சுயசாதி போஸ் (சுபாச் சந்திர போஸ்) விடுதலையானது பற்றி ஏறக்குறைய எல்லோரும் கொண்டாடுகிறார்கள். இதிலிருந்து இந்திய மக்களின் சுரணை (மானம்) கெட்டதன்மை நன்றாய் வெளியாகிறது. சுபாச் சந்திரபோஸ் சர்க்காரால் காரணம் சொல்லாமல் விசாரணை செய்யாமல் சுமார் 2 1/2 வருஷ காலம் ஜெயிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். மகாத்மா காந்தியும் இந்த அக்கிரமத்தை அறிந்து ஸ்ரீமான் தாசும் அடைபட்டு விடுவாரோ என பயந்து ஒத்துழையாமையையும், அதனால் மக்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் பலிகொடுத்து ஸ்ரீ தாசுக்கு ஏதோ பெரிய ராஜி செய்து கொண்டதாய் பாவனை காட்டி, சர்க்கார் ஸ்ரீமான் தாசைப் பிடித்தடைக்காமல் செய்தார். இதன் பலனாக தேசம் குட்டிச்சுவர் ஆகி அயோக்கியர்கள் முன்னுக்கு வந்தார்கள். பதவிக்குப் போட்டி போட்டார்கள். பதவி பெற்றார்கள். அதிலேயே மகிழ்ந்திருந்தார்கள். தங்களுக்குப் பதவி வேண்டிய போதெல்லாம் பதவி வேட்டைக்கு சுபாச் சந்திரபோஸ் பெயரை சொல்லிக் கொண்டார்கள்.
இவ்வளவுதானே அல்லாமல் அவரை விடுதலை செய்ய வெறும் மேடைப் பேச்சும் காகிதத் தீர்மானமும் செய்தார்களே அல்லாமல் காரியத்தில் ஒரு வேலையும் செய்தவர்கள் அல்ல. சட்ட மறுப்பு செய்திருக்கலாம். சத்தியாக்கிரகம் செய்திருக்கலாம். சட்டசபையை விட்டு வெளி வந்திருக்கலாம். இன்னமும் ஏதாவது ஒரு நாள் வேலை நிறுத்தம் (ஏற்பட்டால்) முதலியதுகளாவது செய்திருக்கலாம். ஒன்றுமில்லாமல் வேகமாய் போய்க் கொண்டிருக்கும் மோட்டார் கார் வண்டியைப் பார்த்து பட்டிக்காட்டு நாய்கள் கொஞ்ச தூரம் உரத்த சப்தத்துடன் குலைத்துக் கொண்டு போய், வாயும் காலும் ஓய்ந்தவுடன் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு திரும்பி வருவது போல் இருந்தார்களே தவிர, வேறு என்ன நடந்தது? கடைசியாய் ஸ்ரீமான் போஸ் செத்து விடுவாரோ? என்னமோ? என்கிறதாகப் பயந்து சர்க்காரார் அந்தப் பழியில் இருந்து தப்பித்துக் கொள்ள திருச்சி ஜெயிலில் மகாவீரர் வாஜ்பாயி என்பவரைக் கொண்டு வந்து வெளியில் தள்ளிவிட்டது போல், வெளியில் கொண்டுவந்து விட்டால் இதற்காக சந்தோஷம், வாழ்த்து, சர்க்கார் புத்திசாலித்தனத்திற்கு நற்சாட்சிப் பத்திரம், நன்றியறிதல் போன்ற இழிதன்மைகளே எங்கு பார்த்தாலும் மலிகின்றன.
இந்த மனப்பான்மைதான் இந்தியாவில் உள்ள கஷ்டங்களுக்கு ஆதாரமே தவிர வேறில்லை. இதில் சந்தோஷப்படக்கூடிய விஷயம் இருக்கிறதா? வெட்கப்படக்கூடிய விஷயம் இருக்கிறதா? என்பதை யோசித்துப் பாருங்கள். தவிர பங்களா அரசியல் வாழ்வுக்காரர்கள் அனேகமாய் நமது தமிழ்நாட்டு அரசியல் வாழ்வு பார்ப்பனர்களை விட மிகவும் சுயநலக்காரர் வெட்கங்கெட்டவர் என்பதற்கு ஸ்ரீமான் போசின் 2 வருஷம் சிறைவாசமும் அவர் சிறையில் இருக்கும்போது சுயராஜ்யக் கட்சி முதலிய அரசியல் கட்சி பேரால் சட்டசபை மந்திரி, பிரசிடெண்ட், மேயர், கார்ப்பரேஷன் மெம்பர், காங்கிரஸ் கமிட்டி தேர்தல் முதலியவைகளில் நடந்த போட்டியும் சூழ்ச்சிகளுமே போருமான சாட்சியாகும். தானாகவே விடுதலை செய்யப்பட்ட ஸ்ரீமான் போசின் விடுதலையைப் பற்றி இவ்வளவு தூரம் சந்தோஷப்பட ஒன்றும் காரணமில்லை என்பதைத் தெரிவிக்கிறோம்.
(குடி அரசு - கட்டுரை - 29.05.1927)