளைப் பற்றி, பிரசாரத்தைப் பற்றி, நடத்தையைப் பற்றி பலமாறுதல்கள் இருந்தாலும், இவைகளில் கலந்துள்ள தனிப்பட்ட மக்களின், 100-க்கு 99 முக்கால் பேர்களின் யோக்கியமும், நாணயமும், லட்சியமும் ஒன்றேயாகும். எல்லோரும் ஏழைகளை, பாமர மக்களை வஞ்சித்து, கொள்ளையடித்து, பணம் சம்பாதித்து, பெரிய மனிதர்கள் ஆக வேண்டும் - பட்டம், பதவிகள் பெற வேண்டும், தங்கள் பிள்ளை, குட்டி சந்ததிகளுக்கு உத்தியோகங்கள் பெற வேண்டும் - என்பவைகளையே முக்கிய தத்துவமாய் - கொள்கையாய்க் கொண்டவர்கள் என்பதை, தூக்குமேடை மீதிருந்தும் சொல்லுவோம்.

இது மாத்திரமல்லாமல், யெந்தவிதமான யோக்கியர்களையும், இன்றைய தேசீயமானது அயோக்கியர்களாக்கத் தயாராயிருப்பதோடு, வெளியில் இருக்க முடியாமல் உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்ளுகின்றதாகவே இருக்கின்றது.

ஆகவே, இன்றைய தினம், எந்த மாகாண சட்டசபையிலும், அதிகாரத்திலும் பதவியிலும் இருக்கின்ற கட்சிகள் மீதோ, மந்திரிசபை மீதோ, எந்த தேசீயக் கட்சியாவது, பொதுநல சேவைக் கட்சியாவது உண்மையான, யோக்கியமான போட்டி போடுவதாயிருந்தால், அவர்கள் முதலில் செய்ய வேண்டிய முக்கியமான, யோக்கியமான காரியம் மந்திரிகளுக்கு µ 1 க்கு 1000 ரூ. சம்பளமும், மந்திரி உத்தியோகம் உள்ளவரை வீட்டு வாடகையும் தவிர, வேறு ஒன்றும் இருக்கப்படாது என்பதும், மற்ற மரியாதை, படி முதலியவைகளும் ஒரு சட்டசபை அங்கத்தினருக்கு சமானமானதாகவே இருக்க வேண்டும் என்கின்ற ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, நிறைவேற்றி வைக்க முயற்சிக்க வேண்டியதாகும். அப்படிக்கில்லாமல், மந்திரிகளுக்கு விரோதமாய் என்று ஒரு கட்சியை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு எதிராக உட்கார்ந்து கொண்டு, அவர்களைத் தோற்கடித்து, அந்தப் பதவியைப் பெறுவது என்று கருதி, இரவும், பகலும் முயற்சி செய்து கொண்டு இருப்பதுடன், இதை ஒரு தேசீய வேலையென்றும் சொல்லிக் கொண்டு இருந்தால், இதைப் போன்ற சுயமரியாதை அற்றதும் நாணையமற்றதும், யோக்கியப் பொறுப்பும், ஒழுக்கமும், பொதுநல சேவையுமற்றதுமான வேலை, வேறு ஒன்றும் இல்லை என்று வலியுறுத்திச் சொல்லுவதோடு, தேசீயம் என்று சொல்லுவது ஒரு மோசடி வியாபாரம் என்பதற்கும், இதையே உதாரணமாய் எடுத்துக் காட்டுவோம்.

நிற்க, இன்றைய தினம், நாட்டில் நடைபெறும் தேசியக் கிளர்ச்சிகள் பலவற்றில் கலந்துள்ளவர்களைப் பற்றிப் பேசுவதானாலும், ஏதோ சிலர் தவிர, மற்றப்படியான 100-க்கு 90 மக்கள் ஆங்கிலம் படித்த வக்கீல்கள், இயக்கத்தை நடத்துகின்ற உள்நாட்டுத் தலைவர்கள் ஆகியவர்கள் இந்த தேச சேவையைக் காட்டி அல்லது இதன் பயனாய் நாளைத் தேர்தல்களில், இம்மாதிரியான பயன்களையே பெருவதுமல்லாமல் மற்றபடி வேறு என்ன செய்யக்கூடும் - என்ன செய்யப் போகின்றார்கள் என்றும் கேட்கின்றோம். ஆகவே இந்தக் காரணங்களால்தான், தேசீயத்தை வியாபாரம் என்று சொல்லுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 01.03.1931)

Pin It