periyar speech 533ஈரோட்டில் மகாஜன ஹைஸ்கூல் என்பதாக ஒரு பள்ளிக்கூடம் பல பெயர்களுடன் சுமார் 40 வருஷங்களுக்கு மேலாகவே இருந்து வருகிறது. இது இருக்கும்போதே லண்டன் மிஷின் என்கிற ஒரு கிருஸ்தவ மத ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள் மேல்கொண்டு ஒரு ஹைஸ்கூலை சுமார் 20 வருஷங்களுக்கு முன்பாக ஆரம்பித்தர்கள். அந்த மிஷின்காரர் தங்களது செல்வாக்கால் கல்வி இலாக அதிகாரிகளையும் நீதிநிர்வாக இலாகா அதிகாரிகளையும் கொண்டு தங்களாலான உபத்திரவமெல்லாம் செய்து பார்த்தும் மேற்படி மகாஜன ஹைஸ்கூலை அசைக்க முடியவே இல்லை. சில பையன்களுக்கு சம்பளத்தைக் குறைத்தார்கள். பையன்கள் பெற்றோர்களுக்கு அரசாங்கத்தில் சிபார்சு செய்து உத்தியோகம் வாங்கிக் கொடுப்பதும் கௌரவ உத்தியோகம் செய்வித்துக் கொடுப்பதும், ஆண்பிள்ளைகள் வகுப்புக்கு பெண்களை உபாத்தியாயர்களாக வைப்பதும், உள்ளூர்கட்சி பிரதிகட்சிகளில் கலந்து கொண்டு கட்சிக்கு விரோதமாய் மற்றொரு கட்சிக்கு அனுகூலமாக உண்மையற்ற விஷயங்களை கோர்டில் சாட்சி சொல்லுவதும் இன்னும் எவ்வளவோ கூடா ஒழுக்கமான காரியங்களை எல்லாம் செய்து பார்த்தார்கள்.

எவ்வளவு செய்தும் மகாஜன ஸ்கூலை ஒழிக்க முடியாமல் போனதோடு கடைசியாய் நஷ்டம் தாங்க முடியாமல் லண்டன் மிஷன்காரர்களே தங்களது ஹைஸ்கூலை எடுத்துவிட நேர்ந்தது. இதன் பலனாக அவர்கள் கட்டடம் பள்ளிக்கூட சாமான் இவைகள் உபயோகமில்லாமல் போனதோடு சில ஆசாமிகளுக்கும் வேலையில்லாமல் போக நேர்ந்து விட்டது. இதற்காக வேண்டி அந்த லண்டன் மிஷன் நிர்வாகிகள் ஒரு தோது கண்டுபிடித்தார்கள். அது என்னவென்றால் ஈரோடு முனிசிபாலிட்டி தலையில் இதைப் போட்டு விட்டால் தங்கள் கட்டடத்திற்கும் வாடகை வரும், தங்கள் சாமானுக்கும் நல்ல விலை கிடைக்கும், தங்கள் மதத்தில் சேர்ந்து கொண்ட ஆசாமிகளுக்கும் வேலை கொடுக்கலாம் என்பதாக எண்ணி மெல்ல முனிசிபல் சேர்மெனைப் பிடித்தார்கள். ஈரோடு முனிசிபல் சேர்மென் சங்கதியைப் பற்றி “குடி அரசு” இதற்கு முன் எத்தனையோ தடவை எழுதி எழுதி பேனாவெல்லாம் துர்நாற்றம் வீசும்படியாயிருக்கிறது என்பது உலகமே அறியும். அப்பேர்ப்பட்ட ஒரு பெரிய செல்வாக்குள்ள மிஷனரி கிடைத்து விட்டால் பிறகு அவர்க்கென்ன குறைவு. அச்சேர்மெனின் சகல அக்கிரமங்களும் தான் அடிக்கடி கலெக்டர், ஸ்தல ஸ்தாபன இலாகா நிர்வாகிகள் காரியஸ்தர்கள் முதலியவர்களுக்கு சிபார்சு செய்து வந்ததோடல்லாமல் கவுன்சிலில் நடந்த நாணயக் குறைவான காரியங்களுக்கும் உதவியாயிருந்து நியாய ஸ்தலங்களில் கூட உண்மைக்கு மாறாக சாட்சி முதலியவைகளும் சொல்ல அவருடைய விஷயங்களை நிவர்த்தித்து இவ்வளவுக்கும் பிரதிப் பிரயோஜனமாகப் பள்ளிக்கூடத்தை முனிசிபாலிட்டியார் நடத்தும்படி செய்து கொண்டு கட்டடத்தையும் சாமான்களையும் முனிசிபாலிட்டியார் தலையிலேயே கட்டி தனது ஆசாமிகளுக்கும் உத்தியோகம் வாங்கிக் கொடுத்து விட்டார். இதன் மூலம் சேர்மெனுக்கு நஷ்டம் உண்டா? ஒரு தம்படியும் கிடையாது. பின்னும் அதிலும் கொஞ்சம் உத்தியோகம் நியமனமேற்பட்டிருக்கிறது. அதனால் லாபம் கிடைக்குமேயல்லாமல் நஷ்டமில்லை. நஷ்டம் ஏற்படுவதெல்லாம் ஊரார் வரிபணமே தவிர வேறில்லை. ஆதலால் இந்த விஷயம் முனிசிபல் கவுன்சிலில் பாசானதற்கு காரணம் பொது ஜனங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. மொத்தம் 20 கவுன்சிலர்களில் 12 கவுன்சிலர்கள் இந்த சேர்மென் அக்கிரமத்தையும் மிஷினரி கவுன்சிலர் அக்கிரமத்தையும் அவர் சிபார்சால் கலெக்டர் முதலிய அதிகாரிகளின் அக்கிரமத்தையும் சகிக்க மாட்டாமல் தங்கள் சுயமரியாதையை உத்தேசித்து கவுன்சிலர் பதவியை ராஜீனாமா செய்துவிட்டு வந்துவிட்டார்கள். அதற்காக நடந்த மறு தேர்தல்களில் சேர்மென் இஷ்டப்படி அவரால் அழைக்கப்பட்டவர்களே வந்து சேர்ந்தார்கள்.

மெஜாரிட்டியாராகிய 12 கவுன்சிலர்கள் இருக்கும்போதே நாணயக் குறைவுகள் அக்கிரமங்கள் முதலியன நடக்கும்போது, சேர்மனின் கைகள், கால்கள், வால்கள் போன்ற கவுன்சிலர்கள் இருக்கும்போது இந்த தீர்மானம் நிறைவேறுவது அதிசயமாகுமா? ஒருக்காலும் அதிசயமாகாது. பிறகு, இத்தீர்மானம் எஜுகேசன் கவுன்சிலில் தோற்றுப்போயும் அதற்கு மேல் மிஷினரி துரை சிபார்சு பிடித்துவிட்டார்கள். மகாஜன ஹை ஸ்கூல் நிர்வாகிகள் படிப்பு மந்திரியாகிய டாக்டர். சுப்பராயன் அவர்களை தனி முறையில் பேட்டி கண்டார்கள். அவர் ஆகட்டும் சாதித்துவிடுகிறேன், வேறு பள்ளிக்கூடத்திற்கு அனுமதி கொடுப்பதில்லையென்று சொன்னதாக திருப்தியுடன் திரும்பி வந்துவிட்டார்கள். கடைசியாக துரை சிபார்சுப்படி 4- வது 5-வது 6-வது பாரங்கள் ஒரே அடியாய் துவக்கும்படி மந்திரி உத்தரவு செய்து விட்டார். அவர் என்ன செய்வார்; பாவம்! சேர்மென் அதற்குத்தகுந்த ஆளை சிபார்சாகப் பிடித்துகொண்டு போனால் மந்திரி பேசாமல் உத்தரவு போட்டுத் தானே ஆக வேண்டும். அதுபோல் உத்தரவு வந்ததும் பள்ளிக் கூடத்தில் பிள்ளைகளை சேர்ப்பதில் சேர்மென் பிள்ளைகள் வேட்டையாட ஆரம்பித்தார். சம்பளம் குறைப்பதாய் சொன்னார். பூரா சம்பளம் தள்ளி விடுவதாகச் சொன்னார். சாப்பாடு போடுவதாக சொன்னார். நாய் அடிப்பதற்கு ஒரு நாய்க்கு இவ்வளவு என்று கூலி கொடுப்பதுபோல் ஒரு பிள்ளையைக் கொண்டுவந்து சேர்த்தால் இவ்வளவு கூலி என்று சொன்னார்; பிள்ளை கொண்டு வருபவருக்கு வாத்தியார் வேலை கொடுப்பதாகச் சொன்னார். தானும் இரவில் மோட்டார் போட்டுக் கொண்டு கிராமம் கிராமமாகச் சுற்றினார். கடைசியாக வகுப்பு ஒன்றுக்கு ஒன்று, இரண்டு, மூன்று பெஞ்சுகள் நிறையும்படி பிள்ளைகள் சேர்க்கப்பட்டார்கள். இந்த வேட்டையைப் பார்த்து சகிக்க மாட்டாமல் மகாஜன ஹைஸ்கூல் நிர்வாகத் தலைவர் கவர்மெண்டுக்கு ரிப்போர்ட் செய்து சர்க்காரின் கல்வி இலாக்கா சட்டங்களை எடுத்துக்காட்டிய பின்பு 4-வது, 5-வது பாரங்களை எடுத்துவிடும்படி சேர்மெனுக்கு உத்தரவு வந்திருப்பதாகத் தெரிகிறது. ஒரு சேர்மெனும் ஒரு மிஷினும் லாபமடைவதற்கு ஊரார் பணம் எவ்வளவு நஷ்டமாவது? ஒழுங்காக நடைபெறும் பள்ளிக்கூடம் எவ்வளவு கஷ்டப்படுவது என்பது யோசித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.

மகாஜன ஹைஸ்கூல் நிர்வாகம் சரியாயில்லை. ஆதலால், இன்னும் ஒரு பள்ளிக்கூடம் வேண்டுமென்று சேர்மெனும், மிஷின் துரையும் பல இடங்களில் சொன்னதாகப் பிரஸ்தாபம். அப்படி சொல்லியிருந்தால் அது சுத்தப் புரட்டு என்றே சொல்ல வேண்டும். மகாஜன ஹைஸ்கூல் நிர்வாகம் சரியல்ல என்பது உண்மையானால் மேலே சொன்ன முறைப்படி எவ்வளவோ சௌகரியங்களுடன் லண்டன் மிஷன்காரர்கள் 20 காலம் பள்ளிக்கூடம் நடத்தினார்களே அப்பொழுது ஏன் பிள்ளைகள் அதில் போதுமானபடி போய் சேர்ந்திருக்கக் கூடாது? அதை ஏன் மிஷன்காரர்கள் எடுக்க நேரிட்டது? இவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்? இனிமேலாவது ஊர் மகாஜனங்களுக்கு நல்லுணர்ச்சி ஏற்பட்டு இப்பேர்ப்பட்ட அக்கிரமங்களும், நஷ்டங்களும் நடக்காமல் பார்த்துக் கொள்வார்களா?

(சித்திரபுத்திரன் என்ற பெயரில் பெரியார் எழுதியது - குடி அரசு  - 17.07.1927)

Pin It