தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கூட்டமும் அதில் நடந்த விஷயங்களும் ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் பார்த்தால் விளங்கும்.

periyar and namakiripettaiஎவ்வளவு தந்திரமாகவும், ஒழுங்கீனமாகவும் தேர்தல்களை நடத்தி இருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும்போது காங்கிரஸ் தலைவர் என்பவரான ஸ்ரீ சீனிவாசய்யங்காரின் யோக்கியதையைவிட அதில் கலந்து கொண்டவர்களின் யோக்கியதையே பெரிதும் கவனிக்கத்தக்கது.

கோவையில் கூடிய பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் காங்கிரசில் சேரப் பிரியமுள்ளவர்கள் காங்கிரசில் சேரலாம் என்பதாக ஒரு தீர்மானம் நிறைவேறியவுடன் பார்ப்பனர்கள் தங்களது அடிமைகளல்லாத வேறு யாரும் காங்கிரசிற்குள் நுழைந்துவிடாதபடி எவ்வளவு நிர்பந்தங்கள் ஏற்படுத்தினார் கள் என்பதை பொது வாழ்வில் கலந்துள்ள யாரும் அறியாமல் இருக்க முடியாது. காங்கிரசில் சேர்க்கும் இரசீதுகளை தாங்களே தங்களுக்கு வேண்டியவர்களுக்கே வினியோகித்து தங்கள் சொற்படி கேட்பவனை மாத்திரம் சேர்க்கும்படி கட்டளையிட்டதை யாராவது மறுக்க முடியுமா? அப்படி யிருந்தும் தங்களுக்கு வேண்டாதவர்கள் யாராவது எந்த நிர்வாக கமிட்டி யிலாவது சேர்ந்துவிட்டால் அவர்களை ஒழிக்க வேறு கமிட்டிகளை ஏற்படுத்தச் செய்து ஏற்கனவே ஏற்பட்ட கமிட்டிகளை செல்லுபடியற்றதாக்கினது யாருக்காவது தெரியாது என்று சொல்ல முடியுமா?

அநேகமாய் ஒவ்வொரு ஊரிலும் இரண்டு கமிட்டி ஏற்பட்டதும் தங்களுக்கு வேண்டியதை வைத்துக் கொண்டு, மற்றதை நீக்கியதும் யாருக்காவது தெரியாது என்று சொல்ல முடியுமா? இந்தியா முழுவதையும் எடுத்துக் கொண்டாலும் தமிழ் நாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள் செய்தது போன்ற அயோக்கியத் தனங்களும் அக்கிரமங்களும் வேறு எங்காவது நடந்தாகக் காட்ட முடியுமா? அல்லது தமிழ்நாட்டிலாவது இந்த 5, 6 வருஷ காலத்தில் இப்படி நடந்ததாக யாராவது காட்ட முடியுமா? இதை யாராவது கவனித்தார்களா? இதனால் ஏற்பட்ட மானக்கேட்டைப்பற்றி யாராவது சிந்தித்தார்களா? கொஞ்சமும் மானமும் ஈனமும் இல்லாமல் இவ்வயோக்கியர்களுடன் கூடி குலாவ ஒவ்வொருவரும் முயற்சித்தார்களே ஒழிய நேர்மையையாவது சுய மரியாதையையாவது யாராவது கவனித்தார்களா? என்று கேட்கின்றோம். ஸ்ரீவரதராஜுலு சென்ற வருஷத்திற்கு முன் வருஷம் காங்கிரஸ்கமிட்டி நிர்வாக ஸ்தானத்திலிருந்து ராஜீனாமா கொடுத்து விலகினது எதற்காக? இப்போது மறுபடியும் அக்கூட்டத்திற்குள் புகுந்து குலாவி மறுபடியும் நிர்வாக சபை அங்கத்தினரானது எதற்காக என்றே கேட்பதுடன் முன் தான் ராஜீனாமா கொடுத்த காலத்தில் அக்கமிட்டியிலிருந்த அயோக்கியத்தனங்கள் இப்போது மாறிவிட்டனவா அல்லது தான் கமிட்டிக்குத் தக்கவராகி விட்டாரா? என்று கேட்கின்றோம்.

இந்த ஆறுமாத காலமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியையும் அதன் நிர்வாகத்தின் யோக்கியதையையும் மக்கள் விடாமல் குற்றம் சொல்லிக் கொண்டே இருந்ததை பார்த்துவிட்டு தானும் சில சமயங்களில் சொல்லிக் கொண்டும் இருந்து விட்டு இப்போது திடீர் என்று அதற்குட் புகுந்த காரணம் என்ன என்பதை சொல்லுவாரா? திரு.வி. கலியாண சுந்தர முதலியாரவர்கள் இவரோடு கூட இவரை நம்பி ராஜீநாமா கொடுத்து வெளியேறி இருக்க அவரைப் பற்றி கொஞ்சமாவது நினைத்தாரா? ஒன்றும் இல்லாமல் தனக்கு இடம் கிடைத்ததே போதும் என்று எல்லாவற்றையும் மறந்துவிட்டு சகலத்தையும் உதிர்த்து விட்டு கமிட்டி நிர்வாகத்திலும் எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியிலும் இடம் சம்பாதித்துக் கொண்டதின் அர்த்தம் என்ன என்றுதான் கேட்கின்றோம். ஸ்ரீமான் அண்ணாமலை பிள்ளையும், குப்புசாமி முதலியாரும், தெய்வனாயக அய்யரும், தங்கமீரான் சாயபுவும், தீர்த்தகிரி முதலியாரும் இந்த அயோக்கியக் கூட்டத்திற்காக எவ்வளவு பாடுபட்டார்கள் என்பதை யாராவது வர்ணிக்க முடியுமா? அப்பேர்பட்டவர்களே அக் கூட்டத்தில் கலந்து கொண்டு இருப்பது தங்கள் சுயமரியாதைக்கு லாயக்கில்லை என்று தைரியமாய் எழுந்து வெளிவந்திருக்கும்போது, ஒரு வேலையும் செய்யாமல் சும்மா வைதுக் கொண்டிருந்த ஸ்ரீமான் வரதராஜுலு அங்கு இருந்தே தீர வேண்டியதின் ரகசியம் என்ன என்பது நமக்கு விளங்கவில்லை.

அல்லாமலும் அங்கு ஏற்பட்ட தகராறுகளை சமரசம் செய்ய முயற்சித்ததாகவும் ‘தமிழ்நாடு’ பத்திரிகையிலேயே காணப்படுகின்றது. ஆகவே அரசியல் வாழ்வு என்பதில் எவ்வளவு தூரம் நாணயமும் யோக்கியப் பொறுப்பும் இருக்கின்றது என்பது இதனாலேயே மக்களுக்கு விளங்க வில்லையா என்று கேட்கின்றோம். சென்னை பார்ப்பனர்கள் வெளி நாட்டிலிருந்து வரும் ஆசாமிகளிடம் ஸ்ரீமான்களான வரதராஜுலுவையும், ஜார்ஜ் ஜோசப்பையும், ஷாபி மகமது சாயபுவையும், ஸ்ரீ ஜயவேலுவையும் கூட்டிக் கொண்டு போய் இதோ பார் தமிழ்நாடு மக்களின் பிரதிநிதிகள் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவராக அதாவது பார்ப்பனரல்லாத இந்து என்பதற்கு ஸ்ரீ வரதராஜுலுவையும், கிருஸ்தவர் என்பதற்கு ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப்பையும், மகமதியர் என்பதற்கு ஜனாப் ஷாபி மகமது சாயபுவையும், ஒடுக்கப்பட்ட வகுப்பார் என்பதற்கு ஸ்ரீஜயவேலுவையும் காட்ட ஏற்பாடு செய்து கொண்டார்கள். அதற்கு இந்த கனவான்களும் உதவி செய்து விட்டார் கள். இவர்களுக்கும் பார்ப்பனர்கள் ஏதாவது பிரதி உபகாரம் செய்வார்கள் என்பதல்லாமல் இந்த பிரதிநிதிகளால் இந்த சமூகங்களுக்காவது நாட்டிற்கா வது காதொடிந்த ஊசி அளவு பலனுண்டா என்பதை யோசித்துப் பார்க்கும்படி பொது ஜனங்களை வேண்டிக் கொள்ளுகின்றோம். எவ்வளவு காலத்திற்குத் தான் இம் மாதிரி நடவடிக்கைகளை நமது நாட்டில் ஆதிக்கம் பெற்றிருக்க விடுவது என்று பொது ஜனங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நாம் கொஞ்சமும் அறியக்கூடாத நிலையில் இருந்து வருகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 25.12.1927)

Pin It