“மகாத்மா ஜோதிராவ் புலே” -பத்தொன்பது தலைப்புகளில் இந்நூலை எழுதி இருக்கிறார் க.ஜெயச்சந்திரன்.

“தேசவிடுதலைக்காகப் போராடியதாகச் சொல்லப்படும் வ.வே.சு.ஐயர் நடத்திய குருகுலத்திலேயே பார்ப்பனியம் தன் வேலையைக் காட்டியது என்றால் -

தேச விடுதலைக்காகக் குரல் கொடுத்ததாகச் சொல்லப்படும் ‘தீரர்’ சத்திய மூர்த்தியே தேவதாசி முறையை அப்பட்டமாக ஆதரித்து ஆர்ப்பரிக்க முடியும் என்றால் -

bule 310பெண்களின் திருமண வயதை 10 இல் இருந்து 12 ஆக்குகிறோம் என்று பிரிட்டிஷ் அரசு சொன்னதற்காக “இதை ஒத்துக் கொள்ள முடியாது. இது எங்கள் மதத்தின் மீதான தாக்குதல்” என்று திலகரே பொங்கி எழுந்தார் என்றால் -

அத்தகைய சூழல்களோடு பொருத்திப் பார்த்தால், ஜோதிராவ் புலே அவர்கள் அன்றைக்கு ஆற்றிய அளப்பரிய பணிகளை அளக்க முடியும். அப்படிப் பார்த்தால்தான் அம் மாபெரும் மனிதர் எத்தகைய சாதனைகளைச் சாத்தியப்படுத்திக் காண்பித்திருக்கிறார் என்பது புரியும்” என்று இந்நூல் குறித்துச் சொல்லும் தோழர் பாமரனின் வரிகளில் இருந்து, இந்நூலின் ஆழமும் உள்ளடக்கமும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

அடிமைத்தனத்தை, மூட நம்பிக்கை பழக்க வழக்கங்களை, பெண்ணடிமைத்தனத்தை, மறுக்கப்பட்ட கல்வியை எதிர்த்து முதன் முதலாகப் போராடியவர் புத்தர்.

அந்தப் போராட்டத்தைப் புத்தருக்குப் பின் புலேதான் கையில் எடுத்தார். போராடினார், செயல்பட்டார், பாதிக்கப்பட்டார். முழு வெற்றி பெறாவிட்டாலும் அவரால் சாதிக்கப்பட்டவைகளை மறந்துவிட முடியாது.

அந்த வகையில் அவர் மாமனிதர் ஜோதிராவ் புலேதான்!

“புரோகித சூழ்ச்சி அம்பலமாகிறது” - “இந்தியப் பேரரசில் பார்ப்பனப் போர்வையின் கீழ் அடிமைத்தனம்” - “தீண்டத்தகாதவர்களின் நிலைமை”, -“எச்சரிக்கை”, “சட்சர்” (உண்மையின் சாரம்), “கவித்துவ அளவுகோலின் சிவாஜி வாழ்க்கை”, ஜோதிராவ் புலே எழுதியிருக்கும் இந்நூலைப் பட்டியலிடுகிறார் நூலாசிரியர் ஜெயச்சந்திரன்.

இந்நூல்களின் பெயர்களில் இருந்தே புலேவின் பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இந்நூல்கள் இன்னமும் ஏன் தமிழில் மொழி பெயர்க்கப்படவில்லை, பரவலாக்கப்படவில்லை என்பது தான் புரியவில்லை.

மக்களின் வாழ்வும் வீழ்வும் அவர்கள் பெறும் கல்வியைப் பொறுத்தே அமையும்.

பார்பனர்கள் கல்வியைத் தன்னுடமையாக்கிக் கொண்டார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் அவர்களால் கல்வி தடை செய்யப்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில் பெண்களுக்கு, குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட பெண்களுக்குக் கல்வி தர முனைந்தார் புலே என்று சொல்லும் நூலாசிரியர் ஜெயச்சந்திரன், அப்படிப் பெண்களுக்காக முதல் பள்ளியை ‘புத்வார்பேத்’ என்ற இடத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் தொடங்கினார் என்றும், அது தான் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட, குறிப்பாக பெண்களுக்கான முதல் பள்ளி என்றும் குறிப்பிட்டுச் சொல்கிறார். புலேவின் புரட்சிகரமான இச்செயல் நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.

இதைத் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகள், எதிர்ப்புகளுக்கு இடையே தொடர்ந்து பள்ளிகளை உருவாக்கிய வரலாறும், அவருக்குத் தோள் கொடுத்து இணையாக நின்று உழைத்த அவரின் துணைவியார் சாவித்திரிபாய் பட்ட துயரங்களும் நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.

விதவைகளுக்கு (கைம்பெண்கள்) அன்றைய சமூக அமைப்பில் எந்த உரிமையும் இல்லை. பார்ப்பனியத்தின் குழந்தைத் திருமணங்களால்தான் அன்று விதவைகள் எண்ணிக்கை பெருகலாயிற்று.

இளைய கைம்பெண்கள் உணர்ச்சி வயப்பாட்டினால் சிலவேளைகளில் கருவுறுதல் என்பது இயல்புதான்.

அதைப் பாவமாகக் கருதினர் பார்ப்பனர். அவர்களை அரவணைத்தார் புலே.

“கணவனை இழந்த பெண்கள் கருவுற்றால் இங்கே வந்து பிள்ளை பெற்றுக் கொள்ளுங்கள்” என்று தன் வீட்டு வாசலில் எழுதி வைத்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் திரண்டனர் பார்ப்பனர்.

அவர்களிடம் புலே சொன்னர் எழுதி வைத்ததை எடுத்துவிடுகிறேன். விதவைகளுக்கு “மறுமணம்” செய்து வையுங்கள் என்று.

நெஞ்சுரம் மிக்க புலேவின் இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சிதான், 1856 ஜூலை திங்கள் 25ஆ-ம் நாள் ஆங்கில அரசால் விதவைகள் மறுமணச் சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்தது என்று அது குறித்து விரிவான செய்திகளை இந்நூல் தருகிறது.

இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை. அதற்காக நடந்த போராட்டங்கள் ஏராளம். முதன் முதலாக இட ஒதுக்கீடு முறையை நடைமுறைப் படுத்தியவர் சாகுமகராஜ் - தன் கோல்காபூர் அரண்மனையில். அதற்கு முன்னோடியாக இருந்தவர் புலே தான் என்ற விளக்கத்தையும் இந்நூலில் தருகிறார் இந்நூலாசிரியர்.

கல்விப்பணி, பெண்கள் முன்னேற்றம் மட்டும் இல்லாமல் தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றோர் நலன்களையும் பேணியுள்ளார் புலே.

இப்படிப் பல்வேறு கோணங்களில் அரிய செய்திகளை, நாம் அறியாத செய்திகளை எல்லாம் தேடி எடுத்து நல்லதொரு நூலைத் தந்திருக்கும் ஆசிரியர் க.ஜெயச்சந்திரன் பணி பாராட்டுக்குரியது.

ஆசிரியர்: க.ஜெயசந்திரன்

வெளியீடு : சமத்துவக் கழகம் 87M, 2ஆம் தளம், கிரேடவுன், கோவை-641018

விலை : ரூ.50

தொலைபேசி : 9487700905, 9443064416

Pin It