நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணா, மூடநம்பிக்கைகளை கைவிட்டு, அறிவியலை நம்புவதற்கு முன்வருமாறு பார்ப்பனர்களிடம் அறைகூவல் விடுத்துள்ளார். மயிலாப்பூரில் பார்ப்பன நிறுவனமான பாரதிய வித்யாபவனில், மூடநம்பிக்கைக்கு எதிராக நோபல் பரிசு பெற்ற ஒரு பார்ப்பனர் துணிவுடன், தமது கருத்துகளை முன் வைத்தது, பார்ப்பனக் கோட்டையில் வீசப்பட்ட அறிவு வெடிகுண்டாகும். அந்த அரங்கில் படித்த வைதீகப் பார்ப்பனர்கள் பெருமளவில் குழுமியிருந்தனர்.
பார்ப்பன தொழிலதிபரும் ராஜகோபாலாச்சாரி தொடங்கிய ‘சுதந்திரா’ கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவருமான எ°.வி. நரசிம்மன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவுக்கு நோபல் பரிசு பெற்ற பார்ப்பன விஞ்ஞானி தமிழகத்தைச் சார்ந்த வெங்கட்ராமன் ராம கிருஷ்ணனை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். பிரிட்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உயிரியல் தொழில் நுட்பத் துறையில் ஆய்வாளராக பணியாற்றும் அவர், வேதியலில் தமது கண்டுபிடிப்புக்காக 2009 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்.
அறிவியலுக்கு எதிராக பழமை சிந்தனைகளை வைதீகக் கருத்துகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, அதற்கு ‘விஞ்ஞான முலாம்’ பூசுவது பார்ப்பனர்களுக்கு வழக்கமாகும். வேதங்களில் சொல்லப்பட்ட சரசுவதி நதி இன்னும் பூமிக்கடியில் ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் அமெரிக்காவின் செயற்கைக்கோள் இதை படம் பிடித்துள்ளது என்றும், ராமன், ராவணனை அழிக்க இலங்கை சென்ற போது அணில்களைக் கொண்டு கட்டியதே, சேதுக் கால்வாய் பாலம் என்றும், அதை அழித்துவிட்டு சேதுக் கால்வாய் இணைப்புத் திட்டத்தைக் கொண்டுவரக் கூடாது என்றும், வேத சம°கிருத மந்திரங்களை ஓதும் போது உடலுக்கு புதிய ‘அதிர்வு’ சக்தி கிடைக்கிறது என்றும் முன்னோர்கள் கற்பித்த நம்பிக்கைகள் விஞ்ஞான பூர்வமானவை என்றும், பல்வேறு அறிவியலுக்கு எதிரான ஊறிப் போன பழமை சிந்தனைகளை நியாயப்படுத்திக் கொண்டு, விடாப்பிடியாகப் பரப்பி வருகிறார்கள். இவற்றை விஞ்ஞானபூர்வமாக மறுத்தால் மதத்தைப் புண்படுத்துவதாக கூக்குரலிடுவது ‘அவாளின்’ வாடிக்கை.
இந்த நிலையில் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்ற பார்ப்பனரே இந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அழுத்தமாக தனது கருத்துகளைப் பதிவு செய்திருப்பது பார்ப்பனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி யிருக்கிறது. பெரியார் இயக்கத் தோழர்கள் பகுத்தறிவு அறிவியல் கருத்துகளைப் பேசினால் அதை கேலியும் கிண்டலும் செய்யும் பார்ப்பன ‘தினமலர்’ ஏடே இந்த விஞ்ஞானியின் உரையை தவிர்க்க இயலாமல், வெளியிட்டிருக்கிறது. ‘இந்து’, ‘தினமணி’ ஏடுகளும் இந்த உரையை வெளியிட்டுள்ளன. கருத்தாழமிக்க அவரது உரையின் சுருக்கம்:
நவீன விஞ்ஞானம் மட்டுமே சமுதாயத்தை வழி நடத்தக்கூடியது; சமுதாயத்தை மாற்றியமைக்கக் கூடியதும் ஆகும். நம்பிக்கைகளை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியாது. அவை பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டும். பரிசோதனைகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படும் நம்பிக்கைகள் மட்டுமே அறிவியலாக முடியும். காலம் காலமாக பல கதைகளை சொல்லி வந்திருக்கிறோம். அந்தக் கதைகளை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தி, உண்மையா, கற்பனையா என்று கண்டறிந்து அதனடிப்படையிலேயே நவீன விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கிறது. கோப்பர்நிக்க°, கலிலியோ காலத்திலேயே நவீன விஞ்ஞானத்துக்கு அடித்தளமிடப்பட்டது. (உலகம் உருண்டை; பூமி ஒரு சிறிய கோள்; என்பதை விஞ்ஞானபூர்வமாக கண்டறிந்தவர் கோபர் நிக்க°; பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையை முதன்முதலாக தொலைநோக்கி வழியாக கண்டறிந்தவர் கலிலியோ-ஆர்) சிறந்த விஞ்ஞானம் உருவாக, சுதந்திரமான சிந்தனை அவசிய மாகிறது. சுதந்திர சிந்தனையால் உருவான விஞ்ஞான கண்டுபிடிப்புகள்தான் 16 ஆம் நூற்றாண்டில் அய்ரோப்பாவில் சீர்திருத்தத்துக்கு அடித்தளமிட்டது அந்த புதிய விஞ்ஞான மறுமலர்ச்சிதான். அதிகார மய்யங்களை அசைத்தன; புதிய சுதந்திர சிந்தனைகளுக்கு வழிவகுத்தன. விஞ்ஞானத்தில் மாறுபட்ட கருத்துகோள்கள் வெளிப்படுவதற்கும் வழி வகுத்தன.
ஒரு கருத்தை முன்மொழிகிற நபர் எப்படிப்பட்டவர் என்ற அடிப்படையில் அவரது கருத்து சரியா தவறா என்பதைத் தீர்மானிக்கும் போக்கு ஒரு பக்கமும், சொல்கிறவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், சொல்லப்படுகிற கருத்து எவ்வளவு அழகாக இருந்தாலும், அது அறிவியல் ஆய்வுக்குட்பட்டால் மட்டுமே ஏற்க முடியும் என்ற போக்கு மற்றொரு பக்கமும் உருவாயின. கடைசியாக வெற்றிப் பெற்றது அறிவியல் பூர்வமாக - செயல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை மட்டுமே. இதுவே நவீன விஞ்ஞானத்தின் அடிப் படை. இதுதான் சமூகத்தை மாற்றியமைக்கக் கூடியது. “இந்த உலகம் எவருக்கும் சொந்தமானது அல்ல” (அதாவது கடவுளால் படைக்கப்பட்டது என்பதற்கு மறுப்பு-ஆர்) என்ற சுயசிந்தனைக் கோட்பாடுதான். அய்ரோப்பாவில் 1600 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட ‘ராயல் சொசைட்டி’ என்ற விஞ்ஞான அமைப் பின் அடிப்படை கோட்பாடாகும். அடிப்படை இல்லாத பல மூடநம்பிக்கைகள், விஞ்ஞான சோதனைகளுக்கு முன் நிற்க முடியாமல் தோற்றுப் போயின. ஆனாலும், அந்த நம்பிக்கைகளை விடாப்பிடியாக தொடர்ந்து நம்பிக் கொண்டும் இருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் தற்செயலாக நடக்கும் நிகழ்வுகளை, காரணங்களைக் கொண்டு பிரித்துப் பார்க்காமல், திணறிப் போய், அப்படியே நம்பி விடுவது தான்.
மனித மூளைகள் சிலவற்றுக்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. சில முன் மாதிரிகளை அப்படியே பதியச் செய்து விடுகிறோம். கணிதத்தில் அதற்கு விடை தேடும் வழிமுறைகள் எப்படி என்பது நமக்கு முன்கூட்டியே தெரிவதுபோல், இசையோ, நாட்டியமோ, ஓவியமோ நம்மிடம் நல்ல தாக்கங்களை உருவாக்கும் என்பதை நாம் முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பதுபோல், பலகற்பனையான முன் மாதிரிகளையும் நாம் மூளையில் ஏற்றி வைத்திருக்கிறோம். அவைகள் உண்மையில் ‘இருத்தல்’ அற்றவை; இல்லாதவை; (கற்பனையாக - இப்படி மக்கள் மூளையில் ஏற்றி வைத்திருக்கும் முன்மாதிரிகள் என்பது - கடவுள் நம்பிக்கைக்கும் பொருந்தும். - ஆர்)
ஒன்றோடு மற்றொன்றை தொடர்புறுத்தி, அறிவியலுக்கு எதிரான முடிவுகளுக்கு வந்துவிடக்கூடாது. வானத்தில் பறக்கும் சில கழுகுகள், பிணங்களை தின்கின்றன. கழுகுகள் பிணங்களைத் தின்ன வேண்டும் என்பதற்காகவே குழந்தைகள் பிறக்கின்றன என்று கற்பனை செய்து கொள்ள முடியுமா? இப்படி தொடர்புபடுத்திப் பார்ப்பது ஒரு கற்பிதம்.
அறிவியலைப் பொறுத்தவரை ஒரு கண்டுபிடிப்பை மற்றொரு கண்டுபிடிப்பு தவறு என்று நிரூபிக்கும்போது, அது தன்னைத் தானே மாற்றத்துக்கு உள்ளாக்கிக் கொள்கிறது. தவறை சரி செய்து கொள்கிறது. அறிவியலுக்குள்ளேயே அந்த மாற்றத்தை ஏற்கும் போக்கு அடங்கியுள்ளது. அதே நேரத்தில் அறிவியலுக்கு உட்படாத ஏனைய மூட நம்பிக்கைகளால் தவறுகளை திருத்திக் கொள்ள முடியாது. அறிவியல் நம்பிக்கையும், மூட நம்பிக்கையும் வேறுபடக் கூடிய இடம் இதுதான். இது விஞ்ஞானத்தில் நிகழுவதும் உண்டு; ஆனால் அந்தத் தவறுகள் மோசமானதோ கெட்டதோ அல்ல. ஆனால் அஞ்ஞானப் பொய்மைகள் நிச்சயமாக கெட்டவை; மோசமானவை.
சோதிட நம்பிக்கைக்கு வருவோம். அது நிச்சயமாக அறிவியல்பூர்வமானது அல்ல; கோள்களும், நட்சத்திரங்களும் நமது தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியதும் அல்ல. பிறக்கும்போதே நம் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது என்பதற்கு அடிப்படை ஆதாரங்கள் ஏதுமில்லை. நவீன விஞ்ஞானம் மருத்துவத்துடன் கைகோர்த்து நிற்பதால்தான், மனிதனின் சராசரி ஆயுள்காலம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மருத்துவத்திலும் அறிவியலை நம்ப வேண்டுமே தவிர, விஞ்ஞானபூர்வமாக சான்று பூர்வமாக நிரூபிக்கப்படாதவற்றை நம்பக் கூடாது. அறவியல்பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளால்தான் பெரியம்மை முற்றி லும் ஒழிக்கப்பட்டுள்ளது - என்று வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பேசினார்.
ஒரு விஞ்ஞானி என்ற நிலையில் அறிவியலையும், போலி அறிவியலையும் வேறுபடுத்தி, மிகச் சரியான கருத்துகளை முன் வைத்துள்ளார் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். ‘பாரதய வித்யா பவன்’பார்ப்பனர்கள், இதை விரும்ப மாட்டார்கள் என்பதைத் தெரிந்தும், உண்மைகளை உரத்துச் சொல்லியிருப்பதை பாராட்ட வேண்டும்.
பெரியார் காலம்காலமாக ‘அறிவைக் கொண்டு சிந்தித்து ஏற்றுக் கொள்’ என்று கூறினார். பார்ப்பனர்களோ பெரியாரை கடவுள், மத விரோதி என்றனர். இன்று அதே சிந்தனையை பார்ப்பன விஞ்ஞானிகளே, பார்ப்பனர் முன் இடித்துக் கூறும்போது பார்ப்பனர்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கின்றனர். இறுதியில் வெல்லப்போவது பெரியார் சிந்தனைதான்!
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
பார்ப்பனர்களுக்கு - நோபல் பரிசு விஞ்ஞானி அறைகூவல்
- விவரங்கள்
- விடுதலை இராசேந்திரன்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2012