முதலாவது திரு.ஆச்சாரியார் இராமாயணத்தை ஒரு மத சம்பந்தமான புஸ்தகமாய் கருதுகின்றாரா? அல்லது இலக்கிய சம்பந்தமான ஒரு பொது கதை புஸ்தகமாய் கருதுகின்றாரா? என்பதே நமது கேள்வி.
ஒரு சமயம் அவர் அதை இலக்கிய நூலாகக் கருதுவதாயிருந்தால் அந்தப்படி கம்பராமாயணத்தை மாத்திரம் கருதுகிறாரா? அல்லது வால்மீகி இராமாயணத்தையும் சேர்த்து கருதுகிறாரா? அல்லது இரண்டையுமே கருதுகின்றாரா என்பதே இரண்டாவது கேள்வியாகும்.
நிற்க, திரு.ஆச்சாரியார் தனது பிரசங்கத்தில் “இராமாயணம் நடந்த கதை அல்ல” என்று ஒப்புக் கொண்டுவிட்டார். ஆனால் அதைப் பற்றி மற்றவர்கள் விவகரிப்பது தப்பு, மூடத்தனம் என்கின்றார்.
இந்த புத்தி இவர்களுக்கு இவ்வளவு நாளாக எங்கு போயிற்று என்று கேட்கின்றோம். இராமாயணம் பொய் என்று நாம் சொன்ன காலத்தில் நம்மை நாஸ்திகர்கள் என்று சொன்ன இந்தக் கூட்டத்தார்கள் இப்போது தாங்களாகவே இராமாயணம் பொய், அதைப்பற்றி ஒன்றும் பேசாதீர்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இப்போது இவர்களுக்கு ஏன் வந்தது? என்று பார்ப்போமானால்.
இராமாயணக் கதை பூராவையும் வெளியில் இழுத்து, அதன் வண்டவாளத்தை வெளிப்படுத்த தைரியம் கொண்டதால் இப்போது “போதும் போதும் இராமாயணம் நடந்ததல்ல பொய்” என்று சொல்ல வந்துவிட்டார்.
ஏன் அப்புத்தகத்தில் இருப்பதாக நாம் வெளிப்படுத்தி வந்த விஷயங்களில் ஒரு வார்த்தையைக் கூட ஆஷேபிக்க முடியாமல் போய்விட்டதேதான் என்பதை மாத்திரம் இனி யாரும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமாய்விட்டது.
“காலானிக்கி வேஸ்தே மூலானிக்கி வொஸ்துரு” என்கின்ற ஆந்திரப் பழமொழிப்படி (பத்துக்கு அடிப்போட்டால் தான் அய்ந்துக்காவது வருவார்கள்) இராமாயணம் ஆரியர் திராவிடர் சரித்திரம் என்று ஆராய்ச்சிக்காரர்கள் சொல்ல வந்த பிறகே தான் இராமாயணம் பொய் என்று பார்ப்பனர்கள் சொல்லித் தீரவேண்டிய அவசியத்திற்கு வந்துவிட்டார்கள்.
இல்லாவிட்டால் இராமாயண ஆராய்ச்சியால் பார்ப்பனக் கொடுமை வெளியாகி விடும் என்கின்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. தவிரவும் திரு.ஆச்சாரியார் ‘ராமனை போற்றுகின்றவர்களை எப்படி மூடர்களாகக் கொள்ளுகின்றேனோ அவ்வாறே இராவணனை போற்றுகின்றவர்களையும் மூடர்களாக கருதுகின்றேன்’ என்று சொல்லுகின்றார்.
அப்படியானால் இந்தப் புத்தியும் இவருக்கு இத்தனை நாளாக எங்கு போய் இருந்தது என்று கேட்கின்றோம். இராவணனை யாரும் கடவுள் என்று சொல்லிப் போற்றுவதே இல்லை.
ஆனால், இராமனை கடவுள் அவதாரம் என்றும், கடவுளே என்றும் சொல்லிபோற்றி வணங்குகின்றார்கள். அதுவும் வெகுகாலமாய் அப்படிச் செய்து வருகின்றார்கள். இராவணனையோ என்றால் நேற்று முதற்கொண்டுதான் போற்ற ஆரம்பித்தார்கள்.
அதுவும் ஏனென்றால் ராமன் கடவுள் அவதாரமல்ல என்று சொன்னவர்களை நாத்திகர்கள் என்றும், மதத்துரோகிகள் என்றும் திரு.ஆச்சாரியார் கூட்டம் சொன்னதால், “சரி அப்படியானால் இராமாயணக் கதைப்படியே இராவணன் யோக்கியன், அவன் போற்றப் பட வேண்டியவன்.
இராமன் அயோக்கியன், அவன் இழித்துப் பழிக்கப்பட வேண்டியவன்” என்று மெய்ப்பிக்க மக்கள் துணிந்து ஆரம்பித்த பிறகே இப்போது திரு .ஆச்சாரியார் “பிச்சை போடாவிட்டாலும் பரவாயில்லை நாயை பிடித்துக் கட்டு” என்கின்ற பழமொழிப்படி யார் ராமனை வணங்கா விட்டாலும் பரவாயில்லை ராவணனைப் போற்ற வேண்டாம் என்று சொல்லித் தீரவேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டார்.
மற்றும், இராமனுக்கும் இராவணனுக்கும் பெயரளவில் வியாக்கியானம் செய்வதில் இராமன் என்கின்ற பெயரை விட இராவணன் என்கின்ற பெயருக்கு அதிக மதிப்பு கொடுக்கவும் வந்துவிட்டார். ஆனால் அதை பித்தலாட்டமான முறையில் சொல்லுகின்றார். என்னவென்றால் இராமன் என்பது இரா - மன் = இராமன் - இல்லாத அரசன் என்றும் இராவணன் என்பது இராமனின் அண்ணன் என்றும் பொருள்படுவதாக வடமொழியை தென்மொழியில் அர்த்தப்படுத்தி காட்டி ஏய்க்கப் பார்க்கிறார்.
தவிரவும் “இராமாயணம் பொய்க்கதை ஆகையால் இராவணன் பெருமையைப் பற்றிப் பேசுவது மூடநம்பிக்கை” என்கின்றார். உண்மையிலேயே திரு. ஆச்சாரியார் மூட நம்பிக்கைக்காக பரிதாபப் படுபவரானால் அவருடைய முதல் வேலை இராமாயண ஆராய்ச்சிக்காரரையும் இராமாயண இரகசியம் வெளிப்படுத்துபவர்களையும் திருத்துவதல்ல என்றும், மற்றென்னவெனில் ராமாயணத்தின் பெயரையும் ராமன் பெயரையும் சொல்லிக் கொண்டு செட்டிநாட்டில் கொள்ளை அடிக்கும் சோம்பேறி அயோக்கியர்களையும், இராமாயணத்தையும் ராமனையும் உண்மை என்று நம்பிக்கை கொண்டு மேற்படி அயோக்கியர்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் முழு மூடர்களையும் திருத்த வேண்டியதே முதல் வேலையாகும் என்று மறுபடியும் திரு. ஆச்சாரியாருக்கு சொல்லுகிறோம்.
மற்றபடி அந்த வேலையை விட்டுவிட்டு “இராமனுக்கு கொடுத்தால் இராவணனுக்கும் கொடுங்கள்” “இராமன் யோக்கியனென்றால் இராவணன் அவனை விட யோக்கியன்” என்று சொல்லுகிறவர்களிடம் வந்து இவர் பரிதாபப்பட வேண்டியதில்லை என்பதே நமது கருத்து.
தவிரவும் “ராமன் க்ஷத்திரியனே தவிர பிராமணன் அல்ல” என்கின்றார். இராமன் பிராமணனானாலும், க்ஷத்திரியனானாலும் தவம் செய்ததற்காக ஒரு சூத்திரனைக் கொன்றான் என்று எழுதியிருப்பதால் அவன் பிராமணத் தன்மை கொண்டவனும் பிராமணனை விட அதிகமான அயோக்கியனும் என்று தான் கொள்ள வேண்டியதே தவிர அதில் ஒன்றும் விதிவிலக்கு இருப்பதாகவும் நமக்கு சிறிதும் தோன்றவில்லை.
இனி கம்பரைப் பற்றி திரு. ஆச்சாரியார் மிகப் புகழ்ந்து அவருக்கு வக்காலத்து பேசுகிறார். திருவள்ளுவரை தலைகாட்டாமல் அடித்த இந்தப் பார்ப்பனர்களுக்கு கம்பர் மீது இவ்வளவு கருணை வந்ததற்குக் காரணம் என்னவென்றுப் பார்த்தாலே கம்பர் யோக்கியதை நன்றாய் விளங்கும். கம்பரை ஷேக்ஸ்பியர், ஹோமர், ஷெல்லி முதலிய மேல்நாட்டு கவிகளுக்கு ஒப்பிட்டு ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இந்தியா வேண்டுமா? என்று ஒரு ஆங்கிலேயனைக் கேட்டால் அவன் ஷேக்ஸ்பியர் வேண்டுமென்றுதான் சொல்வான் என்று இதற்கு உதாரணங்காட்டி கம்பராமாயணம் என்கின்ற காவியம் இந்திய நாட்டை விடசிறந்தது என்று சொல்லுகின்றார். அதாவது இந்தியாவை இழந்தாவது ராமாயணத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார்.
இது சிறிதாவது பொருத்தமுள்ள உதாரணம் என்றோ அறிவுள்ள உதாரணம் என்றோ யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம். ஷேக்ஸ்பியரையும் ஷெல்லியையும் ஆங்கிலேயர்களில் எந்த முட்டாளும் கடவுளாகக் கும்பிடுவதில்லை என்பதையும் ஷேக்ஸ்பியரிலும் ஷெல்லியிலும், வரும் நாடக பாத்திரர்களுக்கு ஆங்கிலேயரில் எந்த மடையனும் கோயில்கட்டி, கல்யாண உற்சவமும், தெப்ப உற்சவமும், வைரத்திலும் செகம்பிலும் நாமமும் நகையும் போடுவதில்லை என்பதையும் திரு.ஆச்சாரியார் அறியாரா? அல்லது அறிந்தே ஏய்க்கிறாரா? என்று கேட்கின்றோம்.
தவிரவும் நமக்கு இராமாயணத்தில் உள்ள தகராரெல்லாம் ராமனையும் சீதையையும் அநுமாரையும் கடவுளாகக் கும்பிடுவதிலேயே ஒழிய கவி நயத்தில் அல்ல என்பதை திரு.ஆச்சாரியார் தெரிந்து கொள்ளாதது விசனிக்கத் தகுந்ததேயாகும். தவிரவும் திரு ஆச்சாரியார் கம்பரானவர் உலக நன்மையை கோரி பொருள், போகம், வேகம் ஆகியவைகளை மக்களுக்கு ஊட்டுவதற்காக ஒரு வீரனது கதையை எழுதியதாக சொல்லுகின்றார்.
இந்த இடத்தில் திரு.ஆச்சாரியாரின் கருத்து கம்பராமாயணமானது மக்கள் ஒழுக்கத்திற்கேற்ற கதைச்சுவை உடையது என்பதேயாகும். இங்குதான் கம்ப இராமாயணத்திற்கும் நமக்கும் தகராறு இருக்கின்றது என்கின்றோம். அதாவது ஆச்சாரியார் கருத்தில் கம்பர் ராமனை வீரனாகக் கொண்டு எழுதினாரா அல்லது இராவணனை வீரனாகக் கொண்டு எழுதினாரா என்றும் கேட்பதோடு கம்பர் ராமனைத் தான் வீரனாக்க கொண்டு எழுதி இருப்பார் என்றே எண்ண வேண்டியிருக்கின்றது என்றும் ஏனெனில் அதற்கு பெயர் ராமாயணம் என்று ஏற்பட்டிருப்பதால் இராவணனைக் கொண்டல்ல என்பது வெள்ளிடை மலையாகும்.
திரு. ஆச்சாரியாரின் இராமாயண ஆராய்ச்சி அறிவுப்படி இராமாயண இராமன் வீரனாவானா? என்பதே நமது கேள்வி. சரி கம்பர்தான் ராமாயணத்தை வீரர் கதையாகக் கொண்டெழுதினார் என்று வைத்துக் கொண்டாலும் வால்மீகி உலக நன்மைக்காக ராமாயணத்தை வீரர் கதையாக எழுதினாரா? அல்லது பார்ப்பனர் களின் வயிற்றுப் பிழைப்பு கதையாக எழுதினாரா என்று கேட்கின்றோம்.
தவிர திரு.ஆச்சாரியார் “ஷேக்ஸ்பியர் ஆங்கிலேயராயிருந்தும் டென்மார்க்குஅரசரைப் பற்றி ஒரு நாடகம் எழுதினது போல் கம்பரும் இராமர் கதையை எழுது முறையா” என்று சொல்கின்றார்.
இதை எதற்காக எடுத்துச் சொன்னார் என்பதற்கு ஆதாரம் அப்பிரசங்கத்தில் காணப்படவில்லையானாலும் ஒரு திராவிட கவி ஆரிய (வடநாட்டு) அரசன் கதையை ஏன் எழுதினார் என்பதற்கு சமாதானம் சொல்லவே இதைச் சொல்லி இருக்கின்றார். ஆகவே, அக்கதை வடநாட்டு அரசன் கதை என்பது திரு.ஆச்சாரியாரை அறியாமலே வெளியாய்விட்டது பற்றி மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும், ஆச்சாரியார் விஷயத்தில் பரிதாபப் படாமலுமிருக்க முடியவில்லை.
கம்பர் ஒரு வீரன் கதை எழுதுவதாக கருதி எழுதியிருப்பாரானால் இந்து மத வருணாச்சிரம தர்மங்கள் அதில் புகுந்திருப் பதற்கு என்ன காரணம் என்பதற்கு திரு.ஆச்சாரியார் ஒரு சமாதானமும் சொல்லவே இல்லை.
தவிர ராமன் உண்மை, நன்மை, அழகு என்கின்ற மூன்று லட்சியங்களின் பிரதிநிதி என்று சொல்லுகின்றார். ஆனால் ராமனிடம் என்ன உண்மை, என்ன நன்மை, என்ன அழகு இருந்தது என்று மாத்திரம் எடுத்துச் சொல்லவில்லை.
ஆகவே, திரு.ஆச்சாரியார் கூட்டத்தினிடம் உள்ள இந்த மனப்பான்மையின் யோக்கியதையை வெளிப்படுத்தத்தான் இராமாயண ஆபாசம், இராமாயண இரகசியம், இராமாயண ஆராய்ச்சி ஆகியவைகள் வெளியாக வேண்டியிருக்கின்றது என்பதை பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டுகின்றோம். தவிரவும் ராமன் என்பதற்கு மகிழ்விப்பவன் என்றும் ராவணன் என்பதற்கு அழச் செய்பவன் (கஷ்டப்படுத்துபவன்) என்றும் பொருள் கூறுகின்றார்.
இது எந்த அகராதியில் இருக்கின்றதோ தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இராமாயணக் கதைப்படி இராமன் யாரை மகிழ்வித்தான்? இராவணன் யாரை அழ வைத்தான்? என்பது வெளியாக வேண்டாமா என்று கேட்கின்றோம். தவிரவும் இராவண ராஜ்யத்தில் பொருள் செருக்கு, கல்வி செருக்கு இருந்ததாக திரு.ஆச்சாரியார் சொல்லுகின்றார். இதற்கு ஆதாரம் இலங்கை 700 யோசனை தூரமும் உலகில் உள்ள உயர்ந்த பொருள்கள் எல்லாம் அங்கு இருந்தனவாம்.
ஆனால் ராமராஜ்யத்தில் என்ன இருந்தது என்பதே இவர் காட்டவே இல்லை. அங்கிருந்த பார்ப்பன செருக்கையும், அறுபது ஆயிரம் பெண்டாட்டியை கட்டிக் கொண்டு பிள்ளையில்லாமல் யாகம் செய்து பிள்ளை பெற்ற ஆண்மையற்ற பார்ப்பனியச் செருக்கையும், பெண்டாட்டி மீது சந்தேகப்பட்டு கர்ப்பத்துடன் காட்டில் கொண்டு போய் விட்டுவிட்ட அற்ப புத்தி செருக்கையும், கொடுமைப் புத்திச் செருக்கையும் அடியோடு மறைத்து விட்டார்.
மொத்தத்தில் ராமாயணம் நடந்த கதையா? பொய்க்கதையா? என்பது நமது கவலையே அல்ல. ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டாவது ராமாயணக் கதை மனிதத் தன்மையும் ஒழுக்கமும் படிக்கத் தகுந்ததுமான கதையா என்பதே நமது கேள்வி. இதற்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்லுவதற் கில்லாமல் வெறும் தந்திரமும் சூழ்ச்சியும் பித்தலாட்டமும் செய்வதில் என்ன பலன் அடையக்கூடும் என்று இந்தக் கூட்டத்தார்கள் நினைக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.
தவிர கம்பராமாயணத்தை கவி அழகுக்காக காப்பாற்ற வேண்டும் என்கின்றார். அப்படியானால் வால்மீகி ராமாயணத்தை என்ன அழகுக்காக காப்பாற்ற வேண்டும் என்றோ அல்லது அதை ஒழிக்க வேண்டுமென்றோ திரு.ஆச்சாரியார் ஒரு வார்த்தைகூட சொல்லவே இல்லை.
சாதாரணமாக இந்தக் கூட்டத்தார் நாம் வால்மீகி ராமாயணத்தைக் குற்றஞ் சொல்லும்போது கம்பர் “கவி நயத்தைக்” கொண்டு வந்து போட்டுத் தப்பித்துக் கொள்ளுவதும் கம்பர் கவிநயத்தைக் குற்றம் சொல்லும் போது வால்மீகி ராமாயணத்தின் “தத்துவார்த்தத்தை”ச் சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பதும் குலதர்மமாகப் போய்விட்டது.
தவிர கம்ப ராமாயணத்தை உண்மைக் கதை என்று நினைத்திருந்தால் வால்மீகி எழுதியிருப்பதற்கு மாறுபாடாக எழுதி இருப்பாரா என்று திரு.ஆச்சாரி யார் கேட்கின்றார். நாமும் கம்பராமாயணத்தை உண்மைக் கதை என்று நம்பினார் என்று சொல்ல வரவில்லை.
ஆனால் கம்பரும் பார்ப்பனர்களும் சேர்ந்து மற்ற மக்களை ராமாயணம் உண்மைக் கதை என்றும் ராமன் கடவுள் என்றும் நம்பச் செய்வதற்காக செய்த சூழ்ச்சி என்று தான் சொல்கின்றோம்.
தவிரவும் கம்பருக்கு சமஸ்கிருதம் தெரியாது என்றும், வால்மீகி ராமாயணத்தை பார்ப்பனர் மொழி பெயர்த்துச் சொல்ல அதை அனுசரித்து கவி உண்டாக்கியதாகவும், நினைத்தபடி சிலபுரட்டுகள் இருப்பதால் கம்பருக்கு வால்மீகி ராமாயணத்தில் இன்னது இருந்தது என்று தெரியுமா என்று நினைப்பதற்கில்லாமல் இருக்கின்றது என்று சொல்லி சில கம்பதாசர்கள் தப்பித்துக் கொள்வதையும் பார்த்திருக்கிறோம்.
தவிர திரு.ஆச்சாரியார் கடவுள் உண்டா இல்லையா என்கின்ற விவகாரமே இந்து மதத்தில் இல்லை என்றும் ஒவ்வொருவனும் தன்னைத் தானே கடவுள் என்று நினைத்துக் கொள்வதே வேதத்தின் முடிவான கொள்கை என்றும் ஒவ்வொருவருடைய உயர்ந்த லட்சியங்களே கடவுள் என்றும் சொல்லுவதோடு மற்றும் அதற்கு நேர் விரோதமாய் ரசாயன ஆராய்ச்சியில் கடவுள் இல்லையென்றும், வான சாஸ்திர ஆராய்ச்சியில் கடவுள் இல்லையென்றும் இதை ஒப்புக் கொள்ளாதவர்களே நாஸ்திகர்கள் என்றும் சொல்லுகின்றார்.
இது கடவுள் சம்பந்தமாக மக்களை குழப்பத்திற்குள்ளாக்குவதையும் சமயம் போல் பேசத் தக்கபடியான முன்னுக்குப் பின் முரணையும் காட்டுகின்றது. இதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில், சயன்சுக்கும் அதாவது விஞ்ஞான சாஸ்திரத்திற்கும் கடவுளுக்கும் சண்டை துடங்கியாய் விட்டது.
கடவுளை நிலை நிறுத்த எவ்வளவு பெரிய அவதாரங்கள் வந்தாலும், மதங்களை நிலை நிறுத்த எவ்வளவு பெரிய கடவுள் தன்மை வாய்ந்தவர்கள் வந்தாலும் யார் தவங்கிடந்தாலும் அதுவே பார்த்துக் கொள்ளும்.
கடைசியாக, ராமாயணம் என்பது எந்த முறையிலும் எந்த அர்த்தத்திலும் நாட்டுக்கு மனிதத் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதை எடுத்துக்காட்டவும் இதற்கு விரோதமாய் கிளம்பும் எதிர்ப்புகளுக்கு சமாதானம் சொல்லவும், இந்த வியாசமானது இவ்வளவு நீட்டி எழுதப்பட்டது என்பதோடு இதை முடிக்கின்றோம்.
குறிப்பு :- 17.11.1929 குடி அரசு தொடர்ச்சி
(குடி அரசு - கட்டுரை - 24.11.1929)