தூத்துக்குடி மகாநாடு
சுயமரியாதை இயக்க சம்மந்தமான மகாநாடுகளும், பிரசாரக் கூட்டங்களும் தமிழ் நாட்டில் எவ்வளவு மும்மரமாக நடைபெற்று வருகின்றது என்பதோடு அதன் கொள்கைகள் நடைமுறையில் நடந்து எவ்வளவு பயன் அளித்து வருகின்றதென்பதைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துக் காட்டவேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம்.
இவ்வியக்கப் பிரசாரத்தில் ஒரு பாகம் காங்கிரசையும், காந்தீயத்தையும், தாக்கியும், உப்புச் சத்தியாக்கிரகத்தை எதிர்த்தும் வந்ததாகும் என்பதை நாம் யாரும் எடுத்துக்காட்ட வேண்டிய அவசியமில்லாமலே ஒப்புக் கொள்ளுகிறோம். அதோடு மாத்திரமல்லாமல் (நாம் சென்ற வருஷ ஆரம்பத்தில் தெரிவித்தது போலவே) இதன் பயனாய் நம்மீது பலருக்கு அதிருப்தியும், துவேஷமும், கோபமும் ஏற்பட்டு நமக்கும், நமது பத்திரிகைக்கும் விரோதமாகப் பலவித எதிர்ப் பிரசாரங்கள் செய்ய நேர்ந்ததும், அதனால் பல சில்லரைச் சங்கடங்கள் விளைந்ததும் பலர் அறிந்ததேயாகும். எப்படி யிருந்த போதிலும் ஆரம்பத்தில் நாம் வெளிப்படுத்திய கொள்கைகளில் சிறிதும் விட்டுக் கொடுக்காமலும், அவை சம்மந்தமான நமது அபிப்பிராயத்தை நாம் ஒண்டியாய் இருந்த போதிலும் சிறிதும் மறைக்காமலும் நமக்குச் சரி என்று பட்டதை யெல்லாம், பல நண்பர்களும் நமது நன்மையில் பற்றுள்ளவர்களும் தடுத்தும் தாராளமாய் எழுதிக் கொண்டும், பிரசாரம் செய்து கொண்டுமே வந்தோம். அதன் பலன் என்ன ஆயிற்று என்பதைப் பற்றி அறிய விரும்புகின்றவர்கள் காங்கிரசின் நடவடிக்கைகளையும், காங்கிரசின் சென்ற வருஷ நடவடிக்கையின் அறிக்கையையும் கவனித்துப் பார்த்தால் தாராளமாய் விளங்கிவிடும்.
சுமார் 4 வருஷங்களுக்கு முன்பாக திரு.காந்தியவர்கள் தமிழ் நாட்டில் கதர் பண்டுக்குப் பணம் வசூலிக்க வந்த சமயத்திலும் நாம் ஒருவரேதான் அதற்கு எதிராகப் பிரசாரம் செய்து பண வசூலைக் கண்டித்து வந்தோம். மற்ற பத்திரிகைகளும், தேசீயவாதிகளும், மற்றும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் உள்பட அநேகர் அதை ஆதரித்ததுடன், பணமும் உதவி வந்ததோடு நம்மையும் கண்டித்து வந்தார்கள். அதனால் எவ்வித பலமான பயன் ஏற்படா விட்டாலும். ஒரு சிறு அளவுக்காவது அவரது வசூல் பாதிக்கப்பட்டது என்பதைப் பலரும் ஒப்புக் கொண்டார்கள் என்பது மாத்திரமல்லாமல் அது நடந்த கொஞ்ச நாளிலேயே அதற்குப் பணம் கொடுத்தவர்கள் உள்பட அநேகர் அக்காரியத்தில் தாங்கள் நடந்து கொண்டதற்கும், பணம் கொடுத்ததற்கும் வருந்தினார்கள் என்பதில் சந்தேகமில்லை. உதாரணம் வேண்டுமானால் அதே திரு.காந்தியவர்கள் இப்போது தமிழ் நாட்டில் பணவசூலுக்கு வந்தால் என்ன ஆகுமென்பதை நினைத்தால் விளங்கும்.
அதுபோலவே உப்புச் சத்தியாக்கிரத்தைப் பற்றியும் நாம் கண்டிக்கும்போது பலர் நம் மீது வருத்தப்பட்டிருந்தாலும் அதனால் ஏற்பட்ட பலன் என்ன என்பதையும் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட கஷ்டம், நஷ்டம் ஆகியவை எவ்வளவு என்பதைக் கவனித்தவர்களுக்கு ஒருவாறு விளங்கி இருக்கும்.
கோயில், குளம் உற்சவம் முதலியவைகள் எவ்வளவு அநாகரீகமானதும், ஒழுக்கக் குறைவானதும், அறிவற்றதும், நஷ்டமும் நாட்டுக்குக் கேடும் உள்ளதுமாயிருந்தாலும் பூசாரிகளும், புரோகிதர்களும், புராணக்காரரும், புலவர்களும், புஸ்தகக் கடைகாரர்களும் உள்ளவரை எப்படி அவை ஒழியாதோ, ஒழிப்பதும் மிக்கக் கஷ்டமோ அதுபோலவே காங்கிரசும் காந்தீயமும், கதரும், தேசீயம் சுயராஜியம் என்பவைகளும் எவ்வளவு பித்தலாட்டமானதானாலும், நாட்டு முற்போக்கிற்கு விரோதமானதானாலும், சுதந்திரத்திற்கும், சமதர்மத்திற்கும் முட்டுக்கட்டை போடுவதானாலும் பலரின் சுயநல வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்விற்கும் மாத்திரம் பயன்படுவதானாலும், பார்ப்பனரும், படித்தவர்களும், வக்கீல்களும் பதவி, பட்டம் பெற ஆசைப்பட்டவர்களும், பத்திரிகை பிழைப்புக்காரர்களும், ‘தேச பக்தர்களும்’ ‘தேசீய வீரர்களும்’ கதர் வியாபாரிகளும், கதர் தொண்டர்களும் உள்ளவரை நிலைத்துத்தான் தீரும். அதை ஒழிப்பதும் சுலபமான காரியமல்ல. ஆகையால், எதிர் பிரசார அளவுக்கு உடனே பயன் எதிர்பார்க்க முடியாது என்பது மாத்திரமல்லாமல் அதனால் நமக்கு கஷ்டமும் உண்டாகலாம் என்பதும் நமது அபிப்பிராயமாகும்.
ஆன போதிலும் நம்மைப் பொருத்தவரை நாம் தைரியத்தை விடவில்லை, அபிப்பிராயங்களில் சந்தேகமில்லை. நம்பிக்கையில் குறைவேற்படவில்லை எதற்கும் முயற்சியையும் ஊக்கத்தையும் சிறிதும் தளர்த்திக் கொள்ளவில்லை. ஒரு பத்து வருஷம் பொருத்தாவது நமதபிப்பிராயத்தைச் சரி யென்று மக்கள் ஒப்புக் கொள்ளுவார்கள் என்கின்ற தைரியத்துடனேயே நமது வேலையைச் செய்து வருகின்றோம்.
இன்றைய தினம் கடவுள் அவதாரம், லோககுரு என்கின்ற சங்கராச்சாரியார்கள் படுகின்ற பாட்டுக்கும், பண்டார சன்னதிகள் மகாசன்னிதானங்கள் என்னும் மடாதிபதிகள் படுகின்ற பாட்டையும் பார்த்தால் வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம், கடவுள், கடவுள் அவதாரம், ஆழ்வார், நாயன்மார்கள் என்கின்றவைகள் படுகின்ற பாட்டைப் பார்த்தால் அவைகளைவிட எத்தனையோ பங்கு தாழ்ந்ததாய் மக்களால் மதிக்கப்படும் காங்கிரசும், காந்தீயமும், கதரும் ஒரு காலத்தில் சிரிப்பாய் சிரிக்கப்படும் என்பதில் யாருக்கும் ஆட்சேபணையோ பயமோ வேண்டியதில்லை என்று தைரியமாய்ச் சொல்லலாம். ஏனெனில் முன் சொல்லப்பட்ட காரியங்களில் நம்பிக்கையும், பக்தியும், பிழைப்புக்கு மார்க்கமும் கொண்டவர்களாலேயே தான் பின் சொல்லப்பட்டவைகளிலும் நம்பிக்கையையும் பக்தியையும் பிழைப்புக்கு மார்க்கமும் கொள்ளப்பட்டனவாக இருக்கின்றன.
ஆகவே அவர்களது புத்தி இரண்டிலும் ஒன்று போலவே தான் சொல்ல முடியும் என்பது விஞ்ஞான தத்துவமான உண்மையாகும். ஆகையால் ஏதோ ஒரு வழியில் நாம் மக்களுக்கு பகுத்தறிவை உண்டாக்கி விட்டோமேயானால் பிறகு அவர்கள் எல்லாவற்றையும் ஒரே கண்ணாடி கொண்டு பார்த்து உண்மையை உணரக்கூடியவர்களாகி விடுவார்கள் என்பதோடு இந்த தொண்டைத்தான் சுயமரியாதை இயக்கம் செய்து வருகின்றது என்றும் சொல்லுகின்றோம். இதற்காகவே ஆங்காங்கு மகாநாடுகள் கூட்டி தீர்மானங்கள் செய்யப்பட்டும் வருகின்றன.
அப்படிச் செய்யப்படுபவைகளில், இதுவரை நடந்து வந்த மகாநாடுகளில் தூத்துக்குடியில் நடந்த திருநெல்வேலி ஜில்லா 4 வது சுயமரியாதை மகாநாட்டை ஒரு முக்கியமான மகாநாடு என்றே சொல்லலாம். எதனாலெனில் அது கூட்டப்பட்ட இடம், அதன் தலைவர் அங்கு நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் ஆகியவைகளினாலேயாகும். திருநெல்வேலி ஜில்லா தான் முதல்முதல் சுயமரியாதை மகாநாட்டைக் கூட்டியது. அவற்றுள் தூத்துக்குடியானது மிகவும் உணர்ச்சியுள்ள ஊராகும். அதன் தலைவர் சுயமரியாதை இயக்கத்தின் உருவமாய் விளங்குபவர். தீர்மானங்களோ சுயமரியாதை இயக்கத்தின் மிகவும் உறுதியும் தைரியமும் கொண்ட உண்மை தோற்றமாகும். மகாநாட்டுத் தலைவர் உபன்யாசமானது தைரியமாக உண்மைகளை வெளிப்படுத்திய ஒரு முக்கிய தஸ்தாவேஜு என்றே சொல்லலாம்.
அதாவது, தலைவர் தமது உபந்யாசத்தில் சொல்லி இருப்பதில் காணப்படுபவைகளாவது,
“இந்திய மக்களின் அடிமை நிலைக்கு அவர்களது குருட்டுப் பழக்க வழக்கங்களே காரணம். இந்து முஸ்லீம் சச்சரவுகளுக்கு நமது மகாத்மாதான் காரணம். ஏனெனில் மதப்பூசல்களை ஒழிப்பதற்கு (இந்துக்களும், முஸ்லீம்களும்) அவரவர்கள் மதக்கட்டளைப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும், இந்து மதத்தையும் இஸ்லாம் மதத்தையும் மேலும் மேலும் விர்த்தி செய்து வளர்க்க வேண்டுமென்று மகாத்மா காந்தி சொல்லுகிறார்.
ஆனால் அவர் சொல்லுகின்றபடி இந்து மதமும் இஸ்லாம் மதமும் இனியும் மேலும் மேலும் வளர்க்கப்பட்டால் கான்பூரில் நடந்த கலகமே தூத்துக்குடியிலும் நடைபெறும் என்பதில் சந்தேகப்பட வேண்டியதில்லை.
பாம்பையும் மரத்தையும் வணங்கி பேயையும் பிசாசையும் கள்ளும் சாராயமும் வைத்து பூசித்து ஆண் பெண் குறிகளை சிலையாக பூசனை செய்து அடையாளமாக நெற்றியில் தரித்துக் கொள்வதாய் இருக்கின்ற மதம் எந்த மதம் என்று கேட்கின்றேன்.
இந்து மதத்தில் தேவ அசுரர் சண்டையும் கிறிஸ்தவர் நடத்திய குரூசேட் சண்டையும், இஸ்லாம் மதத்தினர் நடத்திய ஜிஹாத் சண்டையும் ( மனித சமூகத்தில் அன்பை விளைவித்தவைகள் ஆகுமா) குரோதத்தையே விளைவித்தன.
கடவுள் என்பது ஒரு விளையாட்டு சாமான். சுவர்க்கம் மோட்சம் என்பவை தின்பண்டங்கள். நரகம் என்பது ஒரு பூச்சாண்டி. இம்மாதிரி கற்பனைகள் எல்லா மதத்தையுமே பற்றிக் கொண்டிருக்கின்றன.
சுயமரியாதை இயக்கம் எந்த மதத்தையும் தனிப்பட்டு தாக்கவில்லை. மதம் எல்லாம் ஒருங்கே அழிந்து போனால் மாத்திரம் மனித சமூகம் முன்னேறும் என்று சொல்லுகிறது. ஆனால் ஹிந்து மதம் மிகவும் மோசமானது. அது மனிதனை மிருகப்பிராயத்தில் வைத்திருக்கிறது.
திலகருக்கும் தாசருக்கும் இறுதிச் சடங்குகள் வெகு ஆர்பாட்டமாய் செய்யப்பட்டன. மோதிலால் நேரு அவர்கள் காயத்திரி மந்திரம் ராம பஜனை முதலியவை நடத்தி மோட்சத்திற்கு அனுப்பப்பட்டார். அவரது குமாரர் தகப்பனார் அஸ்தியை பிரயாகை ஆற்றில் விட்டார்.
இவைகள் நடத்தப்பட முடியாத கோடிக்கணக்கான மக்கள் நரகத்திற்கு போகின்றவர்களா என்று கேட்கின்றேன்.
மகாத்மாக்களும் தலைவர்களுமே இக்கதியானால் பாமர மக்கள் கதி என்ன?
கர்மாவை நம்பினவன் கடைத்தேற மாட்டான். விதியை நம்பினவன் மதியை இழப்பான்.
மூட எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் அகற்றவே சுயமரியாதை இயக்கம் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது.
தத்துவார்த்தம் ஓவியம் என்கின்ற சாக்கால் கோயில் கொடுமைகளும் புராண ஆபாசங்களும் நிலைத்திருக்கின்றன.
கொல்லாவிரதம் பூண்டவர் (மகாத்மா) கீதைக்கு தத்துவார்த்தம் சொல்லி புகழலாம். உயிர்க்கொலை செய்த யாகத்தை மறியல் செய்த பெண்மணியைக் கொன்றவனும், பார்ப்பான் செய்யும் தபசை ஒரு 'சூத்திரன்' செய்ததற்குமாக 'சூத்திரனைக்' கொன்றவனும் ஆன ஒரு அரசனை இராமாயணம் புகழ்கின்றது.
இத்தகைய நூல்களும் பாத்திரங்களும் காவியத்திற்கும் ஓவியத்திற்கும் ஆதாரமாய் இருந்தால் அத்தகைய காவியமும் ஓவியமும் அழிவதே மேல்.
அமெரிக்காவில் நீகிரோவர் துயரத்திற்கு எந்த நிற இருமாப்பு காரணமோ அதே நிற இருமாப்பு தான் நமது நாட்டுத் தீண்டாமைக்கு காரணமாயிருக்கிறது.
இது ஆரியர் ஆதிகாலத்தில் நமது நாட்டில் குடியேறியபோது பழங்குடி மக்களை அசுரர் ராக்ஷதர், மிலேச்சர், பஞ்சமர், சூத்திரர் என்று இழிவுபடுத்தக் காரணமாய் இருந்தது.
தீண்டாமை என்பது ஏணிமரப்படி போல் இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் பீடித்திருக்கின்றது.
தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்று பேசும் இந்திய தலைவர்கள் வருணாச்சிரம தர்மத்தை ஒழிக்க ஒருப்படுவதில்லை.
தீண்டப்படாதாரை விட பெண்கள் கேவலமாய் நடத்தப்படுகின்றார்கள். அவர்களுக்கு சொத்துரிமை இல்லை. அவர்கள் மற்றவர்களின் சொத்தாயிருக்கின்றார்கள். ஆண்களின் உபயோகத்திற்கு உண்டாக்கப்பட்டவர்கள் என்று கருதப்படுகிறார்கள். பெண்களை அடிமைப்படுத்தி வைப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட சாதனத்திற்கு மணம் என்று பெயர். பெண்களுக்கு விடுதலை வேண்டுமென்றால் இச்சடங்கு ஒழிய வேண்டும். ஆணும் பெண்ணும் தங்கள் முழு சம்மதத்தினால் கூடி வாழ வேண்டும், கூடியபிறகு இஷ்டமில்லாவிட்டால் பிரிந்து கொள்ள வசதி வேண்டும்.
மக்கள் தனித்தனியாய் வேலை செய்வது அற்றுப்போய் கும்பல் கும்பலாய்க் கூடி வேலை செய்ய வேண்டியதாக ஏற்பட்டன. மனிதன் நெற்றி வியர்வை நிலத்தில் விழும்படி செய்த வேலைகள் மறைந்து இயந்திரங்களால் அதிக கஷ்டமில்லாமல் வேலை செய்யப்படும் சௌகரியங்கள் ஏற்பட்ட காலத்தில் இந்திய காங்கிரஸ் ஒவ்வொருவனும் தனக்கு வேண்டிய துணியையும், உப்பையும் தன்னையே செய்து கொள்ளும்படி சொல்லுவது தேச முன்னேற்றத்திற்கு ஒவ்வாத காரியமாகும்”.
என்பதாகவும் மற்றும் பல விஷயங்களை பல தத்துவ ஆராய்ச்சியுடன் பேசியிருக்கின்றார். இப்படி பேசியிருக்கும், திரு. ராமநாதன் அவர்கள் வைதீக ஒத்துழையாதார் கோஷ்டியில் இருந்தவர் என்பதோடு திரு. காந்தி அவர்களின் நன்நம்பிக்கையைப் பெற்ற பிரதம சீடர்களின் ஒருவராய் இருந்தாரென்பதையும் வாசகர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு அவரது உபன்யாசத்தைப் படித்துப் பார்க்க வேண்டுமாய் ஆசைப்படுகின்றோம்.
இவரது உபன்யாசம் முழுவதையும் கவனத்துடன் கூர்ந்து வாசித்தால் திரு. காந்தியவர்களின் ஒவ்வொரு திட்டமும் ஆட்சேபிக்கப் படுவதுடன் அதனால் மக்களுக்கு ஏற்படும் கெடுதியும் நன்றாய் விளங்கும். இதில் எந்த அபிப்பிராயமாவது சரியான முகாந்திரம் காண்பித்து எதிர்க்கவோ கண்டிக்கவோ கூடியதாய் இருக்கின்றதா என்பதை அறிஞர்கள் ஆலோசித்துப் பார்க்க விரும்புகிறோம். சுயமரியாதை இயக்கம் காந்தீயத்தையும் காங்கிரசையும் கதரையும் ஆட்சேபிப்பதின் தத்துவமும் இதுவே யாகும்.
ஆதலால்தான் தூத்துக்குடி மகாநாட்டில் சில தீர்மானங்கள் செய்யப்பட வேண்டியதாயிற்று. என்னவெனில் திரு. காந்தியவர்களிடம் (அதாவது காந்தீயத்தில்) நம்பிக்கை இல்லை என்பதாகவும், எதற்காக நம்பிக்கை இல்லை என்பதை விளக்கமாக அத்தீர்மானத்தில் விளக்கப்பட்டும் இருக்கின்றது. ஏனெனில் யாருக்காவது அத்தீர்மானத்திற்கு ஆட்சேபணை சொல்ல ஆசை இருந்தால் அவர்களுக்கு விபரம் தெரிய சௌகரியம் இருக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே காரணங்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. அதென்னவெனில்
- “மதத்தின் பேரால் நடைபெறுகின்ற மூடநம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் கையாளுவதாலும்,
- தனது செய்கைகளுக்கும் பேச்சுகளுக்கும் கடவுளே காரணம் என்பதாக அடிக்கடி சொல்லி வருவதால் ஜனங்களின் பொறுப்பும் தன் நம்பிக்கையும் தன் முயற்சியும் அற்றுப் போவதாலும்,
- வருணாச்சிரமம் ராமராஜியம் மனுஸ்மிருதி முதலிய பழய கொடுங்கோன்மையான ஏற்பாடுகளை மறுபடியும் திரும்பிக் கொண்டு வர முயற்சிப்பதாலும்,
- நமது நாட்டில் இயந்திர வளர்ச்சியை தடை செய்து வருவதாலும் சமதர்மக் கொள்கைக்கு விரோதியாய் இருப்பதாலும் திரு. காந்தியவர்களிடத்தில் நம்பிக்கை இல்லை” என்று தீர்மானித்திருக்கின்றது.
இந்தத் தீர்மானத்தை ஆட்சேபிக்கின்றவர்கள் பகுத்தறிவற்றவர்களுக்கும் சுய அறிவற்றவர்களுக்கும் சுயநலக்காரர்களுக்கும் பாமர மக்களுக்கும் நல்ல பிள்ளையாவதற்கு ஆசைப்பட்டு தந்திர புத்தியுடன் சூட்சி திறங்களுடன் இத்தீர்மானத்தைக் கண்டிக்கின்றோம் என்று சொன்னால் நாம் அதை சிறிதும் ஒப்புக்கொள்ளமாட்டோம். மேலும் அதை பயங்காளித் தனம் என்று தான் சொல்லுவோம். ஏனெனில் தீர்மானத்தில் குறிப்பிட்ட குணங்கள் திரு. காந்தியிடம் இருக்கின்றதா இல்லையா? என்றும் அக்குணங்கள் சுயமரியாதை இயக்கக் கொள்கைக்கு முரண்பட்டதா இல்லையா என்றும் சுயமரியாதைக்காரர்கள் இக்கொள்கை யுடையவர்களிடம் நம்பிக்கை வைக்க முடியுமா யென்றும் விபரமாக காரணங் காட்டி ஆட்சேபிக்க வேண்டியது சுயமரியாதையுடையவர்கள் கடமையாகும் என்று தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இம்மகாநாட்டில் இத்தீர்மானம் கொண்டு வந்தவர்களின் உத்தேசமும் காரணமும் என்னவென்றால் “கராச்சி காங்கிரஸ் கொள்கைகளில் மக்கள் ஜீவாதாரவுரிமைக் கொள்கைகள் என்பவையெல்லாம் சுயமரியாதைக் கொள்கைகளே” என்றும், “இனி காங்கிரசுக்கும் காந்தீயத்திற்கும் சுயமரியாதை இயக்கத்திற்கும் வித்தியாசமேயில்லை” யென்றும், “சுயமரியாதை இயக்கக்காரர்கள் எல்லாம் காங்கிரசில் சேர்ந்துவிடலாம்” என்றும், சிலர் “சுயமரியாதை இயக்கமே தேவையில்லை” யென்றுங்கூட சொல்ல வந்ததாலும் பாமர மக்கள் இதை நம்பி ஏமாந்து போகாமல் இருக்கவும் சரியான கொள்கைகள் காங்கிரசு, ஒப்புக்கொள்ளும் வரை காங்கிரசுக்கும் சுயமரியாதை இயக்கத்திற்கும் இடையில் வேலியிருக்க வேண்டுமென்றும், எந்தக் காரணம் கொண்டும் சுயமரியாதை இயக்கக்காரர்கள் காங்கிரசில் கலந்து கொள்வதின் மூலம் இரண்டிற்கும் வித்தியாசம் இல்லையென்று பாமர மக்கள் நினைத்து ஏமாந்து போகாமல் இருக்க வேண்டும் என்கின்ற ஆசையாலேயே காந்தீயத்திற்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் உள்ள வித்தியாசங்களை எடுத்துக் காட்டவே இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டதாகும்.
இனி மற்றொரு தீர்மானமென்னவென்றால்,
“இந்தியா உண்மையான விடுதலை பெறுதவற்கு வருணாச்சிரம மத வித்தியாசங்களை அடியோடு அழித்து கடவுள், மோட்சம், கர்மபலன், மறுப்பிறப்பு, விதி முதலிய விஷயங்களில் இருந்துவரும் மூட நம்பிக்கையை ஒழித்து, தன்நம்பிக்கையையும் தன் முயற்சியையும் உண்டாக்கும் படியான கொள்கைகளை மக்களுக்கு புகட்டி, பூமிக்கு உடையன் - குத்தகைக்கு உழுபவன், முதலாளி - தொழிலாளி, ஆண் - பெண், மேல் ஜாதி - கீழ்ஜாதி என்ற பேதங்களை அகற்றி தொழில் முறைகளிலும், சமூக வாழ்விலும், அரசியலிலும் சகலருக்கும் ஈடுபட அவகாசமும் சம அந்தஸ்தும் சம உரிமையையும், சம ஊதியமும் கிடைக்கக்கூடிய முறையில் நமது சமூகத்தை திருத்தியமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று இம்மகாநாடு கருதுகின்றது”
என்பவைகளாகும்.
ஆகவே உண்மையான விடுதலைக்கு இந்திய மக்கள் இப்போது செய்ய வேண்டிய வேலையிதுவே யாகும். இந்த வேலைத் திட்டம் காங்கிரசிலோ, காந்தீயத்திலோ கிடையாது என்பதை அறிஞர் ஒவ்வொருவரும் அறிந்தே இருப்பார்கள். காங்கிரசின் 20 திட்டங்களிலும் ஜவஹர்லாலின் பூரண சுயேச்சை திட்டத்திலும் காந்தியின் ராமராஜிய திட்டத்திலும் இவை கிடையாதென்றும் சொல்லுவோம்.
சுயராஜியப் பிரச்சினையும் பூரண சுயேச்சை விளம்பரமும் ராம ராஜிய கோஷமும் ஒரு சில தனிப்பட்டவர்களின் பெருமைக்கோ நன்மைக்கோ மாத்திரம் என்றால் அவை சரியான திட்டங்கள்தான். அப்படிக்கில்லாமல் “இந்திய மக்கள் 35 கோடி ஜனங்களுக்காக நாங்கள் கேட்கின்றோம்” என்றால் அவைகளை நாம் ஒருக்காலும் ஒப்புக்கொள்ள முடியாது. அவை இந்தியாவை இன்னமும் மோசமான நிலைமைக்குதான் கொண்டு போய் விடும்.
கர்மத்தையும், கடவுள் செயலையும் நம்புகின்றவர்களுக்குச் சுதந்திரமும் சம தர்மமும் இல்லையென்பதை அறிவுள்ளவன் உணராமல் இருக்க மாட்டான்.
அவ்விரண்டும் வெகு நாளைக்கு முன் ஒழிக்கப்பட்டு இருந்திருக்குமானால் இன்று சுயராஜியத்திற்கும் பூரண சுயேச்சைக்கும் நாம் யாருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டியிருக்காது. “சுயராஜியமென்கின்ற செப்பிடு வித்தையை வைத்துக்கொண்டு அன்னிய நாட்டாரின் ஆக்ஷி கூடாது” என்று சொல்லுகின்றார்களே யொழிய இன்ன ஆட்சிமுறை கூடாது என்று சொல்லுவதில்லை. இது வேண்டுமென்றே சூழ்ச்சியால் மறைக்கப் பட்டிருக்கின்ற தென்றே சொல்லுவோம்.
நம்மைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட கொள்கை மக்களை ஆட்சி புரிய வேண்டுமே யொழிய ஒரு குறிப்பிட்ட நாட்டார்களோ வகுப்பார்களோ, மதக்காரர்களோ ஆட்சி புரிய வேண்டும் என்பதல்ல. பல மதம் பல ஜாதி பல சமூக அபிமானம் கொண்ட மக்கள் வாழும் நாட்டில் பல மதம் பல ஜாதி பல சமூக அபிமானம் ஆகியவைகள் ஒழிகின்றவரை இவைகளில் சம்பந்தப்படாத அல்லது ஜாதி, மத சமூக வித்தியாசமோ அபிமானமுமோ இல்லாத அவைகளில் கவலையற்ற மக்கள்தான் ஆட்சி புரிய வேண்டும் என்போம். அதினாலேதான் பிரிட்டிஷ் கவர்ன்மெண்டு ஒழிந்தால் ருஷிய அரசாங்கக் கொள்கையே இந்தியாவை ஆட்சி புரிய வேண்டும் என்கின்றோம். அந்தக் காலத்தில் இந்து முஸ்லீம் கிறிஸ்துவ தகராருக்கு இடமேயிருக்காது. தீண்டாமைக் கொடுமைக்கும் இடமிருக்காது. ராமராஜியத்தைப் பற்றிய பேச்சே இருக்காது. தகப்பன் எலும்பைக் கங்கையில் போட்டு மோட்சம் தேடிக் கொடுக்கும் செப்பிடு வித்தையும் நடக்காது. ஆகையால் அப்படிப் பட்ட ஆட்சி யோக்கியமான முறையில் சமாதான முறையில் நமக்கு வேண்டுமானால் தூத்துக்குடி தீர்மானப்படி மக்களை தயார் செய்யவேண்டியதே முக்கிய கடமையாகும்.
நமது லட்சியம் இன்னது, தேவையின்னது என்று வெளியிடுவதில் உள்ள தந்திரமே இன்று நாம் பொதுவாழ்வில் அபிப்பிராய பேதமும், அல்லலும் பட்டுக்கொண்டு இருக்கின்றோம். இந்துக்கள் சுயராஜிய தத்துவம் இந்து மத ராஜியமாக வேண்டும் என்பதும், முஸ்லீம்களின் சுயராஜிய தத்துவம் இஸ்ஸாம் ராஜியமாக வேண்டுமென்பதும் தவிர வேறு அர்த்தத்தைக் கொண்டிருக்கவில்லை என்று கோபுரத்தின் மீது இருந்தும் கூவுவோம். இந்த இரண்டு அந்தரார்த்தமும் இரு சமூக பாமர மக்களையும் பூச்சி புழுக்களாக்கி நசுக்கி பிழிகின்றன. ஆனால் மதவெறியால் இக்கஷ்டத்தை மக்கள் உணர முடியாமல் மறைக்கப்பட்டிருக்கின்றது.
இந்தியாவில் உள்ள இந்து வாலிபர்களானாலும் சரி, முஸ்லீம் வாலிபர்களானாலும் சரி, மதத்தை அடியோடு மறந்தாலல்லது மனித விடுதலை கிடையாது என்கின்றோம். ஆங்கிலேயனுக்கும் மதமில்லை. அமெரிக்கனுக்கு மதம் இல்லை. பிரஞ்சியனுக்கும் மதம் இல்லை. அவர்கள் மதம் எதையும் தியாகம் செய்து உலகபோக போக்கியத்தைத் தாங்களே அனுபவிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறில்லை. ருஷியாகாரனுக்கு அது கூட கிடையாது. எல்லா இன்பங்களும் எல்லா மக்களுக்கும் பொது ஆகையால் சகலத்தையும் எல்லோருக்கும் சமமாய் அனுபவிக்க வேண்டும் என்பதே அவர்கள் மதம். இதுவே உயர்ந்த எண்ணம். உயர்ந்த மதமென்று உணருங்கள். அன்பையும் சமத்துவத்தையும் உண்மை மதமாய்க் கொண்ட எவனும் இந்தக் கொள்கையை ஆட்சேபிக்க மாட்டான். அன்பும் சத்தியமும் சமத்துவமும் தான் கடவுள் என்ற, கடவுள் நம்பிக்கை கொண்ட எவனும் இதை ஆட்சேபிக்க மாட்டான். அந்தப்படி யாராவது அன்பையும் சத்தியத் தையும் சமத்துவத்தையும் கடவுள் என்றும் மதம் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்ற ஒருவன் சமதர்ம கொள்கையையும் பொதுவுடமைக் கொள்கையையும் ஆட்சேபிப்பானேயானால் அவன் கடவுள் பெயராலும், மதத்தின் பெயராலும், மக்களை ஏமாற்றித் திரியும் பாஷாண்டியே யாவான் என்பதை தூக்கு மேடையிலிருந்தும் சொல்லுவோம். ஆகையால் வாலிபர்காள்! ஏமாந்து பாஷாண்டிகள் கையில் நாட்டைக் காட்டிக் கொடுத்து விடாமல் தைரியமாய் நின்று உண்மையைச் சொல்லுங்கள். உண்மைக்காக கும்பல் கும்பலாய் உயிர் விடுவதில் நாட்டுக்கு ஒன்றும் நஷ்டம் வராது. இந்தியாவிற்கு ஏற்கனவே பூபாரம் அதிகமாய் விட்டது. ஏதாவது காரணத்தால் பூபாரம் சற்று குறைந்தால் இருக்கின்ற மக்களுக்கு சற்று சௌகரியம் அதிகம் ஏற்படலாம்.
ஏனெனில், இந்தக் கோழை நாட்டிற்கு, வஞ்சக நாட்டிற்கு, சோம்பேறி நாட்டிற்கு, மனிதர்களைத் தின்னும் மாநாட்டிற்கு முப்பத்தைந்தரைக் கோடி மக்கள் இருப்பதானது இந்த நாட்டிற்கு மிகவும் பாரமாகும். ஆகையால், உண்மைக்கும் சமத்துவத்திற்குமிடையில் உயிரை விடுவது நன்மையாகும். நாம் பொது உடமைக் கொள்கை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்து மதத்திற்கும், மனுதர்மக் கொள்கைக்கும், கேடு செய்ததாகாது. அவைகளின் பலனை அவை அனுபவிக்கச் செய்ததாகுமே தவிர வேறில்லை. மனுதர்ம சாஸ்திரத்தில் சூத்திரன் (தொழிலாளி) சொத்து வைத்திருந்தால் பார்ப்பான் (சோம்பேறி) பலாத்காரத்தால் பிடுங்கிக் கொள்ளலாம் என்று இருக்கின்றது. ஆனால் நாம் இப்போது சோம்பேறி பணம் வைத்திருந்தால் பலாத்காரமில்லாமல் பிடுங்கிக் கொள்ளலாம் என்றுதான் சொல்லுகின்றோம். இதுதான் சுயமரியாதை இயக்கத்தின் கடைசி லக்ஷியம். ஆகையால் இதை அக்கிரமமென்று எந்த அறிவாளி, எந்த யோக்கியன் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம்.
ஆகவே, இதற்கு விரோதமான எந்த ஸ்தாபனமும், எந்த தர்மமும் சுயமரியாதை இயக்கத்துடன் சேரவோ ராஜி பேசவோ முடியாது என்பதையும், இதனால் என்ன வருவதானாலும் சுயமரியாதைச் சங்கத்தார் பொருத்தருள வேண்டும் என்றும் உண்மையாய்த் தெரிவித்துக் கொள்வதோடு சத்தற்ற எலும்பைக் கடித்து பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலியுண்டாக்கிக் கொள்வது போல் அன்னியன், அன்னியன் என்கின்ற உணர்ச்சியில் வெள்ளைக்காரர்களுடன் மோதிக் கொள்வதில் பயனில்லை என்றும் நமது நோக்கம் தடை படும் என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் .
(குடி அரசு - தலையங்கம் - 12.04.1931)