நாத்திகம் ராமசாமி தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்த்தோப்பு என்னும் சிற்றூரில் 25.12.1932இல் பிறந்தார். இளம் வயதிலேயே பிழைப்புத் தேடி சென்னை வந்தவர். சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் டாக்டர் நடேசன் சாலையில் மரக்கடை நடத்தினார். 1958 ஆம் ஆண்டில் நாத்திகம் ஏட்டைத் தொடங்கினார். முதலில் தி.மு.க.வில் இருந்த ராமசாமி பின்னர் அதன் போக்குப் பிடிக்காததால் அதிலிருந்து விலகி தி.க.வில் சேர்ந்தார். பெரியாரையும், திராவிடர் கழகக் கொள்கைகளையும் ஆதரித்துத் தீவிரமாக நாத்திகத்தில் எழுதினார். அந்நாளில் இவரின் நண்பராகவும் வலதுகையாகவும் விளங்கியவர் தி.க. பிரமுகர் மயிலை த. லோகநாதன். இவர்களிருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்தார்கள். 

பின்னர் திராவிடர் கழகத்திலிருந்து விடுதலை ஆசிரியர் கொள்கைவேள் குத்தூசி குருசாமி விலகிய போது இவரும் விலகி அவருடன் சேர்ந்து மறுமலர்ச்சி சுயமரியாதை இயக்கம் கண்டார். 

பிறகு கொஞ்ச காலம் சுயமரியாதை இயக்க வார ஏடாக நாத்திகம் வந்தது - பின்னர் நாத்திகம் ராமசாமி தம் நண்பர்கள் எம்.கே.டி சுப்ரமணியம், மா.செ. பரதன் போன்றோருடன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 

தி.க.வில் இருக்கும்போது எப்படித் தந்தை பெரியாரோடு நெருக்கமாக இருந்தாரோ அதேபோன்று காங்கிரசில் பெருந்தலைவர் காமராசருடன் நெருக்கமாகப் பழகினார். 

காங்கிரசிலும் தொடர்ந்து நாத்திகம் ஏட்டை நாளேடாக மாற்றினார். அக்கட்சியிலும் இவரால் நீடிக்க முடியவில்லை. காமராசர் மறைவுக்குப் பிறகு காங்கிரசிலிருந்தும் வெளியேறினார். சிறிது காலம் கலைஞர் கருணாநிதியை ஆதரித்தார். அவரையும் தொடர்ந்து ஆதரிக்க முடியவில்லை. கலைஞரின் தலைமையில் தம் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தார். நாத்திகம் ராமசாமியும் கலப்பு மணம் செய்து கொண்டவரே! 

கடைசி வரை சங்கர மடத்திற்கு எதிராகவே போர் தொடுத்தார். தமிழீழத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார். மரண தண்டனை ஒழிப்புக்காகப் பாடுபட்டார். 1998இல் இவருக்கு தி.மு.க. அரசு பெரியார் சமூக நீதி விருது வழங்கிச் சிறப்பித்தது. 

1958 இல் தொடங்கப்பட்ட நாத்திகம் ஏட்டின் பொன்விழா 3.8.2008இல் சென்னையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மருத்துவர் இராமதாசு, தோழர் இரா. நல்லக்கண்ணு, தொல் திருமாவளவன், பழ. நெடுமாறன் போன்ற தலைவர்கள் நாத்திகம் ராமசாமியின் அரை நூற்றாண்டு கால, இதழியல் பணிகளைப் பாராட்டிப் பேசினர். 

சமூக விரோதிகள், கண்டு நடுங்கிய ஒரே ஏடு நாத்திகம் என்றால் மிகையாகாது. பொய்மையை ஒழிப்பேன்என்னும் இலட்சியப் பதாகையை உயர்த்திப் பிடித்தவர் இராமசாமி. குழந்தைகளுக்குத் தமிழில் பெயர்களைச் சூட்டுவதில் ஆர்வம் காட்டினார். 

சாய்பாபா - பங்காரு அடிகளார், கல்கி பகவான், பாலா சீர் லாஹி - டி.ஜி.எஸ். தினகரன் போன்ற மதத் தலைவர்களின் பொய்முகங்களைத் துணிவோடு அம்பலப்படுத்தினார். குறிப்பாக புட்டபர்த்தி சாய்பாபாவின் முகத்திரையைக் கிழித்ததில் நாத்திகத்திற்குப் பெரும் பங்குண்டு. இந்து மதத்தை மட்டும் அல்லாது கிறித்தவ - இசுலாமிய மதங்களையும் தாக்கினார். மதவாத சர்க்காரே நாத்திகத்தை அழிக்காதே!எனக் குரல் கொடுத்தார். 

பெரியார் - காமராசர் மனித நேயப் பேரவைஎனும் அமைப்பைத் தோற்றுவித்து கடைசிவரை அதன் தலைவராய் இருந்து வந்தார். நாத்திகம் ராமசாமியைப் போல் நூற்றுக்கணக்கில் வழக்குகளைச் சந்தித்த பத்திரிகையாளர் தமிழகத்தில் எவரும் இருக்க முடியாது. பலமுறை கைதும் செய்யப்பட்டார். தமிழ்நாடு நீங்கலான தேசப்பட எரிப்புப் போராட்டம் 1960இல் பெரியார் - ஆதித்தனார் நடத்தியபோதும் அதில் இவர் கைது செய்யப்பட்டடார். 

இவர் மிகச்சிறந்த கட்டுரையாளர்; எழுத்தாளர். இடதுகரம், பெரியாரிஸ்ட், கறுப்புச் சட்டை, பெரியாரியலான் போன்ற புனைப்பெயர்களில் கட்டுரைகள் எழுதினார். நாத்திக சிங்கம் பகத்சிங்ஆர்.எஸ்.எஸ். இந்து பாசிசம், சங்கரமடம் பற்றிய உண்மைகள், ஜெயலலிதா ஆட்சிக் கொடுமைகள், இதுதான் பார்ப்பன ஆட்சி, மடாதிபதி லீலை, மதம் மாறுங்கள். இயேசு அழைக்கிறார், எழுத்தாளர் சமுத்திரமும் கடலூர் வீரமணியும், சங்கர மடத்துக்குச் சவுக்கடி போன்ற நூல்களை எழுதித்தாமே நாத்திகம்வெளியீடாக வெளியிட்டார். 

குத்தூசி குருசாமியின் உண்மைத் தொண்டராக விளங்கிய திரு ராமசாமி 1980ஆம் ஆண்டில் மாதவி வந்தாள் என்னும் திரைப்படத்தை எடுத்தார். அப்படம் சரியாக ஓடவில்லை. அத்தோடு தம் திரையுலக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். 

நாத்திகத்தில் கேள்வி - பதில் பகுதியைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் மிகவும் வல்லவராக விளங்கினார். எடுத்துக்காட்டாக... 

கேள்வி : சம்பத் இல்லாத தி.மு.க?

பதில் : தலை இல்லாத முண்டம் 

கேள்வி : உடல் அழிந்த பிறகும் ஆத்மா அழியாதா?

பதில் : இயந்திரம் உடைந்த பிறகு இயங்கும் சக்தி உண்டா?

என்பன போன்றவற்றைக் குறிப்பிடலாம். 

தாம் ஏற்றுக்கொண்ட நாத்திகக் கொள்கைகளில் கடைசிவரை உறுதியாக நின்ற நாத்திகம் ராமசாமி அவர்கள் தம் 77ஆவது வயதில் 26.9.2009ஆம் நாளன்று சென்னையில் காலமானார். இடம் மாறினாலும் குணம் மாறாத கொள்கையாளர். நாத்திகம் ராமசாமியின் புகழ் நீடுவாழ்க! 

Pin It