தயவு செய்து ஊன்றிப் படியுங்கள், உங்கள் நண்பர்களையும் படிக்கச் சொல்லுங்கள்.

அடுத்த வாரம் நடைபெறப்போகும் சட்டசபைத் தேர்தலில் பெரும் பாகம் இரண்டு கக்ஷிகளின் பெயர்களே அடிபடுகின்றன. அவற்றின் பெயர் களுள் ஒன்று ஜஸ்டிஸ் கக்ஷி, மற்றொன்று சுயராஜ்யக் கட்சி. இவை தவிர சுயேச்சைக்காரர் என்று சிலர் சொல்லிக் கொள்வதும் உண்டு.

சுயேச்சைக் கக்ஷி

ஆனால் அச் சுயேச்சைக்காரர்களுக்கு மெய்யாகவாவது, பொய் யாக வாவது, வேஷத்திற்காவது ஒரு ஸ்தாபனமோ கொள்கையோ இல்லாமலும் சுயேச்சை என்றால் சட்டசபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தன்னிஷ்டம் போல் தான் நடந்து கொள்வதைத் தவிர வேறு எவ்வித இயக்கத்திற்கும் கொள்கைக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்பதே அதன் கருத்து. அல்லா மலும், அவர்களில் (சுயேச்சைக்காரர் என்பவர்களில்) ஒருவருக்கொருவர் கட்டுப் பட்டவர்கள் அல்ல என்பதும், குறைந்தது இரண்டு பேராவது சேர்ந்து ஒரு அபிப்பிராயம் கொண்டவர்கள் என்று சொல்லுவதற்கும் போது மான ஒற்றுமை இல்லாதவர்கள். அப்பெயர் கொண்டவர்கள் பெரும்பாலும் ஜஸ்டிஸ் கட்சி, சுயராஜ்யக் கட்சி என்கிற இரண்டு கட்சிக்கும் நல்ல பிள்ளை களாக நடக்க வேண்டுமென்கிற எண்ணமும் தேசத்தில் எந்தக் கக்ஷிக்கு செல்வாக்கு இருக்கிறது என்ற உறுதி இல்லாமையும் இது சமயம் எந்தக் கட்சியின் பெயராவது சொல்லிக் கொண்டால் தங்களுக்கு ஒருசமயம் ஓட்டுக் கிடைக்காமல் போகுமோ என்கிற பயமுள்ளவர்களேயாவார்கள். ஆதலால் இப்படிப்பட்ட இவர்கள் ஒரு சமயம் வெற்றி பெற்றால் அநேக மாய்ப் பார்ப்பனர்கள் எல்லாம் பார்ப்பனக் கட்சியான சுயராஜ்யக் கட்சியி லாவது அல்லது அக்கட்சிக் கொள்கைக்கு அநுகூலமாகவாவது இருப்பார் களேயொழிய எந்த விதத்திலும் ஜஸ்டிஸ் கட்சிக்கு அநுகூலமாக இருக்க மாட்டார்கள். அதிலுள்ள பார்ப்பனரல்லாதாரும் அது போலவே ஒரு சமயம் வெற்றிபெற்றால் உத்தியோகம் பதவி முதலிய விஷயங்களில் ஜஸ்டிஸ் கட்சியாருடன் பிணங்கிக் கொண்டவர்கள் தவிர மற்றபடி உள்ள பார்ப்பன ரல்லாதார் அநேகமாய் ஜஸ்டிஸ் கட்சியில் சேருவதோ அல்லது ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கைக்கு அநுகூலமாயிருப்பதோ ஆகிய இம்மாதிரிதான் இருக்கக் கூடும். நிரம்பவும் ஜாக்கிரதையான சுயேட்சைக் கட்சியார் என்போர் ஜெயித்த உடன் எந்தக் கட்சி வெற்றி பெறுமோ அதில் சேர்ந்து விடுவார்கள். ஆதலால் சுயேச்சைக் கட்சி என்பதைப்பற்றி இதுசமயம் நாம் விவரிக்கத் தேவையில்லை.

periyar kamarajar

மற்றக் கக்ஷிகளும்

ஜஸ்டிஸ் கட்சி, சுயராஜ்யக் கட்சி என்கிற இரு கட்சிகளைப் பற்றியோ வென்றால் இவ்விரண்டும் தேசத்தின் உண்மையான சுயராஜ்யத்திற்கு அடிப்ப டையான கொள்கையை உடையவையல்ல. உண்மையான சுயராஜ் யத்திற்கு அடிப்படையான கொள்கைகள் உள்ள மகாத்மாவின் ஒத்துழை யாக் காங்கிரஸ் திட்டத்திற்கு இவ்விரண்டு கக்ஷிகளுமே விரோதமா யிருந்தன. ஆனால் ஜஸ்டிஸ் கட்சியானது அக்கொள்கைகளிலும் திட்டத் திலும் நம்பிக்கை இல்லாமல் காங்கிரசுக்கு வெளியில் இருந்து கொண்டு அதற்கு விரோதம் செய்து கொண்டிருந்தது. சுயராஜ்யக் கட்சியார் என்பாரோ அப்படிச் செய்யத் தக்க தைரியமில்லாததால் காங்கிரசுக்குள் புகுந்து கூடஇருந்தே காங்கிரசின் குடியைக் கெடுப்பதுபோல் காங்கிரசின் கொள்கைகளைக் கெடுத்து அதன் யோக்கியத்தையும் அழித்து அதை வெட்டிப் புதைக்க வேண்டிய நிலைமையில் கொண்டுவந்து விட்டு விட்டார் கள். இதன் பலனால் உண்மை சுயராஜ்யத் திட்டம் என்பது இரண்டு கட்சியிலும் இல்லை, இவ்விரண்டு கட்சியும் உண்மை சுயராஜ்யத்திற்கு விரோதமாகவே இருக்கின்றன. அல்லாமலும் அரசியல் சம்பந்தப்பட்ட வரையிலும் கூட இரண்டு கட்சியில் எதையும் நாம் நம்பவோ ஒப்புக் கொள்ளவோ முடியாத நிலைமையில் இருக்கிறோம். மற்றபடி மதம், சமூகம், சமுதாயம், சமத்துவம் ஆகிய விஷயங்களில் மாத்திரம் ஒரு கட்சி உரிமை பெறவும், மற்றொரு கட்சி மறுக்கவுமாக இரண்டு கட்சியும் தீவிர கவலை கொண்டு உழைத்து வந்து இருக்கின்றன. அதாவது சுயராஜ்யக் கட்சி என்னும் பார்ப்பனக் கட்சியின் கவலையெல்லாம் மத விஷயத்திலாவது, சமுதாய விஷயத்திலாவது, சமத்துவ உரிமை மற்ற சமூகத் தாரும் அடை யாமலிருக்க வேண்டுமென்று மறுப்பதோடு அதற்கென்றே காங்கிரசின் பெயரையும் உபயோகப்படுத்தி வருகிறது. மற்றொரு கட்சியானது மேற் கண்ட மத, சமுதாய, சமத்துவ உரிமையையே அடிப்படையாய்க் கொண்டு அதை எவ்வழியிலாவது பெறுவதற்கென்று ஜஸ்டிஸ் கட்சி என்ற ஒரு கட்சியை நிருமாணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இவ்விரு கட்சி களும் பொது ஜனங்களின் செல்வாக்கைப் பெறவும் ஒரு கட்சி மற்றொரு கட்சிக்குப் பொது ஜனங்களிடம் செல்வாக்கில்லாமல் செய்யவும் கருதியே தங்கள் தங்கள் கட்சிகளின் அடிப்படைத் தத்துவம் ‘சுயராஜ்யம்’ பெறுவது என்று சொல்லிப் பொது மக்களை ஏய்க்கின்றன. பொதுவாய் நோக்குமிடத்து இரண்டு கட்சிகளும் ஒவ்வொரு கருத்தில் சுயராஜ்யத்திற்கு விரோதமான தத்துவமுள்ள கட்சிகள் என்றே சொல்ல வேண்டும். ‘சுயராஜ்யம்’ என்பது வந்து விட்டால் இரண்டு கட்சிக்கும் ஒவ்வொரு வழியில் ஆபத்தாகவே இருக்கும்.

சுயராஜ்யக் கக்ஷி

எப்படியெனில் மகாத்மா கோரும் சுயராஜ்யம் அடைவதோ அதற்குத் தகுதி ஆவதோ நமது பார்ப்பனர்களான சுயராஜ்யக் கட்சியார் ஒரு போதும் சம்மதிக்க முடியாது. ஏனெனில் மகாத்மாவின் சுயராஜ்யத்தில் ஜாதி உயர்வு தாழ்வு இல்லை. ஆங்கிலப் படிப்பு ஆதிக்கத் திலிருக்காது. தற்கால மாதிரி யான கோர்ட்டுகள் இரா. இம்மாதிரியான கோர்ட்டுகளுக்கு சதா வேலையிருக்கும்படியான மதுபானம் ஒழிந்து, கட்சி பிரதி கட்சிகள் விவகாரங்கள் முதலியவைகளும் உண்டாக இடமிருக்காது. கதர் திட்டங்கள் ஈடேறினால், நமது தேசத்து செல்வத்தை கொள்ளை கொண்டு போகத்தக்க அரசாங்கம் நமது நாட்டில் வலுப்பெற்றிருக்க முடியாது. இவைகளெல்லாம் ஒழிந்து போகுமானால் வெள்ளைக்காரர்கள் ஒரு சமயம் நமது நாட்டில் இருக்க முடிந்தாலும் முடியுமே அல்லாமல் கண்டிப்பாய் நமது நாட்டில் பார்ப்பனர்கள் வாழவே முடியாது.

தீண்டாமை

எதனாலென்றால், ஜாதி உயர்வு தாழ்வு ஒழிவதால் பார்ப்பனர்களுக்கு சமூக விஷயத்தில் எவ்வித ஆதிக்கமும் யோக்கியதையும் இல்லாததோடு நமது நாட்டில் தற்காலமுள்ள தெருப் பிச்சைக்காரர்களுக்கும், நாடோடிப் பிச்சைக் காரர்களுக்கும் உள்ள மரியாதைதான் இருக்க முடியும். ஆதலால் ஜாதி உயர்வு தாழ்வை ஒழிக்கப் பார்ப்பனக் காங்கிரசும் பார்ப்பன சுயராஜ்யக் கட்சியும் சம்மதிக்க மாட்டா.

ஆங்கிலப் படிப்பு

ஆங்கிலப் படிப்பு ஒழிந்தால் பார்ப்பனர்களுக்கு உத்தியோக வாழ்க்கை கொஞ்சமும் கிடையாது. அந்தப்படி பார்ப்பனர்களுக்கு அநுகூல மானதெனக் கருதியே “காங்கிரஸ்” மூலமாகவே வளர்த்து வரப்படுகிறது. எனவே, ஆங்கிலம் ஒழிந்த அன்றே பார்ப்பன உத்தியோக ஆதிக்கமும் ஒழிந்து போவதோடு தூது செல்வதல்லாமல் மற்றெவ்வித உத்தியோகத் திற்கும் அவர்கள் அருகர்களாக மாட்டார்கள். ஆதலால், ஆங்கிலப் பள்ளிக் கூடத்தை ஒழிக்கவும், பார்ப்பனக் காங்கிரஸ், பார்ப்பன சுயராஜ்யக் கக்ஷி ஒருநாளும் சம்மதிக்காது.

தற்கால கோர்ட்டுகள்

கோர்ட்டுகள் ஒழிந்தால் பார்ப்பன அதிகாரத்திற்கும் ஆதிக்கத்திற்கும் போக போக்கியத்திற்கும் எவ்வளவு ஆபத்து ஏற்படும் என்பதை நாம் சொல்ல வேண்டியதே இல்லை. படித்தவர்களான பார்ப்பன உத்தியோகஸ் தர்களும் பார்ப்பன வக்கீல்களும் பிழைப்பதற்காக கோர்ட்டுகளேயொழிய பொதுமக்களுக்கு நியாயம் வழங்கவோ விவகாரத்தை ஒழிக்கவோ ஏற்பட்ட தல்ல என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. ஆதலால் கோர்ட்டுகள் ஒழியும் படியான சுயராஜ்யம் வர ஒரு க்ஷணம்கூட நமது பார்ப்பனக் காங்கிர சும் பார்ப்பன சுயராஜ்யக் கட்சியும் சம்மதிக்கவே சம்மதிக்காது.

மதுவிலக்கு

கோர்ட்டுகள் இருந்தாலும் அதற்கு சதா வேலை கொடுக்கத்தக்க மதுபானம் ஒழிந்து விட்டால் கலகங்கள் ஏற்படுமா? கக்ஷிப் பிரதி கக்ஷிகள் ஏற்படுமா? மதுபானக் கடை போர்டு பலகைகள் ஒழிந்தால் அந்த நிமிஷத் திலேயே வக்கீல் போர்டு பலகைகளும் எடுபட்டுப் போகும் என்பதும் உத்தி யோக அளவும் குறைந்து விடும் என்பதும் உலகம் ஒப்புக் கொள்ளப்பட் டதுதான். ஆதலால் பார்ப்பனக் காங்கிரசோ பார்ப்பன சுயராஜ்யக் கக்ஷி யோ மதுவிலக்கைக் கனவிலும் ஒப்புக் கொள்ளாது.

கதர்

நமது நாட்டுச் செல்வம் கோடி கோடியாய் வெளிநாட்டுக்குக் கொள்ளை போய், நமது ஏழை மக்களையும் தொழிலின்றிப் பட்டினி போட்டு வைப்பதற் காதாரமான அந்நியத் துணி, யந்திரத் துணி முதலியவை ஒழியத் தக்க கதர்த் திட்டம் நிறைவேறினால் கொள்ளை கொள்ளும் அந்நிய அரசாங் கத்தார் ஆதிக்கம் இங்கு நிலைபெறவே பெறாது. அந்நிய அரசாங்கம் இல்லா விட்டால் பார்ப்பன ஆதிக்கம் நிலைத்திருக்க முடியவே முடியாது. ஆதலால் கதர் திட்டத்தையும் பார்ப்பனக் காங்கிரசோ பார்ப்பன சுயராஜ்யக் கட்சியோ ஒப்புக்கொள்ள முடியவே முடியாது.

ஜஸ்டிஸ் கட்சி

அதுபோலவே பார்ப்பனர் கோரும்படியான சுயராஜ்யம் ஏற்படு வதை பார்ப்பனரல்லாத மக்கள் கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சி ஒரு நாளும் சம்மதிக்காது. ஏனெனில் பார்ப்பனர் கோரும் சுயராஜ்யமெல்லாம் முன் சொன்ன மகாத்மா சுயராஜ்யக் கொள்கையை அடியோடு ஒழித்து விடுவதல் லாமல் பார்ப்பனர்கள் பிழைக்கத் தகுந்த மாதிரி பல உத்தியோகங்களும் பதவி களும் சம்பாதிப்பதுடன் பார்ப்பனர் ஆதிக்கம் நிலைத்திருத்தத்தக்க திட்டங் களையே வைத்துக் கொண்டிருப்பதும் அல்லாமல் பார்ப்பனரல்லா தார் விடுதலைக்கும் சுயமரியாதைக்கும் விரோதமாக முட்டுக்கட்டை போடுவ தையே கொள்கையாகவும் வைத்திருப்பதால் பார்ப்பனரல்லாத மக்கள் கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சி இதை ஒருநாளும் அனுமதிக்காது என்று சொன்னோம். ஆனாலும் பார்ப்பனரல்லாதார் கட்சி ஏற்பட்டதின் பின்னால் பார்ப்பனரல்லாதார் சமூகங்களுக்கு சமத்துவம் சுயமரியாதை என்கிற துறைகளில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை பிரத்தியக்ஷத்தில் பார்க்கலாம்.

ஜஸ்டிஸ் கட்சியால் ஏற்பட்ட பலன்

ஜஸ்டிஸ் கட்சி என்று ஒரு கட்சி ஏற்பட்டிராவிடில் ஹைகோர்ட் ஜட்ஜுகளில் இன்றைய தினம் ஐந்து ஜட்ஜுகள் அதாவது ஸ்ரீமான்கள் கனம் சி. கிருஷ்ணன் ``தீண்டாத வகுப்பைச் சேர்ந்தவர்,’’ தேவதாஸ் கிறிஸ்த வர், வெங்கிடுசுப்பராவ் ஆந்திர தேசத்து கோமட்லு செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர், மாதவன் நாயர் மலையாள நாயர் வகுப்பு, சுந்தரம் செட்டியார் தமிழ்நாடு கோமட்லு வகுப்பு ஆகிய ஐந்து பார்ப்பனரல்லாத கனவான்கள் ஹைக்கோர்ட் ஜட்ஜுகளாக முடியுமா?

ஐஸ்டிஸ் கட்சி இல்லாத காலத்தில்

ஸ்ரீமான் சங்கரன் நாயர் அவர்களை அவரது சாமர்த்தியத்தை மெச்சி சர்க்காரர் ஹைகோர்ட் ஜட்ஜு பதவிக்கு சிபார்சு செய்த காலத்தில் நமது பார்ப்பனர்கள் ஒன்று கூடி சூத்திரனுக்கு ஹைகோர்ட் ஜட்ஜு பதவி கொடுத்து விட்டால் தாங்கள் அவரை ‘பிரபுவே’என்று கூப்பிடவேண்டி இருக்கு மென்றும், அந்த ஜட்ஜு அதிகாரத்தால் பல பார்ப்பனரல்லாதாரை முனிசீப்பு களாக்கி விடுவார்கள் என்றும், பிறகு அந்த முனிசீப்புகளைத் தாங்கள் ‘எஜமானே’, ‘சமூகமே’ என்று கூப்பிட வேண்டி வருமே என்றும், இவர்கள் செல்வாக்கால் பல பார்ப்பனரல்லாத வக்கீல்கள் தோன்றி தங்கள் தொழிலுக் குப் போட்டி போட வந்து விடுவார்கள் என்றும் கருதி காலஞ் சென்ற கன வான்களாகிய பாஷ்யம் ஐயங்கார், கஸ்தூரி ரங்கய்யங்கார் முதலிய பார்ப்பனர் கள் கவர்னரை நேரில் பார்த்தும், சீமைக்குத் தந்தி கொடுத்தும், சர்.சங்கர நாயருக்குக் கிடைக்க வேண்டிய உத்தியோகத்தை வெகு காலம் தடைப் படுத்தி வைத்திருந்தமை உலகமறிந்த இரகசியம். நமக்கு இந்த இரகசியத்தை ஒரு பார்ப்பனக் காங்கிரஸ் தலைவர்தான் முதன்முதல் சொன்னார்.

வகுப்புவாரி உரிமை

ஜஸ்டிஸ் கட்சி இல்லாவிட்டால் சென்னை அரசாங்க நிர்வாக சபையில் மாதம் 5000, 6000 ரூபாய் சம்பளம் வாங்கத்தக்க நிர்வாக சபையில் மெம்பராக கனம் அபீபுல்லா, கனம் மகம்மது உஸ்மான் ஆகிய இரண்டு மகம்மதியர்கள் வர முடியுமா? சென்னை சட்ட சபைக்கு மாதம் 2000 ரூ. சம்பளம் வாங்கத்தக்க ஒரு கிறிஸ்தவர் தலைவராக வரமுடியுமா? ஸ்ரீமான்கள் சுப்பராய ரெட்டியார், ராமராய நிங்கார், கே.வி. ரெட்டி நாயுடு, பாத்ரோ, சிவஞானம் பிள்ளை முதலிய பார்ப்பனரல்லாதார்கள் மந்திரிகளாக வரமுடியுமா? ஸ்ரீமான்கள் எம்.ஸி. ராஜா, மருதபிள்ளை, ஆர். வீரய்யன், குருசாமி முதலிய (பஞ்சமர் என்று பார்ப்பனர் களால் சொல்லப்பட்ட) கனவான்கள் சட்டசபை மெம்பராக வந்திருக்க முடியுமா? ஸ்ரீமான்கள் சர்.ஆர். வெங்கிட்டரத்தினம், சி. ஆர். ரெட்டி முதலியவர்கள் µ 2000 ரூ. சம்பளம் வாங்கத் தகுந்த கல்வி இலாக்கா வைஸ் சான்சலராக வந்திருக்க முடியுமா? ஸ்ரீமான் ஜே. வெங்கிட்ட நாராயண நாயுடு கார்ப்பரேஷன் கமிஷனராக வந்திருக்க முடியுமா? ஜஸ்டிஸ் கட்சியே இல்லாதிருக்கும் பட்சத்தில் நமது பார்ப்பனர்கள் ³ நாயுடுகாரை உத்தி யோகத்தில் வைத்திருப்பார்களா? ஸ்ரீமான் சண்முகம் செட்டியார் ஏகாதிபத் திய பார்லிமெண்டு மகாநாட்டுக்கு ஆஸ்திரேலியாவுக்குப் போயிருக்க முடியுமா?

சர்க்கார் உத்தியோகம்

இப்பொழுது அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் இவ்வளவு எண்ணிக்கை உள்ள பார்ப்பனரல்லாத கலெக்டர்கள், ஜட்ஜுகள், சப் ஜட்ஜு கள், முனிசீப்புகள், டிப்டி கலெக்டர்கள், தாசில்தார்கள், மேஜிஸ்திரேட்டுகள், சூப்பிரண்டுகள், டெப்டி சூப்பிரண்டுகள், சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், உயர்பதவி இஞ்சினீர்கள், டாக்டர்கள் ஆகிய அதிகார மும் செல்வாக்குமுள்ள உத்தியோகங்கள் பார்ப்பனரல்லாதாருக்குக் கிடைத்திருக்குமா?

ஸ்தல ஸ்தாபனம்

இன்னமும் ஜில்லா போர்டு தாலூக்காபோர்டு மெம்பர்கள், பிரசி டெண்டுகள், முனிசிபல் சேர்மென்கள், கவுன்சிலர்கள், பெஞ்சி மேஜிஸ் திரேட்டுகள், žயூனியன் சேர்மென்கள், பிரசிடெண்டுகள் ஆகியவர்கள் இவ்வளவு பார்ப்பனரல்லாதார்கள் வந்திருக்க முடியுமா? ஜஸ்டிஸ் கட்சியே இல்லாதிருக்குமானால்.

அரசியல் தலைவர்கள்

அரசியல் சங்கங்களிலாவது ஸ்ரீமான்கள் டாக்டர் வரதராஜுலு நாயுடு, கலியாணசுந்திர முதலியார், தண்டபாணி பிள்ளை, சிங்காரவேலு செட்டியார், பாவலர், குப்புசாமி முதலியார், அண்ணாமலை பிள்ளை, வெங்கிடு கிருஷ் ண பிள்ளை, ராமசாமி நாயக்கர், சக்கரை செட்டியார், மயிலை ரத்தினசபாபதி முதலியார், முனுசாமி கவுண்டர், அமீத்கான் சாயபு, ஷாபி மகம்மது சாயபு, மாரிமுத்து பிள்ளை முதலிய எத்தனையோ கனவான்கள் தலைவர்களாகவும் தொண்டர்களாகவும் வந்திருக்க முடியுமா? முடியுமென்று சொல்லுவார் களானால் ஜஸ்டிஸ் கட்சி இல்லாதபோது ஐந்தைந்து வருஷம் ஜெயிலுக்குப் போன உண்மையான தேசபக்தர்களான ஸ்ரீமான் வ.உ.சிதம்பரம்பிள்ளை முதலிய கனவான்கள் உண்மையான தேசத் துரோகிகளான பல பார்ப்பனர் கள் மூட்டை தூக்கியும், அவர்களை ‘சுவாமிகளே’ என்று கூப்பிட்டுக் கொண்டும், அவர்கள் வாலைப் பிடித்து திரிந்தால் மாத்திரம் வாழும் படியான நிலைமையில் இருக்கவில்லையா? அவர்களைவிடவா இந்தக் கனவான்கள் அதிகமான தேசபக்தி, தியாகம், கஷ்டம், சிறைவாசம் முதலியவைகள் உடைத்தானவர்கள்.

ஒத்துழையா மனப்பான்மை

ஆனால் இதுகளினால் மக்களுக்கு என்ன லாபம்? தேசத்திற்கு என்ன லாபம்? என்று சிலர் கேட்கலாம். இந்தக் கேள்வி ஒத்துழையா மனப்பான்மை கொண்டவர்கள் கேட்கத்தக்கதுதான். ஆனால் நாம் இவைகளை அவர்களுக் குச் சொல்லவில்லை. இந்த ஸ்தானங்களுக்கும் உத்தியோகத்திற்கும் மதிப்பு கொடுக்கும் பார்ப்பனரல்லாத மக்களுக்கே சொல்லுகிறோம். ஒத்துழையாதா ருக்கும் ஒன்று சொல்லுகிறோம். ஜஸ்டிஸ் கட்சி இல்லாதிருந்தால் இந்தப் பதவியும் அதிகாரமும் ஆயிரக்கணக்கான சம்பளமும் பார்ப்பனருக்குப் போயிருக்குமா? பார்ப்பனரல்லாதார்களுக்குக் கிடைத்திருக்குமா? 10 வருஷ காலமாய் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டு எவ்வளவு கஷ்டம், நஷ்டம், சூழ்ச்சியும், விபூஷணாழ்வார்கள் துரோகமும், கோடாரிக் காம்புகள் கொடுமையும் ஆகிய முதலியவை மலிந்து அதன் கடமையைச் செய்ய விடாது தடுத்தும் இதுவரை அதனால் ஏற்பட்டிருக்கும் நன்மைகள் இவைகளானால் இக்கொடுமைகளும் சூழ்ச்சிகளும் இல்லாதிருந்தால் எவ்வளவு நன்மைகள் உண்டாகி இருக்கும்?

எல்லாவற்றிற்கும் மேற்பட்ட நன்மை

 நன்மையோ தீமையோ எது எப்படியிருந்தாலும் இந்து மத பரிபாலன மசோதா என்னும் தேவஸ்தான உரிமை மசோதாவும், மலை யாளக் குடிவார மசோதா என்னும் மலையாளப் பெண்கள் கற்பைக் காக்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டதானது தமிழ் மக்கள் லக்ஷக்கணக்கான பேர் பிராணனைக் கொடுத்தாலும் கோடிக் கணக்கான பொன் திரவியத்தைக் கொடுத்தாலும் சாதிக்க முடியுமா? இதன் அருமை இவ்விரண்டு தத்துவங் களிலும் பார்ப்பனர்கள் இதுவரை செய்து வந்த அக்கிரமங்களை அறியத் தகுந்த கவனிப்பாளர்களுக்குத் தான் தெரியுமே அல்லாமல் மற்றவர்களுக்கு விளங்காது. ஆதலால், ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி நமது பார்ப்பனர்கள் தூற்றுவதும் ஆட்களை விட்டு திட்டச் செய்வதும் அக்கக்ஷியின் உழைப் பினால் பார்ப்பனரல்லாதார்களுக்கு ஏற்படும் நன்மைகளை ஒழிப்பதற்கும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு பங்கமில்லாமல் பார்த்துக் கொள்வதற்காகவே இவ்வளவு பிரயத்தனங்களும் சூழ்ச்சிகளும் செய்கிறார்களேயொழிய வேறில்லை. இவற்றை நமது மக்கள் அறியாமலும், அறிந்தும் பலர் லட்சியமில்லாமலும், லட்சியமிருந் தாலும் தங்கள் சுயநலத்தைக் கருதியும் பார்ப்பனர்களுக்கு ஆளாயிருந்து இவ்வளவு முக்கிய மானதும் அவசிய மானதுமான இயக்கத்திற்கு விரோதமாய்ப் பார்ப்பனர் செய்யும் சூழ்ச்சி களுக்கு துணை நிற்கிறார்கள்.

ஜஸ்டிஸ் கக்ஷி அரசியல் உரிமைக்கு விரோதமா?

பலர் இக்கட்சியை வெகு சுலபமாக அரசியல் உரிமைக்கு விரோத மான கட்சி என்று சொல்லி பாமர மக்களை ஏமாற்றி விடுகிறார்கள். அரசியல் உரிமைக்கு எக்கட்சியாவது அநுகூலமாய் உழைக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா? அரசியல் உரிமை என்றால் என்ன? என்றாவது யாரா வது இதுவரை பாமர மக்களுக்கு தெரிவித்திருக்கிறார்களா? முதலாவது, சுய ராஜ்யம் என்றாலாவது என்ன என்று எந்த தலைவர்களாவது தேசீயப் பத்திரிகைகளாவது விளக்கியிருக்கின்றனவா? படித்தவர்கள் உத்தியோக மும், பதவியும், பணமும் சம்பாதிப்பதுதானே சுயராஜ்யமாகவோ அரசியல் தந்திரமாகவோ விளங்கி வருகிறது.

காங்கிரஸ்

காங்கிரஸ் ஏற்பட்ட காலம் முதல் கொண்டு நாளது வரை (மகாத்மா காங்கிரசாகிய 2, 3 வருஷம் காங்கிரஸ் போக) காங்கிரசின் மூலம் மக்கள் அடைந்த நன்மை என்ன? காங்கிரஸ் ஏற்படுவதற்கு முன்னால் இந்திய மக்கள் அரசாங்கத்தாருக்குச் செலுத்தி வந்த வரியைவிட இப்போது மூன்று பங்கு வரிகள் அதிகமாய்ச் செலுத்துகிறார்கள். அதாவது காங்கிரசுக்கு முன் அரசாங்கத்திற்கு மக்கள் செலுத்திய வரி 50 கோடி ரூபாயைவிட குறைந்தது இப்போது காங்கிரசின் பலனாகவும் சீர்திருத்தங்களின் பலனாகவும் அரசாங் கத்திற்கு மக்கள் செலுத்த வேண்டி ஏற்பட்ட வரி 150 கோடி ரூபாயை விட அதிகமானது. காங்கிரசுக்கு முன்னால் நமது மக்கள் குடித்துக் கொண்டிருந்த கள்ளு சாராயத்தை விட காங்கிரசும் அதன் பலனாய் ஏற்பட்ட சீர்திருத் தத்திற்கு பின்னால் ஒன்றுக்கு 10 பங்கு குடி அதிகமாகிவிட்டது. அதாவது காங்கிரசுக்கு முன்னால் சர்க்காருக்கு கள், சாராயம் முதலிய விற்பனையில் கிடைத்த ரூபாய் 2 கோடி. காங்கிரசுக்கும் அதன் பலனாய் ஏற்பட்ட சீர்திருத் தங்களுக்கும் பின்னால் சர்க்காருக்கு கள், சாராயம் முதலிய விற்பனையில் கிடைக்கும் ரூபாய் 20 கோடி. காங்கிரசுக்கு முன்னால் நமது நாட்டில் ஏற்பட்டிருந்த கோர்ட்டுகளுக்கும் உத்தியோகங்களுக்கும், காங்கிரசுக்குப் பின்னால் ஏற்பட்ட உத்தியோகங்களுக்கும் கணக்குப் பார்த்தால் ஒன்றுக்கு நான்கு ஐந்து ஆகி விட்டது. அதாவது, காங்கிரசுக்கு முன் ஒரு ஜில்லாவுக்கு 2 முனிசீப்பு கோர்ட்டுகள் இருந்திருந்தால் காங்கிரசுக்கும் சீர்திருத் தத்திற்கும் பின்பு 8,10 முனிசீப்பு கோர்ட்டுகளாகி விட்டன. ஒரு ஜில்லா வுக்கு 2 உதவிக் கலெக்டர்கள் இருந்தால் இப்போது 5, 6 உதவிக் கலெக்டர் களாக உயர்வு ஆகிவிட்டது. காங்கிரசுக்கு முன்பு இருந்த சம்பளத்தைவிட ஒன்றுக்கு இரண்டு மூன்று பங்கு வீதம் உயர்ந்து விட்டது.

காங்கிரசுக்கு முன்னால் நமது நாட்டுத் தொழிலாளிகளுக்கு இருந்த தொழில்களில் 8 -ல் ஒரு பங்கு கூட காங்கிரசுக்குப் பின்னால் கிடையாது. காங்கிரசுக்கு முன்னால் இருந்த செல்வமும் செழிப்பும் இப்போது மறைந்து போய் காங்கிரசும் சீர்திருத்தமும் ஏற்பட்ட பிறகு தரித்திரமும் பட்டினியும் அதிகமாகி விட்டது. ஆனால் காங்கிரசுக்கு முன் விளைந்த விளை பொருள்களை விடவும் அதன் விலைகளை விடவும் ஒன்றுக்கு மூன்றாய் விளை பொருள்கள் விளைந்தும் தரித்திரமாகி விட்டது. காங்கிரசுக்கு முன்னால் நமது பணம் எவ்வளவு வெளிநாட்டுக்குப் போய்க் கொண்டிருந்ததோ அதைவிட பதின்மடங்கு காங்கிரசுக்குப் பின்னால் துணிக்கும் மற்ற சாமான் களுக்குமாக வெளிநாட்டுக் குப் போகிறது. தேசத்தில் காங்கிரசுக்கு முன் இருந்த ஒற்றுமை அடியோடு கலைந்துபோய் இந்து, மகம்மதிய, கிறிஸ்தவ மத விரோதங்களும், இந்துக் களுக்குள் பிராமணர் - பிராமணரல்லாதார் விரோதங்களும், பிராமணர்களுக் குள் ஐயங்கார் ஸ்மார்த்தர் மாத்துவர் என்கிற விரோதமும், அய்யங்காரில் வடகலை தென்கலை விரோதங்களும், இதுபோலவே பார்ப்பனரல்லாதாருக் குள் ஆந்திர தேசத்தான், தமிழ்நாட் டான், கேரளத்தான் என்கிற பாகுபாடும், தமிழ்நாட்டாருக்குள் பிராமணரல் லாதாரிலேயே திராவிடர் - ஆதிதிராவிடர் என்கிற வித்தியாசமும் இன்ன மும் எத்தனையோ பாகுபாடும், அபிப்பிராய பேதமும் வளர்ந்து விட்டன. காங்கிரசுக்கு முன் தாய் பிள்ளைகள் பந்துக்கள் போல பழகி வந்த ஒரு கிராமத்தார் காங்கிரசும் அதன் பலனாய் ஏற்பட்ட சீர்திருத்தத்தின் மூலம் உண்டான தேர்தல் (எலக்ஷன்)களால் கிராமங்களுக் குள் கட்சியும், அண்ணன் தம்பிகளுக்குள் விரோதமும், குடும்பங்களில் கலகமும் உண்டாயிருக்கின்றன. காங்கிரசுக்கு முன்னால் அதிகாரிகளிடத்தி லும் மக்களிடத்திலும் இருந்த நாணயமும் கண்ணியமும் காங்கிரசுக்குப் பின்னால் அடியோடு மாறி ஹைகோர்ட்டு முதல் கிராமாதிகாரி கோர்ட்டு வரை லஞ்சம் வாங்குவதைப் பற்றி அதிகாரிகள் அருவருக்காமலும் மக்கள் கொடுப்பதற்கு பின்வாங்காமலும் ஏற்பட்டுப் போய் விட்டது. காங்கிரசுக்கு முன் இருந்த நீதிக்கும் நிருவாகத்திற்கும் காங்கிரசுக்குப் பின்னால் ஏற்பட்ட நீதிக் கும் நிருவாகத்திற்கும் மலையும் சமுத்திரமும் போன்ற வித்தியாசமேற் பட்டு விட்டது. பணக்காரனுக்கு எவ்வித தீர்ப்பு வேண்டுமானாலும் கிடைக்கத் தக்கதாகவும் ஏழைகளுக்கு நீதி என்பதே குதிரைக் கொம்பாக வும் போய் விட்டது.

எந்த விதத்தில்

எந்த விதத்தில் காங்கிரசினாலும் அது பெற்றெடுத்த சீர்திருத் தங்களி னாலும் மக்கள் அநுகூலமடைந்திருக்கிறார்கள் என்று யாராவது சொல்ல முடியும்? அறியாமையின் பலனாகவும் மாயையின் பலனாகவும் நமக்குப் பல நன்மைகள் ஏற்பட்டிருப்பதாய்ச் சொல்லும் காரியங்கள் எல்லாம் தேசத்தின் கெடுதிக்கும் மக்களின் தரித்திரத்திற்கும் ஆதார மாயிருக்கிறதே அல்லாமல் ஊன்றிப் பார்த்தால் கடுகளவு நன்மையும் ஏற்பட்டதில்லை.

உண்மையாய் காங்கிரசினால் ஏற்பட்ட லாபம் என்னவென்றால்

                காங்கிரசினால் ஏற்பட்ட உண்மையான லாபம் என்னவென்றால் காங்கிரசுக்கு முன்பு பிச்சையெடுத்த பார்ப்பனனும், தூது சென்ற பார்ப்பன னும், பஞ்சாங்கம் சொல்லி வயிறு வளர்த்த பார்ப்பனனும் காங்கிரசின் பலனாய் வைசிராய் நிருவாகசபை மெம்பர், கவர்னர் நிருவாகசபை மெம்பர், கலெக்டர், மாதம் 10,000, 20,000 சம்பாதிக்கத்தக்க வக்கீல்கள், ஜமீன்தாரர்கள், திவான் பகதூர், சர், மகா மகாகனம் முதலிய பட்டங்கள், பெரிய பெரிய பங்களாக்கள், மோட்டார் வண்டிகள், செலூன், முதல் வகுப்பு இரண்டாவது வகுப்பு பிரயாணம், அவரவர்கள் பெண்டு பிள்ளைகள் 1,000, 10,000 பெறத்தக்க வயிர ஓலை, அட்டிகை, காப்பு, வளையல்கள் , 100, 200 பெரும் படியான சேலைகள், 30,40 பெறும்படியான ரவிக்கைகள் அணிவது முதலியது களோடு, திருடினாலும், குடித்தாலும், சூதாடினாலும், விபசாரத்திற்கு தரகு வாங்கினாலும், விபசாரத்தால் கால் கை அழுகினாலும் தங்களை பிராமணர் கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளுவதைப் பலப்படுத்திக் கொள்ளவுமான காரியங்களுக்கு உபயோகப்பட்ட தல்லாமல்,

மற்றும்

காங்கிரசுக்கு முன்னாலும் ஆங்கிலேயர் இந்நாட்டுக்கு வருவதற்கு முன்னாலும் அரசர்களாகவும், ஜமீன்தாரர்களாகவும், பாளையக்காரர்களாக வும், பாரம்பரியமாய் பெருங்குடி மக்களாகவும் வாழ்ந்து வந்தவர்கள் காங்கிரசின் பலனாய் பிற்பட்ட வகுப்பார்களாகவும், பங்கா இழுப்பவர் களாகவும், கூலிகளாகவும், கூலி கூட கிடைக்காமல் வெளி நாடுகளுக்கு வயிறு பிழைக்க பெண்டு பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு குடிபோகவுமான நிலைமைக்கு வந்திருக்கிறார்கள்.

ஆதலால்

ஆதலால் பார்ப்பனரல்லாத மக்களே காங்கிரஸ் என்னும் மாய வலை யில் சிக்கி பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதார் சமூகம் இதுவரை அழிந்த தும் அழுத்தப் பட்டதும் போதாமல் இனியும் தாழ்ந்து பார்ப்பனர்களால் மிதிபட்டு அழிந்து போகாமல் தற்காத்துக் கொள்ள வேண்டியது உங்கள் ஒவ்வொருவருடையவும் கடமையாகும். இது வரை ஏமாந்து வந்திருப் பதைக் கொஞ்சமாவது கவனித்து பார்ப்பனரல்லாதார் நிலைமை காங்கிர சுக்கு முன் எப்படியிருந்தது காங்கிரசுக்குப் பின் எப்படியிருக்கிறது, நம் நாட்டுப் பார்ப்பனரின் நிலைமை காங்கிரசுக்கு முன் எப்படியிருந்தது காங்கிரசுக்குப் பின் எப்படியிருக்கிறது என்று பழம்பெரும் அனுபவசாலி களைக் கேளுங் கள். நானும் தேசபக்தன் என்று சொல்லும் வயிற்றுப் பிழைப்புக் கத்துக்குட்டி களை நம்பி மோசம் போகாதீர்கள்.

டாக்டர் நாயர் பெருமான் மகாத்மா காந்தி

டாக்டர் நாயர் பெருமானைவிட நீங்கள் பெரிய தேசபக்தர்கள் என்றா வது அநுபவசாலிகள் என்றாவது, மகாத்மா காந்தியைவிட பெரிய தியாகி கள் என்றாவது காங்கிரஸ் பக்தர்கள் என்றாவது நினைத்துக் கொள்ளாதீர்கள். டாக் டர் நாயர் ஏன் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பார்ப்பனரல்லாதார் கட்சி ஏற்படுத்தினார் என்பதை நன்றாக யோசித்துப் பாருங்கள். பணத்திற்கா, உத்தியோகத்திற்கா, பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையைக் காக்கவா என்பதை யோசியுங்கள். மகாத்மா காந்தி ஏன் காங்கிரஸ் நிர்வாகத்திலிருந்து விலகி ராட்டினம் சுற்றுகிறார். அவரைவிட நீங்களும் இந்தப் பார்ப்பனர் களும் அதிக ராஜீய ஞானம் உடையவர்களா? சட்டசபை மூலம் அரசியல் நன்மை ஏற்படுமானால் மகாத்மா சும்மா இருப்பாரா என்பதை யோசியுங் கள். கண்டிப்பாய் பார்ப்பனர் சட்டசபைக்குப் போவது பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கே அல்லாமல் வேறல்ல! வேறல்ல!! வேறல்ல வேயல்ல!!!

பார்ப்பனரல்லாதார் (ஜஸ்டிஸ் கட்சியார்) சட்டசபைக்குப் போவது பார்ப்பனரல்லாதார் நன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் அவர்களது சுய மரியாதையைக்காக்கவுமே அல்லாமல் சர்க்காருக்கு அநுகூலத்திற்காக அல்லவே அல்ல! அல்லவே அல்ல!! அல்லவே அல்ல!!! இது சத்தியம். சர்க்காருக்கு உதவியாகவும், ஒத்துழைப்பாளராகவும், ஒற்றர்களாகவும் இருப்பது பார்ப்பனர்களே தான்! பார்ப்பனர்களே தான்!! சத்தியமாய் பார்ப்பனர்களேதான்!!!

முடிவுரை

நாளது நவம்பர் µ 8 ² வரப் போகும் சட்டசபைத் தேர்தல்களில் ஓட்டுப் போட இஷ்டமிருந்தால் உங்கள் மனதை உறுதிப்படுத்திக் கொண்டு பார்ப்பனரல்லாதாருக்கே ஓட்டுப் போடுவதென்று முடிவு செய்து கண்டிப்பாய் பார்ப்பனருக்கோ அவரால் நிறுத்தப்பட்டிருக்கும் காங்கிரசு சுயராஜ்யக் கட்சி என்று சொல்லும் ஆட்களுக்கோ ஓட்டுப் போடுவதில்லை என்று சத்தியம் செய்துகொண்டு உங்கள் இனத்தார்களையும் நண்பர் களையும் இம்மாதிரி செய்யும்படி தூண்டி பார்ப்பனரல்லாத கட்சியாகிய சுயமரியாதைக் கட்சிக்கு வெற்றி கொடுத்துப் பார்ப்பனரல்லாதாரின் சுயமரியாதையைக் காக்க பிரார்த்திக்கிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 31.10.1926)

Pin It