திரு. காந்தியவர்கள் தற்பொழுது உண்ணாவிரதம் ஆரம்பித் திருப் பதைப் பற்றியே எங்கும் பேச்சாக இருக்கிறது. நமது நாட்டு அரசியல்வாதிகளும், சீர்திருத்தவாதிகளும், வருணாச்சிரம தருமவாதிகளும் கூட திரு. காந்தியவர்களின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைப் பற்றிப் பத்திரிகைகளிலும் அறிக்கைகள் வெளியிடுகின்றனர். பொதுக் கூட்டங்களிலும் பேசி வருகின்றனர். நாமும் அவருடைய உயிர் காப்பாற்றப்பட வேண்டுமென்பதை மனப்பூர்வமாக ஒப்புக் கொள்ளுகிறோம்.
ஆனால், திரு. காந்தியவர்கள் எதற்காக உண்ணா விரதமிருக்கிறார்? அவர் உண்ணா விரதமிருப்பதன் மூலம், அவர் கருதுகின்ற காரியமோ, அல்லது ஏழை மக்களுக்கு விடுதலையோ பூரணமாக ஏற்பட்டு விடுமா? என்பதைப் பற்றி நம்மைப் பொறுத்தவரை ஒன்றும் ஏற்பட முடியாது என்றுதான் கூறுவோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தார்க்குத் தேர்தலில் தனித் தொகுதி அளித்திருப்பதால், இந்து மதம் பிளவுபட்டு விட்டதென்றும், தாழ்த்தப்பட்ட சமூகத்தாரும் இந்து மதத்திலிருந்து பிரிந்து விட நேர்ந்து விடுமென்றும், ஆகையால், இந்து மதம் காப்பாற்றப்படவும், தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து சமூகத்திலிருந்து பிரியாமலிருக்கவும் வேண்டுமானால் தனித் தொகுதியை ரத்துச் செய்ய வேண்டும் என்றும் கூறியே இப்பொழுது உண்ணா விரதமிருந்து வருகிறார். திரு.காந்தியவர்கள் சென்ற 20 - 9 - 32ல் பத்திரிகைப் பிரதிநிதிகளுக்குப் பேட்டி கொடுத்துப் பேசி கொண்டிருந்தபோது அவர் கூறிய விஷயங்களைக் கவனித்தால் இவ்வுண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.“தனித் தொகுதித் தேர்தல் முறையை ரத்துச் செய்வதன் மூலம் எனது உண்ணாவிரதம் பொதுவாக முடிவு பெறும்; ஆனாலும் எனது விரதத்தின் அடிப்படையான எண்ணம் ஒரு பொழுதும் நிறை வேறியதாகாது. நான் என்னையும் ஒரு தீண்டாதானெனக் கொண்டி ருப்பதனால், தீண்டக் கூடியவர்களுக்கும், தீண்டக்கூடாதவர்களுக் கும் தற்கால சாந்தியாக ஏற்படும் எந்த ஒப்பந்தத்தையும் நான் ஒப்புக் கொள்ள முடியாது. தீண்டாமையை அடியோடு கல்லி எறிந்து விட வேண்டும் என்பதே எனது ஆவல். நான் அதன் பொருட்டே உயிரோடிருக்கிறேன். அதை ஒழிக்க சந்தோஷத்தோடு எனது உயிரை இழக்கவும் தயாராக இருக்கிறேன். இரு சாராருக்கும் நிலையான உடன்படிக்கை ஏற்படவேண்டுமென்பதே எனது ஆவல். இவ்வாறு ஏற்படும் ஒப்பந்தத்தினால் இப்பொழுதே தீண்டாதார்களுக்கு நன்மை ஏற்படவேண்டும். ஆகையால் இந்தியா முழுதும் ஆட்சேபனையின்றி ஒப்புக் கொள்ளக் கூடிய ஒப்பந்தமே ஏற்பட வேண்டும் ஒப்பந்தம். ஏற்பட்டு விட்டது என்று வீண் ஆர்ப்பாட்டம் செய்வதில் பயனில்லை.”
என்று சொல்லியிருப்பதைக் கொண்டு, திரு. காந்தியவர்கள் உண்மையிலேயே தீண்டாதவர்களின் நன்மையைக் கருதியே தான், அதாவது அவர்களுடைய சமத்துவத்தைக் கருதியே தான் உண்ணா விரதமிருந்து வருகிறார் என்று கூறலாம். ஆனால், திரு. காந்தியவர்கள் இதற்குமுன் கூறிக் கொண்டு வந்த சில விஷயங்களை நினைக்கும்பொழுது, இவர் எந்த அளவில் தீண்டாமை ஒழித்தலையும், அவர்களுக்குச் சமத்துவம் கொடுக்க வேண்டுமென்பதையும் ஒப்புக் கொள்ளுகிறார் என்பதில் சந்தேகம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. அதாவது, வருணாச்சிர தருமம் இருக்க வேண்டும். ஆனால் தீண்டாமை ஒழிய வேண்டும் என்றும், “பிறப்பினால் மனிதர்களின் குணத்தில் வேறுபாடுகள் இருப்பதினால் பிறப்பில் வித்தியாசம் உண்டு” என்றும் இதற்குமுன் கூறியிருக்கிறார்.
இப்பொழுது இவைகளையெல்லாம் மறந்து விட்டு, உண்மையாகவே, இந்து சமூகத்துடன் தீண்டாதவர்களும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று திரு. காந்தியவர்கள் அபிப்பிராயப்படுவதாகவே வைத்துக் கொள்ளுவோம். ஆயினும் இது தீண்டாதாரின் நன்மையின் பொருட்டா அல்லது இந்து மதத்தின் நன்மையின் பொருட்டா என்பதைப் பற்றி ஆராய்ந்தால், இந்துமத நன்மையின் பொருட்டேயென்பது வெளிப்படையாக விளங்கும். இதனை இதற்கும் (உண்ணாவிரதத்திற்கும்)
அரசியலுக்கும் எவ்வகையிலும் சம்பந்தமில்லை. ஆயினும் இதனால் அரசியல் விஷயத்தில் பலன் உண்டாகாது என்று கூறி விடவும் முடியாது. தீண்டாமையை விலக்கத் தகுந்த வழிகளைக் கைக் கொள்ளுவதால் அரசியல் விஷயத்திலும் சிறந்த பயன் உண்டாகும், அன்றியும் அதில் மதம், தர்மம் சம்பந்தமான விஷயங்களும் அடங்கியிருக்கின்றன. நான் தீண்டாமையைக் கண்டிப்பதானது இந்து மதத்தில் உள்ள ஆபாசங்களின் அடிப்படையைக் கண்டிப்பதாகுமென்றே நான் நம்புகின்றேன். எனவே சுயராஜ்ய அரசியல் திட்டத்தைவிட அவ்விஷயம் மிகவும் முக்கியமானது..
என்று பத்திரிகைப் பிரதிநிதிகளிடம் கூறியிருப்பதைக் கொண்டுமே, இந்தியா மந்திரிக்கு திரு. காந்தியவர்கள் எழுதியிருக்கும் கடிதத்தில்,
“இந்து தர்மம் சம்பந்தப்பட்டவரையில் தனித் தொகுதி முறை அச் சமூகத்தைச் சின்னா பின்னமாகச் சிதைத்து, உருப்படாமல் செய்து விடும். நான் சம்பந்தப்பட்டவரையில் இந்த வகுப்பாரின் தர்ம சம்பந்தமானதும், மத சம்பந்தமானதுமே முக்கியமானதாகும். தர்ம விஷயத்தையும் மத விஷயத்தையும் கவனிக்கும்போது அரசியல் விஷயம் முக்கியமானதா யிருந்தாலும் அது, தானே முக்கியமற்றதாகி மறைந்து விடுகிறது.”
என்று குறிப்பிட்டிருப்பதைக் கொண்டும் அறியலாம். இவைகளைக் கொண்டு, திரு. காந்தியவர்கள் உண்மையிலேயே தாழ்த்தப்பட்டார்கள் பால் அனுதாபங் கொண்டு அவர்களுக்குச் சகல சுதந்தரங்களும் அளிக்க வேண்டுமென்று கேட்பதும், இந்து மதம் அழியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே என்னும் உண்மையை உணர்ந்து கொள்ளலாம். திரு. காந்தியின் சுயராஜியத் திட்டம் கூட மதத்தை அடிப்படையாகக் கொண்ட சுயராஜ்யத் திட்டம் என்பதை நாம் பல தடவைகளில் விளக்கிக் காட்டியுள்ளோம்.
திரு. காந்தியவர்களின் நோக்கப்படி இந்து மதம் காப்பாற்றப்பட வேண்டுமானால் தீண்டாமையை ஒழித்து தீண்டாதார்களையும் இந்துக் களுடன் சேர்த்துக் கொள்ளப்படாத வரையில் இந்து மதம் நிலைத்து நிற்க முடியாது என்ற தீர்மானத்திற்கு திரு. காந்தி வந்து விட்டார் என்றே தெரி கின்றது. மற்ற இந்து மகாசபைக்காரர்களும், முஸ்லீம்களுக்கு எதிரான நோக்க முடைய மற்ற அரசியல் வாதிகளும் தீண்டாமை ஒழியாவிட்டாலும் அவர் களை இந்துக்களினின்றும் பிரிக்காமலிருந்தால்தான் இந்து மதம் நிலைக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டார்கள். இதனாலேயே திரு. காந்திய வர்கள் உண்ணாவிரதம் ஆரம்பித்தவுடன் பலதிறப்பட்ட அபிப்பிராய முடையவர்களும் தீண்டாமையை ஒழிப்பதற்கும், தனித் தொகுதியை ரத்து செய்வதற்கும் பம்பாயில் சமரச மகாநாடு கூட்டி ஆலோசனை செய் திருக்கிறார்கள்.
இச்சமயத்தில், தீண்டாதார்களையும், அவர்களின் தலைவர்களையும் சமாதானப்படுத்துவதற்காகப் பல கோயில்களை அவர்களுக்காகத் திறந்து விடப்படுவதாகவும், பல குளங்களிலும் கிணறுகளிலும் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப் படுகிறதாகவும் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. உண்மை யிலேயே இத்தகைய உரிமைகளும், இன்னும் தீண்டாதார் கேட்கும் உரிமை களும் தீண்டாதார்களுக்குக் கொடுக்கப் பட்டுவிட்டால், அவர்கள் இந்துக் களோடு சேர்ந்திருப்பது பற்றியோ, அல்லது தனித் தொகுதித் தேர்தலை ரத்து செய்து பொதுத் தொகுதியில் ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்க ஏற்பாடு செய்வதைப் பற்றியோ நாம் கவலைப்பட போவதில்லை.
ஆனால் தீண்டாதாருக்கு இத்தகைய உரிமைகளையளிக்க சநாதன தர்ம இந்துக்கள் ஒரு நாளும் சம்மதப்பட மாட்டார்கள் என்றேதான் நாம் கூறுகின்றோம்.
இதற்கு உதாரணம் வேண்டுமானால் இப்பொழுது நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே விளங்கும். இன்று கோயில்களைத் திறந்து விடப் படுவதாகச் செய்தி வருவதெல்லாம் வட நாட்டிலிருந்து தான் வருகின்றன. அங்கும் பிரபலமாக விளங்கும் பொதுக் கோயில்கள், எதையும் திறந்து விட்டதாகக் காணமுடியவில்லை. அநாமதேய கோயில்களையும் சிலர் தங்கள் சொந்தக் கோயில்களையும் திறந்து விட்டிருப்பதாகத்தான் செய்திகள் கிடைக் கின்றன. தென்னாட்டைப் பொறுத்தவரையில் அந்தப் பேச்சுக் கூட இல்லை. நமது மாகாணத்திலும் சென்னை, சிதம்பரம், திருச்சி, மதுரை, கும்பகோணம், ஸ்ரீரங்கம், திருநெல்வேலி போன்ற பெரிய ஊர்களிலும் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் திரு. காந்தியின் பட்டினி விரதத் தையும், தனித் தொகுதியையும் மாற்ற வேண்டும் என்றும் கூட்டங்கள் போட்டுப் பேசியிருக்கிறார்கள். ஆனால் இவ்வூர்களில் உள்ள கோவில்களில் பிரவேசிக்கவோ, அவைகளைத் திறந்துவிடச் செய்யவோ முயற்சி செய்வதாகத் தெரியவில்லை.
சென்னையில் கந்தசாமி கோயிலில், சில ஆதிதிராவிடர்கள் சென்ற தாகச் செய்தி வந்தது. மறுநாள் கோயில் அடைக்கப்பட்டுவிட்டது. மைலாப்பூர் கோவிலுக்குள் செல்ல அனுமதி கேட்பதற்காகச் சென்ற உயர்ந்த சாதி இந்துக் களையே கோயிலுக்குள் விடாமல் கதவடைத்து விட்டார்கள். இந்த நிகழ்ச்சியிலிருந்தே, தென்னாட்டில் உள்ள மற்ற கோயில்களில் தீண்டாதார்கள் செல்ல சுலபத்தில் அனுமதிப்பார்களா? என்பதை ஆலோசித்தால் உண்மை விளங்காமற் போகாது.
அன்றியும், இச்சமயத்தில் கோயில் பிரவேசத்திற்கு வைதீகர்களின் எதிர்ப்புக் கிளம்பியிருப்பதையும் கவனிக்க வேண்டுகிறோம். குருவாயூரில் நீண்ட காலமாக கோயில் பிரவேசத்திற்காகச் சத்தியாக்கிரகம் செய்யப்பட்டும் வைதீக இந்துக்களின் மனம் இன்னும் இரங்கவில்லை. இன்னும் திரு. காந்தியவர்கள் உண்ணாவிரதம் ஆரம்பித்தும் கூட அங்கு கோயில் கதவு தாழ்த்தப்பட்டவர்களின் பொருட்டு அடைக்கப்பட்டே இருக்கிறது. நாசிக்கிலுள்ள ஆலயத்தில் தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்க வேண்டும் என்று சொல்லிச் சில இந்துத் தலைவர்கள் முயற்சி செய்வதைக் கண்டு வைதீகர்கள் எதிர் சத்தியாக்கிரகம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அகமதாபாத்தில் உள்ள காளியின் ஆலயத்தில் தாழ்த்தப்பட்டாரும் போகலாம் எனச் சிலர் முயற்சியால் போடப்பட்டிருந்த விளம்பரத்தைக் கண்டு வைதீகர்கள் பரப்பரப்படைந்து ஒன்றுகூடி அவ்விளம்பரத்தை எடுத்தெறிந்து விட்டனர், தாழ்த்தப்பட்டார் யாரும் அக்கோயிலுக்குள் நுழைய முடியாதபடி மறியலும் செய்யத் தொடங்கி விட்டனர். பம்பாய் வைஷ்ணவ குருமார்களில் ஒருவரான திரு. கோகுல நாத்ஜி நௌரோஜி என்பவர் தாழ்த்தப்பட்டவர்களைக் கோயிலில் விட அநுமதிப்பதை மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில்,
“சநாதன தர்மிகள் சம்மந்தப்பட்டவரையில் அவர்களுக்கு மதமே முக்கியமானதாகும், இரண்டாவதாகவே அரசியல் விஷயங் கவனிக்கப்படும். எங்கள் சமயத்திலும் கொள்கையிலும் அரசாங்கம் தலையிடா திருந்தால் அவர்கள் மற்ற விஷயங்களில் எவ்வாறு இருந்தாலும் நாங்கள் மாகாண சட்டசபைகளிலும், இந்தியா சட்ட சபைகளிலும் ஸ்தானங்கள் வேண்டுமென்று போராடமாட்டோம்.”
என்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கதாகும். இன்னும் பம்பாய் வருணாச்சிரம சுயராஜிய சங்கத்தார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்
“சமயமும், சமய சம்பந்தமான கொள்கைகளுமே எங்க ளுக்கு மிகவும் முக்கியமானதாகும். சட்டசபைகள் எங்கள் மதத் திலோ மதாச்சாரத்திலோ தலையிடுவதை நாங்கள் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்க முடியாது.”
என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். இன்னும் தென்னாட்டில் உள்ள சிதம்பரம், சீரங்கம், கும்பகோணம், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருவாரூர் போன்ற ஊர்களில் உள்ள பெரிய கோவில்களில் தீண்டாதாரை அழைத்துக் கொண்டு போக ஆரம்பித்தால் அப்பொழுது கும்பகோணப் பார்ப்பனர்கள் என்ன செய்வார்கள் என்பது தெரியும்.
ஆகையால் உண்மையிலேயே திரு. காந்தியவர்கள் விரும்புவது போலத் தீண்டாதார்களுக்குச் சமத்துவம் கொடுக்கும் விஷயத்தில் வைதீகர்கள் சிறிதும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள் என்பது நிச்சயம். தீண்டா தார்க்குக் கொடுத்துள்ள தனித் தொகுதியை ரத்துச் செய்ய வேண்டும் என்று திரு. காந்தியவர்கள் கூறுவதற்கு மாத்திரம்தான் இன்று வைதீகர்களும் அவரு டைய உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறுகின்றார்கள். இப்பொழுது திரு. காந்தி ‘தனித்தொகுதி ரத்து’ என்னும் பேச்சை விட்டு விட்டுத் தீண்டா தார்க்குக் கோயில் பிரவேசம் போன்ற உரிமைகளைக் கொடுக்க வேண்டும். இன்றேல் பட்டினி கிடந்து இறப்பேன் என்று கூறுவாரானால் இன்று சமரசம் பேச முன் வந்திருக்கும் வைதீகர்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் “இந்து மதத்துரோகியாகிய காந்தி பட்டினி கிடந்து இறக்கட்டும். அது பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று நெஞ்சிரக்கமில்லாமல் கூற முன்வந்திருப்பார்கள் என்று சத்தியஞ் செய்து கூறுகிறோம்.
ஆகையால் திரு. காந்தி செய்யும் பிடிவாதத்தினால், தீண்டாதார்களும், அவர்களுடைய சமூகத்தைப் பலி கொடுத்து, தனித்தொகுதித் தேர்தல் முறையை ரத்துச் செய்யச் சம்மதித்து திரு. காந்தியின் உயிரைக் காப்பாற்றி னாலும், தீண்டாச் சமூகத்தினரின் அடிமையும், கஷ்டமும் நீங்கப் போவதில்லையென்றே உறுதியாகக் கூறுவோம். திரு. காந்தியவர்கள், பிடிவாதமாகத் தீண்டாமையை ஒழிப்பதற்கு முயல்வாரானால், முன்பு “தீண்டாமை விலக்குத்” திட்டத்தைக் கொண்டிருந்த ஒத்துழையாமை இயக்கத்தை, நமது நாட்டுப் பார்ப்பனர்கள், சுயராஜ்யக் கட்சியைக் கிளப்பி அதன் மூலம் ஒழித் ததைப் போல இப்பொழுதும் புதிதாக ஏதாவதொரு கட்சியைக் கிளப்பி அதன் மூலம் அடக்கி விடுவார்கள் என்பதில் ஐயமில்லை. அன்றியும் முன்பு போல் திரு. காந்தியையும் மூலையில் உட்கார வைத்து விடுவார்கள் என்பதிலும் ஆட்சேபணையில்லை.
ஆகையால் தீண்டாதார்களின் உரிமைகள் முழுவதும் சட்ட மூலமாக ஏற்பட வேண்டும். ராவ் பகதூர் ஆர். சீனிவாசன் அவர்கள் கூறுவது போல, தீண்டாமை என்பதைக் குற்றமாகக் கருதும்படி சட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் உரிமை முழுவதும் சட்ட மூலம் ஏற்பட்டபின் அவர்களுக்கு எந்தத் தொகுதி இருந்தாலும் கவலையில்லை. இது ஏற்படவதற்கு முன் அவர்களுக்குரிய தனித்தொகுதி முறையை ஒழிக்க முயல்வது அவர்கள் சமூகத்தை என்றென்றும் விடுதலையில்லாமற் செய்வதற்கு முயலும் சதியாலோசனை என்று தான் நாம் கூறுவோம்.
ஆகையால், தீண்டாதாருக்குள் பிளவுண்டாகும் பொருட்டு அவர் களுடைய தலைவர்களில் சிலரைத் தங்கள் வசமாக்கும் பொருட்டும், தீண்டாதார் சமத்துவத்தைப் பற்றி வெறும் வாய்ப்பேச்சு பேசுவதில் கடுகளவும் பயனில்லை. “தீண்டாதார் பொருட்டு காந்தி பட்டினி கிடக்கிறார். ஆகையால் நாமும் பட்டினி கிடக்க வேண்டும். அவருடைய உயிருக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று பிரசாரம் பண்ணுவதிலும், பட்டினி கிடப்பதிலும், பிரார்த்தனை பண்ணுவதிலும் பலனில்லை. இந்தப் பட்டினியும், பிரார்த்தனையும் இன்னும் மக்களை மூடர்களாக்கவும் பகுத்தறிவற்றவர்களாக்கவும் தான் பயன்படும். சென்ற 20 -9-32ல் சென்னை மாகாணத்தில் பட்டினி கிடந்த பார்ப்பனர்கள் எத்தனை பேர்? அவர்கள் தீண்டாதாருக்கு அன்றைய தினம் என்ன செய்தார்கள் என்று கேட்கிறோம்.
ஆகையால் தாழ்த்தப்பட்ட மக்களும், அவர்களுடைய தலைவர்களின் பட்டினியையும் பிரார்த்தனையையுங் கண்டு ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கின்றோம். சட்ட மூலமாகத் தீண்டாதார்களுக்குள்ள தடைகளும், துன்பங்களும், கொடுமைகளும் ஒழியாதவரையில் அவர்கள் தனித் தொகுதியை விட்டுக் கொடுத்து கூட்டுத் தொகுதியை ஏற்றுக் கொள்வது அவர்களுடைய அழிவுக்குக் காரணமாகுமென்று தீர்மானமாகக் கூறுகின்றோம்.
(குடி அரசு - தலையங்கம் - 25.09.1932)