தமிழிலக்கியப் பெரும்பரப்பில் 1939இல் தொடங்கி 2002 வரைக்குமான காலவெளியில் அசாத்தியப் பல்திறப் படைப்பாளியாகத் திகழ்ந்தவர் கவிஞர் குயிலன் என்ற கு.இராமலிங்கன். இலக்கிய வகைமையில் நூற்றுக்கும் மேலதிக ஆக்கங்களுக்கு உரித்தானவர். கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், உரைநடைச் சித்திரங்கள், மொழிபெயர்ப்புகள், திரைப்படப் பாடல்கள், திரையாக்க வசனங்கள் என்பதான படைப்பாக்கங்களில் ஐந்து மொழிகளின் புலமையோடு பங்களித்தவர். பல்வேறான இதழ்களின் ஆசிரியராகவும் தனித்திறனோடு திகழ்ந்தவர். குயிலனுக்கு கவிஞராய் பேரடையாளமிருந்தும் ‘தென்றல்’ (இலக்கிய மாத இதழ்), ‘முன்னணி’ (முற்போக்கு அரசியல் இலக்கிய வார இதழ்), ‘வாரம்’ (முற்போக்கு கலை, இலக்கிய அரசியல் வார இதழ்) என இதழாசிரியராய் தனித்துவத்துடன் விளங்கினார். இக்கட்டுரை, ஐம்பதுகளில் ‘வாரம்’ இதழில் பொறுப்பாசிரியராய் பணிபுரிந்த தருணங்களில் குயிலனின் விமர்சன ரீதியிலான எழுதுதிறன் புலப்பாட்டை ‘முச்சந்தி’ பகுதியின் ஊடாகப் பேசு பொருளாக்கியுள்ளது.
குயிலனின் ‘வாரம்’ இதழ்
கவிஞர் குயிலன், தன் தலைமறைவு வாழ்வின் பிற்பகுதியிலும் இணைந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பின்னாகவும் எவ்வியக்கத்திலும் பங்களிக்காது தமிழ்த் திரைத்துறைக்குள் இயங்கினார். அக்காலச் சூழலில் 1952இல் ‘வாரம்’ என்ற முற்போக்கு கலை இலக்கிய அரசியல் வார இதழைத் தொடங்கினார். “ஊருக்கு நல்லது சொல்வேன் – எனக்கு / உண்மை தெரிந்தது சொல்வேன்” (ப.2) என்கிற பாரதி பாடலைக் குறிக்கோள் மேற்கோளாக்கி ‘வாரம்’ வார இதழ் ஒரு அணா விலையோடு வெளிவந்துள்ளது. இவ்விதழ் அரசியல் ரீதியாகப் பொதுவுடைமைச் செல்நெறியோடும் இலக்கிய ரீதியில் கம்யூனிஸ்ட் போக்கிலிருந்தும் சற்று மாறுபாடுடன் வெளிவந்தது. இதழின் பொறுப்பாசிரியர் கவிஞர் ‘குயிலன்’ என்றாலும் ‘முச்சந்தி’ என்ற பகுதியில் கு.ரா (கு.இராமலிங்கன்) என்ற புனைபெயரில் அவரே சமகாலச் சமூக, அரசியல் நடைப்பியலைப் பேசுபொருளாக்கி பகடியோடு விமர்சித்துரைக்கிறார். முப்பாதைகள் சந்திக்குமிடம் ‘முச்சந்தி’யாகக் கருதப்படும் வெகுஜனப் பொதுவெளியில் சமூகஞ்சார் உரையாடல் நிகழ்வதுண்டு. இப்படியானதொரு காரணப் பெயரை முன்வைத்து கவிஞர் குயிலன் தன் ‘வாரம்’ இதழ்களின் (17.08.1952, 26.10.1952, 02.11.1952) ‘முச்சந்தி’ப் பகுதியில் சமூக, அரசியல் நடப்பியல் செய்திகளை விமர்சித்துள்ளார். இக்கட்டுரையானது ‘வாரம்’ இதழின் (17.08.1952) நாளிட்ட ‘முச்சந்தி’ப் பகுதியை மட்டும் முன்நிறுத்துகிறது.
பெரியார் - இராஜாஜி மீதொரு ‘விமர்சனம்’
குயிலனின் ‘வாரம்’ இதழின் (17.08.1952) ‘முச்சந்தி’ எனும் பகுதியில் ஈ.வெ.ரா ‘மூதறிஞர்’ இராஜாஜி நட்புறவு குறித்த கு.ரா.வின் விமர்சனப் பாங்கிலான விளக்கம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக “போட்டி ஒழிக!” பெரியார் - இராஜாஜி உபதேசம் (ப.8) எனும் தலைப்பில் அமைந்துள்ளது. இப்பகுதியில் கு.ரா. உள்ளடக்கச் செய்திகளின் விமர்சிப்பிற்கு இயைபுற தமிழிலக்கியக் கவிதைகளைக் குறியீட்டு நோக்கில் சுட்டுகிறார். அதில்,
“புகைநடுவினில் தீயிருப்பதை
பூமியில் கண்டோமே - நன்னெஞ்சே
பூமியில் கண்டோமே
பகைநடுவினில் அன்புருவாகிய
பரமன் வாழுகின்றான்-நன்னெஞ்சே
பரமன் வாழுகின்றான்’ (ப.8)
என்கிற பாரதி கவிதை வரிகளைப் பதிவிட்டு பெரியாரும் இராஜாஜியும் வேறான சித்தாந்தப் பின்புலமுடைய சமூக அரசியல் களத்தில் பயணித்தாலும் இருவருக்குள்ளும் ஒருமித்த புரிதலும் பேரன்பும் ஓர்மையும் உள்ளார்ந்து கிடந்ததாகக் குறிப்பிடுகிறார். கு.ரா.வின் ‘முச்சந்தி’ விமர்சிப்பில் இவ்வெடுத்துரைப்பை எள்ளல், அங்கதம் தொனிக்கப் புலப்படுத்திக் காட்டுகிறார். “போட்டி ஒழிக!” விமர்சிப்பில் இராஜாஜிக்கும் பெரியாருக்குமான பேரன்புணர்வை கு.ரா., “பகை நடுவினில் அன்பிருப்பதற்கு அத்தாட்சி வேண்டுமா? தாராளமாக இருக்கிறது. வேறெங்கும் தேடி அலைய வேண்டாம்! இராஜகோபாலாச்சாரியாரையும் ராமசாமிப் பெரியாரையும் எடுத்துக் கொள்ளுங்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள். அன்று மட்டுமல்ல இன்றும் கூடத்தான். ஊடே ஏதோ பகை! ஆனால் இந்தப் பகை நடுவிலே இருவருக்கும் இருக்கும் அன்பு உங்களுக்கெப்படித் தெரியும்?” எனக் கூறிவிட்டு அவரே “நாயக்கர் என்மீது அன்பில்லை என்று அடிக்கடி கூறி வருகிறார். அதையெல்லாம் நம்பாதீர்கள். அவருக்கு என்மீது உண்மையான அன்பு உள்ளுக்குள் இருக்கிறது” என்பார் இராஜாஜி.
“அதெல்லாம் இல்லை, ஊகூம்” என்று மறுப்பார் பெரியார்.
இதெல்லாம் வெறும் ஊடல். தாம்பத்யச் சண்டை. ‘அரிசி விலையின் ஏற்றம் இறக்கத்தைப் போல’ அவ்வளவு தான். இருவரும் அத்யந்த நண்பர்கள் தான்.
இல்லாவிட்டால், தனது பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை யெல்லாம் புறக்கணித்துவிட்டு ‘கல்யாண’ நிச்சயதார்த்தத்திற்கு பெரியார் இராஜாஜியைத் தேடிச் சென்றிருக்க முடியுமா?
தாம்பத்ய ஊடலிலே மனைவி சொல்லும் யாவையும் புருஷன் மறுப்பான். அதே மாதிரி புருஷனை மனைவி பொய்யனாக்குவாள். எல்லாம் வேடிக்கைக்காகத்தான்.
“ஆச்சாரியார் ஆட்சியை ஐந்து வருடங்களுக்கு அசைக்க முடியாது” என்று ஊர்ஜிதம் செய்வார் பெரியார்.
“அப்படியொன்றும் நினைக்காதீர்கள்,
ஈ.வெ.ரா சொல்வதை நம்ப வேண்டாம் என்பார் இராஜாஜி” என்று கு.ரா. இருவருக்குமான மறைமுகத் தோழமையைப் புலப்படுத்துகிறார். மேலும், “பகைநடுவினில் அன்பிருப்பதற்கு இதைவிட வேறென்ன அத்தாட்சி வேண்டும்?” என்று கு.ரா. கூடுதலாக மற்றொன்றையும் கூறும்பொழுது, “இந்த உதாரணம் இரண்டு பேரும் ஒரே மனம் படைத்தவர்கள் என்பதையே காட்டும்.
நகரசபைத் தேர்தல் வருகிறதல்லவா? அதைப் பற்றி பெரியார் என்ன சொல்கிறார் தெரியுமா?
“ஸ்தல ஸ்தாபனங்கள் - நகர சபைகள் முதலியவற்றுக்குத் தேர்தல் தேவையே இல்லை….
ஸ்தல ஸ்தாபனங்களில் கட்சிகள் கோஷ்டிகள் கூடாது” என்கிறார்.
நமது பெரியாருக்கு “போட்டி” மனப்பான்மையை வளர்க்கும் இந்தத் தேர்தல் முறையில் பிடித்தமில்லையாம். இந்த மாதிரி போட்டி போட்டு கோஷ்டிச் சண்டை போடுவது மிகவும் விரும்பத்தகாத செய்கையல்லவா? அதற்காக வேண்டித்தான் பெரியார் தனது கட்சியைப் பொறுத்தவரையிலும் கூட இந்தக் கொள்கையை அனுஷ்டிக்கிறார் போலும். கட்சி நிர்வாகிகள் தலைவர்களாகத் தேர்ந்தெடுப்பது கூடப் போட்டி மனப்பான்மை தானே?
எனவே, திராவிடத் தந்தை “போட்டி ஒழிக” என்று உபதேசம் செய்ய வருகிறார். வெல்க அவருடைய உபதேசம் வெல்க வெல்க” என்று எள்ளலுடன் கு.ரா. விமர்சித்திருப்பதை நோக்கலாம்.
ஈ.வெ.ரா.வின் மனச்சாய்வையே இராஜாஜியும் பிரதிபலித்திருப்பதை கு.ரா. ‘முச்சந்தி’யில் எடுத்துரைக்கையில், “இம்மாதம் 7ந் தேதி தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர் சங்கத்தில் பேசும்பொழுது இராஜாஜியும் “போட்டி ஒழிக” என்று உபதேசித்துள்ளார்.
“தேர்தலுக்காக அதிகம் போட்டி போடக்கூடாது” என்கிறார். எதிர்க்கட்சி வாலிபர்களும் மற்றவர்களும் “இராஜாஜி தேர்தலுக்கு நின்று போட்டி போடவில்லை. புழைக்கடை வழியாக வந்தவர் என்று அடிக்கடி குத்திக்காட்டுகிறார்கள். வேண்டுமானால் நான் ராஜினாமா செய்கிறேன். நின்று போட்டியிட்டு வரட்டும் என்று சிலர் வலுச்சண்டைக்கு இழுக்கிறார்கள்! இவர்கள் எல்லாம் இராஜாஜியை நன்கு அறிந்து கொள்ளாதவர்கள். சுத்த அசட்டு ஜனநாயக வாதிகள்!”
இராஜாஜி போட்டி போட விரும்பவில்லை. தேர்தலுக்காக அதிகம் போட்டி போடக்கூடாது என்பது தான் அவருடைய கொள்கையாச்சே!
இன்னுமொன்று இராஜாஜி தான் தேர்தலுக்கு நிற்காமல் மேல் சபைக்குள்ளும் மந்திரி சபைக்குள்ளும் நுழைந்துவிட்டதற்கே சப்பைக் கட்டு கட்டுகிறார் என்று தவறாக நினைக்க வேண்டாம்.
இராஜாஜி எப்பொழுதுமே “போட்டி ஒழிக” என்ற கோஷத்தைக் கிளப்பி வந்திருக்கிறார் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். முன்பு கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்பதற்கு சிறிது நேரத்திற்கு முன் அவர் கூறிய தலைப்பில் ஒரு புத்தகம் கூட எழுதினார் (இந்தப் புத்தகத்தை அவர் சொல்லச் சொல்ல அவர் முன்னர் இருந்து என் கைப்படவே நான் எழுதினேன்-கு.ரா).
இப்பொழுது என்ன சொல்கிறீர்கள். நண்பர்கள் இருவரும் வாய்வேறாக இருந்தாலும் மனம் ஒன்றாகி விடுகிறார்களல்லவா? என்கிற கு.ரா மேலும், “போட்டி ஒழிக” என்பது குறித்தான இராஜாஜியின் மனச்சாய்வையும் ‘வாரம்’ இதழினூடாகப் புலப்படுத்திக்காட்டுகிறார். அதில், இராஜாஜியின் ‘தாம்பரம்’ கூட்ட உரையை எடுத்துரைக்கையில், “ஒருமுறை தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர் அடுத்த வருஷம் எந்தப் பதவிக்கும் தேர்தலில் போட்டியிடக் கூடாதென்று ஒரு விதி செய்து கொள்ளவேண்டும். அரசியல் தேர்தல்களிலும் இப்படி நடந்தால் நல்லது. அப்படி இல்லாததால் தான் எல்லாக் கஷ்டங்களும். என் அனுபவத்தைக் கொண்டு நான் இதைச் சொல்கிறேன்” என்ற அவரின் மனப்பாங்கையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.
மூதறிஞரின் இம்மனப்பாங்கைப் பற்றி கு.ரா. விமர்சிக்கையில், “மாகாணப் பிரதமராகவும் பின்னர் கவர்னராகவும் கவர்னர் ஜெனரலாகவும் மத்திய மந்திரியாகவும் பதவி வகித்து 'ரிட்டையரான' இராஜாஜி மறுபடியும் பதவிக்காகப் போட்டியிடுவது நல்லதல்ல" என்பதை தமது சொந்த அனுபவத்தின் மூலம் ஒப்புக் கொள்கிறார்.
பதவிக்காகப் போட்டியிடுவது நல்லதல்ல. எனவே தான் பதவிக்காக போட்டியிடாமல் வந்தார். அவரைப் போய் மறுபடியும் “போட்டியிடு போட்டியிடு” என்று நச்சரித்தால் நன்றாக இருக்கிறதா! என்று அங்கதம் தொனிக்க விமர்சிக்கும் கு.ரா., “நன்றாக இல்லை. நான் சொல்கிறேன் இது அறவே நன்றாக இல்லை. எனவே தொண்டை கிழியக் கத்துகிறேன்: “போட்டி ஒழிக” என்று எள்ளலும் அங்கதமும் மிகுவிக்க ‘முச்சந்தி’ப் பகுதியைக் கட்டமைத்துள்ளார்.
குயிலன் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்த ‘வாரம்’ வார இதழ் ‘உண்மை தெரிந்தது சொல்வேன்’ என்கிற இதழ் குறிக்கோளின் பாரதி கவிதை வரிகளுக்கு ஏற்பவே ‘முச்சந்தி’ பகுதியைக் கட்டமைத்திருப்பதும் மூதறிஞருக்கும் ஈ.வெ.ராவுக்கும் இடையிலான இருவேறான நட்புறவின் சூசகத்தைப் புலப்படுத்துவதிலும் எள்ளலும் அங்கதமும் தன் எழுதுதிறனில் மிகுவித்து தேர்ந்ததொரு விமர்சகராகவும் குயிலன் என்கிற கு.ரா.வை அடையாளப்படுத்துகிறது.
- முனைவா் த.கண்ணா கருப்பையா, வருகைதரு புலமையாளர், காந்தி கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம். காந்திகிராமம்.