periyar and karunanidhi 620தலைவருக்கு :- கோவை மகாநாடு ஜில்லா மகாநாடாக கூட்டுவதாயிருந்த காலத்தில் முதல் முதல் ஸ்ரீமான் குமாரசாமி ரெட்டியாரவர்கள் பெயரை வரவேற்புக் கமிட்டிக்கு சொன்னவுடன் வெகு குதூகலமாக ஏற்றுக் கொண்டார்கள் என்றும், ஸ்ரீமான்கள் ரெட்டியாரவர்களுக்கு எழுதினவுடன் தேசத்திற்கு ஒரு மனிதன் செய்ய வேண்டிய கடனைச் செய்யும்படி கூப்பிடும்போது தான் எவ்விதத்திலும் ஆnக்ஷபனை சொல்லுவதில்லை என்று சொல்லி ஒப்புக் கொண்டார்கள். மறுபடி இது மாகாண மகாநாடாய் மாறினவுடன் ஸ்ரீமான் ரெட்டியாரவர்கள்தான் ஜில்லா மகாநாடென்று ஒப்புக் கொண்டதாகவும், இப்போது மாகாண மகாநாடாய் விட்டதால் வேறு யாரையாவது தெரிந்தெடுத்துக் கொள்ளும்படி எழுதி விட்டாறென்றும், மறுபடி சென்னை தென்னிந்திய நல உரிமைச் சங்கமும், வரவேற்புக் கமிட்டியும் ஸ்ரீமான் ரெட்டியாரவர்களையே வேண்டிக் கொண்டதாகவும், அவர் யாதொரு தடையும் சொல்லாமல் ஒப்புக் கொண்டாறென்றும் சட்டசபையில் ஸ்ரீமான் ரெட்டியார் அவர்கள் பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை வெட்டவெளியாக்கிவிட்ட வீரர் என்றும், மற்றவர்களைப் போல் அவர் படாடோபம் செய்து கொள்ளாமல் அடக்கத்திலிருப்பவர் என்றும் இம்மகாநாடு நடத்தும் விஷயத்தில் யாதொரு பிரயாசையும் எடுத்துக் கொள்ளாமல் தனது புன்னகையைக் கொண்டே எல்லாக் காரியங்களையும் சாதித்து விட்டார் என்றும், அவர் இளமையிலிருந்தே பொது நன்மையில் ஈடுபட்டு வந்தவர் என்றும், உதாரணமாக பங்காள பிரிவினை கிளர்ச்சி காலத்தில் தூத்துக்குடி ஸ்டீம் நாவிகேசன் கம்பெனிக்கு எவ்வளவோ பாடுபட்டு லக்ஷக்கணக்கான திரவியம் சேர்த்துக் கொடுத்து அழைத்து வந்தவர்கள் என்றும், மகாநாட்டில் யாருக்கும் எவ்வித குறையுமின்றி எவ்வித அபிப்பிராயபேதமும் இன்றி தானும் யாருக்கும் அதிர்ப்தியாக நடந்து கொண்டதாயில்லாமல் நடத்தியது மிகவும் குறிப்பிடத்தக்கது என்றும், எவ்வளவோ தடபுடல் வாதப்பிரதிவாதம் நடக்கும் என்று எண்ணியிருந்த மகாநாடானது ஒரு மணி சப்தம் கூட இல்லாமல் நிறைவேற்றிக் கொடுத்தார் என்றும் சொல்லி முடித்து, வரவேற்பு கமிட்டியார் எடுத்துக் கொண்ட சிரமம் மிகவும் பாராட்டத்தக்க தென்றும், காரியத்தரிசிகள் ஒவ்வொருவரும் பெரிய பெரிய பிரபுக்களும் மிராசுதார்களும் தக்க பொறுப்புள்ளவர்களுமானவர்கள் என்றும், அவர்களில் ஸ்ரீமான் சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார் தன்னுடைய உடல் நலிவோடு ஊர் ஊராய் அலைந்ததல்லாமல் தனது வீட்டையும் காலி செய்து விட்டு விட்டு அவர் எடுத்துக் கொண்ட சிரமம் மிகவும் அதிகமானதென்றும், ராஜீத் தீர்மானத்திற்காக வேண்டி ஒவ்வொரு தலைவர்கள் வீட்டுக்கும் ஒவ்வொரு உழைப்பாளிகள் ஜாகைக்கும் தூது நடந்தது கணக்கு வழக்கு இல்லை என்றும், தீர்மான வாசகங்கள் எல்லாம் அவர் கைப்படவே சுமார் 20, 30 தடவை எழுதி திருத்தினார் என்றும் அவர் பெரிய ராஜதந்திரி என்றும், அடுத்த காரியதரிசி ஸ்ரீமான் பி.எஸ்.ஜி. நாயுடு அண்டு சன்ஸ் வெங்கிடசாமி நாயிடு அவர்கள் ஒரு பெரிய மில் சொந்தக்காரர் என்றும், பெரிய பெரிய தர்மங்கள் எல்லாம் செய்தவர் என்றும், அவர் மகாநாடு விஷயத்தில் சகோதரர்களுடன் எவ்வளவோ கஷ்டப்பட்டார் என்றும், எவ்வளவோ ஆசாரங்களாய் இருந்தவர்கள் இப்பொழுது பெரிய சீர்திருத்தக்காரரானதோடு இப்பேர்ப்பட்ட பொதுக் காரியங்களுக்கு உழைக்கும் விஷயத்தில் யாரையும் விட முன்னுக்கு தானாகவே வந்து தாராளமாய் உழைக்கிறார் என்றும், மற்றொரு காரியதரிசியான ஸ்ரீமான் பி.எஸ். சாத்தப்ப செட்டியார் அவர்கள் அனேக மில்லுக்கு சொந்தக்காரர் என்றும், அவரது தகப்பனார் ஸ்ரீமான் எஸ். ராவ் பகதூர் பி. சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் மிகுந்த தெய்வபக்தியும் பிராமண விசுவாசமும் எல்லோருக்கும் நல்லவர்களாய் இருக்க வேண்டும் என்கின்ற தாட்சியண்ய சுபாவமும் உடையவர், இம்மகாநாடு நடைபெறுவதால் பார்ப்பனர்களுக்கு வருத்தம் வருமோ என்பதாக நினைத்து தனது குமாரரை இதில் அதிகமாக பிரவேசிக்கக் கூடாது என்று கருதி மகாநாடு விஷயத்தில் அதிக முயற்சி எடுத்துக் கொள்ளாதிருக்கச் செய்தும் ஸ்ரீமான் சாத்தப்ப செட்டியாரவர்கள் தனது அருமைத் தகப்பனாருக்கு தக்க சமாதானமும் சொல்லி மகாநாட்டுப் பண வசூலுக்கு தானே முக்கிய காரணஸ்தராயிருந்ததல்லாமல் முக்கிய தலைவர்களான ஸ்ரீமான்கள் பணக்கால் ராஜா, சர்.பாத்ரோ, முனிசாமி நாயுடு, ராமசாமி முதலியார் முதலிய கனவான்களுக்கும் தனவைசிய நாட்டிலிருந்து வந்த எல்லா பிரதிநிதிகளுக்கும் தனது வீட்டிலேயே ஜாகை வைத்துக் கொடுத்து அவர்களுக்கு வேண்டிய சப்ளை முதலியவை செய்ததோடு மகாநாடு ராஜி தீர்மானத்திலும் தான் முக்கிய பங்கு எடுத்துக்கொண்டு அதாவது ஒருக்கால் தீர்மானத்தை யாராவது எதிர்ப்பதாயிருந்தாலும் அதற்கும் தயாராய் காங்கிரஸ் பிரவேச அனுமதித் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு மெஜாரிட்டி சேர்த்துக் கொண்டும் ஒரு வார காலமாய் மகாநாட்டு வேலையைத் தவிர வேறு ஒரு வேலையையும் கவனிக்காமல் வேலை செய்ததானது மகாநாட்டுக்கு எவ்வளவோ உதவியாயிருந்தது.

அவரது தகப்பனார் ஸ்ரீமான் பி.சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் மகாநாட்டுக்கு வர சவுகரியப்படாவிட்டாலும் ஒவ்வொரு விஷயமும் ஒழுக்கமாய் நடைபெற வேண்டுமென்று எடுத்துக் கொண்ட கவலையும் முயற்சியும் மிகவும் குறிப்பிடத்தக்கது. மற்றொரு காரியதரிசி ஸ்ரீமான் வி. அருணாசலம் செட்டியார் அவர்கள் பிரபல வியாபாரியும் முனிசிபல் வைஸ் சேர்மேனுமாவார். அவர் தானும் தனது சகோதரர்களும் பணவசூலுக்கு ஊர் ஊராய் திரிந்ததல்லாமல் தங்களது வீடு, கடை மற்ற கட்டடம் முதலியவைகளையும் ஒழித்துக் கொடுத்து கடிதப் போக்குவரத்து, மகாநாட்டுக் காரியாலயப் பொறுப்பு, அச்சு விஷயம் மற்றும் சகல காரியங்களையும் அவர் குடும்பமே மேற்போட்டுக் கொண்டு செய்தது. மற்றொரு காரியதரிசியான ஸ்ரீமான் செட்டிபாளையம் நஞ்சப்ப கவுண்டர் ஒரு பெரிய மிராசுதாரரும் கோயமுத்தூர் ஜில்லா போர்ட் வைஸ் பிரசிடெண்டுமாவார். இவர் எடுத்துக் கொண்ட பொறுப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. பாத்திரம் வகைகள் சேகரிப்பதும் சமையல் ஒழுங்குகளை கவனிப்பதுமான வேலைகளை மிகுதியும் கவனித்து வந்தார். மற்றொரு காரியதரிசி ஸ்ரீமான் நஞ்சப்ப கவுண்டர் அவர்கள் முனிசிபல் கவுன்சிலரும் பாங்கரும் ஆவர். இவரும் மகாநாட்டு பிரதிநிதிகளை ஜாகை ஜாகையாய் கவனிப்பதும் புகார்கள் இல்லாமல் வேலை நடக்கத்தக்க மாதிரியுமாய் ஆங்காங்கு மேற்பார்வைக்கு பார்த்ததும் மிகவும் குறிப்பிடத்தக்கது. கோவைத் தலைவர் ஸ்ரீமான் வேரிவாட செட்டியார் அவர்களும் ஒவ்வொரு காரியத்தையும் மேற்பார்வை பார்த்து வந்தார்கள். ஸ்ரீமான்கள் பரமேஸ்வரம் செட்டியார் பீமைய செட்டியார், பழனிசாமி நாயுடு சி.வி. சுப்ப செட்டியார், செங்கோட்டய்யா, கிருஷ்ணசாமி பிள்ளை முதலிய அனேக வரவேற்புக் கமிட்டி கணவான்கள் எடுத்துக் கொண்ட முயற்சி, மகாநாட்டு வெற்றிக்கு ஜீவாதாரமானது என்றே சொல்ல வேண்டும் என்றும் சொல்லி முடித்துவிட்டு மகாநாடு தொண்டர் தலைவர் ஸ்ரீமான் பொன்னைய கவுடர் அவர்களைப் பற்றியும் சொல்லும் போது அவர் ஒரு பெரிய செல்வந்தரென்றும் மிகப்பொறுமையுள்ளவரென்றும் தனது புன்னகையாலேயே எல்லாக் காரியத்தையும் சாதிக்கக் கூடியவர் என்றும், அவரே கேப்டனாயில்லாதவரை வாலண்டியர்கள் இவ்வளவு சந்தோஷமாகவும் குதூகலத்துடனும் வேலை செய்திருக்க மாட்டார்கள் என்றும் சொல்லிவிட்டு மகாநாட்டுக்கு 3 நாளாய் கொட்டகை உதவிய ஸ்ரீமான் வின்செண்டு துரை அவர்களுக்கு நன்றி செலுத்தும்போது ஸ்ரீமான் நாயக்கர் சொன்னதாவது,

இந்த மகாநாட்டுக்கு உதவி செய்தவர்களில் பேருதவி செய்தவர்கள் இந்தக் கொட்டகை உதவின ஸ்ரீமான் வின்செண்டு துரையே ஆகும் என்றும், இந்த கொட்டகையை மகாநாட்டுக்காக கேள்ப்பதற்கு நானும் ஸ்ரீமான் ரத்தின சபாபதி முதலியாரும் போய் கேட்டதும் யாதொரு பதிலும் சொல்லாமல் உடனே ஒப்புக்கொண்டார் என்றும், ஆனால் நாம் கேள்ப்பதற்கு முன்னாலேயே ஒரு நாடகக் கம்பெனியாருக்கு தருவதாய் பேசி இருந்தும் அக்கம்பினியாரும் இந்த தேதிகளில் நாடகம் நடத்துவதாய் சுவர் விளம்பரங்கள் ஒட்டி இருந்தும் அவர்களுக்கு சமாதானம் சொல்லிக் கொள்ளலாம் என்கிற தைரியத்தின் மேல் கொடுத்ததாகவும், கொட்டகை கொடுத்ததோடல்லாமல் நம்மிஷ்டப்படியெல்லாம் இதன் இணைப்புகளை மாற்றிக் கொள்ள சம்மதித்ததோடு கொட்டகை அலங்காரம் முழுவதும் அவர்களே செய்து கொடுத்து வின்செண்ட்துரை சகோதரர்கள் இருவரும் தொண்டர்கள் போலவே வேண்டிய உதவி செய்தார்கள் என்றும், இந்த கொட்டகை கிடைக்காவிட்டால் 500 ரூ. செலவழித்தாலும் இவ்வளவு சவுகரியம் கிடைக்காதென்றும், அது மாத்திரமல்லாமல் மகாநாடு உபசரணைத் தலைவர் வாலிப சங்க உபசரணை தலைவர் முதலியவர்கள் பிரசங்கங்களும் சுவர் விளம்பரம் துண்டு விளம்பரம் மகாநாட்டு நடவடிக்கைகள் முதலிய பலவித அச்சு வேலைகளையும் இரவும் பகலாய் கஷ்டப்பட்டு உடனுக்குடன் செய்து கொடுத்தார்கள் என்றும் அவர்களது அன்பான வார்த்தைகளும் அவசரத்திற்கேற்றப்படி நடந்து கொண்ட உதவியும் மிகவும் மதிக்கத்தக்கது என்றும் பேசினார்.

குறிப்பு : கோவையில் 2, 3-07-1927 இரு நாள்களில் நடைபெற்ற மாகாண பார்ப்பனரல்லாதார் மகாநாடு-சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 17.07.1927

***

சத்தியாக்கிரகம்

சத்தியாகிரகம் என்பது பற்றி 3, 4 வாரங்களுக்கு முன் ஒரு சிறு குறிப்பு எழுதி இருந்தோம். அதைப் பார்த்து பலர் வருத்தப்பட்டார்கள். மற்ற பத்திரிகைகாரர்கள் யாரும் அதை கொஞ்சமும் கவனிக்காமல் சத்தியாக்கிரகம், சத்தியாக்கிரகம் என்பதாக பெரும் தலைப்பு இட்டு எழுதி வந்தார்கள். நாகபுரி ஆயுத சத்தியாக்கிரகம் ஸ்ரீஅவாரி ஜயிலுக்கு போனதும் நிறுத்தப்பட்டுப் போய்விட்டது. அதன் பலனாய் நமது நாட்டு சத்தியாக்கிரகப் பேச்சும் நிறுத்தப்பட்டுப் போய் விட்டது. இம்மாதிரி பொறுப்பில்லாமல் நடக்கும் காரியங்களால் நமது நாட்டுக்கு வரும் கெடுதிகளை பலர் உணர்வதில்லை. தொண்டர்கள் என்போர்களின் நிலைதான் இப்படி என்றாலும் பத்திராதிபர்களின் யோக்கியதை இதைவிட மோசமானதாயிருப்பதோடு இப்பேர்பட்ட பொறுப்பற்ற சங்கதியை அனுமதிப்பதற்கு அனுகூலமாகவே இருந்து வருகிறது. இனியாவது தங்கள் கடனை உணர்வார்களாக.

குடி அரசு - குறிப்புரை - 10.07.1927

Pin It