தலைவரே! தாய்மார்களே! அன்பர்களே!
இன்று என்னை மதம் என்பது பற்றி சில வார்த்தைகள் சொல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. அக்கட்டளையை சிரமேற்கொண்டு என் அறிவிற்கெட்டிய சில முக்கிய விஷயங்களை மட்டும் எடுத்துக் கூற விரும்புகிறேன். அதனை நீங்கள் அப்படியே நம்பி ஒப்புக் கொள்ள வேண்டுமென்றோ, நான் ஓர் பெரிய அறிவாளி, ஆராய்ச்சிக்காரன் என்றோ சொல்ல வரவில்லை. நான் சொல்வதை நன்காராய்ந்து உங்களுக்குச் சரியெனத் தோன்றுவதை எடுத்துக் கொண்டு, சரியல்லவெனத் தோன்றுவதை ஒதுக்கி விடும்படிதான் நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
நான் பெரிய சீர்திருத்தக்காரனும் உபதேசக்காரனுமல்ல. ஆனால் என் அறிவுக்கெட்டிய வரை தீயவைகளாகத் தோன்றுவதைக் கண்டித்து, நல்லவைகளை எடுத்துக் காட்டி பொது ஜன உபயோகமான துறையில் செலவிட வேண்டுமென்பது தான் என் முக்கிய நோக்கமும் விருப்பமுமாகும். என்னுடைய அறிவுக்கு எது தீயதென்றும், எது ஒழிந்துபட்டு மறைந்தொழிய வேண்டுமென்றும் பட்டிருக்கின்றதோ, அதனைப் பல தலைப்புகளின் கீழ் பல விடங்களிலும் எடுத்துச் சொல்லி வருகின்றேனேயன்றி வேறல்ல. அதைத்தான் இங்கும் மதம் என்பதன் பெயரால் நான் உங்கள் முன்னிலையில் சொல்ல வந்திருக்கிறேன்.
நான் ஏன் மதம் என்பதைப் பற்றி பேசி வருகிறேன் என்றால், நான் ஏதோ சிறிது நேரமாயினும் பொது நன்மைக்கென்று செலவிட்டுக் கொண்டு வந்த வரையில் சில விஷயங்கள் நம் நாட்டுக்கு மட்டுமன்றி மனித சமூகத்திற்கே முன்னேற்றத் தடைகளாயிருப்பது மதத்தின் பெயரால் செய்யபடுபவைகள் தான் என்று நான் அபிப்பிராயப்படுகிறபடியால் தான். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மதமிருக்க வேண்டுமென்றும் சொல்லப்படுகிறது. அப்படியானால் அம்மதம் அவன் வாழ்நாளில் உபயோகமான நன்மைகளைச் செய்யக் கூடியதாயிருத்தல் வேண்டியது அவசியம். ஆயினும் நம் நாட்டில் ஒரு மனிதனின் மதம் என்பது அவன் வாழ்நாளில் அவனுக்கு எவ்வளவு உபயோகமில்லாததாயினும் அதன் கற்பனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியதாயிருப்பதைக் கண் கூடாகக் காண்கின்றோம்.
மகமதிய, கிறிஸ்துவ, இந்து, சைவ, வைஷ்ணவ சமயங்களெதுவாயினும் எல்லாம் ஒரே மாதிரி பல நிர்ப்பந்தங்களையுடைய மதங்களாகத் தானிருக்கின்றன. அந்த நிர்ப்பந்தங்களின்படி அந்தந்த மதஸ்தர்கள் நடக்க வேண்டுமென்ற கட்டுப்பாடுகளுமிருக்கின்றன. என்னுடைய அனுபவத்தில் எந்த மதத்தினரைக் கேட்டாலும் இதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்றும், அதற்கு மீறி நடக்கக் கூடாது என்றும், ஏதோ சில நிர்ப்பந்தங்களைச் சொல்லுகின்றார்களேயன்றி அதில் உள்ள ஒழுக்கத்தை பின்பற்றியதென்பது ஒரு சிறிதும் இல்லை.
மனிதன் தன் அறிவிற்கெட்டிய உண்மைப்படி நடக்க வேண்டும் என்று ஒரு மதமும் சொல்வதில்லை. மேலும் அவர்கள் அக்கட்டுப்பாட்டிற்கு மாறாக எண்ணினால் பாவம், பேசினால் மதத் துவேஷம் என்றும் சந்தேக நிவர்த்திக்கு ஏதாவது ஒரு சிறிது முயற்சித்தால் அதை நாஸ்திகமென்றும் சொல்லுகின்றார்கள். இதனால் அறிவின் தன்மைக்கும் இயற்கைக்கும் ஒத்த மாதிரி ஏற்றவாறு நடக்க இடம் கொடுக்கும் படியான மதம் உலகில் மிக அருமையாகத் தானிருக்கிறது. உண்மையில், மதமென்பது என்னவென்பதையும் அதன் அவசியத்தையும் அறிந்திருப்போர் வெகு சிலர்; அது என்னவென்றேயறியாது பழமை என்பதனாலும் முன்னோர்களுடையது என்பதனாலும் பழக்க வழக்கங்களினாலும் கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டுமிருப்பவர்கள் பெரும்பாலோர். பெரும்பாலோருக்கு அவர்கள் அனுசரித்துவரும் கொள்கைகளைப் பற்றியோ அல்லது தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்பந்தங்களைக் குறித்தோ ஒன்றுமே தெரியாது. ஆனால் அத்தகையோர் “பெரியோர்கள் சொன்னபடி கேட்க வேண்டும். அவர்கள் சென்ற வழி செல்ல வேண்டும். இல்லாவிட்டால் பாவம், தோஷம்” என்று ஏதோ சமாதானம் சொல்லுகின்றார்களேயன்றி அதன் உண்மையை யறியும் விஷயத்தில் ஒரு சிறிதும் முயற்சியில்லாமல் தானிருக்கின்றனர்.
என்ன காரியத்திற்காக மதம் இருக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறதோ அந்தக் காரியத்திற்காக மதம் உபயோகப்படுவதாய் காணப்படவில்லை. ஒருவரை உனக்கு மனைவி மக்களுண்டா? எவ்வளவு படித்திருக்கிறீர்கள்? என்ன சொத்து சுதந்திரம் இருக்கிறது? என்று விசாரிப்பது போலத்தான் ஒருவனை உன் மதம் என்னவென்று கேட்பதும் ஒரு சொத்தாய் மதிக்கக் கூடியதாயிருக்கின்றது. மதம் என்று சொல்வது எதற்காக? அது எப்போது ஏற்பட்டது? அது ஒரு நிலையாயிருக்க வேண்டுவதா? அல்லது அடிக்கடி மாறக் கூடியதா? அல்லது புதிதாக உண்டாக்கிக் கொள்ளக் கூடியதா! என்பனவற்றை ஆலோசிப்போமாயின் மற்ற தோற்றங்கள் மாறக்கூடியதாயிருப்பது போன்றே மதமும் அறிவிற்கு ஏற்றவாறு மாறக் கூடியதற்கு இடந்தர வேண்டும் என்பது புலனாகும். அன்றியும் ஒருவனுக்கு ஒரு மதமென்பது நித்தியமானதென்றும், அது என்றைக்கும் மாறக்கூடாதென்றும் சொல்வதற்கு இடமில்லை.
மதமானது அவ்வப்போதைய காலதேச வர்த்தமானத்திற்கேற்றவாறும், மக்களின் வாழ்க்கையை எப்படி நடத்துவதென்பதன் படியும், சரீர பலத்தினாலோ புத்தி பலத்தினாலோ அவரவர்கள் புத்திக்கு ஏற்றவாறு பல கொள்கைகளையும் கட்டுப்பாடுகளையும் நிர்ணயித்து அதைத்தான் மக்கள் பின்பற்றி நடக்க வேண்டுமென்றும் கட்டுப்படுத்தி நிர்ப்பந்தித்து வருவதையே தான் இப்போது மதம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு பல ஆதாரங்களையும் அற்புதங்களையும் சொல்லி விடுகிறார்கள். அவைகள் ஒரு சமயம் அந்தக் காலத்திற்கு தகுந்ததாக ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பினும் இப்போது அவை ஒன்றும் ஒப்புக்கொள்ளக் கூடியவைகளா? என்பதை ஒரு சிறிதும் கவனிப்பதில்லை.
ஒவ்வொரு மதத்திலும் கடவுள், கடவுள் அவதாரம், கடவுள் மகன், கடவுள் மூலமான தூதன் என்று பலவாறு மதத்துடன் கடவுளை இணைத்து சொல்லப்படுகிறது. அக்காலத்து நிலைமையை உத்தேசித்து மக்களுடைய நன்மையை முன்னிட்டு அவ்வாறான பிரமாணங் கற்பனை செய்யப்பட்ட தென்றாலாவது ஏதோ ஒருவாறு ஒப்புக்கொள்ளலாம். அப்படிக்கின்றி கடவுள் அவதாரமாகவோ பிள்ளையாகவோ தோன்றி இதைச் சொன்னார், அதைச் சொன்னார் என்பதும், ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் நாயன்மார்கள் முதலிய பல பெயர்களுடையவர்கள் தோன்றி பல அற்புதங்கள் செய்து காட்டி இதைச் சொன்னார் அதைச் சொன்னார் என்பதும் தான் இவ்வுலகத்திற்குப் பெரிய கஷ்டத்தையும் துன்பத்தையும் தரக் காரணமாயிருப்பதுடன் மக்களை முழு மூடர்களாக்கிக் கொண்டும் வருகின்றது. (கரகோஷம்)
உலக வாழ்வில் மற்றொருவனுக்கு இம்சையின்றி பிறருக்கு எப்படி உபயோகப்படுவது என்பதையேதான் முக்கிய கொள்கையாகக் கொண்டுழைப்பவனுக்கு வேறு மதம் வேண்டுவதில்லை என்பதுடன், தேவகுமாரனும், நபியும், ஆழ்வாரும், ஆச்சாரியார்களும், நாயன்மார்களும், தெய்வீகமும், அற்புதங்களும் வேண்டியதில்லை என்பதே என் முடிவு. அம்மாதிரி தருமத்தையேஅனுபவமாக்கத்தக்க விதமாய் இப்போது போதிக்கத்தக்க மதமெதுவுமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அப்படிக்கு இருப்பதாக இப்போது சொல்ல வருவதெல்லாம் ஏதோ செல்லரித்த ஏட்டை எடுத்துக்கொண்டு வந்து இதோ பார் நீ சொல்வதெல்லாம் இதில் எழுதியிருக்கிறது என்று காட்டப்படுவதன்றி சமூக வாழ்க்கையின் அனுபவத்திலிருக்கின்றதெனச் சொல்லப்படும் மதமோ சமயமோ ஒன்றுமில்லை.
இவ்வளவு மதங்கள் சமயங்கள் இருந்தும் அனுபவத்திற்கும் இயற்கை இன்பத்திற்கும் ஒத்தது எது அவசியமானது எது, என்று கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கின்றதே ஒழிய தாராளமாய் பின்பற்ற ஒரு சமயமும் இடம் கொடுக்கவில்லை. அந்த விதமான ஒரு நிலைமை மனித சமூகத்திற்கு ஏற்பட்டாலொழிய மனித சமூகம் ஒற்றுமையுடனும் அன்புட னும் சுதந்திரத்துடனும் வாழ்வது கஷ்டந்தான். நாளுக்கு நாள் புதிய மதங்கள் உற்பத்தியாவதும்; பழைய மதங்களுக்குப் புதிது புதிதான பாஷியமும் பொருளும் சொல்லிப் பிரசாரங்கள் மிகுந்து கொண்டுமிருக்கின்றனவேயன்றி, மனித சமூகத்தின் அவசியம், தன்மை, கடமை முதலியவை என்னவென்றும் இத்தகைய பாஷியங்களும் மதமும் அவற்றிற்கு ஏற்றவைகளாயிருக்கின்றனவா? யென்றும் ஆலோசிப்பார் யாருமில்லை.
அக்கிராசனர் சொல்லியது போல் ஆயிரக்கணக்கானவர்கள் பல ஆயிரக்கணக்கான கொள்கைகளையும் தர்மங்களையும் எழுதி வைத்திருக்கலாம். அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. எந்த மனிதனுக்கும் அவசியமெனச் சொல்லும் எக்கொள்கையும் அனுபவத்தில் எளிதாக அனுசரிக்கப்படுவதற்கு ஒத்ததாயிருக்கின்றதோ - அனுசரித்தே தீர வேண்டியதாயிருக்கின்றதோ அதனைத்தான் உத்தமமும் உண்மையுமுள்ள கொள்கையென்று சொல்ல வேண்டும். இல்லாமல், இப்படியிருக்க வேண்டும் அப்படியிருக்க வேண்டுமென்று கட்டுப்பாடுகளும் நிர்ப்பந்தங்களும் மாத்திரம் ஏற்படுத்திக் கொண்டு, அதை சிவன் சொன்னார், விஷ்ணு சொன்னார், கிறிஸ்து சொன்னார், நபி சொன்னார், புத்தர் சொன்னார், ரிஷி சொன்னார், முனி சொன்னார், மனு சொன்னார் என்பதாக சொல்லிக் கொண்டு காரியத்தில் நடைபெற முடியாமல் இருக்கும் மதங்கள் எவற்றினாலும் உலகம் ஒரு நாளும் உய்யப் போவதில்லை.
மனிதனுடைய இயற்கை தத்துவத்திற்கும் அனுபவத்திற்கும் விரோதமானதைப் புகட்டும் எந்த மதத்தையும் சுருட்டிக் கட்டி மடக்கி சமுத்திரத்தில் போட வேண்டியதுதான். புண்ணியம், பாவம், மதம், கொள்கை முதலிய இவற்றின் பெயரால் ஜன சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டங்களும், துன்பங்களும் இவ்வளவு என்று சொல்ல முடியாது. உலகத்தில் அநீதிகளும் மக்களுக்கு விரோதமான காரியங்களும் எவ்வளவு இருக்கக் காண்கிறோமோ அவ்வளவும் மதத்தின் பேராலும் தெய்வத்தின் பேராலும்தான் ஏற்படுகின்றதென்பதை உறுதியாய்ச் சொல்லுவேன். திருட்டுக்கும், விபசாரத்திற்கும், பொய், கொலை, முதலியத் தீத் தொழில்களுக்கும், குடிக்கும், சர்வ சதாகாலமும் மக்களை வஞ்சித்து பிறருடைய உழைப்பினால் சாப்பிட்டுக் கொண்டு சோம்பேறிகளாய் காலங்கழித்துக் கொண்டிருப்பதற்கும் மதங்களும் தெய்வங்களும் சம்மதப்பட்டு இடங் கொடுத்துக் கொண்டிருப்பதாய்ச் சொல்லி புராணங்களும் இதிகாசங்களும் எழுதி வைத்திருப்பதுடன் கடவுளுக்கும் அது இஷ்டந்தான் என்றும், கடவுளும் அவற்றில் ஆசைப்பட்டு நடந்திருப்பதாயும் எழுதி வைக்கப்பட்டு இருக்கின்றன. (கரகோஷமும் நகைப்பும்)
குடிப்பதே சில கடவுள்களுக்கு இன்பம். மற்றும் விபசாரம் திருட்டு முதலிய பல தீச் செயல்கள் செய்வதே சில கடவுளுக்கு விருப்பம். ஏழைகளை வதைத்து அவர்கள் உழைப்பினால் சுகமாக வாழ்வதே சில கடவுளுக்குச் சந்தோஷமென்று மதத்தின் பேரால் பலவாறாக ஆபாசமான கற்பனைகளும் புராண ஆதாரங்களும் வேதங்களுமேற்பட்டிருக்கவில்லையா? மக்களுக்கு உபயோகமற்றதும் இம்மாதிரி இயற்கைக்கு விரோதமானதுமாகிய கடவுளும் மதம் முதலியவைகளும் உலகத்தை விட்டொழியும்போதுதான் மக்களுக்கு சுகமுண்டாகும். மனிதனுக்கும் இத்தகைய சுகத்தைப் பெறுவதற்கான வழியைத் தேடுவதற்கு வேண்டிய தைரியம் வந்தால் தான் அந்த எண்ணமும் உதயமாகும். ஆனால் அந்த எண்ணம் உதயமாகுமுன்பே அந்நெறியிலிருந்து மனிதனை வலைவீசி இழுத்து பாழ்படுத்த பல முட்டுக்கட்டைகளும் நிர்ப்பந்தங்களுமிருக்கின்றன. மனிதன் இம்முயற்சியில் இவற்றிலிருந்து விடுபட வேண்டுமானால் எந்தவிதமான கட்டுப்பாட்டுக்கும் அடங்கியவனாக இருக்கக்கூடாது. எதையும் உடைத்தெறிந்து கலகம் செய்யத் தயாராய் இருக்க வேண்டும்.
மனிதன் தன்னுடைய அயலானுக்கு கஷ்டம் கொடுக்காமலும் எந்த விதத்தில் உதவி செய்யலாம், நாமும் இன்பமாய் வாழலாம் என்ற நோக்கமுடையவனாயும் வாழ வேண்டும். மற்றப்படி சிறு கூட்டங்களின் சுயநன்மைக்காகப் பலவித கட்டுப்பாடுகளையும், நிர்ப்பந்தங்களையும் வைத்துக் கொண்டு மக்களையும் ஏமாற்றித் திரியும் மதங்களையும், கொள்கைகளையும் வெட்டி ஆழப் புதைக்கவேண்டும். ஆதாரங்களை சுட்டுப் பொசுக்கி சமுத்திரத்தில் கரைத்து விட வேண்டும். ( கரகோஷம்)
நான் மதத்தைப் பற்றிப் பேசும்போது சிலருக்கு வருத்தமாகத் தான் இருக்கும். ஏனென்றால் அவர்கள் பார்க்கும் கண், இந்து மதத்தின் கொள்கைகளின் மூலமானதாயும், பிறரை வஞ்சித்து மோசம் செய்வது, இம்சிப்பது முதலான கொள்கைகளின் மூலமாகவும் பார்ப்பதுமாகவிருப்பதனால் தான். யாருக்கு எந்த மதத்தில் பற்று இருப்பினும் அதைக் குறித்து எனக்குக் கவலை இல்லை. ஆனால் அந்த மதத்தினால் நாடு என்ன நன்மை பெற்றது, மனித வர்க்கத்திற்கு என்ன பலனேற்பட்டது என்னும் கேள்வி முக்கியமானதாய் இருக்க வேண்டும். புல்லாகிப் பூண்டாகி புழுவாகி மனிதனாகிப் பிறகு கடவுள் பக்கத்தில் இருப்பவன் என்றும், பலவாறு பரிணாம நிலைகளை (நகைப்பு ) குறித்துச் சோம்பேறிகள் பெருமையாகப் பாடிக்கொண்டு போவதனால் என்ன பயன்? வேண்டுமானால் மூடர்கள் முன்னிலையில் ஆழ்வார்களாகவும் நாயன்மார்களாகவும் வாழலாம். (கரகோஷம்)
மனிதனோ புல் பூண்டு, புழு மிருக முதலிய ஜீவராசிகளுக்கெல்லாம் மேலான அறிவைப் படைத்துள்ளவனென்று சொல்லப்படுகிறது. ஆனால் அவற்றினிடத்தும் மனித வருக்கத்திற்கு அப்புல் பூண்டு புழு பூச்சிகளை விட அறிவற்ற தன்மையும் துன்பமுமே தொடர்ந்து வரக் காண்கின்றோம். ஒரு சமயம் மனிதனுக்கும் அவற்றிற்குச் சமமான அறிவு இருந்திருந்தால் துக்கம் துக்கமென்ற, உணர்ச்சியில்லாமற் போயிருக்குமல்லவா? மனிதனுடைய உண்மையான நிலையை ஒருவருக்காவது கற்றுக் கொடுக்கக் கூடிய மதம் இல்லை. உள்ளதைக் கொண்டு திருப்தியடையுங்கள், அடுத்தவனுக்கு உபகாரியாய் நன்மை செய்யுங்களென்று எந்த மதமும் காரியத்தில் கற்பிக்கவில்லை. அதனை அறியும் வரை மனிதனும் பூச்சிப் புழுக்களைப் போல் நசுக்குண்டுதான் துன்பத்திலுழன்று கொண்டிருப்பான்.
இந்து மதமென்றாலும் வேறு மற்றெந்த மதமென்றாலும் நாட்டையும் ஜன சமூகத்தையும் பாழ்படுத்த எவ்வளவு, கட்டுப்பாடுகளும் நிர்ப்பந்தங்களும் நிறைந்திருக்கக் கூடுமோ அவ்வளவும் நிறைந்து வழியக் கூடியவைகளாகத் தானிருக்கின்றன. காரிய அளவில் இந்து மதம் என்பதும் அதன் பெயரால் கொள்ளப்படும் கொள்கைகளும் மற்றெல்லா மதங்களைவிட மனிதனை ஏமாற்றிக் கட்டுப்படுத்தி நிர்பந்தங்களுக்குள்ளாக்கக் கூடியவைகளாகத் தானிருக்கின்றன.
கூடியவரை புத்த மதக் கொள்கைகள் ஒரு விதத்தில் உயரிய கருத்தைக் கொண்டதாக இருப்பதாய் சொல்லப்படுகின்றது. மேலும் மற்றெல்லாம் மதங்களைவிட புத்த மதத்தில் கருத்துக்கள் விசாலமாக மனித தர்மத்திற்கும் அனுபவத்திற்கும் ஒத்ததாக விருக்கின்றன என்று சொல்லப் படுகின்றது. இதனை நான் முழு ஆராய்ச்சியினால் சொல்லுவதாகக் கருதி விடக்கூடாது. உலகத்தில் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைச் சொன்னால் என்ன இது புத்த மதமாயிருக்கிறதே என்று சொல்லப்படுவது இயற்கையாயிருப்பதிலிருந்துதான் இம் மதத்தின் கருத்துக்களை அனுமானித்தேன்.
இன்றைய தினம் இங்கு கூட்டப்பட்டுள்ள மகாநாட்டில் நீங்கள் இப்படி நடக்க வேண்டும். அப்படி நடக்க வேண்டுமென்று கட்டுப்படுத்தும் தீர்மானங்களும் செய்யப்படலாம். அதனாலேயே முடிவான நன்மைகள் விளைந்து விடாது. உலகத்திலுள்ள பெரிய மதங்கள் என்பவை ஏன் மக்களை உயரிய கருத்துக்களை அனுசரித்து வாழ்க்கையிலுய்யுமாறு பக்குவப்படுத்தவில்லை என்னும் கேள்விக்கும் பதில் சொல்லக் கடமைப் பட்டுமிருக்கின்றோம். அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒத்ததாயுள்ள மதம் என்றால் மக்களுள் பெரும்பாலோரால் ஏன் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால் இதற்கு “எதிரிகளின் சூழ்ச்சிகளினால்தான்” என்று பதில் சொல்லப்பட்டிருக்கின்றது. எல்லா மதத்தினரும் இவ்வாறு தான் சொல்லுகின்றனர். எந்த மதம் மக்களுடைய வாழ்க்கையைக் கைப்பற்றி அவர்களைப் பக்குவப்படுத்தியிருக்கின்றது என்று பார்ப்போமானால் ஒன்றைக் கூடச் சொல்வதற்கில்லை. மதத்தின் பெயரால் செய்யப்படும் காரியங்கள் ஒன்றாவது மக்களை மனிதத் தன்மைக்குத் திருப்புபவைகளாயிருக்கவில்லை. ஆதலால் இம்மாதிரியான மகாநாடுகள் மனிதனை மனிதத் தன்மைக்குத் திருப்புவது என்ற முயற்சிகளிலிறங்கி நிர்ப்பந்தமின்றி அனுபவத்தில் எளிதில் கைக்கொண்டனுசரிக்கத்தக்க - அனுசரித்துத் தீர வேண்டியதான கொள்கைகளை பகுப்பது உசிதமாகும்.
எது மனித தர்மத்திற்கு விரோதமோ எது அறிவுக்கு விரோதமாக முட்டுக்கட்டையாக நிற்கின் றதோ அதை எல்லாம் அழிக்க தைரியமாக முன் வந்து அவ் வேலையில் ஒரு கட்டுப்பாட்டுக்கும் நிர்பந்தத்திற்கும் இடங்கொடாது அவற்றை அழித்து மனிதத் தன்மையைப் பரவச் செய்வதனால்தான் இது சாத்தியமாகும். உலகமும் மனித சமூகமும் சுகமும் சுதந்திரமுமடையக்கூடும். (பெருத்த கரகோஷம்)
இந்து மதமென்பதாக ஒரு மதமில்லை என்பது தான் என் அறிவுக்கு எட்டிய முடிவு. ஆனால் பல மதங்கள் (சைவம், வைணவம் முதலியன) சேர்ந்தது இந்து மதமென்று சிலர் சொல்லுகின்றனர். இந்து மதமென்பதில் சைவம், வைணவமாகிய இத்தியாதி மதங்கள் சேர்ந்த தொடர்பெனச் சிலர் சமாதானம் கூறினாலும் அவை எவ்வித உண்மைக்கும் ஒத்ததல்லவென்பது தான் என் அபிப்பிராயம். இந்து மதம் என்பதில் சைவம், வைணவம் என்றும் இரண்டு சமயமும் வெறும் புரட்டையே அஸ்திவாரமாகக் கொண்டு கட்டப்பட்டது. மகமதிய மதமும், கிறிஸ்துவ மதமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்பட்டதென்றும், அதனை உண்டாக்கியவரைக் குறித்தும், கொள்கைகளைப் பற்றியும் சில ஆதாரங்களுமிருப்பதாகச் சொல்லப் படுகின்றது. ஆனால் சைவம், வைணவம் முதலிய மதங்கள் சேர்ந்த தொடர்பான இந்து மதமென்பது எக்காலத்தில் எப்படி ஏற்பட்டதென்ற அஸ்திவாரம் குறிப்பிடுவதற்கில்லாமலிருக்கின்றது. இம்மதங்களென்பது ஜனங்கள் அறியாமை காரணமாக வளர்ந்து கொண்டு இந்நாட்டினரை ஒன்றுபடுத்துவதற் கிடமில்லாமலிருக்கின்றது.
நானும் கூடியவரை அந்தந்த மதத்தில் சம்பந்தப்பட்டவர்கள் சொல்லும் சமாதானங்களையும் அவர்கள் அபிப்பிராயங்களையும் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். மதங்களால் ஒரு பெரிய சமூகம் சிதறுண்டு பல கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் இலக்காகியிருக்கின்றது. மதங்கள் என்ற பித்தலாட்டங்களும் சமயங்கள் என்ற புரட்டுகளும் மக்களை அந்தகாரத்தில் ஆழ்த்தி வருகின்றன. பெரும்பகுதியான மக்களின் உன்னத நாகரீகமும் செல்வ வளர்ச்சியும் நிறைந்த நாட்டு மக்களை மக்களெனச் சொல்ல முடி யாது மாக்களாக்கியிருப்பதும் இம்மதமென்ற புரட்டுக்கள்தான். (கரகோஷம்)
பெரும் இடையூறுகளை எளிதில் சொல்லமுடியாதாயினும் சிறுமையாகவிருக்கும் தடைகளைச் சீக்கிரத்திலேயே ஒழிக்க முயல வேண்டும். “மகாத்மா” காந்தி என்பவரும் மக்களைச் சமத்துவப்படுத்தி சகோதரத்துவத்தை நிலைநாட்ட ஊரெல்லாம் சுற்றுப் பிரயாணம் செய்ய வந்தவர் கடைசியில் விலங்கைத் தறித்து குட்டையிலடைத்து விட்டதுபோல் செய்து வைத்தார். (கரகோஷம்) அவருடைய சமீப மாறுதல்களால் அவர் உலகத்திற்கு பெரும் தீங்கிழைத்திருப்பது புலனாகும்.
ராமானுஜர் சமத்துவத்திற்காக பாடுபட்டதாகச் சொல்லப்பட்டாலும் அவர் மதம் இப்போது வித்தியாசமில்லாதவர்களுக்குள்ளும் வித்தியாசத்தைப் புகுத்தி விட்டது. (நகைப்பு) சங்கராச்சாரியார் மனிதனுக்கு மனிதன் பேதமில்லை என்று சொல்லி பெரும் பேதத்தை உண்டாக்கி மக்கள் வாழ்க்கையை பாழ்படுத்தி வைத்தார். இவ்வாறு மற்றும் பல மதத்தலைவர்களும் ஆச்சாரியார்களும் குழப்பத்தில் தான் கொண்டு வந்து விட்டிருக்கின்றனர்.
இந்து மதம் என்பதை இன்னும் பிரித்து பிரித்து நன்காராய்ந்தால் அதன் பெயரால் கஷ்டங்களும் ஆபாசங்களும் மிகுந்து மக்களை மேன்மேலும் கொடுமைகளுக்கும் அவமானத்திற்கும் உட்படுத்தியிருப்பது தான் தெளிவாகக் காண்கின்றன. அதனால் இதற்காக புதிதான கொள்கைகளும் மார்க்கமும், சமயமும் அவசியமில்லை. உள்ள மார்க்கத்தில் எது எது இயற்கைக்கும் அனுபவத்திற்கும் விரோதமாயும் மனிதத் தன்மைக்கு முரணாயுமிருக்கின்றதோ அவற்றை எல்லாம் உடைத்தெறிய வேண்டும். அதற்காக ஒருவன் பிறக்கப் போகிறான் என்பதும் மூட நம்பிக்கையாகும். ஒவ்வொருவரும் அதை உடைத்தெறிய சுதந்திரமுடையவர்கள் என்ற கொள்கை மனித வர்க்கத்தினர் யாவருக்கும் உதிக்க வேண்டும்.
நிற்க மனித வர்க்கத்தில் பாதியான ஸ்திரீ வர்க்கத்தை நம் நாட்டிலும் கேவலமாகத்தான் நடத்தப்பட்டு வருகின்றது. இதைப்பற்றி எல்லா மதமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இயற்கைத் தோற்றத்திலேயே பெண் என்றால் தாழ்ந்தவர்கள் என்ற உணர்ச்சிதான் ஆண் மக்களுக்கு தோன்றுகிறது. பல மதங்களில் பெண் மக்களுக்குச் சுதந்திரமும் உரிமைகளுமளிக்கப்படுவதாகத் தோன்றினாலும் அவர்கள் இன்னும் பழைய அடிமைத்தனத்திலிருந்து விடுபட எந்த ஆண்மகனும் யாரும் சம்மதிப்பதாக காணவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த நிலையாலும் எவ்வித வித்தியாசமும் கற்பிக்கப்பட்டிருக்கவில்லை என்ற தத்துவத்தை மனிதன் உணரும் போதுதான் மனிதத்தன்மை என்பது வெளிப்படக்கூடும். (கரகோஷம்) இயற்கைக்கும் அனுபவத்திற்கும் விரோதமான கட்டுப்பாடுகளை எல்லாம் உடைத்தெறியத்தக்க கொள்கைதான் மனித வர்க்கத்திற்கு அவசியமானதென்று கருதுவதின் மூலம்தான் அவர்கள் ஒரு காலத்தில் அந்நிலைமைக்கு வந்து சேரக் கூடுமென்றும் நம்பிக்கையும் எனக்குப் பூர்ணமாய் ஏற்பட்டிருக்கின்றது. (கரகோஷம்) நான் இது வரை கூறியதில் உங்களுக்குச் சரி எனப் படுவதை ஏற்றுக் கொண்டு தப்பாகத் தோன்றுவதை ஒதுக்கி என் அறியாமைக்கு என்னிடம் பரிதாபப்பட்டு, என்னை மன்னிப்பீர்களென்று கேட்டுக் கொள்ளுகிறேன். (கரகோஷம்)
(குறிப்பு: 07.04.1928 இல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் லட்சுமி நரசு அவர்களின் தலைமையில் நடந்த தென் இந்திய பவுத்தர்களின் மூன்றாவது மாநாட்டில் மதங்கள் குறித்து ஆற்றிய உரை. குடி அரசு - சொற்பொழிவு - 15.04.1928)