ஸ்ரீமான் கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் தேர்தல்கள் விஷயத்தில் பார்ப்பனரல்லாதார்களுக்கு விரோதமாகவும், பார்ப்பனர்களுக்கு அநுகூலமாகவும் தேசபக்தியைச் சாக்காட்டிக் கொண்டு பிரசாரம் செய்து வந்ததை பல தடவைகளில் நாம் பலமாய்க் கண்டித்திருப்பது நேயர்களுக்குத் தெரிந்திருக்கும். கடைசியாக ஸ்ரீமான் ஹ. ராமசாமி முதலியாருக்கு விரோதமாக செங்கல்பட்டு ஜில்லாவில் பாமர மக்களிடையில் போய் சீமையிலுள்ள மனிதர்களுக்கு சராசரி வயது 50 என்றும், நமது நாட்டிலுள்ள மக்களுக்கு சராசரி வயது 25 என்றும், அதற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சியும் ஹ. ராமசாமி முதலியார்தான் என்றும், ஆதலால் அவருக்கு ஓட்டுச் செய்ய வேண்டாம் என்றும் இன்னமும் இதுபோல் பல விஷயங்கள் பேசியதாக பத்திரிகைகளில் பார்த்து கண்டித்தெழுதி இருந்தோம். அதுசமயம் நான் அப்படிப் பேசவில்லை என்றும், பார்ப்பனர்கள் தங்கள் பத்திரிகையில் அப்படி எழுதிக் கொண்டார்கள் என்றும் அவர் சொன்னார். அதற்குப் பிறகு கூட ஸ்ரீமான் சக்கரை செட்டியாருக்கு விரோதமாய்த் தொழிலாளர் சங்கங்களுக்கு ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரை அழைத்துப்போய் அய்யங்கார் அவர்கள் இந்தியா சட்டசபையிலும் காங்கிரசிலும் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றும், உதவி செய்வார் என்றும் சிபார்சு செய்தார். அதுசமயம் நாம் கண்டித்தெழுதியிருந்த போதும் ஸ்ரீமான் முதலியார் அவர்கள், நான் அறிமுகம் செய்து வைத்தேனே ஒழிய சிபார்சு செய்யவில்லை என்று எழுதியதோடு “குடி அரசு” இழி மொழிகளை எழுதி இருக்கிறதென்று எழுதியிருந்தார்.
அதன்பிறகு கொஞ்ச நாள் பொறுத்து ஸ்ரீமான் சக்கரை செட்டியாருக்கு விரோதமாகவே தேர்தலில், ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரையே ஆதரிக்க வேண்டுமென்று ஸ்ரீமுகமும் அனுப்பினார். இதை “சுதேசமித்திரன்” முதலிய பத்திரிகைகள் பிரசுரித்திருந்ததோடு பார்ப்பனர்கள் அதைத் துண்டுப் பிரசுரங்களாகவும் வழங்கினார்கள். இதைப் பற்றியும் நாம் எழுதினால் இதற்கும் ஏதாவது சமாதானம் சொல்லுவாரென்றே கருதி சும்மாயிருந்தோம். கடைசியாக ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் தேர்தலில் வெற்றிபெற்ற தமது “வீரப்பிரதாபத்தை முழக்கி வெற்றிச் சங்கூதுகையில்” ஸ்ரீமான்களான வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார், ராமசாமி நாயக்கர் முதலிய எத்தனையோ பார்ப்பனரல்லாதார் எதிர்த்தும் வெற்றி பெற்றுவிட்டேன் என்று எழுதி இருந்தார். இதைப் பார்த்ததும் வந்துவிட்டது கோபம் நமது முதலியாருக்கு! எழுந்தார் பேனாக் கோடாலியைப் பிடித்தார்! “பொய் பொய், முற்றும் பொய்” என சத்தியமூர்த்தியைப் பிளந்தார். ஏன்?
பார்ப்பனத் தலைவர் நமது சத்தியமூர்த்திகளேயாவர். வஷிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் பெற்றால்தான் மற்ற ரிஷிகள் மதிப்பார்கள். அப்படிப் போல ஸ்ரீமான் சத்தியமூர்த்தி வாயால் திரு.முதலியார் அவர்களைப் புகழா விட்டாலும் இகழாமலாவதிருந்தால் தான் பார்ப்பனர்கள் முதலியாரைத் திரும்பியாவது பார்ப்பார்கள். ஆதலால் சத்தியமூர்த்தியைப் பிளக்க வேண்டிய அவசியம் வந்து என்ன எழுதினார் என்றால், தான் தேர்தல் பிரசாரத்தில் கலவாதிருந்தாலும்கூட தேர்தலுக்கு 2 நாள் முன்னதாகக் கூட ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரை ஆதரித்துக் கூறிய உரைகள் பல பத்திரிகைகளில் வெளியாயிற்று. அவ்வுரைகள் துண்டுப் பிரசுரங்களாகவும் விளங்கிற்று........ ஆதலால் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியின் கூற்று “பொய் பொய் முற்றிலும் பொய்” என்று சாக்ஷி ஆதாரங்களுடன் பிளந்திருக்கிறார். அப்படியானால் ஸ்ரீமான் முதலியார் அவர்கள் தேர்தலில் கலவாதிருக்கப் போவதாகச் சொன்னதும் சுயராஜ்யக் கட்சியாலும் கட்சித் தலைவர்களாலும் வகுப்புப் பூசலும் வகுப்புவாதமும் நமது நாட்டில் ஏற்பட்டது என்றதும் அரசியல் சங்கங்களை வளரவிடுவது நாட்டிற்குக் கேடு என்றதும் நம்மவர்களுக்கு விரோதமாகவோ பார்ப்பனர்களுக்கு அனுகூலமாகவோ வேலை செய்யவில்லை என்றதும் மெய் மெய் முற்றும் மெய் என்று சொல்வதற்குச் சாட்சி ஆதாரமெங்கே என்று கேட்கிறோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.12.1926)