periyar 241சகோதரிகளே! சகோதரர்களே!

உலகத்தில் நமது நாட்டின் நிலை எப்படிப்பட்டதென்று நம்மில் அநேகருக்குத் தெரியாது. ஏனெனில் மற்ற நாடுகளின் நிலைமை எப்படி இருக்கின்றது என்று தெரிந்தால்தான் நமது நாட்டு நிலைமையின் தன்மை தெரியவரும். நமது நாட்டில் 100க்கு 90 பேர்களுக்கு கல்வி இல்லாமலும், அறிவு விருத்திக்கான ஆதாரமில்லாமலும், சமுதாய சம்மந்தமான விஷயங்களில் சுதந்திரமில்லாமலும் மத விஷயங்களில் மூடப் பழக்கங்களாலும், குருட்டு நம்பிக்கைகளாலும் கட்டுப்படுத்தப்பட்டுக் கிடக்கின்றபடியால் பெரும்பான்மையானவர்கள் உலக நிலையை அறிய சக்தியற்றவர்களாய் இருக்கின்றார்கள்.

உண்மையில் நடுநிலையிலிருந்து பார்ப்பீர்களானால் நமது நாட்டைப் பொறுத்தவரை ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே நமக்கு மனித சுதந்திரம் மறுக்கப்பட்டு நாய், கழுதைகளிலும் கீழாக மதிக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டு அடிமையாய் இருந்து வந்திருக்கின்றோம் என்று சொல்லலாம்.

(இந்த சமயத்தில் ஒருவர் சரித்திரத்தில் அப்படி இல்லை. சரித்திரம் படித்து விட்டு பிறகு பேசவேண்டும் என்று சொன்னார். அதற்கு பதிலாக திரு. இராமசாமி சொன்னதாவது.)

நான் சரித்திரம் படிக்கவில்லையானாலும் என் அறிவுக்கும் கேள்விக்கும் எட்டியதை நான் சொல்லுகிறேன். நான் சொல்லுவதை மறுக்கின்றவர்கள் இந்த இடத்திற்கு வந்து ஆதாரத்துடன் மறுக்கட்டும். ஆயிரம் வருஷமாக அல்ல, இப்பொழுது நான் இன்னும் அதிகமான காலமாகவே அடிமையாய் இருந்து வந்திருக்கின்றோம் என்று சொல்லுகின்றேன்.

அதாவது இந்தியாவுக்குப் பழைய சரித்திரம் எந்த காலத்திலிருந்து கிடைத்ததோ அது முதலும் அதற்கு முன்னால் புராண காலம் அதாவது இராமன், கிருஷ்ணன், அரிச்சந்திரன் முதலிய அரசர் காலம், மநுதரும காலம், வேத காலம் என்று சொல்லப்படுகின்ற காலம் முதலும் மற்றும் இந்து மதம் என்பதற்கு என்ன வயதோ அது முதலும் இந்திய பெரும்பான்மை மக்கள் உண்மையான அடிமையாய் இருந்து வந்திருப்பதோடு மற்றும் இன்றைய தினமும் நமது நாட்டில் உள்ள மக்கள் பலருக்கு ஒரு நாய்க்கும், கழுதைக்கும் உள்ள சுதந்திரம் கூட அளிக்கப்படாமல் கொடுமைப்படுத்தப்பட்டு வந்திருக் கின்றது என்று சொல்லுகிறேன்.

மற்றும் பேசப் போனால் சுதந்திரம், சமத்து வம் என்கின்ற பேச்சே இந்த நூற்றாண்டில்தான் நம் போன்றவர்கள் தைரிய மாய் பேச முடிந்தது என்று கூடச் சொல்லுவேன். இதற்கு மாறுபாடாய் சொல்ல தைரியமும், சரக்கும் இருக்கின்றவர்கள் இந்த மேடைக்கு வந்து சொல்லட்டும். ஆதாரங்கள் காட்டட்டும் நான் ஒப்புக் கொண்டு எனது அபிப் பிராயங்களைத் திருத்திக் கொள்ளத் தயாராயிருக்கிறேன் என்று சொன்னார். (மற்றொருவர் எங்களை நாயிலும், கழுதையிலும் கேவல மானவர்கள் என்று சொன்னது சரியல்ல என்று சொன்னார்.)

சகோதரர்களே நாயிலும் கழுதையிலும் மாத்திரம் கேவலமாய் நடத்தப்படுகின்றோம் என்று சொன்னதற்கு ஒருவர் வருத்தப்படுகின்றார். நான் அதற்கு நாயிலும் கழுதையிலும் மாத்திரம் கேவலமல்ல, மலம் தின்னும் பன்றியிலும் புழுத்த நாய் மலத்தினும் கேவலமாய் நடத்தப் படுகின்றோம் என்று சொல்லுகின்றேன்.

உதாரணமாக, சுசீந்திரம் தெருவில் நாய் மலம், கழுதை மலம் கிடக்கின்ற இடத்திற்கு இந்த நாட்டு இந்துக்கள் என்ற நம்மவர்களில் மூன் றில் இரண்டு பாகம் பேர்கள் போக முடியுமா என்று கேட்கின்றேன். இதற்கு யார் பதில் சொல்லத் தயாராயிருக்கிறீர்கள். உங்களில் இரண்டொருவர் வேறு காரண சம்மந்தமாய் உள்ள ஆத்திரத்தின் மீது பேசப்படுவதாகவே எனக் குக் காணப்படுகின்றது.

உண்மையில் மனப்பூர்த்தியான ஆnக்ஷபத்தின் மீது பேசப்படுவதானால் அவர்கள் இந்த மேடைக்கு வந்து பேசட்டும். நான் இன்று இரவு 12 மணியானாலும் அவர்களது ஆnக்ஷபங்களுக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டே போகின்றேன். அப்படிக்கில்லாமல் கலகத்துக்காகப் பேசப்படும் பேச்சுகளுக்குப் பின்வாங்கிக் கொள்வது என்பது எனது பொதுத் தொண்டில் இதுவரை ஒரு நாளாவது நேர்ந்தது கிடையாது.

அன்றியும் மற்ற சகோதரர்களே! நீங்கள் அவர்களிடம் கோபத்துக்கு போகாதீர்கள். அவர்களை மேடைக்கு அழைத்து அவர்கள் சொல்லுவ தையும் பொறுமையாய்க் கேளுங்கள். பிறகு உங்கள் சொந்தப் பகுத்தறி வைக் கொண்டு ஆராய்ச்சி செய்து பார்த்து எது சரியென்று பட்டதோ அதை பின்பற்றுங்கள். ஆnக்ஷபத்தைத் தெரிவிப்பவர்களிடம் கோபப்படுவதானது நமக்குச் சமாதானம் சொல்ல சக்தியில்லை என்பதைத்தான் காட்டும். ஆகையால் நான் பேசுவதில் இங்கு யார் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல நான் தயாராயிருக்கின்றேன்.

எனக்கு யாரும் சிபார்சு வேண்டியதில்லை. கேள்வி கேட்பவர்களை தாராளமாய் விட்டு விடுங்கள். அவர்களோடு மனஸ்தாபப் படாதீர்கள் (என்று சொல்லி, வந்து பேசும்படி அழைத் தார். கேள்வி கேட்டவர்கள் யாரும் வரவில்லை.

கேள்வி கேட்டவர்கள் வந்து பேசியப் பிறகுதான் மேல்கொண்டு பேசப்படும் என்று சொல்லியதின் மீது நாகர்கோயில் வக்கீல் திரு. சிவதானு பிள்ளையவர்கள் மேடைக்கு வந்து பழைய சரித்திரங்களும், ஆதாரங்களும் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு வரால் எழுதப்பட்டதென்றும், எழுதினவர்கள் தங்கள் தங்கள் இஷ்டப்படியே எழுதப்பட்டதென்றும், ஆதலால் அதிலிருந்து எதையும் பிரமாண மாய்க் கொள்ள முடியாதென்றும், திரு. இராமசாமி யாருடன், தான் வைக்கம் சத்தியாக்கிரகத்தில் கலந்து உழைத்ததாகவும் அவர்களது தொண்டில் தனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் அவர் சொல்லும் சமுதாயக் குறைகளும் ஜாதி மதக் கொடுமைகளும் எல்லாம் உண்மையென்றும், ஆனால் அவை சட்டத்தின் மூலம் நீக்கப்பட வேண்டு மென்றும், அதற்காக சுயராஜ்யம் வேண்டுமென்றும், திரு. இராமசாமியாரும் இந்த சுயராஜ்யக் கிளர்ச்சியில் சேர்ந்திருந்தால் இதுவரை எவ்வளவோ பலன் ஏற்பட்டிருக்கு மென்றும் தெரிவித்துக் கொள்வதாகவும் மற்றபடி பெரியாரது தொண்டில் காங்கிரஸ் காரர்களாகிய தங்களுக்கு யாதொரு ஆnக்ஷபனையும் இல்லை யென்றும் பேசினார்.)

உடனே திரு. இராமசாமியார் எழுந்து, திருவாளர் சிவதானு பிள்ளைய வர்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றும் சமுதாய சம்மந்தமான சீர்திருத்த சட்டம் செய்ய நமது பிரதிநிதிகள் என்பவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றும் சாரதா சட்டம், மதபரிபாலன சட்டம் முதலியவைகள் படும் பாட்டைப் பார்த்தால் இதனுண்மை விளங்கும் என்றும், இன்றும் நமது தலைவர்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்களுக்கு மேலாகவே மத விஷயத்தில் சமூக விஷயத்தில் சட்டம் கூடாது, பிரசாரத் தின் மூலம் தான் செய்யப்பட வேண்டும் என்றும் மற்றும் சில தலைவர்கள் அரசியலிலாவது காங்கிரசிலாவது சுயராஜ்யத் திட்டத்திலாவது மத விஷயம், சமுதாய விஷயம் புகுத்தப்படக் கூடாதென்று பேசி வருவதும் காங்கிரஸ் ஸ்தாபனத்தின் பேரால் தீர்மானங்கள் செய்யப்பட்டிருப்பதும் நண்பர் திரு. சிவதானு பிள்ளையவர்களுக்கும் தெரியுமென்றும் ஆகை யால் இன்றைய நிலையில் நமது கொடுமை படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, இழிவுபடுத்தப் பட்ட மக்களுக்கு இப்போது கேட்கப்படும் சுயராஜ்யம் ஆபத்தென்றும் சொன்னார், பிறகு யாரும் பேச வரவில்லை.

( 10.09.1930 இல் சொற்பொழிவு )

அடுத்த நாள் நாகர்கோவிலிலும், பணக்குடி முதலியவிடங்களில் பேசியதன் சுருக்கம்:

சகோதரர்களே! இன்று இந்தியாவில் பல பாகத்தில் சுயராஜ்யத்திற்கு என்று ஒருபுறம் மக்கள் போராட, அதற்காக பலர் பல கஷ்டங்களும், நஷ்டங்களும் அனுபவிக்க நாங்கள் ஏன் இன்று சுயமரியாதைப் பிரசாரம் செய்கின்றோம்? நாங்கள் ஏதாவது இன்று மற்றவர்கள் செய்யும் அவ்வளவு தியாகங்கள் செய்ய பயந்தவர்களா? அல்லது வேறு ஏதாவது சுயநல காரணமாய் நாங்கள் சுயராஜ்யத்திற்கு முட்டுக்கட்டைப் போடுகின்றவர்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

என்னைப் பொறுத்த வரை சுயராஜ்யத்திற் கென்று நம்மில் 100-க்கு 90 பேர்களுக்கு மேலாக மக்கள் செய்த முயற்சிக்கும், கிளர்ச்சிக்கும், பட்ட கஷ்டத்திற்கும், அடைந்த நஷ்டத்திற்கும் குறையாமல் நான் எனது பங்கிற்கு மேலாகவே செய்து பார்த்து விட்டேன்.

அது அவ்வளவும் பயனற்றதாகி விட்டது என்று முடிவும் செய்து விட்டேன். இந்தியாவில் குறிப்பாக இந்துக்கள் என்கின்ற மக்களில் 100-க்கு 90 பேருக்கு இப்போது முதலில் சுயராஜ்யம் வேண்டியதில்லை என்ப தோடு அது மிகவும் இந்த நிலையில் ஆபத்தானது என்றுங் கூட சொல்லுகின்றேன்.

ஆனால் பின்னை என்ன வேண்டுமென்றால் சுயமரியாதையே வேண்டும். இந்துக்கள் என்றாலே அதன் ஆதாரப்படிக்கு 100-க்கு 90 பேர்கள் சுயமரியாதை அற்றவர்கள், பிறவி அடிமைகள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அநேகக் காரியத்தில் அவ்விந்துக்கள் சுயமரியா தையற்ற தன்மையையும் இழிவான தன்மையையும் இன்னும் அனுபவத்தில் அடைந்து வருகின்றார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாதென்று தைரியமாய்ச் சொல்லுவேன். இன்றைய சுயராஜ்ய முயற்சியே இந்த அடிமைத்தனத்தையும், இழிவுத்தன்மையையும் பலப்படுத்தும் படியான ஒரு சூக்ஷி முயற்சி என்பதை நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள்.

அதாவது மேல்ஜாதிக்காரன் மேல்ஜாதியாய் இருக்கவும், பணக்காரன் பணக்காரனா யிருக்கவும், அதிகாரக்காரன் அதிகாரக் காரனாயிருக்கவும், முதலாளி முதலாளியாயிருக்கவும், பிரபு பிரபுவாயிருக்கவும், ஜமீன்தாரன் ஜமீன்தாரனாயிருக்கவும், ஏழை ஏழையாகவே இருக்கவும், கூலி கூலியாகவே யிருக்கவும் செய்யப்படும் பந்தோபஸ்து தான் சுயராஜிய முயற்சியாய் இருந்துவருகின்றதை நான் பார்க்கின்றேன்.

இந்த முயற்சியில் ஏழைகள் நிலைமையாவது, கூலிகள் நிலைமையாவது, கீழ் மக்களென்று இழிவு படுத்தப்பட்ட மக்களின் நிலைமையாவது சிறிதுகூட மாறப்போவதில்லை என்பது உறுதி. ஏனெனில் அப்படிப்பட்ட மக்களுக்கு இன்னும் புத்தியோ சுயமரியாதை உணர்ச்சியோ, சுதந்திர உணர்ச்சியோ சிறிதும் வரவில்லை.

அப்படிப்பட்ட ஏழை பாமர மக்களின் பேரால் தாங்கள் தங்கள் நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும், இன்னும் மேல் போகவுமே நமது பிரதிநிதி என்பவர்களால் இக்காரியங்கள் செய்யப்படுகின்றன. இதுதான் இன்றைய சுயேட்சையின் சூட்சி. ஏழை மக்களும், இழிவு படுத்தப்பட்ட மக்களும் இன்று சுயேச்சையோ சுயராஜ்யமோ அடைய வென்று மேற்கண்ட கூட்டத் தார்களால் செய்யப்படும் முயற்சிகளை வெற்றியடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும். நான் இரண்டு சீர்த்திருத்தங் களைப் பார்த்துவிட்டேன்.

அதாவது 1910-ல் பெறப்பட்ட சீர்திருத்தங்களின் பலன்களையும் 1920-ல் பெறப்பட்ட சீர்திருத்தங்களின் பலன்களையும் பார்த்தாய் விட்டது. அவைகள் பெரிதும் ராஜாக்கள் என்பவர்களுக்கும், ஜமீன்தார்கள் என்பவர்களுக்கும், முதலாளி என்பவர்களுக்கும், பணக்காரர் கள் என்பவர்களுக்கும், உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்களுக்கும், படித்தவர்கள் என்பவர்களுக்கும், மத ஆச்சாரிகள் என்பவர்களுக்குமே உதவியும், அவர்கள் நிலைமையை ஸ்திரமானதாகவும் செய்திருக்கின்றதே தவிர வேறில்லை.

இப்போதைய சுயராஜியத் திட்டத்திலோ, நேரு திட்டத்திலோ, குடியேற்ற நாட்டந்தஸ்து திட்டத்திலோ, பூரண சுயேச்சைத் திட்டத் திலோ இந்த நிலைகள் மாறுவதற்கு ஏதாவது திட்டங்கள் வகுக்கப் பட்டிருக் கின்றதா? என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்கின்றேன்.

இப்போது எங்கு பார்த்தாலும் புதுப்புது ராஜாக்கள் ஏற்படுகின்றார்கள். புதிய புதிய ஜமீன் தார்கள் தங்கள் சொத்துகளைப் பாகம் பிரிக்க முடியாமலும், விற்க முடியாமலுமான பந்தோபஸ்துடன் ஸ்திரமாயிருக்க ஏற்பாடு செய்துகொண்டு வருகிறார்கள். முதலாளிமார்கள் எவ்வளவு லாபம் சம்பாதித்தாலும் கேள்வி இல்லை.

பணக்காரன் எவ்வளவு பூமிகள் சேர்த்தாலும் கேள்வி இல்லை. மேல் ஜாதிக்காரன் மற்றவர்களை எவ்வளவு இழிவாய் நடத்தினாலும் கேள்வி இல்லை. படித்தவர்கள் எவ்வளவு மூடர்களாகவும், அயோக்கியர்களாகவும் இருந்தாலும் அவர்களுக்கு மதிப்பு கொடுப்பதில் கேள்வி இல்லை.

மதாச் சாரியர்கள் எவ்வளவு மூடர்களாகவும், மக்கள் நலனில் கவலையில்லாத அயோக்கியர்களாகவும் இருந்தாலும் கேள்வி இல்லை. ஆகவே இவ்வித மான சுயராஜ்ஜியம் வந்தாலும் எவ்வளவு பூரண சுயேச்சை வந்தாலும் மேற் கண்ட இக்கூட்டத்தார்கள்தானே நமது பிரதிநிதியாய் இருப்பார்கள்?

இவர்கள் சேர்ந்து செய்யும் அரசாங்கம் பகல் கொள்ளைக்கூட்ட அரசாங்கமா? ஜனப்பிரதிநிதி அரசாங்கமா? என்று நன்றாய் உங்கள் புத்தி யைக் கொண்டு நடுநிலைமையில் இருந்து யோசனை செய்து பாருங்கள்.

குடியேற்ற நாட்டந்தஸ்து வந்தாலும், பூரண சுயேட்சை வந்தாலும் நமது பிரதிநிதிகள் யாராய் இருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள். இன்று இருக்கும் பணக்காரனும், ஜமீன்தாரனும், முதலாளியும், உயர்ந்த ஜாதிக் காரனும்தானே பிரதிநிதியாய் வருவார்கள். இவர்கள் தம்மில் ஒருவருக் கொருவர் கொள்ளையடிக்கத்தானே ராஜரீகம் நடத்துவார்கள்.

இன்று நமது ரவுண்டேபில் பிரதிநிதிகள் யார்? என்று பாருங்கள். இன்று நமது சட்டசபை பிரதிநிதிகள் யார்? என்று பாருங்கள். இவர்கள் தானே இந்த இருபது வருட காலமாய் ஏழை விவசாயிகளின் தொழிலாளிகளின் (தீண்டப்படாத வர்களின்) தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாய் இருக்கின்றார்கள்.

அன்றியும் இதுவரை சுயராஜியக் கிளர்ச்சி ஸ்தாபனங்களில் நமது தலைவர்களாய் இருந்து வந்தவர்கள் யார்? இன்றும் இருந்து வருபவர்கள் யார்? என்று யோசித்துப் பாருங்கள். இந்த விதமான அரசியல் சீர்திருத்த ஸ்தாபனங்களிலும் சுயராஜிய ஸ்தாபனங்களிலும் இருக்கும் பிரதிநிதிகளும், தலைவர்களும் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்று செய்துவந்த காரியங்கள் என்னவென்றும் 100-க்கு 90 பேர்களுக்கு மேற்பட்ட பகுத்தறி வில்லாத பாமர மக்களை இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக எப்படி நடத்தி வந்திருக்கின்றார்கள் என்றும், இந்த பாமர மக்கள் எப்படி நடந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் சற்று யோசித்துப் பாருங்கள்.

வரப் போகின்றது என்று சொல்லப்படும் எந்த சீர்திருத்தத்திலும் கூட சுயநலக்காரர்களின் அதாவது ஜமீன்தார்கள், வியாபாரிகள், வட்டிக் கொள்ளைக்காரர்கள், படித்தவர்கள், பெரிய பெரிய தோட்ட முதலாளிகள் முதலானவர்களுக்கு பிரதிநிதித்துவமும் விருத்தியாவதற்கு வழியும், பந்தோபஸ்தும் இருக்கின்றதேயொழிய ஏழை மக்களுக்கு அவர்களது ஏழைத் தன்மையில் இருந்து விடுதலை பெற என்ன சௌகரியம் இருக்கின்றது? நாட்டுச் செல்வமும், நாட்டுத் தொழிலும், நாட்டு பூஸ்திதிகளும், சிலரே கொள்ளையடித்து, சிலரே தங்கள் சுவாதீனம் செய்துகொண்டு, சிலரே தங்கள் இஷ்டப்படி அனுபவிக்க வசதி இருக்கத்தக்கதான சுயராஜியம் யாருக்கு வேண்டும்? ஜனங்களுக்கு அறிவில்லாதபோது அவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பது குரங்கு கையில் கொள்ளிக்கட்டையைக் கொடுத்தது போலவேயாகும்.

இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாய் பகுத்தறிவும், கல்வியும் வளர்க்கப்படும் காலமாயிருக்கின்றபடியால் இந்தக் காலத்தில் தலைவர்கள் என்பவர்கள், இந்திய பிரதிநிதிகள் என்பவர்கள் பாமர மக்களை பகுத்தறி வுள்ள மக்களாக்குவதில் முயற்சி செய்யட்டும் என்றுதான் சொல்லுகின்றேன். இந்தியாவில் இந்தியர்களில் நடுநிலைமையுடன், பொதுநோக்குடன் அரசு புரியும் பிரதிநிதிகள் இன்று யாரும் இல்லை. இல்லவே இல்லை.

திரு. காந்தியானாலும் சரி, பண்டித நேரு ஆனாலும் சரி, மாளவியாஜி யானாலும் சரி இவர்கள் யாருக்கும் நெல்லு காய்க்கின்றது மரமா செடியா என்பதும், நெல்லாய்க் காய்க்கின்றதா, அரிசியாய்க் காய்க்கின்றதா என்பது போன்ற விஷயங்களும் தெரியாதென்றே சொல்ல வேண்டும். ஆரம்ப கால காங்கிரஸ் அதாவது படித்தவர்கள் தங்கள் நன்மைக்காக வக்கீல் வேலையில் செல்வாக்கும் கீர்த்தியும் பெறுவதற்காகவும் அரசாங்கத்தில் பெரிய உத்தியோகம் பெறுவதற்காகவும் வக்கீல்களாலும் அவர்களது ஜுனியர்களாலும் அவர்களது கட்சிக்கார வியாபாரிகள், ஜமீன்தார்கள் முதலியவர்களின் உதவிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தில் விழுந்து அதன் அனுபவம் மாத்திரம் பெற்று அதே மனப்பான்மையிலிருந்து அதை வளர்த்து வந்து மக்களுக்கு எதைச் சொன்னால் தங்கள் கட்சியில் சேர்வார்கள் தங்க ளோடு கூட கோவிந்தா போட்டு கைதூக்குவார்கள் என்று கண்டுபிடித்து சுதேசியம், தீண்டாமை விலக்கு, கள்ளு விலக்கு, வரி குறைப்பு என்கின்ற வார்த்தைகளைத் திரு. சுப்பிரமணிய பாரதி அவர்கள் சொன்னது போல் அதாவது, “உப்பென்றும் சீனியென்றும் உள்நாட்டுச் சேலை என்றும் செப்பித் திரிவாரடிக் கிளியே” என்பது போல் சொல்லி பாமர மக்களை ஏமாற்றிய கூட்டத்தில் விழுந்து கரையேற முடியாமல் தவிக்கின்றவர்கள் ஆவார்கள். இவர்களுக்கும் இந்திய மக்கள் விடுதலைக் கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்று தைரியமாகச் சொல்லுவேன்.

ஏனெனில் திரு. காந்தியவர்களுக்குத் தீண்டாமை ஒழியாமல் சுயராஜி யம் அடைய முடியாது என்பதும், அது ஒழியாத சுயராஜியம் எதுவும் மக்க ளுக்குப் பயன்படக்கூடிய உண்மையான சுயராஜியமாய் இருக்க முடியாது என்பதும் நன்றாய் தெரியுமென்பது மாத்திரமல்லாமல் திரு. காந்தியவர்கள் திருவாக்காலேயே ஆயிரக்கணக்கான தடவை சொல்லப்பட்டிருப்பதும் யாவருக்கும் தெரிந்த காரியமாகும்.

யாருக்காவது சந்தேகமிருந்தால் அவரது “யங் இந்தியா” பத்திரிகையில் தீண்டாமை விலக்கைப் பற்றி அவர் எழுதிய வியாசங்கள் திரட்டிப் போடப்பட்டிருக்கும் “யங் இந்தியா” புத்தகத்தை வாங்கிப் பார்த்தால் நன்றாய்த் தெரியவரும். அப்படி இருக்க, இப்போது சட்ட மறுப்பும், சத்தியாக்கிரகமும் உப்புக்காகவும் சீமைச் சாமான்களுக்காகவும் எதற்காக செய்யப்படுகின்றது? தீண்டாமை ஒழியாமல் பூரண சுயேச்சை யாருக்கு? என்றும் அல்லது தீண்டாமை ஒழிந்து விட்டதா என் பன போன்ற விஷயங்களை நடுநிலைமையிலிருந்து பார்த்தால் உண்மை விளங்காமல் போகாது.

சகோதரர்களே! இந்தக் கேள்விக்கு சரியான பதில் சொல்லத் திரு. காந்தி அவர்கள் நழுவிக் கொண்டுவந்தாலும் அதில் சேர்ந்துள்ள மற்ற ஆட்கள் தங்கள் சுயநலத்தை முன்னிட்டு பொதுஜனங்களை ஏமாற்றித் தந்திரமாகப் பதில் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அதென்னவென்றால் சுயராஜியம் வந்த பிறகு தீண்டாமையானது சரிபட்டு விடுமாம்.

சட்டசபைகளில் நாம் சட்டம் செய்து கொண்டால் சரியாய் போய்விடுமாம். இதை நீங்கள் நம்புகின் றீர்களா? அப்படியானால் இப்போது சட்டம் செய்வதை யார் தடுக்கின் றார்கள்? இதுவரை எந்த பிரதிநிதி இதற்குச் சட்டம் கொண்டு வந்தார். சட்டசபையில் எந்தச் சட்டப்படி இத்தீர்மானம் நமது பிரதிநிதியால் கொண்டு வர முடியாமல் செய்யப்பட்டிருக்கின்றது என்பன போன்ற விஷயங்களை யோசித்துப் பாருங்கள்.

இன்று நீங்கள் தீண்டாமை ஒழிக்கச் சட்டம் செய்யக்கூடிய பிரதிநிதிகள் சட்டசபைக்கு அனுப்பும்படியான புத்தியும், தகுதியும் வசதியும் உங்களுக்கு இருக்கின்றதா? உங்களால் முடியுமா? என்று யோசனை செய்து பாருங்கள்.

சாரதா சட்டத்தை அழிக்கின்றேன் என்று சொல்லிக் கொண்டு சட்ட சபைக்கு நின்ற இரண்டு பார்ப்பனர்களுக்குப் பார்ப்பனரல்லாதார் 100-க்கு 75 பேர்கள் ஓட்டு கொடுத்திருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து நிற்க பார்ப்பனரல்லாதார்களில் யாருமில்லை.

சுயமரியாதையுள்ள ஒரு மெம்பரா வது சட்டசபைக்குப் போக முடிவதே இல்லை என்பதையும் ஞாபகத்தில் வையுங்கள். இந்துக்கள் என்பவர்களின் சட்டசபைத் தொகுதிக்கு மகமதிய ரல்லாதார் என்கின்ற பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற கவலையும் உணர்ச்சியும் உள்ளவர்களில் இந்தியா பூராவிலும் ஒருவர் கூட சட்டசபைக்குப் போக முடியவில்லை.

அதுதான் போகட்டும், இந்து லாவி லும், இந்தியா சட்டசபையிலும், மாகாண சட்டசபையிலும் நம்மை சூத்திரர்கள் என்று குறிக்கப்பட்டிருப்பதையும், குறிக்கப்படுவதையும் இன்றும் சொல்லப்படுவதையும் மாற்றவும் தடுக்கவும் நீங்கள் ஒரு சுயமரியாதை யுள்ள பிரதிநிதியாவது சட்டசபைக்கு அனுப்ப இன்றுவரை உங்களால் முடியவில்லை.

சென்ற சட்டசபைக் கூட்டத்தில் நம்மையெல்லாம் சூத்திரர்கள் என்று தாராளமாய்ச் சொல்லப்பட்டதை எழுந்து ஆட்சேபிக்க மனித உடல் தாங்கிய ஒரு ஜீவன் கூட அந்தக் கூட்டத்தில் இல்லை. சாதாரணமாக எனக்கு அதுசமயம் சட்ட சபையில் பல சிநேகிதர்கள் இருந்தார்கள். ஒவ்வொருவரிடமும் சொன்னேன்.

அதைக்கண்டிக்கும் படியும் இனிமேல் அப்படிச் சொல்லக்கூடாது என்று தீர்மானிக்கும் படியும் யார் யாரையோ கேட்டுக்கொண்டேன். பனகால் அரசர் முதல் யாராலும் முடிய வில்லை. தங்களுடைய சுயநலத்திற்கு கெடுதிவரும் என்றே பயந்து கொண்டார்கள். “அத்திப் பூ பூத்தால் போல்” ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டது என்றால் அது சட்டசபைக்குப் போனதும் “பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்கு மதப்படிப்பு சொல்லிவைக்க வேண்டும்” என்று தீர்மானம் கொண்டு வரத்தான் முடிந்ததே யொழிய மக்களுக்கும் பெண்களுக்கும் விரோதமாய் இருக்கும் மதத்தை அழிக்கத்தகுந்த ஒரு பெண்ணை சட்டசபைக்கு அனுப்ப நம்மால் முடியவில்லை.

இன்றைய தினம் இந்து தேவஸ்தான பரிபாலன சட்டத்தில் எல்லா இந்துக்களும் கோவிலுக்குள் போகலாம் என்று சட்டம் செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் நாம் சுயமரியாதையுள்ள பிரதிநிதிகளை சட்ட சபைக்கு அனுப்பமுடியாமல் போனதா? அல்லது சுயராஜியம் இல்லாமல் போனதா? என்பதை உங்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பாருங்கள்.

இன்றைய தினம் பூரண விடுதலையுள்ள அரசாங்கம் வந்து அதில் தேர்தல் நடைபெறுமானால் நானாவது என்னைப் போன்ற நண்பர்களாவது சட்டசபைக்குப் போகமுடியுமா என்று யோசித்துப் பாருங்கள். 10000, 20000, 30000 ரூபாய் செலவு செய்து தான் உங்கள் பிரதிநிதியாக வேண்டும்.

அதுவும் ஜாதியைக் காப்பாற்றுகின்றேன், மனுதர்மத்தை காப்பாற்றுகின்றேன், கோவிலைக் காப்பாற்றுகின்றேன், சாமியின் பெண்டு பிள்ளைகள் தாசிகள் ஆகியவற்றைக் காப்பாற்றுகின்றேன், மோட்சத்திற்கு கூட்டிவிடும் தரகர்களைக் காப்பாற்றுகின்றேன் என்று சொன்னால்தான் அப்படிப்பட்டவருக் கும் ஓட்டு கிடைக்குமே அல்லாமல் எந்த யோக்கியனுக்காவது, அறிவாளிக் காவது, சுயமரியாதைக்காரனுக்காவது ஓட்டுக் கிடைக்குமா என்று யோசித் துப் பாருங்கள். இதற்கு வெள்ளைக்காரர்கள் முட்டுக்கட்டை போடுகின் றார்களா? அல்லது நமது மக்களுக்கு அறிவில்லையா என்று யோசித்துப் பாருங்கள்.
9-ந் தேதி எங்கள் மாகாணத்தில் சட்டசபை எலக்ஷன் நடந்தது.

அதில் வெற்றி பெறப்போகும் பிரதிநிதிகள் யார் என்று கருதுகிறீர்கள். ஊர் மக்களிடம் 100க்கு 3, 4 வரையில் வட்டி வாங்கி பணம் சம்பாதித்து பார்ப்பானுக்கும், பாழும் கல்லுக்கும் அழும் கூட்டத்தார்களும், விளைந்தாலும், விளையாவிட்டாலும் உதைத்து வரி வசூலிக்கும் ஜமீன்தார்களும் 1000, 2000, 5000, 10000 கணக்கான ஏக்கர் பூமிகளை உடைய பெரிய மிராசுதாரர்களும் முனிசிபாலிடிகளும் ஜில்லா தாலூகா போர்டுகளைத் தங்கள் வியாபார தொழிலாய் உபயோகிக்கும் ஸ்தல ஸ்தாபன வியாபாரிகளும், மக்கள் ஒழுக் கங்களையும் குடும்பங்களைப் பாழாக்கிக் கொள்ளையடிக்கும் வக்கீல்களும் மற்றும் இவர்கள் போன்ற ஏழை மக்களைக் கொடுமை செய்பவர் களும், அவர்களது நன்மை, தீமையில் சிறிதும் கவலையில்லாதவர்களும் தவிர ஒரு சுயமரியாதையுடையவராவது, யோக்கியராவது அங்கு இருக் கின்றார்கள் அல்லது வரப்போகிறார்கள் என்று கருத முடியுமா? என்று உங்களைக் கேட்கின்றேன்.
நான் சட்டசபைத் தவிர எல்லா ஸ்தாபனங்களிலும் இருந்திருக்கின்றேன்.

அவைகளின் அனுபவங்கள் எனக்கு நன்றாகத் தெரியும், ஈரோடு கோவில் பிரவேச முயற்சி என்ன ஆச்சுது? என்பது உங்களுக்குத் தெரியாதா? இன்னும் தெருப்பிரவேச முயற்சிக்குக் கூட தைரியமாய் யாரும் வெளிவர முடியாமல் ஆளுக்காள் பழி சுமத்தி பொறுப்பை நழுவ விட்டு விடுவதில் தான் இருக்கின்றது.

சுயமரியாதை இயக்கத்தில் கலந்து இருந்த பல பெரியார்களுக்குக் கூட சுயமரியாதை இயக்கத்திலிருந்து ராஜிநாமா கொடுத்த பிறகுதான் வெற்றி கிடைத்திருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தில் கலந்திருக்கின்ற பல பெரியார்களுக்கு அதற்காகவே போட்டிகள் உண்டா யிற்று. இவர்கள் எல்லோரும் சட்டசபைக்குப் போய் நமது பிரதிநிதிகளாக என்ன செய்யப் போகின்றார்கள் அல்லது என்ன செய்யக்கூடும் என்று கருதுகிறீர்கள்? நமது வரி பணத்தை எப்படி வெள்ளைக்காரனைப் போலவே கூட்டுக் கொள்ளை அடிக்கிறது?

அதில் இன்னும் யார் யாருக்கு எவ்வளவு பங்கு கொடுப்பது என்பது போன்று திருட்டு சொத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் திருடர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வது போல் இன்று சண்டை போட்டு நாளைக்குக் கொள்ளை அடித்துப் புதுப்புது ஜமீன் தார்களாகவும் பாகம் பிரித்துக் கொள்ளவும், விற்கவும் முடியாத பிரபுகள் குடும்பக்காரர்களாகப் போவதைத் தவிர வேறு என்ன செய்யப்போகிறார்கள் என்று நினைக்கின்றீர்கள்.

மற்றும் நமக்கு ஏதாவது பாமர மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது என்று நினைத்தால் நம்மை பெரியாரென்றும், தலைவர் என்றும், சுயமரியாதை இயக்கமே மேலானதென்றும் கூறித் திரிவார்கள். நமக்கு செல்வாக்கு இல்லையென்று தெரிந்தால் “சுயமரியாதை என்கின்ற பேரே எனக்குப் பிடிக்கவில்லை.”

“மதத்தில் பிரவேசிப்பது தப்பு” “சாமிகளை குறைகூறுவது நன்றாய் இல்லை” என்றும் நமது பெரியார் “அரசியலில் பிரவேசித்து விட்டார்” என்றும் “நிரம்பவும் அவருக்குத் தலை கிருகிருத்து போய்விட்டது” என்பது போன்ற எதை யாவது சொல்லி விட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்ய ஆரம்பித்து தான் சுயமரியாதைக் காரருடன் சேர்ந்தவரல்ல என்றும் சொல்லி விடுவார்கள்.

உதாரணமாக ஒரு கனவான் உண்மையாக சுயமரியாதைக் கொள்கை கள் எல்லாவற்றிலும் நம்பிக்கையுடையவர்களாயிருந்ததோடு, விக்கிரக ஆராதனையை மிகவும் வெறுப்பவராயிருந்தார். “விக்கிரகங்களை உதைத் தால் (இன்னும் பலமான வார்த்தையில்) என்ன செய்யும்” என்று கூட ஒரு கூட்டத்தில் சொன்னவர்கள். அப்படிப்பட்ட கனவான்கள் “விக்கிரகங் களைக் குற்றம் சொல்லாதீர்கள்” என்று எனக்குப் புத்திமதி சொல்ல வேண்டிய வரானார்.

காரணம் என்ன வென்று கருதுகின்றீர்கள். இப்படிச் சொன்ன காரணத்திற்காக அவரைச் சில பிரதிநிதி ஸ்தானங்களில் தோற் கடிக்க அவரது எதிரிகள் முயற்சி செய்தார்கள். உடனே இப்படி ஒரு கரணம் அடித்து அந்த ஸ்தானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியவராய் விட் டார். இந்தமாதிரி நிலையில் சிக்கிக் கொள்ள முடியாத பிரதிநிதிகள் இன்று நமக்கு இல்லவே இல்லை. இதை நம்புங்கள்! நம்புங்கள்!! யாராவது இருந் தால் அவர் நமக்கு பிரதிநிதியாய் வர முடியாது.

எங்கள் ஜில்லாவில் பார்ப்பனராதிக்கத்தை ஒருவாறு ஒழித்தோ மானாலும் அதற்குப் பதிலாக அவர்களைப் போன்ற வருணா சிரமத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புடைய ஒருவரைத்தான் பிரதிநிதியாகக் கொண்டு வரமுடிந்தது. அதுவும் வேண்டா மென்றால் இன்னமும் மோச மானவர்கள் தான் வருவார்கள்.

ஆகவே இந்தக் கூட்டம்தான் இன்றைய நிலையில் உங்கள் சுயராஜ்யத்திலும், பூரண சுயேச்சையிலும், குடியேற்ற நாட்டந்தஸ்திலும் இந்திய மக்களுக்குப் பிரதிநிதியாக வரமுடியும். ஒரு சமயம் காங்கிரஸ் காரர்களே சட்டசபைகளைக் கைப்பற்றுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளு வோம்.

அவர்கள் யார்? ஆகாயத்திலிருந்து குதித்து வரக்கூடியவர்களா? அநேகமாய் இதே ஆட்கள் தான் காங்கிரசின் பேரால் வருவார்கள் அல்லது இது போன்ற வேறு இரண்டொரு ஆட்களும் வரக்கூடும்.

ஆகவே இப்படிப்பட்ட ஆட்களை நமது பிரதிநிதிகளாக வைத்துக் கொண்டு எந்த சுயராஜ்யம் வந்தாலும் நமக்கு சிறிதும் பயனில்லை.
வெள்ளைக்காரனும் நமது பணக்காரர்களும், படித்தவர்களும் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பதாலாவது போட்டிக்காகவேனும் அல்லது தங்கள் சுயநலத்திற்காகவேனும் ஒவ்வொருவரும் “நாங்கள்தான் ஏழைகளின் பிரதிநிதி, தாழ்த்தப்பட்டவர்கள் பிரதிநிதி” என்று போட்டிக்கு வாயி லாவது சொல்லிக் கொள்ளுகின்றார்கள்.

இந்தப்படி வெள்ளைக்காரர்களே இல்லாமல், இந்தப் பணக்காரர்களும், படித்தவர்களும், வியாபாரிகளும், பெரிய பெரிய மிராசுதாரர்களும், ஜமீன்தாரர்களும் மாத்திரமே ஆட்சியை நடத்துவார்களானால் ஆளுக்கு கொஞ்சவீதம் நம்மை அடிமையாகப் பங்கு போட்டுக் கொள்ளுவதுதான் இவர்களது அரசியலாக இருக்கும்

ஆதலால் இன்றைய நமது கேவலநிலை விர்த்தியாகும் படியான தாகவாவது அல்லது இப்படியே இருக்கும்படியானதாகவாவது எந்த சுயராஜியமும், சுயேச்சையும், மாறுதலும் சிறிதும் நமக்கு வேண்டாம். ஏமாற்றி ஏய்த்துக் கொள்ளையடித்தவர்கள் தங்கள் நிலையைப் பத்திரமாய் காப்பாற்றிக் கொள்ளைச் சுயராஜ்யம் பெற நாம் விடக்கூடாது.

எல்லாவற்றையும் ஒன்றாய்ப் போட்டுப் பங்கிட்டுக் கொள்ளத் தக்கதாகவோ அல்லது எந்த நிலையையும் யாரும் அடையத் தக்கதாகவாவது உள்ள சீர்திருத்தமும், சுயராஜியமும், சுதந்திரமும்தான் நமக்கு வேண்டும்.

அதற்கு மக்கள் தயாராகும் வரை மூன்றாவதான ஒருவன் இவர்களை மிரட்ட இருப்பதில் ஒன்றும் முழுகிப் போய்விடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நம் முடைய மக்களிடம் நமக்கு நம்பிக்கை ஏற்படும் போது, மூன்றாவதானவன் தானாகவே மற்றவர்களைப் போலவே ஆய்விடுவான்.

அல்லது தானே மூட்டைக் கட்டிக் கொள்ளுவான். நாம் அதை மறந்து விட்டு “வெள்ளைக்காரனே நீ கொள்ளைக்காரன். ஓடிப்போ எங்கள் நாட்டைவிட்டு” என்று மாத்திரம் வாயில் சொல்லிக் கொண்டு கையில் தக்ளி சுற்றுவதனால் ஒரு காரியமும் முடிந்துவிடப் போவதில்லை.

அன்றியும் அவர்களிடமுள்ள அதிகாரத்தை நமது உயர்ந்த ஜாதியார் என்பவர்களிடமும் ஜமீன்தாரர்களிடமும், மிராசுதாரர்களிடமும், வக்கீல்களி டமும், வட்டி வியாபாரிகளிடமும், சந்நியாசிகளிடமும் வாங்கிக் கொடுக் கவும் முடியாது என்று கண்டிப்பாய் சொல்லி விடுங்கள். இந்தப் போலித் தேசீயப் பூச்சாண்டிக்குப் பயப்படாதீர்கள்.

குறிப்பு : 11.09.1930 ஆம் நாள் நாகர்கோவில் ஆர்வாய் மொழி, பணக்குடி ஆகிய இடங்களில் ஆற்றிய சொற்பொழிவு

(குடி அரசு - சொற்பொழிவு - 21.09.1930)

 

Pin It