தலைவரவர்களே! அன்புள்ள நண்பர் அவர்களே! இன்று திறப்பு விழா கொண்டாடும்படி இந்த பல பாஷை சொல்லிக் கொடுக்கும் முதலிய காரியங்கள் செய்யும் வாசக சாலையை நான் திறந்து வைக்கவேண்டும் என்று எனது பழைய நண்பர்கள் பலர் கேட்டுக் கொண்டதை நான் ஒரு பெருமையாய்க் கருதி அத் தொண்டாற்றவே இங்கு வந்துள்ளேன்.
எனினும் இத்திறப்புக் கொண்டாட்டத்தை நான் நடத்துவதின் மூலம் எனக்குக் கிடைத்த பெருமையைவிட நான் இங்கு வந்து எனது பழைய நண்பர்களை சந்தித்து அளவளாவ சந்தர்ப்பம் கிடைத்ததே எனக்கு மிகுதியும் பெருமகிழ்ச்சியைக் கொடுக்கத்தக்கதாகும்.
இந்த விழாவிற்கு இன்னார் வந்து சொற்பொழிவாற்றுவார்கள் என்று சொன்னவுடன், யான் எவ்வித யோசனையும் செய்யாமல் உடனே வருவதாக ஒப்புக் கொண்டேன்.
இந்தப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டுமே என்கின்ற ஆசை எனக்கு வெகு நாளாகவே இருந்து வந்தது. என்னுடைய ஆசையும் அக்கிராசனர் ஆசையும் இவ்விழாவுக்கு முக்கியஸ்தர்களான திருவாளர்கள் ராமச்சந்திர சர்மா, மதுரை சுப்பிரமணிய அய்யர் ஆகியவர்கள் ஆசையும் ஒன்றுபட்டு வெற்றி பெற்றிருப்பதைப் பார்க்கும் போது சிருங்கார ரசத்தில் உள்ள ஒரு இடம் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது.
அதாவது ஒரு நாயகியும் நாயகனும் தங்களது ஒத்த காதலின் பெருக்கினால் ஏற்பட்ட ஊடல் பிரிவைச் சகிக்கமாட்டாமல் ஒருவரை ஒருவர் சமாதானம் செய்து கொள்ள ஒருவருக் கொருவர் முந்த வெட்கத்தினால் தடைபட்டிருந்தவர்களை சந்திர உதயம் வந்து இன்னார்தான் முதலில் சமாதானத்துக்கு வந்தார்கள் என்பதை இருவர்களும் அறிய முடியாதபடி கூட்டிவைக்கும் இடம் ஒன்று உண்டு.
அதுபோலவே தேசத் தொண்டு வேகச் செருக்கால் ஏற்பட்ட ஊடலினால் பிரிந்து இருந்தவர்களை இப்போது நாட்டில் தோன்றி இருக்கும் உண்மை விடுதலை அவா உணர்ச்சி என்னும் சந்திர உதயமானது நம்மில் யார் முதலில் சமாதானத்திற்கு முயற்சித்தார் கள் என்று சொல்ல முடியாத மாதிரியில் இன்று இங்கு கூடி இருக்கின்றோம்.
இந்த சந்தர்ப்பத்தை நான் எனது தொண்டுக்கு அனுகூலமாக அதை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையால் இவ்விழாவில் ஏதாவது அபிப்பிராயத்திற்கு இடம் ஏற்பட்டு ஒழுங்காக நடைபெற முடியாமல் போவதன் மூலம் அபிப்பிராய பேதத்திற்கு அதிக இடம் ஏற்பட்டு விடுமோ என்கின்ற எண்ணம் தோன்றிற்று. எனினும் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் எப்படியாவது உபயோகித்துக் கொள்ளப் பார்ப்போம் என்கின்ற ஆசையுடனும் உறுதியுடனுமே எப்படியாவது உள்ளே நுழைந்து கொள்ளலாம் என்று வந்து விட்டேன்.
நண்பர்களே! அக்கிராசனரவர்களே! நான் காங்கிரசை விட்டு விலகி விட்டதாகத் தோன்றினாலும் நான் உண்மையிலேயே விலகவில்லை என்று தான் நினைத்திருப்பதாகச் சொன்னார். காங்கிரசை நான் விடவில்லை என்பது உண்மையே. ஆனால் காங்கிரசு என்னைவிட்டுவிட்டது என்பதை நான் மறைக்க முயலவில்லை.
காங்கிரசு என்பது ஒரு கூட்டம் என்கின்ற அர்த்தமானால் இப்போது காங்கிரசின் பேரால் கூடும் கூட்டம் என்னை சேர்த்துக் கொள்ள முடியாது. மற்றபடி காங்கிரசு என்பது தேசிய முற்போக்கு, தேசிய விடுதலை, தேசிய சுயமரியாதை என்றால் அது என்னை ஒருக்காலும் விட்டுத் தனித்திருக்க முடியவே முடியாது. நான் எங்கு சென்றாலும் அது என்னை தொடர்ந்தே தீரும். எனக்கு அந்த தைரியமும் நம்பிக்கையும் உண்டு.
நான் காங்கிரசை விட்டுவிட்டதாகத் தலைவர் நினைக்கவில்லை யானாலும் அநேகர்கள் அந்தப்படியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பொது வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வளவு அபிப்பிராய பேதமுடைய கொள்கைகளை உடையவர்களாயிருந்தாலும் அவ்வபிப்ராய பேதமுடையவர்களின் உட்கருத்தை கவனித்து இவ்வித அபிப்பிராயம் அவர்கள் கொள்ள காரணமென்ன?
இதனால் அவருக்குள்ள லாபம் என்ன? எந்த சுயநலத்திற்கு எதிர்ப்பார்த்து இப்படி செய்கின்றார்? முன்பின் இந்த மனிதனுடைய நடவடிக்கை என்ன? என்கின்ற விஷயங்களைக் கவனித்துப் பார்த்து பிறகு ஒரு வித அபிப்பிராயம் கொள்ளுவதானால் உண்மையான தொண்டர்களுக்குள் அபிப்பிராய பேதம் காரணமாக பிரிவினையோ மனஸ்தாபமோ விரோதமோ ஒருக்காலமும் ஏற்படவே ஏற்படாது.
எவ்வளவு அபிப்பிராய பேதமிருந்தாலும் இருவர்களும் ஒன்றுபட்டே தீருவார்கள்.
இந்தப்படி ஒன்றுபட முடியாமல் பொதுத் தொண்டர்கள் என்பவர்களுக்குள் ஏதாவது சொந்த மனஸ்தாபமிருக்குமானால் அது கண்டிப்பாய் அபிப்பிராய பேதத்தால் ஏற்பட்டதல்லவென்றும் தேசத்தொண்டு என்னும் போர்வையைப் போட்டுக் கொண்டு சுயநலத் தொண்டு செய்கின்றார்கள் என்று கருதி அந்நபர்கள் மீது ஏற்பட்டிருக்கும் சந்தேகமும் அல்லது தீர்மானமுமே அல்லாமல் வேறில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
எதிரியின் நல்ல எண்ணத்தில் சந்தேகமில்லாவிட்டால் வெறும் அபிப்பிராய பேதத்திற்காக யாரும் பிரியமாட்டார்கள். சொந்த மனஸ்தாபமும் கொள்ளமாட்டார்கள் என்பது உறுதி.
ஆதலால், நாம் சுயநலமில்லாதவர்களாயிருந்தால் நமது அபிப்பிராயங்களைக் கொட்டி கலந்து ஒருவருக்கொருவர் தங்கள் தங்கள் கொள்கைக்குச் சற்றுவிட்டுக் கொடுத்தோ அல்லது விரோதமில்லாதவைகளை ஏற்றுக் கொண்டோ அந்த அளவுக்கு இருவரும் கலந்து ஏன் வேலை செய்யக்கூடாது? ஆதலால் ஒத்து வருகின்ற கொள்கைகளில் கலந்துவேலை செய்ய ஒருவருக் கொருவர் முந்துவது மேலான குணமாகும். அவ்வித குணத்திற்கு இன்றைய சம்பவம் ஒரு அறிகுறியாக இருக்குமென்று நினைக்கின்றேன்.
நண்பர்களே! யதீந்திரதாஸ் பெயரால் இன்றைய வாசக சாலை திறக்கப் படுவதை நான் பாராட்டுகின்றேன். ஆனால், இதன் மூலம் நாம் அவருக்கு பெருமையும் மரியாதையும் செய்கின்றோம் என்று கருதினால் இப்பாராட்டிற்கு அர்த்தமே இல்லை; அல்லது இவ்வாசக சாலையில் அவரது படத்தை வைத்து அதற்கு தேங்காய் பழம் உடைத்து கற்பூரம் கொளுத்தி வைத்து கும்பிடுவதென்றால் அது மிகவும் மூடத்தனம் என்று தான் சொல்லுவேன்.
ஆனால் மற்றென்ன செய்வது அறிவுடைமையானது என்று கேட்பீர்களானால் அவர் விட்டுப்போன வேலையைச் செய்வதும் அவரது தியாகத்தையும் கொள்கைகளையும் பின்பற்ற அடிக்கடி ஞாபகப்படுத்த அவரது பெயரை உபயோகிப் பதும்தான்.
திட்டத்தில் அபிப்பிராயபேதமிருக்கலாம். வாசக சாலைகள் இப்போது எங்கும் அதிகமாக ஏற்பட்டுக் கொண்டு வருவதானது . நமது நாட்டின் அறிவு வளர்ச்சிக்கு அறிகுறி என்றே கருதுகின்றேன். கொஞ்ச காலத்திற்கு முன்பாக நமது நாட்டில் வாசக சாலைகள் அதிகம் இல்லை. காரணம் என்ன வென்றால் அப்போது மக்களுக்கு எழுத்து வாசனை கிடையாது. ஆனால் இப்போது அதிகம் மக்கள் படித்திருப்பதால் இன்னும் அதிகமாக படித்துக் கொண்டு வருவதால் நாளுக்கு நாள் வாசக சாலைகள் அதிகரிக்கின்றன.
இம்மாதிரி வாசக சாலைகள் எங்கும் ஏற்பாடு செய்வது மிகவும் மேலான தேசத்தொண்டாகும். இதனால் மக்களுக்கு உலக அனுபவம் ஏற்படும்.
ஏனெனில், உலக அனுபவம் தான் உண்மையான கல்வியாகும். அதுவே அறிவின் திறவுகோலாகும். பண்டித பரீட்சையில் தேறுவதும் மகாமகோ உபாத்தியாயராகிவிடுவதும் அரசாங்கத்தில் டாக்டர் அதாவது பண்டிதப் பட்டம் பெறுவதும் ராஜாக்களிடத்தில் வித்வான்களாயிருப்பதும் உண்மையான கல்வி ஆகிவிடாது.
ஏனெனில் செருப்புத் தைத்தல், க்ஷவரம் செய்தல், சலவை செய்தல், சித்திரம் எழுதுதல், வியாதிக்கு மருந்து கண்டுபிடித்தல், கவிபாடுதல், கதை எழுதுதல், ஒரு பாட்டுக்கு நூறு அர்த்தம் சொல்லுதல், ஒரு சுலோகத்திற்கு இருனூறு தத்துவார்த்தம் செய்தல், பெரும் பெரும் கணக்குப் போடுதல், உலகத்தை எல்லாம் ஒரு குடைக்கீழ் ஆளுதல் முதலியவை எல்லாம் வித்தைகளாகுமே தவிர வேறில்லை.
அதாவது ஒவ்வொரு தொழிலில் ஒவ்வொருவர் கெட்டிக்காரர்கள் என்று தான் சொல்லலாம். எனவே முன் சொல்லப்பட்ட உலக அனுபவத்திற்கு முக்கிய கல்வியாக முன் காலத்தில் தீர்த்த யாத்திரையை வசதியாக இருந்தது.
ஒரு அரசன் அல்லது ஒரு பிரபு தன் மகனுக்கு உபாத்தியாயர்களிடம் விட்டு “நாலு வேதம் ஆறு சாஸ்திரம், பதினெண்புராணம், அறுபத்தி நாலு கலைக்யானம், யானை ஏற்றம், குதிரை ஏற்றம், வில்வித்தை, கத்தி விளையாட்டு மற்றும் கூடுவிட்டுக் கூடுபாய்தல்” என்பனவாகிய வித்தைகள் எல்லாம் கற்பிக்கப்பட்ட பிறகு தீர்த்த யாத்திரைக்கு அனுப்பி திரும்பிவந்த பிறகுதான் அம்மக்களிடம் பொறுப்பை ஒப்பித்துவிடுவது வழக்கம் என்று சொல்லப் படுவதை நாம் பார்க்கிறோம்.
ஆனால் தீர்த்த யாத்திரை என்பது புராணங்களில் சொல்லப்படும் குளங்கள் நதிகள் ஆகிய குழந்தை குட்டி, மூட்டை முடிச்சு களுடன் போய் அழுக்குப் பிடித்த தண்ணீரில் எருமைமாடும் தவளையும் முழுகுவது போல் வெறும் முழுக்குப் போட்டு நோயுடன் வீட்டுக்குத் திரும்பி வருவதல்ல.
மற்றென்னவென்றால் உலகமெல்லாம் சுற்றி ஆங்காங்கு நடைபெறும் விஷயங்களையும் உள்ள இயற்கை குணங்களையும் அறிந்து வந்து தனது வாழ்வை அந்தப்படி நடத்துவதுதான். அதனால்தான் இக்கருத்தையே “உலகத்தோடு ஒட்ட ஒழுகல், பலகற்றும் கல்லார் அறிவிலாதார்” என்று திருவள்ளுவர் சொல்லியும் இருக்கின்றார்.
ஆனால் இதுவும் அக்காலங்களில் யாரோ ஒரு சிலருக்குத்தான் சாத்தியமாக இருந்ததாக பார்க்கின்றோம். ஆனால் இப்பொழுதோ மேல்கண்ட உலக அனுபவம் என்பதற்கு வாசக சாலைகள் மற்றெல்லா வசதிகளைவிட மேன்மையானதாக இருக்கின்றன. யாவருக்கும் சாத்தியமானதாகவும் உலகத்தில் உள்ள செய்திகளையெல்லாம் பத்திரிகைகள் கொண்டு வந்து கொட்டுகின்றன.
பலமனிதர்களுடன் தாராளமாய் பழகி அவரவர்கள் சுபாவம் அறியலாம். ஆதலால் வாசக சாலை நிருவுதல் மிகவும் நன்மையான பொது தர்மம் என்று சொல்லுவேன்.
தவிர, இங்கு பல பாஷைகள் கற்பிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. பல பாஷைகள் கற்பது நன்மைதான். ஆனால் அது ஒவ்வொருவருடையவும் வயிற்றுப் பிழைப்புக்காக கற்பிக்கப்படுவதென்றால் அவ்வளவு சுலபமான காரியமென்று நமக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் ஒரு பாஷையே கற்காத மனிதர்கள் நூற்றுக்கு தொண்ணூறு பேர்கள் இருக்கும்போது அதற்குள் நாம் பல பாஷைகள் கற்றுக் கொடுப்பது என்பது சுலப சாத்தியமானதல்ல.
ஆனால் பொதுநலத் தொண்டு செய்பவர்களுக்கு பயன்படும் மாதிரியாக பல்வேறு பாஷை பேசும் தேசத்து சங்கதிகளை அறிந்து அதை தாங்கள் பொது நலத்திற்கு உபயோகித்துக் கொள்வதற்காக என்றால் அப்படிப்பட்டவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க முயற்சிப்பது நல்ல காரியமாகும். அந்த முறையில் நான் இதைப் பாராட்டுகின்றேன்.
தேசீயம்
தவிர, தேசியப் போராட்டத்திற்கு பல பாஷைகள் கற்பது அத்தியா வசியம் என்று தலைவர் கூறினார். இந்த இடத்தில் தேசியம் என்பதைப் பற்றி சில வார்த்தைகள் கூறுவது பொருத்தமற்றதாகாது என்று எண்ணுகின்றேன். ஏனெனில் இப்போதைய பொதுத் தொண்டில் அநேக தொண்டர்களின் மனவேறுபாட்டிற்கும் தப்பபிப்பிராயத்திற்கும் இந்த வார்த்தையே முக்கிய காரணமாயிருக்கின்றது.
முதலில் தேசீயம் என்றால் என்ன என்பதை ஒவ்வொருவரும் நன்குணரவேண்டும். இதைப் பற்றி உள்ள அபிப்பிராய பேதங்களில் இன்னது சரி இன்னது தப்பு என்று நான் முடிவு கட்டவரவில்லை. ஆனால் என் அபிப்பிராயத்தைச் சொல்லுகின்ற முறையில் சொல்லுகின்றேன்.
இப்போது மிகுதியும் ஊக்கமுள்ள தொண்டர்கள் பலரின் மனதில் அரசியல் சம்பந்தமான பேச்சுக்கள் தான் தேசிய வேலையாக கருதப் படுகின்றது. தேசீயம் வேறு, இப்போதைய அரசியல் வேறு என்பதை நாம் நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவை ஒரு தேசமாக்க வேண்டியதுவே இப்போதைய தேசபக்தர்களின் முதல் வேலையாகும். இப்போது இந்தியா பல தேசமாய் இருக்கின்றது. அதாவது பல பாஷை, பல மதம், பல ஆச்சாரம், பல ஜாதி வகுப்பும், பல வித வித்தியாசமும், பல வகுப்புகளுக்கு பலவிதமான தனித்தனி லட்சியம் ஆகியவைகளாகப் பிரிந்து, அன்னியர்களே, அதாவது இந்தியாவின் லட்சியத்தைக் கருதாதவர்கள் என்னும்படியான அன்னியர்களே ஆளுவதற்கு அனுகூலமான முறையில் இருந்து வருகின்றது.
ஆதலால் முதலா வதாக நாம் நமது நாட்டை மேல்கண்ட பிரிவினைகளையும் வித்தியாசங் களையும் தனித்தனி இலட்சியங்களையும் போக்கி ஒன்றுபடுத்தி அன்னிய ஆட்சிக்கு கஷ்டமான மாதிரியில் கொண்டு வந்து விட்டுவிட வேண்டும்.
பிரிவினைகளைப் போக்க சற்று கஷ்டமாயிருந்தாலும் தனித்தனி இலட்சியங்களை மாற்றி ஒரு லட்சியத்திற்கு ஒன்றுபட்டுழைக்கும்படி ஒருவருக்கொருவர் நம்பிக்கையையும் கூட்டுப் பொறுப்பையும் ஏற்படுத்தித் தீரவேண்டியதே முக்கியமான வேலையாகும்.
முக்கியமாக நாம் இந்நாட்டு மக்கள் என்பவர்களுக்குள்ளாக எவ்வளவு வித்தியாசத்தையும் உயர்வு தாழ்வையும் நம்பிக்கை யின்மையையும், ஒற்றுமையின்மையையும் பார்க்கின்றோம்.
இதில் ஏதாவது அதிகப்படுத்தியோ கூட்டியோ குறைத்தோ சொல்வதாக நீங்கள் நினைக்கின்றீர்களா? வித்தியாசமும் உயர்வு தாழ்வும் பரஸ்பர நம்பிக்கைக்கும் கூட்டுப் பொறுப்புக்கும் எவ்வளவு இடையூறாய் இருக்கின்றது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
மேற்கண்ட குணமுள்ள இவர்கள் அதாவது சமூக வாழ்வில் உயர்ந்த வர்கள் என்று சொல்லப்படுபவர்களும் தாழ்ந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களும் ஒன்றுபடுவதென்றால் ஒருவருக்குப் பெரிய நஷ்டமும் மற்றவர்களுக்குப் பெரிய லாபமுமாயிருப்பதால் சுலபத்தில் ராஜி செய்யமுடியாமல் இருக்கிறது.
ஏனெனில் வகுப்பு உயர்வு என்பது யாதொரு பொருளும் ஆதாரமும் இல்லாமல் தங்களுடைய வெறும் சுயநலத்தையே ஆதாரமாய்க் கொண்டிருப்பதால் அதாவது பிறர் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டு சுகமாயிருக்க அனுகூலமாயிருப்பதால் எவ்வித நீதியும் தர்மமும் இங்கு பயன்படுவதில்லை.
தாழ்வு என்பதும் எவ்வித ஆதாரமும் பொருளும் இல்லாமல் வைக்கும் கஷ்டத்தை அடிப்படையாகக் கொண்டதாயிருப்பதால் அதாவது பாடுபடு வதைக் கடமையே ஒழிய, அப்பாட்டின் பலனை வேறு ஒருவர் அனுபவிக்கக் கூடியதாய் இருப்பதால் அங்கும் எவ்வித பொறுமையும் சமாதானமும் சிறிதும் பயன்படுவதில்லை. ஆதலால், இதை எவ்வித அரசியலாய் நினைக்க முடியும்? எந்தவித நம்பிக்கை மீது இம்மாதிரியாக மக்கள் இருவருக்கும் கூட்டுப் பொறுப்பு ஏற்படுத்த முடியும் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.
மற்ற நாடுகளிலும் இவ்வித தனித்தனி லட்சியம் இருக்கக்கூடும் என்று நீங்கள் சொல்ல வரலாம்.
ஆனால் அங்கெல்லாம் ஏதோ ஒரு தொழில் முறையை ஆதாரமாய்க் கொண்டு லட்சியம் பிரிக்கப்படுகின்றதே தவிர ஜாதியையோ வகுப்பையோ பிறவியையோ கொண்டு பிரிக்கப்படுவதில்லை. ஆதலால் நாம் முதலில் இந்நாட்டு மக்களுக்கு கூட்டுப் பொறுப்பை ஏற்படுத்த வேண்டும். அதுதான் தேசீயம் என்பது. இவ்விரு வகுப்பாரையும் சமநிலைக்குக் கொண்டுவர வேண்டியதுதான்.
இது மிகக் கஷ்டமானது என்று இப்பொழுது தோன்றினாலும் மற்ற வேலைகளை கட்டி வைத்துவிட்டு தேசத் தொண்டர்கள் தியாகத்திற்கு தயாராயிருந்தால் வெகுசீக்கிரத்தில் சரிப்பட்டுப் போகும். அந்த சமயம் தானாகவே அன்னிய ஆட்சிக்குக் கஷ்டம் ஏற்பட்டு விடும். ஆதலால் அப்பேர்ப் பட்ட தேசியத்திற்குப் பல பாஷை கற்று வைப்பது அவசியம் தான் என்று கருதுகிறேன்.
நூல் நூற்றல்
நூல் நூற்றல் தொழிலும் இங்கு கற்றுக் கொடுக்கப்படும் என்று சொல்லப் பட்டது. இது மக்களுக்கு அவசியமானதே. ஏனெனில், அது ஒரு நாட்டுக்கு இன்றியமையாத தொழிலாகும். தொழிலில்லாமல் கஷ்டப்பட்டு தரித்திரத்தில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு ஜீவனத்திற்கு மார்க்கத்தைக் கொடுக்கும்.
ஆனால் அது என்றைக்கும் எல்லோரும் கைராட்டினத்தால் நூற்றுக் கொண்டிருப்பதற்கு என்று சொல்லுவதானால் அது ஒப்புக் கொள்ளக் கூடியதல்ல. ஏனெனில் இதைவிட தரித்திரத்தைப் போக்க வேறு வித கருவிகளும் தொழில்களும் ஸ்தானங்களும் கண்டு பிடிக்கப்பட்ட காலத்தும் கை ராட்டினம் சுற்றித்தான் ஆக வேண்டும் என்று சொன்னால் இதை யார் ஒப்புக் கொள்ளுவார்கள்? மனிதனுடைய எண்ணம் விரிவடைந்து முன்னேறிக் கொண்டுபோவதே இயற்கையாய் இருப்பதால் முற்போக்குக்கு அவசியமான மார்க்கங்களை கைப்பற்றவும் கண்டு பிடிக்கவும் முயலவேண்டும்.
தேகாப்பியாசம்
தேகாப்பியாசமும் இந்த வாசக சாலையில் கற்றுக் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது. இதுவும் நல்ல காரியம் தான். ஆனால் தேகாப்பியாசத்தின் லட்சியத்தை இங்கு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் தேகாப்பியாசம் என்பது போர் வீரர்களுடன் சண்டை செய்து தேசத்தைக் கைப்பற்று வதற்கு என்றால் இது உதவாது. ஏனென்றால் இப்போது நமது நாட்டை ஆளுகிற வர்கள் ஒரு பீரங்கி குண்டு மூலம் 20 மைல் தூரத்தில் உள்ள ஊரைத் தூளாக்க முடியும்படியானவர்களும் ஒரு வெடிகுண்டின் மூலம் ஒரு பெரிய பட்டணத்தை சாம்பலாக்க முடியும்படியானவர்களும், ஒரு துப்பாக்கி புகையின் மூலம் பதினாயிரக்கணக்கான மக்களைக்கொன்றுவிட முடியும்படியானவர்களுமாய் இருக்கின்றார்கள்.
இன்னும் மேலும் மேலும் இது விஷயத்தில் அற்புதங்களைக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்பேர்ப்பட்டவர்களுடன் சண்டைபோட நாம் வெறும் தேக பலத்தை எவ்வளவு ஏற்படுத்திக் கொண்டாலும் இதற்கு என்ன பயன் விளையும்? நமது தேகாப்பியாசத்தால் ஒரு யானையை தூக்கி மூன்று பர்லாங்கு தூரம் வீசி எறியும் படி செய்து கொண்டாலும் பாக்கி 19 மயில் 5 பர்லாங்குக்கு நாம் என்னசெய்ய முடியும்? ஆதலால் யுத்த வீரர்களுடன் போர் புரிவதற்கு என்று கருதுவது அர்த்தமற்றதாகும்.
ஆனால் மனிதனுக்கு தேகாப்பியாசத்தால் சரீர சுகம் ஏற்படும், மன உறுதி ஏற்படும், ஊக்கம் முயற்சி முதலியவைகள் ஏற்படும் என்கின்ற லட்சியத்தில் அது பயிலப்பட வேண்டியதேயாகும். அன்றியும் மேல் கண்ட அதிசய பலம் பொருந்திய ஆட்சியின் கொடுமையை ஒழிக்க மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்டி எவ்வித தியாகத்திற்கும் தயாராகும் படியான உபதேசங்களைச் செய்ய ஊர் ஊராய்ச் சுற்றவும், மன உறுதியும் தன்னம்பிக்கையும் கொள்ளவும் தேகபலம் அவசியமானதே.
உதாரணமாக, நூற்றுக்கணக்கான நாள் பட்டினி கிடக்கவும், ஜெயிலில் கஷ்டப்படவும் வேலை செய்யவும் உதவும். நமது தேசத்தொண்டர்கள் அநேகருக்கு மூன்றாவது வகுப்பில் பிரயாணம் செய்ய சரீரத்தில் பலமில்லை. கைப்பெட்டியைக் கூட தூக்க முடிவதில்லை. ஒரு வேளை சாப்பாடு சற்று நேரமாய் விட்டால் பிறகு அந்த பக்கமே போவதில்லை. ஒரு அரை பர்லாங்கு கூட நடக்க முடிவதில்லை. ஆனால் கால அட்டவணைப் படி வேலை செய்வதாக சொல்லிக் கொள்ளுகின்றார்கள்.
6 மணிக்கு எழுந் திருப்பது 6.30 மணிக்கு பஸ்கி எடுப்பது, 7 மணிக்கு நடப்பது, 7.30 மணிக்கு தண்டால் எடுப்பது, 8 மணிக்கு காப்பி சாப்பிடுவது, 9 மணிக்கு பிரசங்கம் என்று அட்டவணை போட்டுக் கொள்வார்கள். இவர்களுடைய அட்டவணை பஸ்கியானது ஒரு பர்லாங்கு நடக்க முடியவில்லையானால் இந்த பஸ்கியும் தண்டாலும் வெள்ளைக்காரனிடம் என்ன செய்ய முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள். ஆதலால் தேகாப்பியாசமானது சரீர கஷ்டம் பார்க்காமல் உழைப்ப தற்கும் மனோதிடத்திற்கும் என்கின்ற லட்சியத்தின் மீது செய்ய வேண்டும் என்று சொல்லுகின்றேன்.
பாரதி பாடல்
பாரதியார் பாட்டுகளில் பல மனஉற்சாகத்தையும் சுயமரியாதை உணர்ச்சி யையும் முற்போக்கான கருத்துக்களையும் கொண்டதாகும். ஆதலால் அவை களைப் படிப்பது மிக்க நன்மையாகும். அன்றியும் ஒரு கொள்கையை பாட்டு மூலமாக பதியவைப்பது நன்மையானதாகும்.
நன்றாய் ஞாபகத்தில் இருக்கும்படி இப்புஸ்தகம் இல்லாத காலத்தில் பல பண்டிதர்கள் இருந்ததற்குக் காரணம் பாட்டு முறையேயாகும். எனக்குக் கூட 40 வருடங்களுக்கு முன் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்த கோலாட்டப் பாட்டு இன்னும் ஞாபகமிருக்கின்றது. அப்பாட்டில் ஒரு வார்த்தை ஞாபகத்திற்கு வந்தால் முன் உள்ளதையும் பின் உள்ளதையும் தானாக இழுத்துக் கொண்டு வந்து விடும். ஆதலால் பாட்டு படித்து ஞாபகத்தில் வைக்கும் முறை மிகவும் நல்லதாகும்.
ஆகவே, இத்தியாதி காரியங்கள் கொண்ட இந்த வாசக சாலையை தேச முன்னேற்றத்தைக் கருதி இன்று ஆரம்பித்தது மிகவும் பாராட்டத் தக்கதென்றும் இதை நான் இருந்து நடத்த ஏற்பட்ட சம்பவம் எனக்கு பெரு மகிழ்ச்சியையும் பெருமையையும் கொடுக்கக் கூடியது என்றும் கொள்வதோடு வாசக சாலையை ஏற்படுத்தியவர்களுக்கு நன்றியறிதலை தெரிவித்து இந்த வாசக சாலையைத் திறந்து வைக்கிறேன்.
குறிப்பு : 21.11.1929 ஆம் நாள் சென்னை திருவல்லிக்கேணி பைகிராப்ட் சாலை திரு கடுவூர் துரைசாமி அய்யங்கார் வீட்டு மேல் மாடியில் யதீந்திரதாஸ் இலவய வாசக சாலையை திறந்து வைத்து சொற்பொழிவு.
(குடி அரசு - சொற்பொழிவு - 01.12.1929)