periyar 342சகோதரிகளே! சகோதரர்களே!!

இங்கு இன்று நடைபெறப்போகும் திருமணமானது நமது நாட்டில் இப்போது புதியதாய் தோன்றியிருக்கும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளில் ஒரு அம்சமாகிய மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பதென் னும் திட்டத்தில் சேர்ந்ததாகுமே தவிர இதில் புதிதாய் புகுத்தும் கொள்கை ஒன்றுமே இல்லை.

தீண்டாமை ஒழிப்பதென்பதற்கு முக்கியமாய் வேண்டியது எப்படி வெறும் மனம் மாற்றம் என்பதைத்தவிர அதில் வேறு தத்துவமோ, தப்பிதமோ, தியாகமோ இல்லையோ அதுபோலவே தான் இந்த விதவா விவாகம் என்பதற்கும் எவ்வித தியாகமும் கஷ்டமும் யாரும் பட வேண்டியதில்லை.

ஒரு பெண்ணையோ, பல பெண்களையோ மனைவி யாகக் கட்டி அனுபவித்தவனும் ஒரு பெண்ணையோ, பல பெண்களையோ வைப்பாட்டியாக வைத்தோ தற்காலிக விபசார சாதனமாக அனுபவித்தோ வந்துள்ள, அனுபவித்துக் கொண்டிருக்கின்ற ஒரு புருஷனை ஒரு புதுப் பெண் மணப்பது இன்று எப்படி வழக்கத்தில் தாராளமாய் இருந்து வருகின்றதோ அதுபோலத்தான் அப்படிப்பட்ட ஒரு பெண்ணையும் ஒரு புருஷன் மணப்பது முறையாக வேண்டும் என்று சொல்லுகின்றோமே தவிர மற்றபடி காரியத்திற்கு ஒவ்வாததும் யுக்திக்கு ஒவ்வாததும் உலகத்தில் பெரும்பான்மையான மக்களின் நடப்புக்கு விரோதமாகக் கூட சில வகுப்பு களில் இருந்ததுமான தத்துவங்கள் எதுவும் அதிலில்லை.

நமது நாட்டிலுள்ள மூடப்பழக்க வழக்கங்களிலெல்லாம் இது மிகவும் முக்கியமான மூடப்பழக்கவழக்கமாகும். மற்றொருவர் அனுபவித்த பெண்ணை அல்லது அனுபவித்துக் கொண்டிருக்கிற பெண்ணை ஒரு புருஷன் பார்த்தால் அவளை அனுபவிப்பதற்கு திடீர் என்று ஆசை படுகிறான்.

அவற்றில் சிலது அனுபவிக்க கிடைத்து விட்டால் சிலசமயங்களில் தனது முழு வாழ்க்கையில் அடையாத ஒரு பெரும் பேற்றை அனுப வித்ததாக மகிழ்ச்சியடைவதோடு தனக்குள்ளாகவே ஒரு பெரும் பெருமையையும் உற்சாகத்தையும் அடைகின்றான். அதிலும் தாசிகள், வேசிகள், பிரபல குச்சிக்காரிகள் ஆகியவர்கள் விஷயத்தில் மனிதன் கொள்ளும் ஆசைக்கு அளவே இல்லை. ஆகவே இம்மாதிரி தற்கால அவசியமாக செய்துவரும் காரியங்களில் உள்ள மனப்பான்மையைவிட இந்த மாதிரி விதவா விவாகத் தில் ஒரு மனிதனிடம் அதிகமான மனப்பான்மையோ மனமாற்றமோ நாம் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை.

ஆயிரம் பெண்களை அனுபவித்த புருஷனின் திருமண விஷயத்தில் இல்லாத குற்றம் ஒரு புருஷனை மாத்திரம் அனுபவித்த பெண்ணிடம் எப்படி வந்து விடும் என்று யோசித்துப் பார்த்தால், விதவா விவாகம் என்பது யாருக்கும் அதிசயமாய்த் தோன்றாது.
பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதும் பெண்கள் அடிமைப் பிறவி என்பதும் தான் விதவை தன்மையின் அஸ்திவாரமாகும். பெண்களுக்குச் சுதந்திரம் ஏற்பட்டு விட்டால் விதவைத் தன்மை தானாகவே பறந்துபோய்விடும்.

உதாரணமாக மனைவி இழந்த புருஷனைக் குறிப்பிட நமக்கு வார்த்தையே இல்லை. ஏன் இல்லை? அவர்களுக்குள்ள சுதந்திரத் தினால் தங்களின் அப்படிபட்ட ஒரு நிலையைக் காட்ட ஒருபெயரை பழக்கத்தில் கொண்டு வருவதற்கில்லாமல் செய்து விட்டார்கள்.

சாதாரணமாக கணவனிழந்த பெண்ணை எப்படி விதவை என்று கூப்பிடுகின்றோமோ அதுபோலவே மனைவியை இழந்த புருஷனை விதவன் என்று கூப்பிடவேண்டும். ஆனால் நமது நாட்டில்தான் அப்படிக் கூப்பிடுவதில்லை. மேல் நாட்டில் விடோ, விடோயர் என்கின்ற பதங்கள் இருக்கின்றன. இந்த விடோ என்பதும் விதவை என்பதும் ஒரு சொல் மூலத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

இதுவும் வடமொழியாகவே இருப்பதால் வடமொழிக்கும், மேல் மொழிக்கும் மற்ற வார்த்தைகளுக்குள்ள சம்மந்தம் போலவே இதற்கும் இருக்கின்றது. ஆனால் நமது புராணங்களில் கூட விதவன் என்கின்ற வார்த்தை இல்லாததால் புராணகாலம் முதலே ஆண்கள் செய்த சூட்சிதான் விதவைத் தன்மைக்கு காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆகவே இவ்விதத் திருமணம் பகுத்தறிவுக்கும் நடு நிலைக்கும் ஒத்ததே தவிர இதில் குருட்டு நம்பிக்கையோ, ஏமாற்றமோ, கொடுமையோ ஒன்றுமில்லை.

அன்றியும் இன்றைய மணமகனுக்கு முந்திய மனைவியால் ஏற்பட்ட குழந்தை ஒன்று இருப்பது போலவே மணமகளுக்கும் முந்திய கணவனால் ஏற்பட்ட குழந்தை ஒன்று இருக்கின்றது. இதிலும் நியாயத்திற்கும், யுக்திக்கும் ஒவ்வாத குற்றங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆணும் பெண்ணும் சம உரிமை உள்ளவர்கள் என்று உணர்ந்தால் இது சரி என்று தோன்றும். தவிரவும் பெண்ணுக்கு ஆணுக்குள்ளது போன்ற தனிச் சொத்துரிமை இருக்க வேண்டும் என்கின்ற கொள்கையை அனுசரித்து மணமகன் இந்த மணமகள் பேருக்கு சர்வ சுதந்திரமாய் 5000 ரூ. பெருமான சொத்தை எழுதி வைத்ததானது மிகவும் பாராட்டத்தக்க காரியமாகும். தவிரவும் இம்மாதிரி பெண்களுக்கு மறுமணம் என்பது எங்கள் பக்கங்களில் அநேக வகுப்புகளுக்குள் இருக்கின்றது.

சாதாரணமாக விதவைமணம் என்பது மாத்திரமல்லாமல் நமது நாட்டில் விவாகரத்து செய்து கொண்டு மறுமணம் முடித்துக் கொள்வது என்கின்ற வழக்கம் இருந்து வருகிறது. எங்கள் பக்கத்தில் வன்னியர்கள் அதாவது படையாச்சி வகுப்பார், தெலுங்கு செட்டியார்கள், அகம்படியர், சணப்பர்கள் என்று சொல்லும் செட்டிமார்கள், சில வகுப்புப் பண்டாரங்கள் என்பவர்கள், சில வகுப்பு ஆண்டிகள் என்பவர்கள், தேவாங்கர்கள், செங்குந்தர்கள், கற்பூரச் செட்டிமார்கள், போயர்கள், கொத்தர்கள், ஒக்கிலியர்கள் முதலிய வகுப்புகளில் சிலவற்றில் இரண்டும் சிலவற்றில் ஒன்று மாத்திரமும் இருந்து வருகின்றன.

ஆனால் இப்போது மேற்கண்ட வகுப்பார்களில் கூட பலர் அவ்வழக்கங்கள் கூடாதென்று கருதுகின்றார்கள் என்று தெரிந்து விசனிக்கிறேன். சில இடங்களில் அனுபவத்தில் இல்லாமலும் இருக்கின்றது என்றாலும் எங்கள் வகுப்பு அதாவது பலுஜ நாயுடு என்பது போன்றவைகளில் முன்னால் வழக்கம் இருந்ததோ இல்லையோ என்பதைக் கவனியாமல் இப்போது செய்யப்பட வேண்டும் என்று எங்கள் மகாநாடுகளில் தீர்மானமாய் இருக்கின்றது. எனது தங்கை பெண்ணுக்கே விதவை மணம் செய்யப்பட்டிருக்கின்றது.

ஆகவே இம்மாதிரி மணம் புதியதென்று சொல்வதற்கோ, அல்லது இயற்கைக்கும் மனிதத் தன்மைக்கும் விரோதமான தென்றோ யாரும் சொல்லிவிட முடியாது. இதை ஆட்சேபிப்பவர்களை நான் மனிதர்கள் என்றே ஒப்புக் கொள்ளமாட்டேன். அவர்களுக்குச் சுயமரியாதை இருக்கும் என்றும் நான் கருதமாட்டேன்.

சாதாரணமாக நமது நாட்டில் விதவைகள் உள்ள வீடுகளில் நடக்கும் காரியங்கள் எனக்கு நன்றாய்த் தெரியும். அநேகச் சிசு கொலைகளும் அநேக மன வருத்தங்களும் இயற்கைக்கு விரோதமான காரியங்களும் ஏதாவது ஒன்றும் நடந்த வண்ணமாகவே இருந்து வருகின்றது. இதனால் பல கொலைகளும் நடக்கின்றன. சில இடங்களில் பெண்கள் வெளியில் ஓட ஓட அழைத்து வந்து பந்தோபஸ்தில் வைக்கப்படுகின்றனர்.

சில இடங்களில் முறைகள் என்பது தவறியும் நடத்தப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால் இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி வைப்பதேயாகும். இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் படியான எந்த கொள்கைகளும், சட்டங்களும் ஒரு நாளும் சரியாக நடைபெறவே நடை பெறாது.

அப்படி எங்காவது நடை பெற்றாலும் அது நிலைத்திருக்கவே முடியாது. இந்தக் கொடுமைகள் இப்படி இருக்குமானால் 4 பெண்கள் 5 பெண்கள் கூடி ஒரு ஆணைத் தங்கள் இன்பத்திற்கென்று ஏற்படுத்தி அவனுக்கு நல்ல போஷனையும், அழகும் செய்து அடைத்து வைத்து அவனைத் தங்களது காம இச்சைத் தீர்க்கும் இன்பப் பொருளாய் அனுபவிக் கும் காலமும், வீட்டு அடிமையாய் நடத்தப்படும் காலமும் வந்துவிடும் என்று தான் கருதுகிறேன். அப்படி வந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஆண்களினது கருமத்தின் பயன் என்றுதான் அதைக் கருதுவேன்.

தவிர சுயமரியாதைக் கலியாணம் என்பதில் புதிய முறையோ, புதிய சடங்கோ ஒன்றுமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அர்த்தமற்றதும், பொருத்தமற்றதுமான சடங்குகள் வேண்டாம் என்பதும் அனாவசியமான அதிகச் செலவும் அதிகக் காலக் கேடும் இருக்கக்கூடாது என்பதும் தான் சுயமரியாதைக் கலியாணத்தின் முக்கிய தத்துவமாகும்.

ஆதலால் உள்ள சடங்குகளையும், பணச்செலவையும், காலச் செலவையும் குறைத்து நடத்துவதே இத்திருமணத்தின் முக்கிய கொள்கை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மற்றும் திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் ஏற்பட்டக் கூட்டு வாழ்க்கையின் ஒப்பந்தம் என்பதும் இத்திருமணம் இந்த மணமக்களின் இந்த உலக மானுஷிக வாழ்க்கைக்கேதான் என்பதும் உணர்ந்து மணமக்கள் மணம் செய்துகொள்ளவேண்டும் என்பது சுய மரியாதைத் திருமணத்தில் மிகவும் முக்கியமானதாகும்.

அதாவது கலியாணம் மனிதத்தன்மைக்கு மேற்பட்டதென்றும் “ஆத்மார்த்த”த்திற்கு என்றும், அதில் ஏதோ “தெய்வீகம்” இருக்கிறதென் றும் கருதி வாழ்க்கையில் உள்ள சுதந்திரங்களையும், இயற்கை இன்பங்களை யும் அடையமுடியாமல் செய்யும் ஜீவனற்ற உணர்ச்சியை ஒழிக்க வேண்டு மென்பதே முக்கியமானதாகும்.

தெய்வீகம் என்கின்ற பதமே சாதாரணமாக நமக்குத் தெரியாது என்பதற்குத்தான் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதோடு ஆத்மார்த்தம் என்பதும் புலனறிவற்ற சூனியத்திற்குச் சமமானதற்கே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே மனித வாழ்க்கையின் முக்கியமான தத்துவமான இன்ப உணர்ச்சியின் இயற்கை அனுபவத்தை அடைய முடியாமல் தடைசெய்வதற்கு மாத்திரம் பயன்படும் படியாகத் தெரியாத, அர்த்தமற்ற தெய்வீகத்தையும் ஆத்மார்த்தத்தையும் இப்படிப் பட்ட விஷயத்தில் கொண்டு வந்து புகுத்தியதானது மனிதனை வெறும் பிணமாக்குவதற்கும் அடிமையாக்குவதற்குமே பயன்படுத்தச் செய்த புரட்டே யொழிய வேறில்லை.

தெய்வீகக் கலியாணத்தில், ஆத்மார்த்த கலியாணத்தில் புருஷனுக்கும் பெண்ணுக்கும் வித்தியாச நிபந்தனைகளும் எஜமான் அடிமைத் தன்மைகளும் எதற்காக ஏற்படுத்த வேண்டும். தெய்வீகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசமுண்டா? ஆத்மார்த் தத்தில் ஆண் ஆத்மா; பெண் ஆத்மாவென்கின்ற பிரிவுண்டா?

எவ்வளவு பெரிய புரட்டுகளை இந்த முக்கியமான காரியத்தில் கொண்டு வந்து போட்டு, இன்பமும், சுதந்திரமும் பாழாக்கப்பட்டு விட்டது என்பதை யோசித்துப் பாருங்கள். ஆகையால் புருஷனுக்காகப் பெண்ணும், பெண்ணுக்காக புருஷனும் இரண்டு பேரும் சேர்ந்து இன்பமடைவதற்கு என்பதை தவிரத் திருமணத்தில் வேறு தத்துவமொன்றும் இல்லவே இல்லையென்பதுதான் திருமணத்தைப் பற்றிய நமது அபிப்பிராயம்.

இம் மாதிரி மணமக்கள் இருவரும் ஒரு பொது வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டதற்கு அவர்களுக்குள் செய்து கொள்ளும் ஒப்பந்தத்திற்குச் சாட்சியத்தைத் தவிர நமக்கு இதில் வேறு வேலை இல்லை. ஆகவே நாம் எல்லோரும் சாட்சியத்திற்காகவே அழைக்கப்பட்டிருக்கின்றோம், கூடி இருக்கின்றோமென்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாதிரியான சமுதாய உதவி கூட்டு வாழ்க்கையில் கலந்துள்ள ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் செய்து கொள்ள வேண்டியதேயாகும். இதில் மணமக்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்ன வென்றால் தங்களில் எவருக்கும் எந்த விதத்திலும் வாழ்க்கை நடத்துவதில் பொருப்போ உரிமையோ ஜாஸ்த்தி கம்மியாய் இருக்கின்றது என்று யாரும் கருதிக் கொள்ளக் கூடாது என்பது தான்.

அதாவது பெண் தான் புருஷ னுக்கு அடிமையாயிருக்க கடவுளால் பிறப்பிக்கப்பட்ட ஒரு சுய உணர்ச்சி யற்ற ஜீவனென்றோ “கல்லென்றாலும் கணவன் புல்லென்றாலும் புருஷன்,” அவன் அடித்தாலும், உதைத்தாலும் அன்னியருக்கு கூட்டிவிட்டு ஜீவித்தாலும் புருஷனே தெய்வம் என்று கருதுகின்ற அடிமை உணர்ச்சிக் கண்டிப்பாய் பெண்ணுக்கிருக்கவே கூடாது. நமது கணவனும் நம்மை போன்ற மனித ஜீவனேயாகும்.

பெண்ணிடம் அவன் எப்படி நடந்து கொள்ளுகிறானோ அப்படி தான் அவள் தன்னிடமும் நம்மை நடந்து கொள்ள எதிர்பார்க்க முடியும். ஒழுக்கத்திலோ, சுதந்திரத்திலோ, உணர்ச்சி யிலோ நமக்கும் அவனுக்கும் வித்தியாசம் கிடையாதென்று எண்ண வேண்டியது மாத்திரமல்லாமல் ஒவ்வொரு துறையிலும் அனுபவத்தில் கொண்டு வர வேண்டும்.

அப்படிப்பட்ட பெண்கள்தான் பெண்கள் நாயகம் என்று அழைக்கப்படத் தக்கவர்கள் ஆவதோடு பெண்கள் உலகத்திற்கும் பெரிய உபகாரம் செய்தவர்களாவார்கள். முக்கியமாய் இதற்காக வேண்டியேதான் ஆத்மார்த்தம் தெய்வீகம் என்பவைகளிலுள்ள புரட்டுகளை வெளியாக்கக் கட்டாயப் படுத்தப்படுகின்றோம்.

இது போலவே மணமகனும் தனக்குள்ள உணர்ச்சி, அவா, சுதந்திரம் ஆகிய காரியங்கள் எல்லாம் பெண்ணுக்கும் உண்டென்றும், தான் எவ்வளவு காரியம் பெண்ணிடம் எதிர்பார்க்கின்றோமோ அவ்வளவு காரியம் பெண்ணுக்கும் தன்னிடம் எதிர்பார்க்க முடி யும் என்றும் கருதி அனுபவத்திலும் அதுபோலவே நடக்கவிட வேண்டும். தனக்கு அடிமைக்காக ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டோமென் கின்ற உணர்ச்சியை அடியோடு மறந்து விட வேண்டும்.

இந்த நாட்டில் பொதுவாக ஒழுக்கம் சீர்பட வேண்டுமானால் விபசார மென்னும் காரியத்தில் உள்ள கெடுதிகள் நீங்க வேண்டுமானால் விதவைத் தன்மையும், ஆண்களுக்கு விபசார தோஷமில்லை என்கின்ற நடப்பையும் ஒழித்தாக வேண்டும். இவை ஒழிந்தால் உண்மையான காதலின்பமும், வாழ்க்கையில் திருப்தியும், சாந்தியும், ஒழுக்கமும், கட்டாயம் ஏற்பட்டு விடும்.

ஆகவே மேற்கண்ட இரண்டு காரியங்களே பெரிதும் மனிதத் தன்மைக்கும், இயற்கை இன்ப நுகர்ச்சிக்கும் இடையூராய் இருந்து வரு கின்றது. பெண்களைப் பெற்றோர்களும் ஒரு விஷயத்தை முக்கியமாய் கவனிக்க வேண்டும்.

அதாவது பெண்களுக்கும் 16 வயது வரை நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும். மனித இயற்கைக்கு விரோதமாக ஆணுக்கு ஒரு விதமும், பெண்ணுக்கு ஒரு விதமுமாக அடக்கத்தையும் அடிமை உணர்ச்சியையும் கற்றுக் கொடுக்கக்கூடாது.

பெண்ணின் தாய்மார்கள் பெண்களை அவர்களின் மாமியார்கள் வீட்டுக்கு அடிமைக்காக அனுப்புவதாய்க் கருதி, அதற்குத் தயார் செய்யும் வழக்கத்தை விட்டுவிட வேண்டும். எந்தப் பெண்களையும் தான் ஆண்களுக்குக் கீழ்பட்ட ஒரு பெண் என்றும், தனக்கு ஆண்களைவிட சில அடிமை குணங்களோ, அடக்கக் குணங்களோ வேண்டுமென்று கருதும் படி கற்றுக் கொடுக்கக் கூடாது.
அநேகமாய்த் தானே தனக்கு வேண்டிய காதலனை தெரிந்தெடுத்துக் கொள்ள பெண்களைப் பழக்கப்படுத்த வேண்டும்.

இம்மாதிரியாகப் பழக்கினோமானால் பெண்கள் உலகம் தலைசிறந்து சுதந்திரம் பெற்று உலகத்திற்குப் பெருத்த உதவியாக இருக்கும்.
இப்போது பெரும்பான்மையான தெய்வீகத் திருமணங்கள் என்பது வெறும் அடிமைத் திருமணமாகவும் பிறர் இஷ்டத்திற்கே முழுப்பொறுப்பும் விடப்பட்டதாகவும், நிற்பந்தத்திற்கும், ஒரு கட்டுப் பாட்டிற்கும் கட்டிக் கொண்டு எப்படி இருந்தாலும் சரிப்படுத்திக் கொள்ள வேண்டியதாகவும் இருக்கின்றது. ஆகையால் அந்த முறைகளும் ஒழிய வேண்டும்.

இன்றையதினம் ஒரு குழந்தையுடனுள்ள ஒரு விதவைப் பெண்ணை மணம் செய்து கொள்ள ஏற்பட்டதால் பலர் விதவையானாலும் குழந்தை இல்லாத விதவை கிடைக்க வில்லையா என்று சொல்ல வந்து விட்டார்கள்.

இதற்கு முன் பக்குவமான “சாந்தி முகூர்த்தமான” விதவையைக் கலியாணம் செய்தபோது பக்குவமாகாத விதவை கிடைக்கவில்லையா என்றார்கள்.

வேறு ஜாதியில் ஒரு “விதவை”யைக் கல்யாணம் செய்து கொண்ட போது நமது ஜாதியிலேயே ஒரு விதவை இல்லையா என்றார்கள். ஆதலால் இவ்விஷயங்களில் நாம் பொது ஜன அபிப்பிராயத்தைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல வார்த்தையில் மிதமான வழியில் செய்யப்படும் முயற்சி கைகூடவே கூடாது.

ஏனென்றால் நமது மக்கள் பெரிதும் பாமர மக்களா கவே வைக்கப்பட்டிருக்கிறார்கள். அடிமைகளுக்கு லக்ஷணமே ஒரு சிறு மூட்டையைத் தூக்கச் சொன்னாலும் “முடியாது போ, உன் வேலையை பார்” என்றுதான் சொல்வார்கள். ஆனால் டவாலியைக் கழற்றி இரண்டு கொடுத் தால் பெரிய மூட்டையாய் இருந்தாலுங் கூட “தூக்குவதற்குள் என்னையா அவசரம்” என்பார்கள்.

ஆகையால் நாட்டைப் புதுப்பிக்க வேண்டுமானால் அமிதமான கொள்கையில் போய்க் கொண்டே இருக்க வேண்டும். அப் போது ஒருபடி நமது பின்னாலேயே மக்கள் வந்து கொண்டிருப்பார்கள்.

குறிப்பு :- நாகர்கோவில் கோல்டன் தியேட்டரில் திரு. நல்லசிவனுக்கும் திருமதி. கமலாம்பாளுக்கும் 10-09-1930 காலை நடைபெற்ற விதவை மறுமணத்தில் தலைமை ஏற்று ஆற்றிய உரை.

(குடி அரசு - சொற்பொழிவு - 28.09.1930)

Pin It