இந்தியாவில் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலே இருந்து கொண்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெல்லியில் உள்ள 37 இந்தி, ஆங்கில செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் பணியாற்றும் 300க்கும் மேற்பட்ட மூத்த பத்திரிகையாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகள் இத்தகவலைக் கூறுகின்றன. பத்திரிகையாளரிடம் இத்தகைய ஆய்வு நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

பத்திரிகையாளர் அனீல் சமாரியா, மீடியா ஆய்வுக்குழுவைச் சார்ந்த ஜிதேந்திர குமார், சமூக வளர்ச்சி மய்யத்தின் ஆய்வாளர் யோகேந்திர யாதவ் ஆகிய மூவரும் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். ஜூன் 5 ஆம் தேதி ‘இந்து’ நாளேடு இந்த ஆய்வை செய்தியாக வெளியிட்டுள்ளது. ஆய்வின் முடிவுகள், ஊடகங்கள் பார்ப்பனர்களின் பிடியிலே சிக்குண்டு கிடப்பதை உறுதிப் படுத்தியிருக்கின்றன.

பார்ப்பனர்கள் ஆதிக்கம் ஒழிந்து போய்விட்டது என்றும், பிற்படுத்தப்பட்டோரின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது என்றும் சில “அறிவு ஜீவிகள்” நடத்தி வந்த பரப்புரை அப்பட்டமான பொய்; உள்நோக்கம் கொண்டது என்பது அம்பலமாகியுள்ளது.

மக்கள் தொகையில் 8 சதவீதம் மட்டுமே உள்ள பார்ப்பனர் மற்றும் உயர்சாதியினர் ஊடகங்களில் அதிகாரம் நிறைந்த 71 சதவீதப் பதவிகளை ஆக்கிரமித்துள்ளனர். பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம்கள், பெண்கள் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே இருக்கிறது.

முதல் வரிசையில் உள்ள 300 பத்திரிகையாளர்களில் - ஒரு தாழ்த்தப்பட்டவரோ, ஆதிவாசியோகூட இல்லை. இந்த ஊடகங்களில் - அதாவது பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் முடிவுகளை எடுக்கக்கூடிய பதவிகளில் 315 பேர் இருக்கிறார்கள்.

பார்ப்பனர்கள் தான் மிக அதிகமாக இருக்கிறார்கள். இரு பிறப்பாளர்கள் என்று அழைக்கப்படும் பார்ப்பனர்கள் மட்டும் இதில் 85 சதவீத பதவிகளை ஆக்கிரமித்துள்ளனர். அதிலும் மிக உயர்ந்த, அதிகாரமுள்ள பதவிகளில் இருக்கும் பார்ப்பனர்களின் எண்ணிக்கை மட்டும் 49 சதவீதம்.

பார்ப்பனரல்லாத உயர்சாதியினரான மராத்தா, பட்டேல், ஜாட், ரெட்டி போன்றவர்களையும் சேர்த்து கணக்கிட்டால் உயர்சாதியினர் 88 சதவீதம் இருக்கிறார்கள்.

மக்கள் தொகையில் பெரும்பான்மை எண்ணிக்கையில் உள்ள பிற்படுத்தப்பட்ட வர்களோ, இந்த 37 ஊடகங்களில் வெறும் 4 சதவீதம் மட்டுமே! அதுவும் ஆங்கில பத்திரிகைகளில், பிற்படுத்தப்பட்டோர் ஒரு சதவீதம் மட்டும் தான். இந்தி பத்திரிகையில் மட்டும் 8 சதவீதம் பேர் இருக்கிறார்கள். முஸ்லீம்களின் நிலையும் இது தான். முக்கிய அதிகாரமுள்ள, முடிவெடுக்கும் பொறுப்புகளில் 6 சதவீத முஸ்லீம்கள் மட்டுமே உள்ளனர். இந்தி தொலைக்காட்சிகளில்தான், முஸ்லீம்கள் 6 சதவீதம் பேர் உள்ளனர்.

டெல்லியில் உள்ள ஆங்கில தொலைக்காட்சிகளில் மூத்த நிலையில் ஒரு முஸ்லீம் கூட இல்லை. பிற்படுத்தப்பட்டோர் இந்தி பத்திரிகைகளில் 8 சதவீதம் பேரும், ஆங்கில பத்திரிகையில் ஒரு சதவீதம் பேரும் மட்டுமே உள்ளனர். கண்டறியப்பட்ட 315 பத்திரிகையாளர்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்கூட இல்லை.

ஆங்கில தொலைக்காட்சிகளில் 32 சதவீதம் பெண்களும், ஆங்கில நாளேடுகளில் உயர் பொறுப்புள்ள பத்திரிகையாளர்களாக 14 சதவீதமும், இந்தி நாளேடுகள் மற்றும் தொலைக்காட்சியில் 11 சதவீதமும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே பார்ப்பன, முன்னேறிய சாதியைச் சார்ந்தவர்கள் தான்! கடந்த மே 30 ஆம் தேதியிலிருந்து ஜூன் 3 ஆம் தேதி வரை 37 பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இடஒதுக்கீடு கோருவது ஓட்டுவங்கி அரசியலா?

27 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதை ‘ஓட்டு வங்கி அரசியல்’ என்றும், பிற்படுத்தப்பட்டோர் ஓட்டுகளை வாங்கும் நோக்கத்தோடு, அரசியல் கட்சிகள் அமுலாக்கத் துடிக்கும் திட்டம் என்றும், பார்ப்பன ஊடகங்கள் தொடர்ந்து ஒரு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து வருகின்றன. இது உண்மை தானா?

* பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு ஓட்டுவங்கி அரசியல் என்பது உண்மை என்றால், இந்தியாவின் பிரதமராக, மண்டல் பரிந்துரையை அமுல்படுத்திய வி.பி.சிங் தான் நீடித்திருக்க வேண்டும். ஆனால் இந்த இடஒதுக்கீட்டை அமுல்படுத்தியதற்காகவே, அவர் பதவியை இழந்தார் என்பதுதான் வரலாறு.

* இடஒதுக்கீடு முதன்முதலாக அமுல்படுத்தப்பட்டதே 1921-ல் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போதுதான்! அப்படியானால் பிரிட்டிஷாரும், ஓட்டு வங்கியைக் குறி வைத்துத்தான் அமுல்படுத்தினார்கள் என்று சொல்கிறார்களா?

* அரசின் ஒரு மக்கள் உரிமை திட்டத்துக்காக பெருவாரியான மக்கள், அரசை ஆதரித்து ஓட்டளிக்கிறார்கள் என்றால், அதற்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பது தானே அர்த்தம்? அதில் என்ன குற்றம்?

* அப்படியானால், ‘மக்கள் ஓட்டளிக்கக் கூடாது’ என்ற நோக்கத்துக்காகவே, ஒரு அரசு திட்டங்களை அமுல்படுத்துவதுதான், ஒரு ஜனநாயக ஆட்சிக்கு இலக்கணம் என்று இவர்கள் கூறுகிறார்களா?

* ஏழ்மையை, வறுமையை ஒழிப்பதற்கு அரசுகள் திட்டமிடுகின்றன.

நிதி ஒதுக்கீடுகள் செய்கின்றன. இதனால், திருப்தியடைந்த ஏழை மக்கள் ஆட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்கிறார்கள். இதை ஓட்டு வங்கி அரசியல் என்று கூறி, ஏழ்மை ஒழிப்புத் திட்டங்களையே அமுலாக்கக் கூடாது என்று கூற முடியுமா?

இவை எல்லாம் பார்ப்பனர்களின் மாய்மாலப் பிரச்சாரங்கள். ஒடுக்கப்பட்ட மக்கள், சந்திக்குமிடமெல்லாம் இந்தக் கருத்துகளைப் பரப்ப வேண்டும்!

Pin It