“சுதேசமித்திரன்” என்னும் பத்திரிகையைப் பற்றி அதாவது அது பார்ப்பன பத்திரிகை என்றும், அது பார்ப்பனரல்லாதார் முற்போக்குக்கு இடைஞ்சலாகவும், பார்ப்பன ஆதிக்கத்துக்கு அனுகூலமாகவும் பார்ப்பன பிரசாரம் செய்யும் பத்திரிகை என்பதாகவும் பல தடவைகளில் நாமும் மற்றும் அநேக கனவான்களும் அவ்வப்போது ஆதாரப்பூர்வமாய் வெளிப்படுத்திக் கொண்டே வந்திருக்கிறோம். அதன் நிருபர்களும் ஆங்காங்கு உண்மைக்கு மாறாகவும் விஷமத்தனமானதாகவும், பார்ப்பன முன்னேற்றத்திற்கு தகுந்தாப் போலும் பார்ப்பனரல்லாதார்க்கு இழிவும் கெட்ட பெயரும் வரும்படியாகவும் அறிக்கை செய்து கொண்டு வருவதைப் பற்றியும் நாம் மாத்திரமல்லாமல் மற்றும் அநேகர்கள் கண்டித்தெழுதி வந்திருப்பதோடு அதை பகிஷ்கரித்து வந்திருப்பதும் வாசகர்கள் உணர்ந்திருக்கக்கூடும். அது மாத்திரமல்லாமல் அநேக முனிசிபாலிட்டி, தாலூகா, ஜில்லா போர்டு தலைவர்கள் “மித்திரன்” நிருபரை உள்ளே அனுமதிக்க மறுத்ததும், பார்ப்பன அங்கத்தினர்கள் சிபார்சு செய்திருப்பதும் அதே பத்திரிகையில் பார்த்திருக்கக்கூடும். என்ன செய்தும் பத்திரிகையினுடையவும் பத்திரிகை நிருபருடையவும் ஜாதிப் புத்தி கொஞ்சமாவது மாற்றமடைந்ததாகக் காணமுடியவில்லை.periyar and kamarajar 600

கொஞ்ச நாளைக்கு முன் தஞ்சை ஜில்லா போர்டு பிரசிடெண்டு தேர்தலின் போது நாம் தஞ்சைக்குப் போயிருந்த காலத்தில் தேர்தல் முடிந்ததும் தலைவர் ஸ்ரீமான் பன்னீர்செல்வம் அவர்கள் சில அங்கத்தினர்களுக்கு நன்றி கூறுகையில் தனியாக நிருபர்களை வெளியில் போகும்படி கேட்டுக் கொண்டும், யாரும் இதைக் குறித்துக் கொள்ளக்கூடாது இது பொது விஷயமல்ல என்பதாகவும் சொல்லி சில விஷயங்கள் சொன்னார். அதனால் ஒரு பார்ப்பன நிருபர் திருட்டுத்தனமாய் வேஷ்டியைப் போர்த்துக்கொண்டு உள்ளுக்குள்ளாக குதித்துக் கொண்டு வந்தார். இதை நாகை தொழிலாளர் ஸ்ரீமான் திருஞான சம்மந்தம் கண்டுபிடித்து தலைவருக்கு சொல்ல அவர் சேவகனை விட்டு பரிசோதிக்க விஷயம் திருட்டுத்தனமாய் குறித்துக் கொள்ளப்பட்டதும் தெரிந்தது. அதுவும் விஷமத்தனமாய் குறிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அங்கு உள்ளவர்கள் அவரை இகழ்ந்து வெளியாக்கிவிட்டார்கள். இது போலவே கொஞ்சமாவது மானம், வெட்கம், கண்ணியம் என்பது இல்லாமல் ஒவ்வொரு விஷயங்களிலும் இந்தக் கூட்டம் உபத்திரவம் செய்து வருவது மறுக்க முடியாது.

சமீபத்தில் கோயமுத்தூர் முனிசிபாலிட்டியில் சேர்மனுக்கு பல கௌரவம் இருக்கிறது; இதில் எதையாவது விட்டுவிட வேண்டும் என்கிற தத்துவமடங்கிய ஒரு தீர்மானத்தை இரண்டு பார்ப்பனர்கள் கொண்டு வந்த சமயத்தில் நடந்த விவாதங்களை தப்பாய் பிரசுரித்தார்கள். அதாவது கவுன்சிலர்கள் சேர்மனைப் பற்றிப் புகழ்ந்து பேசுகையில் “என் முன்னிலையில் என்னைப் புகழ்வது எனக்கு வெட்கமாயிருக்கிறது என்றும் இனி யாரும் தயவு செய்து என் புகழ்ச்சியைப் பற்றி பேசாதீர்கள் என்றும், குற்றத்தை மாத்திரம் எடுத்துச் சொல்லுங்கள் திருந்துவதற்கு முயற்சிக்கிறேன்” என்று கண்ணியமாய் சொன்ன வார்த்தையை கண்ணிய அபிப்பிராயம் கொடுக்கும்படி எழுதாமல் என்னை இம் மாதிரி அவமானப்படுத்த வேண்டாம் என்று கெஞ்சினதுபோல் குறிப்பிட்டிருந்ததும், இன்னும் இப்படி பல விதங்களில் உண்மையில் அந்தக் கூட்டத்தில் நடந்த விவாதத்தில் ஸ்ரீமான் முதலியாரை யாரும் இகழ்ந்து பேசியதாகவும் அப்பத்திரிகையிலும் குறிக்கவில்லை.

இப்படியிருக்க இப்படி பொருள்படும்படி சொன்னார், அப்படி நினைக்கத்தகுந்த மாதிரி சொன்னார் என்பதாக இவர்களுக்கு மறுபடியும் சமாதானமும் எழுத வருகிறார்கள். ஆகவே நமது பாமர மக்கள் இம்மாதிரி விஷமப் பிரசாரங்களைப் படித்துவிட்டு தங்களுடைய பரிசுத்தமான மனதை விஷமாக்கிக் கொண்டு விடுகிறார்கள். இந்த விஷமங்கள் பெரும்பாலும் ஜில்லா, தாலூகா போர்டு விஷயங்களிலேயே செய்யப்படுகிற காரணம் பார்ப்பனரல்லாதார் செல்வாக்கை ஒழித்துப் பார்ப்பனர் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே. ஆதலால் இனி இம்மாதிரி விஷயங்களை நிறுத்தச் செய்ய வேண்டுமானால் ஜில்லா, தாலூகா போர்டு, முனிசிபல் தலைவர்கள் ஒன்று கூடி இம்மாதிரி பார்ப்பன நிருபர்களின் இடைஞ்சல்களிலிருந்து தப்பவும், பார்ப்பன பத்திரிகைகளின் விஷமப் பிரசாரத்திலிருந்து தப்பவும் வேண்டிய ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட நிபந்தனைக்குட்பட்டு யோக்கியமாய் நடந்துகொள்ளும் ஜவாப்புதாரிதனத்தின் மேல் இவர்களை உள்ளே அனுமதிக்கவும் கவுன்சில் இவர்கள் நடவடிக்கை ஒன்று, இரண்டு, மூன்று எச்சரிக்கைகளுக்குப் பிறகும் திருத்தப்படாவிட்டால் அடியோடு உள்ளே விடப்படாமலிருக்கவும் முடிவு செய்து கொள்ள வேண்டும். நிருப பார்ப்பனருக்கு இருக்கும் பொது நன்மை நமக்கு இருக்காது என்று எழுத எந்த மனிதனும் நினைக்க மாட்டான். திருட்டுப் புரட்டு நடக்கும் பொது ஸ்தானங்களை இந்தப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்திற்கு அனுகூலமாயிருந்தால் வெளியிடவுமாட்டார்கள். ஆதலால், இதற்கு யாரும் பயப்படாமல் நமது சமூகத்தின் நன்மையையும், நாட்டின் பொது nக்ஷமத்தையும் கருதி இதற்கு ஏதாவது ஒரு முறையை தைரியமாய் கை கொள்ள வேண்டுமென்று சொல்லுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 20.03.1927)

Pin It