விடுதலை இயக்க வேர்களும் விழுதுகளும் 27
'தமிழன்' இதழில் அப்பாதுரையார் மட்டுமல்ல, அவருடைய ஒரே மகளான அன்னபூரணி அம்மையாரும் தந்தையின் வழியைப் பின்பற்றி, தன்மான எழுத்தோவியங்களைப் படைத்து வந்தார். மாபெரும் கலாச்சார மனிதர்களாக தம் மக்கள் திரளைப் பாவித்த அவர், தற்குடிகளின் மானுட ஓர்மை வாழ்வியலை நிராகரித்து, குறுக்கீடாக முளைத்த பார்ப்பனியச் சமூக அமைப்பிற்கு எதிர்க்குறியீடு ஆனார். பார்ப்பனியம் விளைவித்த சாதியம், ஆணாதிக்கம் வீழவே தன்னை அணிப்படுத்திக் கொண்டார்.
எழுத்தை தனிமனிதனின் உன்னதங்களைச் சுமக்கும் அடிமையாக இல்லாமல், சமூகத்தை விடுதலை செய்யும் நெருப்பாக நிலைக்கச் செய்தவர் அப்பாதுரையார். அவர், "தமிழனில்' மட்டும் எழுதவில்லை. அவரது எழுத்துகளில் மானுட வேட்கை, தீவிரம், செய்நேர்த்தி இருந்ததால் "குடி அரசு', "நவசக்தி', "திராவிடன்', "விலாசினி' போன்ற இதழ்கள் தங்கள் கனபரிமாணத்திற்காக அப்பாதுரையாரை எதிர்பார்த்திருந்தது. அப்பாதுரையாரின் அறிவு நுட்பம், ஆற்றல் திட்பம் தங்கவயல் தமிழ் மக்களை மட்டுமல்ல, பெரியார், திரு.வி.க. போன்ற இன, மொழித் தலைவர்களையும் கவர்ந்திருந்தது. இவர்களின் நட்பும் தோழமையும், திருப்பத்தூரில் 1919 இல் ஏ.பி. பெரியசாமிப் புலவர் கூட்டிய தாழ்த்தப்பட்டோர் மாநாட்டின் மூலம் ஏற்பட்டது.
காங்கிரசை விட்டொழித்த பெரியார், சுயமரியாதை இயக்கம் கண்டு "குடி அரசு' இதழினைத் தொடங்கி பகுத்தறிவு சமதர்மப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய காலத்தில், பெரியாரின் "குடி அரசி'ல் அப்பாதுரையார் தொடர்ந்து எழுதினார். இதனால், பெரியாருக்கும் அப்பாதுரையாருக்கும் தோழமை வளர்ந்தது. மேலும், 1925 களில் "குடி அரசு' இதழின் கோலார் தங்கவயல் முகவராக இருந்த பகுத்தறிவு சமத்துவச் சிந்தனையாளர் வி.எம். ராஜரத்தினத்துடனும் அப்பாதுரையாருக்கு நட்பு கிடைத்தது.
தாழ்த்தப்பட்ட மானுட வாழ்வின் வடிவங்களை, வருங்காலங்களில் ஆக்கப்பூர்வமான திசைகளில் நகர்த்திச் செல்வதற்கு ஆயத்தமான அப்பா துரையார், கோலார் தங்கவயலெங்கும் சுயமரியாதைச் சங்கம், சீர்திருத்த வாலிபர் கழகம் ஆகிய அமைப்புகளைத் தோற்றுவித்து, பகுத்தறிவு சமதர்மப் பிரச்சாரத்திற்கு வலுவையும் பொலிவையும் ஏற்படுத்தினார். "குடி அரசு' இதழை வரவழைத்து விற்பனை செய்வதை, இந்துக்களும் கிறித்துவர்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். இவ்வெதிர்ப்பினை ராஜரத்தினம், அப்பாதுரையாரின் தோழமை பலத்தைக் கொண்டே முறியடிக்க முடிந்தது.
"தமிழன்' தொய்வடைந்து இரண்டாம் கட்டமாக 1926 இல் வெளிவந்தபோது, ஆசிரியரான அப்பாதுரையாருக்கு ராஜரத்தினம் பின்புலமாக இருந்தார். "தமிழனை' அச்சிட்டு வெளியிடும் பொறுப்பினை அவர் ஏற்றிருந்தார். "தமிழனை' அச்சிடும் அச்சகத்திற்கு புத்தரின் பெயரால் "சித்தார்த்தா' என்று அப்பாதுரையாரும், ராஜரத்தினம் பெயர் சூட்டினார்கள். "சித்தார்த்தா அச்சகம்', "தமிழன்' இதழினை வெளியிடும் அச்சுக் கூடமாக மட்டுமின்றி, தங்கவயல் பகுத்தறிவு சமத்துவவாதிகளின் பட்டறையாகவும் விளங்கியது.
தலைவர் பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் போலவே, கோலார் தங்கவயலில் சித்தார்த்தா அச்சகம் விளங்கியது. கட்டுரைகள், கதை, கவிதை, கேள்வி பதில் வடிவங்களின் வாயிலாக அப்பாதுரையார் பகுத்தறிவிற்கான,சமத்துவத்திற்கான இலக்கியங்களைப் படைத்தார். அரிச்சந்திரன் பொய்கள், கடவுள் விவரம், விபூதி ரகசியம், திருக்குறள் விளக்க உரை, வர்ணபேத விளக்கம், இந்தியர் விவாத விளக்கம், அவ்வையார் திரிவாசகம், மனிதர் அடைந்த ஏமாற்றம், மின்சார மாளிகையின் ரகசியம் போன்ற 50 க்கும் மேற்பட்ட நூல்களை மக்களின் அறிவுப் பசியின் ஆக்க வழிக்குப் படைத்தளித்தார்.
1929 ஆம் ஆண்டில் பெரியார் முதன் முதலாக மலேசியா நாட்டிற்கு அழைக்கப்பட்டு, பார்ஸ்டன் என்ற அமெரிக்கப் பகுத்தறிவாளர் தலைமையில் நிகழ்ந்த பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றும்போது அமெரிக்கப் பெண்மணி மேயோ, இந்தியாவில் நடக்கும் சமூக ஊழல்கள், சமூக அவலங்கள் குறித்து எழுதிய நூலை மேற்கோள் காட்டிப் பேசும்போது, கூட்டத்தினுள் குழப்பம் விளைவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தைப் பற்றி "தமிழன்' வார இதழில் அப்பாதுரையார், "மேயோ கூற்று மெய்யோ பொய்யோ' எனும் தலைப்பில், இரண்டு கிழமைகள் தொடர்ந்து எழுதிய கட்டுரை அன்றைய சமூக ஊழல்களை மட்டுமல்ல; இன்றைய சமூக ஊழல்களையும் அன்றே படம் பிடித்துக் காட்டுவதாக இருந்தது.
“பெண்ணடிமைச் சின்னமான தாலி கூடாது”
சென்னை எழும்பூர் உயர்தரப் பள்ளிக் கூடத்தில், 31.3.1945, 1.4.1945 ஆகிய நாட்களில், தமிழ்ப் பண்டிதர் திரு. ஜி. அப்பாதுரையார் தலைமையில் நடந்தேறிய அய்ந்தாவது தென்னிந்திய பவுத்த மாநாட்டின் முக்கியத் தீர்மானங்கள்:
பவுத்த மார்க்கம், புத்தரால் போதித்த திரிபிடகங்களை ஆதாரமாகக் கொண்டு அனுசரிக்கப்படுவதாகும். இந்து மதம் வேதஸ்மிருதிகளை ஆதாரமாகக் கொண்டு அனுஷ்டிக்கப்படுவதாகும். ஆகையால் பவுத்த மார்க்கம், இந்து மதத்தோடு சேர்ந்ததல்ல என்பதை இம்மாநாடு வற்புறுத்துகிறது. வெளிதேயங்களிலிருந்து வரும் பவுத்த பிட்சுகள், தென்னிந்திய பவுத்த சங்கத்தில் ஓர் அங்கத்தவராக இருந்து, சங்க விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமேயன்றி, பிற மதஸ்தருக்குரிய குருஸ்தானத்தை அவர்கள் மேற்கொள்ளக்கூடாதென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
பவுத்த தன்மம் ஆண் பெண் சமத்துவ உரிமையையும், சகோதரத்துவத்தையும் வற்புறுத்தும் அருளறத்திற்குரிய அன்பின் மார்க்கமாதலால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சொத்துரிமையும், சமூக உரிமையும் சமத்துவமென்ற முறையிலேயே சட்டங்களை அமைத்துத் தரவேண்டுமென்றும், பர்மியருடைய சொத்துரிமைச் சட்டம் இம்றைக்கு முரண்படாததாக இருக்குமேயானால், அதையே தென்னிந்திய பவுத்தர்களுக்குரிய சொத்துரிமைச் சட்டமாக அமைத்துத்தர வேண்டுமென்று, இந்து சட்டத் தொகுப்புக் கமிட்டியாரையும், கவர்ன்மெண்டாரையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
பவுத்தர்கள் திருமணத்திற்குரிய அடையாளமாக வட்டவடிவத்தில், தம்பதிகள் பெயரையும், காலத்தையும் அதில் குறிப்பிட்டுத் திருமணப் பரிசாக மணமகன் மணமகள் கையில் கொடுத்துவிட வேண்டுமே தவிர, பெண் அடிமையெனும் பொருளில் தாலி கட்டுவது போல் உபயோகப்படுத்தக் கூடாதென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. பவுத்தர்கள் திருமணம் முதலிய பத்திரங்களில், எவ்வித பவுத்த சின்னங்களையும் பிரசுரிக்காதிருக்க இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
இந்தியாவின் புருஷோத்தமராகிய புத்தரின் ஜெயந்தி திருநாளை இந்தியா முழுமைக்கும் "பொது விடுறை நாளாக' அங்கீகரித்து அனுசரணைக்குக் கொண்டு வரவேண்டுமென்று இம்மாநாடு மாட்சிமை தாங்கிய இந்திய கவர்ன்மெண்டாரைக் கேட்டுக் கொள்வதுடன், மைசூர் சமஸ்தானத்தில் பவுத்த மார்க்கம் அடைந்து வருவதால் புத்தர் பிறந்த நாளைப் பொது விடுமுறை நாளாக ஏற்படுத்தும்படி மைசூர் கவர்ன்மெண்டாரையும் கேட்டுக் கொள்கிறது.
பிரோபஸர் பி. லட்சுமிநரசு அவர்களால் எழுதப்பட்டிருக்கும் "எஸன்ஸ் ஆப் புத்திசம்' எனும் ஆங்கில நூலை ஆதாரமாகக் கொண்டு, திரு. ஜி. அப்பாதுரையார் அவர்களால் எழுதப்பட்டிருக்கும் "பவுத்த தரும விளக்கம்' என்ற நூலைப் பிரசுரித்து எல்லா பவுத்த சங்கங்களின் பொது நூலாக அங்கீகரிக்க வேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. இந்திய சட்டசபை, சென்னை சட்டசபை, ஸ்தல ஸ்தாபனங்கள், மைசூர் சட்ட சபை, ஜனப் பிரதிசபை முதலிய எல்லா சபைகளிலும் பவுத்தர்களுக் கென்று தனிமையான பிரதிநிதி ஸ்தானங்கள் கொடுக்கப்பட வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தங்கவயல், மாரிக்குப்பம், சாம்பியன் ரீப்ஸ் முதலிய இடங்களில் நடந்து வரும் பவுத்த பாடசாலையின் கவர்ன்மெண்ட் கிராண்ட் பணத்தை, உயர்த்திக் கொடுக்கும்படி இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. கல்வி அபிவிருத்தியே தேசத்தின் முன்னேற்றத்திற்கு அவசியமாகக் காணப்படுவதால், 500 பேர் கொண்ட கிராமத்திலேயே கல்விச் சாலை அமைக்க வேண்டுமென்ற சட்டத்தை நிராகரித்து, ஒவ்வொரு சிறு கிராமத்திலேயும் ஆரம்ப பாடசாலைகளை ஏற்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது.
ஜி.அப்பாதுரையார் - மாநாட்டுத் தலைவர், வி.பி.எஸ். மணியர் - வரவேற்பு கழகத்தலைவர், அன்னை சத்தியவாணித்து - மாநாட்டுத் திறப்பாளர், ஆர்.பி. தங்கவேலன் - மாநாட்டுச் செயலாளர்
"தமிழன்' இதழில் கலந்துரையாடல் பகுதி மூலம் சமூக நிகழ்ச்சிகளையும், நாட்டு நடப்புகளையும் மக்களுக்கு படம் பிடித்துக் காட்டுவதாய் "வைதீக / லவுகீக சம்வாதம்' என்ற தலைப்பில், சமூக சீர்கேடுகளை விளங்கப்படுத்தி மக்களைப் பகுத்தறிவுக்கு ஆட்படுத்தினார். “தமிழன்” இதழில் இடம் பெற்ற கேள்வி பதில் பகுதி, அறிவு வளர்ச்சிப் பகுதியாகவே அமையப் பெற்றிருந்தது. எடுத்துக் காட்டாக, 1.4.1931 அன்று வெளிவந்த “தமிழன்” இதழில், சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்ற கேள்விக்கு, பூஜ்ஜியம் பெரியதா? சைபர் பெரியதா? என்று கேட்பது போல் இக்கேள்வி இருக்கிறது என்று பதிலளித்தார்.
சந்தேகித்தலே அறிவின் தொடக்கம் என்பதில், அப்பாதுரையார் மிகச் சரியாக இருந்தார். மூடநம்பிக்கை விலகவிலகத்தான் பகுத்தறிவை மூடியிருக்கும் திரை விலகும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் காலத்தில் மந்திரவாதிகள், அவதாரப்புருஷர்கள், தங்கவயல் பக்கம் தலை காட்டாமலே இருந்தார்கள். இன்றைய சாய்பாபாக்கள் போல் எவரும் வந்துவிடக் கூடாது என்பதில், அப்படியான முன்னோடி புரட்டு மனிதர்களை மக்களிடமிருந்து ஓரம் கட்டுவதில் தனிக் கவனம் எடுத்துக் கொண்டார். பிற்காலத்தில் சாய்பாபா போன்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த கோவூர், கர்நாடக துணை வேந்தர் நரசிம்மய்யா போன்றோருக்கு அப்பாதுரையார் முன்னோடி என்றால், அது மிகைக் கூற்றாக இருக்காது.
வேற்றுமையை சுவாசிக்கும் பார்ப்பனியச் சமூக அமைப்பின் நகலாக, தங்க வயல் ராபர்ட்சன் பேட்டையில் வெங்கடேசுவரா உணவு விடுதி அமைந்திருந்தது. இந்த உணவு விடுதியில் தாழ்த்தப்பட்ட தமிழரொருவர் சாப்பிட நுழைந்தபோது, அவரைத் தடுத்து நிறுத்தி அனுப்பி விட்டனர். இந்நிகழ்ச்சியினை அப்பாதுரையாரும், பி.எம். ராஜரத்தினம் அறிந்து, உடனடியாக உணவு விடுதியின் உரிமையாளர் மீது தங்கவயல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, கர்நாடகம் மற்றும் வட தமிழகம் எங்கும் பெரும் பரபரப்பையும் பதட்ட நிலையையும் ஏற்படுத்தியது. இவ்வழக்கு குறித்து அப்பாதுரையார் "தமிழனில்' எழுதிய கட்டுரை, தங்கவயலில் தீண்டாமை ஒழிப்பிற்கானப் போரை முன்னெடுத்தது.
தாழ்த்தப்பட்ட தமிழர்களின் குடும்ப, சமூக வளர்ச்சிக்கு மதுவிலக்கை ஒரு முக்கிய காரணியாய் கொண்ட அப்பாதுரையார், மதுவை மறுத்தலின் பொறுப்புணர்வில், 27.4.1931 அன்று மது ஒழிப்பு மாநாட்டினைக் கூட்டினார். இந்த மாநாட்டிற்கு அன்றைய சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் டி.வி. ராசகோபால் தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் சிறப்புரையாற்றிய அப்பாதுரையார், குடிப்பழக்கம் நம்மை உடல் உள்ள பொலிவிழக்கச் செய்து குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் வேண்டாத மனிதர்களாக்கிவிடும் என்று எச்சரிக்கை செய்தார். இம்மாநாட்டின் விளைவால் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் மதுவின் எதிர்தரிசனத்தில் நிறுத்தப்பட்டார்கள். "மது அருந்துவதில்லை' என்று சபதமேற்கும் கூட்டங்கள், கோலார் தங்கவயலெங்கும் நடைபெற்றன.
அயோத்திதாசர் காலம் தொட்டு தென்னிந்திய பவுத்த சங்கம் "தமிழன்' இதழும், தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. பவுத்த சங்கத்தின், தமிழனின் நீண்டகால கோரிக்கைக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டதாகவே, பிரிட்டிஷ் அரசு அறிவித்த லண்டன் வட்டமேசை மாநாட்டினை (1930 32) அப்பா துரையார் வரவேற்றார். தாழ்த்தப்பட்டோரின் உண்மையான பிரதிநிதிகள், அம்பேத்கரும் சீனிவாசனாரும்தான் என்று தங்கவயல் பவுத்த சங்கத்தின் சார்பில், பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டுக்கு பவுத்த சங்க முக்கிய பிரகர் வி.வி. டேவிட் பெருமாள் அவர்களையும் இணை சேர்த்து அப்பாதுரையார் தந்தி கொடுத்தார்.
அப்பாதுரையாரின் வழிகாட்டுதலில் வி.கே. ஆறுகம் மாநாட்டுச் செயலாளர் பொறுப்பேற்பில், 1932 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள் கோலார் தங்கவயல் சாம்பியன் ரீப்ஸ் பவுத்த சங்கத்தின் முகப்பில் நான்காவது தென்னிந்திய பவுத்த மாநாடும், 23 ஆம் நாள் மூன்றாவது ஆதி திராவிடர் மாநாடும், 25 ஆம் நாள் முதலாவது சுயமரியாதை மாநாடும் பவுத்த அறிஞர் பேராசிரியர் பி. லட்சுமி நரசு, திருப்பத்தூர் ஏ.பி. பெரியசாமி புலவர், குத்தூசி எஸ்.குருசாமி ஆகியோர் தலைமையின் கீழ் நடத்தப்பட்டன. இம்மூன்று மாநாடுகளிலும் பவுத்த மார்க்க ஆதிதிராவிடர் இயக்க சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவர்கள் கே. பிரம்மாச்சாரி, குஞ்சிதம் குருசாமி, வி.வி. டேவிட் பெருமாள், திருப்பத்தூர் கவுரவ மாஜிஸ்டிரேட் டி.என். அனுமந்து, எம்.பி. சங்கரசாமி, ஆர்.டி. அய்யாக்கண்ணு புலவர், வி.பி.எஸ். மணியர், கே.வி. கே.வி. அழகிரிசாமி, எஸ். முனிசாமியார், ஜோலார்பேட்டை வி. பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றனர்.
தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதிகளைத் தாழ்த்தப்பட்டோர் மட்டுமே வாக்களித்துத் தேர்ந்தெடுக்கக்கூடிய “தனி வாக்காளர் தொகுதி”யினையும், “இரட்டை வாக்குரிமை”யையும் வாதாடி, போராடிப் பெற்ற புரட்சியாளர் அம்பேத்கரை பம்பாய்க்குச் சென்று சந்தித்தும் தாத்தா ரெட்டமலை சீனிவாசனாரை சென்னைக்குச் சென்று சந்தித்தும் அப்பா துரையார் வட்டமேசை மாநாடுகளின் கருத்துகளை, காரியங்களை நன்கு அறிந்து வந்தார். கோலார் தங்கவயல், பெங்களூர், வட தமிழ் நாட்டின் முக்கிய நகரங்கள் எல்லாம் வட்ட மேசை மாநாட்டினை விளக்கும் கூட்டங்களை நடத்தினார்.
பூனா ஒப்பந்தத்தை பவுத்த சங்கம் ஏற்கவில்லை என்பதை காந்திக்கு அறிவித்து, அப்பாதுரையார் கடிதம் எழுதினார். தாழ்த்தப்பட்ட மக்களும் இந்துக்கள்தான் என்று தீய நோக்கத்துடன் பூனா ஒப்பந்தம் மூலம் தீங்கிழைத்த காந்தியிடம், வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் எங்களை இந்துக்கள் என்று நிரூபிக்க முடியுமா? என்ற கேள்வியை முன்வைத்தார். பிறவிப் பவுத்தர்களான எங்களை இந்துக்கள் என்று நிரூபிக்க பொதுமேடையில் என்னோடு விவாதிக்கத் தயாரா? என்று காந்தியிடம் சவால் விடுத்தார். அப்பாதுரையாரின் கடிதத்தை காந்தி கண்டு கொள்ளவே இல்லை. அப்பாதுரையார் காந்தியை விட்டுவிடுவதாக இல்லை. நீங்கள் மைசூர் சமஸ்தானத்திற்கு வரும் போது, எனக்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்று மீண்டும் கடிதம் எழுதினார். காந்திக்கு சிம்மசொப்பனமானார் அப்பாதுரையார்.
"தமிழன்' இதழைத் தொடங்கி அதன் வாயிலாக பகுத்தறிவு, சமத்துவப் பணிகளை சற்றும் தளராமல் எழுத்தோவியங்களாய் பதிய வைத்துக் கொண்டே முன்னகர்ந்த அப்பாதுரையார் "பண்டிதமணி' என்றும் "தமிழ்ப் பெரியார்' என்றும் நாளடைவில் அழைக்கப்பட்டார். அப்பாதுரையாரின் புலமையைப் பாராட்டும் வண்ணம் மைசூர் சமஸ்தானத்தால் தங்கப் போர்வை அணிவிக்கப்பட்டு, சமஸ்தானத்தின் தமிழ்ப் புலவரென கவுரவிக்கப்பட்டார்.
அடுத்த இதழில் முடியும்