இவ்வாரத்தில் சென்னையில் மக்களை ஏமாற்றுந் திருவிழாக்கள் பல நடக்கப் போவதாக விளம்பரங்கள் எங்கு பார்த்தாலும் பறக்கின்றன. இதைக் கண்டு அநேக ஆயிரமக்கள் வெளியூர்களிலிருந்து சென்னைக்கு போகவும் கூடும். சர்க்கார் காரியாலயங்களுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை நாளானதாலும் வக்கீல்களுக்கும் உபாத்தியாயர்களுக்கும் ஓய்வு காலமானதாலும் விவசாயக்காரருக்கும் வேலை ஒழிந்த காலமானதாலும் வியாபாரிகளுக்கும் வேலையில்லாத காலமானதாலும் ரயில் சத்தமும் இதை உத்தேசித்து குறைக்கப்பட்டிருக்கிறதாலும் இம்மக்களை அவ்விளம்பரங்கள் சுலபமாக கவர்ந்து விடுவதில் அதிசயம் ஒன்றுமில்லை. இம்மக்களல்லாத பிரபுகளுக்கும் சுகவாசிகளுக்கும் இம்மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைப்பதே அரிதானதால் அவர்களும் இதில் கலந்து இக்கூட்டத்தில் காணப்படுவதில் ஆச்சரியமுமில்லை. ஆனால் இவ்வேமாற்றுந் திருவிழாக்களில் நிர்வாகிகள் யார்? கொள்கைகள் என்ன? அதனால் மக்களுக்கு ஏற்படும் பலன் என்ன? என்பவைகள் தான் இங்கு கவனிக்கத்தக்கது.

periyar 391இத்திருவிழாவின் விளம்பரத்திற்கு பங்கு எடுத்துக் கொள்ளாத பத்திரிகைகளே நமது நாட்டில் மிக மிக சொற்பம். ஏனெனில் மனிதன் இது சமயம் நம்நாட்டில் வாழவும் பத்திரிகைகள் நடைபெறவும் இத்திருவிழாக்களின் தத்துவமே ஜீவாதாரமாய்ப் போய்விட்டதால் இவ்விளம்பரத் தொழிலில் இருந்து விலகுவது அநேக பத்திரிகைகளுக்கும், பத்திராதிபர்களுக்கும் சுலபமான காரியமல்ல. ஆதலால் அதன் பலனாக குறைந்த அளவு 10 அல்லது 15 ஆயிரம் மக்களுக்கு குறையாமலாவது வெளிநாடுகளிலிருந்தும் வெளி ஊர்களிலிருந்தும் சென்னைக்குப் போவார்கள் என்பது உறுதி. இவர்களுக்கு ஏற்படும் ரயில் சார்ஜ் போக்குவரத்து சிப்பந்தி சில்லரை சாமான் வேடிக்கை பார்த்தல் முதலிய செலவுகள் குறைந்தது 15, 20 லக்ஷம் ரூபாய்க்கு குறையாது என்றே சொல்லலாம். இத்திருவிழாக்களின் நிர்வாகிகளோ படித்தவர்களும் முதலாளிகளும் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களது கருத்தோ உத்தியோகம் சம்பாதிப்பதும் பணம் சம்பாதிப்பதுமேயல்லாமல் வேறொன்றிருக்க நியாயமில்லை.

நாட்டில் எப்படி வியாபாரம் விர்த்தியாகி தக்க லாபம் கிடைப்பதற்கென்று வியாபார சங்கங்கள் இருக்கின்றனவோ விவசாயம் பெருகி நல்ல பலன் உண்டாவதற்காக எப்படி விவசாய சங்கங்கள் இருக்கின்றனவோ மற்றும் ஒவ்வொரு தொழிலுக்கும் உத்தேசத்திற்கும் எப்படி ஒவ்வொரு சங்கங்கள் இருக்கின்றனவோ அதுபோல் ஆங்கிலம் படித்தவர்களுக்கு உத்தியோகங்கள் பெருகவும் அதனால் நல்ல பணம் சம்பாதிக்கவும் கருதி படித்தவர்களால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட சங்கமே காங்கிரசாகும். இதை அறியாத அறிவாளி நமது நாட்டில் இருப்பான் என்று சொல்லவே முடியாது. ஆனால் மற்ற சங்கங்களுக்கு பொது ஜனங்கள் சம்மந்தமில்லாமல் இருக்கும்போது காங்கிரஸ் என்கின்ற உத்தியோகம் சம்பாதிக்கும் சங்கத்திற்கு மாத்திரம் ஏன் பொது ஜனங்கள் சம்மந்தம் ஏற்பட்டது என்கின்ற கேள்வி பிறக்கலாம். அப்படியானால் அது சரியான கேள்விதான். மற்ற சங்கங்களுக்கு பலன் ஏற்படுவது அந்தந்த சங்கங்களின் முயற்சியினாலேயே அல்லாமல் மற்றொருவர் கொடுப்பதாலல்ல.

ஆனால் உத்தியோக விஷயமோ அப்படியல்ல. உத்தியோகம் வேண்டுமென்று கேட்பது மாத்திரம் போதாது. சர்க்காரையும் உத்தியோகங்கள் உற்பத்தி பண்ணும்படிக்கும் தங்களுக்கு கொடுக்கும்படிக்கும் செய்ய வேண்டும். அதற்கு ஏற்படும் செலவை பொது மக்கள் பொருக்க வேண்டியிருக்கிறபடியால் பொது ஜனங்கள் தகராறுக்கு வராமலும் இருக்க வேண்டும். ஆதலால் பொது ஜனங்கள் கேட்பதுபோல கேட்பதற்கும் பொது ஜனங்களின் பிரதிநிதிகள் என்பதுபோல அடைவதற்கும் வழி ஏற்படுத்த வேண்டியது அவசியமாயிருக்கின்றபடியால் பொது ஜனங்களை இதில் கலரும்படி செய்யத்தக்க சூழ்ச்சிகளை செய்ய வேண்டிய அவசியமும் இக்கூட்டத்தாருக்கு ஏற்பட்டு விட்டது. அதற்கு ஏற்றாற்போல் படித்த கூட்டத்தாரிடையே அதிகாரமும் செல்வாக்கும் இருக்கிறபடியால் இதற்கு எதிர்ப்பு இல்லாமல் செய்வதும் சுலபமாய் விட்டது. அதோடு படிப்பு இல்லாதவர்கள் என்கின்ற கூட்டத்திலும் சிலருக்கு இதனால் ஜீவனம் கிடைக்க இப்பொழுது வழி ஏற்பட்டு விட்டதால் அவர்களில் சிலரும் இதில் கலர நேர்ந்ததால் பொது ஜனங்களும் நம்பி கலந்துகொள்ள இடமுண்டாய் விட்டது. இவ்வளவுதானே தவிர இதனால் தேசத்திற்கோ மக்களுக்கோ எவ்வித பலனும் ஏற்பட்டதுமில்லை, ஏற்படப் போவதுமில்லை என்று தைரியமாய்ச் சொல்வோம்.

ஆகவே இம் மாதிரி உத்தியோகம் சம்பாதிக்கும் சங்கமாகிய காங்கிரசின் பலனால் படித்த கூட்டத்தாருக்கு அரசாங்க உத்தியோகங்களும் அரசாங்க நீதி நிர்வாகங்களால் பிழைக்கும் வழிகளும் அதிகப்படவேண்டியிருந்ததால் படித்தக் கூட்டத்தார் மற்ற மக்களின் பிழைப்பைப் பற்றியோ தொழிலைப் பற்றியோ ஒரு சிறிதும் கவனியாமல் பொது மக்களையும் சேர்த்துக்கொண்டு தங்கள் காரியத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருந்ததால் மற்ற தொழில் பிழைப்புகள் எல்லாம் அடியோடு மறைந்து போகவும் நேரிட்டு இது சமயம் மனிதனின் வாழ்க்கைக்கு உத்தியோகம் என்கின்ற ஒரே மார்க்கம் தவிர வேறு மார்க்கம் இல்லாமல் போய்விட்டது. வேறு ஏதாவது இருப்பதாய் கருதினால் முதலாளிகள் மேலும் மேலும் முதலாளி ஆகத் தகுந்த வியாபாரமும் ஒரு மார்க்கமாய் இருப்பதாகச் சொல்லலாம். அதுவும் பணக்காரனுக்கு ஏற்றதாய்ப் போய்விட்டதால் யந்திரமயமாய் விட்டதால் வியாபாரத்தின் பலனாய் சாதாரண மனிதனுக்கு ஒரு பலனும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

விவசாயமும் அதுபோலவே உணவு பொருள்களாக விவசாயம் செய்யப்படுவது பெரிதும் மாறி மேல்நாட்டுத் தொழில் திறத்திற்கு உதவும்படியான மூலப் பொருள்களாய்ப் போய்விட்டதால் விவசாயக்காரனுக்கு உணவுப் பொருள் கிடைப்பதற்கு மார்க்கமில்லாமல் பணமாய் கிடைக்க நேரவும் அதை அவன் பாழாக்கத்தகுந்த பல வழிகளும் நிலைமைகளும் தாராளமாய் ஏற்படவும் அதின் மூலம் அப்பணத்தை சீக்கிரத்தில் இழந்து விட்டுத் தவிக்கவும் இவைகளிலும் இடமில்லாதவர்களுக்கு அடியோடு வேறு மார்க்கங்கள் இல்லாமல் மக்கள் கூட்டங் கூட்டமாய் நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு வயிற்று பிழைப்புக்காக கூலிகளாய் போகவுமே ஏற்பட்டு விட்டது. ஆகவே இதுதான் இந்திய காங்கிரசின் பலன். இதை ஒருவராவது சிந்தித்துப் பார்த்து இக்கொடுமைகளை ஒழிக்க முயலுவதையே காணோம். அன்றியும் இப் படித்தக் கூட்டத்தார் மக்களையும் நாட்டையும் ஏமாற்றி இப்படி பாழ் பண்ணுகிறார்களே என்கின்ற கவலையும் யாருக்குமே கிடையாது. மகாத்மா என்னும் ஸ்ரீ காந்தி அவர்களே இப்புரட்டுக்கு உதவி செய்து வாழவேண்டிய அவசியத்தில் விழுந்துவிட்ட பிறகு இனி யாரை நாம் குற்றம் சொல்லுவது என்பது விளங்கவில்லை.

கொஞ்ச காலத்திற்கு முன் மாயவரத்தில் முன்சீப்பு வேலை பார்த்த ஸ்ரீவேதநாயகம் பிள்ளை அவர்கள் ஒரு உபமானம் சொல்லி இருக்கிறார். அதாவது, “நாயானது சதை இல்லாத வெறும் எலும்பை கடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவ்வெலும்பின் முனைகள் அந்நாயின் பல் எகிர்களில் பட்டு அதனால் வரும் ரத்தத்தை எலும்பிலிருந்து வரும் சாரமாக நினைத்துக் கொண்டு விடாமல் எலும்பைக் கடித்துக் கொண்டேயிருந்து கடைசியாய் வலி பொறுக்க மாட்டாத நிலைமை ஏற்பட்டப் பிறகுதான் அதைவிட்டு விலகும்” என்று சொல்லியிருக்கிறார்.

அதுபோலவே காங்கிரஸ் என்கின்ற சதையில்லாத எலும்பைக் கடிப்பதால் செலவாகும் பொதுமக்களின் ரத்தமாகிய செல்வங்களை தங்களுக்கு கிடைத்த காங்கிரசின் பலன் என்று எண்ணிக் கொண்டு மேலும் மேலும் அதனிடத்தில் மக்களுக்கு பற்றுதல் உண்டாகும்படி படித்தக் கூட்டத்தார் செய்வதை மக்கள் என்றைக்கு உணருகின்றார்களோ அன்றுதான் நாட்டிற்கு nக்ஷமமுண்டாகுமே தவிர வேறில்லை என்றே சொல்லுவோம்.

அதுபோலவே பொருள்காக்ஷி என்பதும் எவ்வளவு மோசமான ஏமாற்றுந் தொழில் என்பதை யாராவது உணருகின்றார்களா என்றுதான் கேட்கின்றோம்.

பல தாசிகளும் இன்ன உற்சவத்திற்கு வருவார்கள் என்று எண்ணிக் கொண்டு உற்சவத்திற்கு போகிறவன் எப்படி ஏதாவதொன்றில் விழுந்து கெட்டுப்போக இடமுண்டாகின்றதோ அதுபோல் காங்கிரசின் பேரால் அந்நிய நாட்டுச் சாமான்களின் பொருள்காக்ஷி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஒரு ஆதாரமே போதாதா? காங்கிரசும் கண்காக்ஷியும் படித்தவனும், பணக்காரனும் சேர்ந்து செய்கின்ற ஏமாற்றுந் திருவிழா என்பதற்கு உதாரணம்? என்று கேட்கின்றோம்.

இக்காங்கிரசினால் இன்னும் எவ்வளவு வரி உயரப் போகின்றதென்றும் இவ்வன்னிய நாட்டுப் பொருள்காக்ஷியினால் இன்னும் எத்தனை தொழிலாளருக்கு தொழில் அற்றுப் போகப் போகின்றதென்றும் யாராவது கவனிக்கிறார்களா? விளக்கில் பூச்சிகள் போய் மடிகின்றதைப் போல் எல்லா மக்களும் அதில் போய் விழுந்து அம்மாய்கையில் சிக்கி விடுகின்றார்களே ஒழிய இதை வெளியிட யாருக்காவது கவலையிருக்கின்றதா? தைரியமிருக்கின்றதா? போதாக்குறைக்கு ஒவ்வொரு பத்திரிகையும் மக்களை சென்னைக்கு போகும்படியும் காங்கிரசுக்கு போகும்படியும் சொல்லுகின்றதே என்னே வெட்கக்கேடு! வெட்கக் கேடு!! வெட்கக் கேடு!!!

(குடி அரசு - தலையங்கம் - 25.12.1927)

Pin It