periyar 524சென்ற வாரம் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு தமது பத்திரிகையில் “நாயக்கரின் நயவஞ்சகம்” என்று எழுதிய விஷயங்களுக்குப் பதிலாக “ஸ்ரீவரதராஜுலுவின் வண்டவாளம்” என்னும் தலைப்பின் கீழ் சில விஷயங்களை அதாவது, அதில் பல கனவான்கள் எழுதியதாக எழுதப்பட்டிருந்தக் கடிதங்களுக்குச் சமாதான காகிதம் ஸ்ரீமான் நாயுடுவாலேயே நாயக்கருக்குக் கொஞ்ச காலத்திற்கு முன் எழுதியதாகக் காட்டப்பட்டிருந்த கடிதத்திற்கும் சமாதானமாகவும், அடுத்த வாரம் எழுதுவதாகப் பதில் எழுதியிருந்தோம். அதை உத்தேசித்து அநேகக் கனவான்கள் நமக்குப் பலவிதமான கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அதாவது நாம் எழுதப் போகும் பதிலுக்கு மேலும் மேலும் தக்க ஆதாரங்களாக சிற்சில விஷயங்களைக் குறித்து அனுப்பி இருப்பதும், பலர் நாயுடுவைத் தங்கள் தங்கள் இஷ்டப்படிக் கண்டித்து நாயுடுவுக்குப் பதில் என்கிற முறையில் எழுதி பல கடிதங்களும்; இவ்விதம் இருவர் சண்டைபோட்டுக் கொள்வது ஒழுங்கல்லவென்கிற முறையில் சிற்சில கடிதங்களும்; இந்த விஷயத்தைப் பற்றி நாம் சென்ற வாரம் எழுதினதுபோல் இவ்வாரம் எழுதிப் பிரசுரிக்கப் போகும் பத்திரிகையில் சுமார் 250 பத்திரிகை வரையில் அதிகமாக அனுப்பிக் கொடுக்கும்படி பல கடிதங்களும் வந்திருக்கின்றன. இவ்வளவும் நாம் இவ்வாரத்தில் பிரசுரிக்கப் போகும் பதில்களுடன் சேர்த்து பிரசுரிக்கவே வந்திருக்கின்றன.

நாமும் சென்ற வாரம் எழுதியது போலவே நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டும் மனப்பூர்வமாய் நாம் சரி என்று எண்ணுவதையும் கொண்டு ஒரு விரிவான வியாசம் எழுதலாமென்றுதான் இருந்தோம். ஆனால் நமது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவரும் உண்மையான நண்பர் என்று எண்ணிக் கொண்டிருப்பவருமான ஒரு கனவான் இவ்விஷயத்தில் மிகுதியும் சிரமம் எடுத்துக் கொண்டு சில நிபந்தனைகளின் பேரில் விவாதத்தை இத்துடன் நிறுத்தி விட வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார். ஏறக்குறைய அவர் உறுதி கொடுத்த நிபந்தனைகளானது நமது பிற்கால பிரயத்தனங்களுக்குக் கெடுதியில்லாததாகவும் அனுகூலத்தைக் கொடுக்கக்கூடியதாகவும் இருந்ததோடு அந்நிபந்தனைகள் நிறைவேற்ற அவரே பொறுப்பேற்றுக் கொண்டதினாலும் ஸ்ரீலஸ்ரீ கைவல்ய சாமிகள் முதல் பல பெரியார்கள் இது விஷயமாக நமக்கு எழுதியிருப்பவைகளுக்கிசைந்து ஒருவாறு நிறுத்திக் கொண்டு இருக்கிறோம். இம்மாதிரி நாம் எழுதியிருப்பதானது அனேகருக்கு ஏமாற்றத்தைக் கொடுக்குமென்பது நமக்குத் தெரியும். ஆனாலும் ஏமாற்றமடைந்தவர்களில் பலருக்கும் நமக்கும் ஒரு குறிப்பிட்ட லட்சியத்தினிடத்திலேதான் அதிக கவலையும் மதிப்புமே தவிர சண்டையும் அவசியமில்லா வீரியமும் பெரிதல்ல. இது விஷயமாக வந்த பல கடிதங்களை இதுசமயம் போடாததற்கு நிரூப நேயர்கள் மன்னிக்க வேண்டும். இதற்குமேல் விரிவான சமாதானத்தை விரும்புகின்றவர்களுக்கு கோயம்புத்தூர் மகாநாட்டுக்குப் பிறகு தெளிவாகக் கூறுவோம்.

(குடி அரசு - கட்டுரை - 29.05.1927)

Pin It