வரப்போகும் தேர்தலில் பார்ப்பனர்களின் வெற்றியும் தோல்வியும் ஸ்ரீமான்கள் பனகால் ராஜா, ஏ.ராமசாமி முதலியார் ஆகிய இருவர்களின் வெற்றியையும் தோல்வியையும் பொறுத்திருப்பதாகவே நமது பார்ப்பனர் கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கனவு கண்டு கொண்டு லக்ஷக்கணக்கான ரூபாய்களையும் சர்வப் பிரயத்தனத்தையும் இதற்காகவே செலவழித்து வருவ தோடு பஞ்சதந்திரங்களையும் செய்து வருகிறார்கள். அல்லாமலும், மற்ற இடங்களிலும் தங்கள் கட்சி ஆட்களே வெற்றி பெறுவதற்காக ஓட்டர் களை ஏமாற்றும் பொருட்டு பனகால் ராஜா தேர்தலில் தோற்றுவிட்டா ரென்றும், ஸ்ரீமான் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வெற்றிபெற்றுவிட்டா ரென்றும், மற்றும் பல விடங்களில் பார்ப்பனக் கட்சியே வெற்றிபெறுமென் றும், ஆதலால் அல்லாடி அவர்களே அடுத்த தடவைக்கு முதல் மந்திரியாக நியமிக்கப்படப் போகிறாரென்றும் பொய்க் கட்டுகள் கட்டிவிட்டுப் பஞ்சாங் கப் பார்ப்பனர், காபி ஓட்டல் பார்ப்பனர், வக்கீல் குமாஸ்தா பார்ப்பனர், பரிசாரகப் பார்ப்பனர் முதல் கொண்டு எல்லா பார்ப்பனர்களும் திண்ணைப் பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆனால் இவ்வித திண்ணைப் பிரசாரங்களுக்கெல்லாம் பார்ப்பனரல்லாத ஓட்டர்கள் மாறிவிடுவார்கள் என்று நினைப்பது கனவாகவே முடியும்.

periyar 341தற்காலம் சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரையில் தேர்தல் முடிவுகள் சென்ற தேர்தலில் அதாவது சென்ற மூன்று வருஷ காலமும் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு எவ்வளவு பலமிருந்ததோ அதைவிட அதிக மாகவே குறிப்பிடத்தக்க பலமிருக்குமென்றே சொல்லத்தகுந்த மாதிரிக்கே வெற்றி கிடைக்குமென்றே சொல்லலாம். உதாரணமாக, ஆந்திர மாகாணத்தில் எவ்வளவு குறைந்தாலும் சென்ற வருஷத்தை விட சுமார் 10 ஸ்தானங் களுக்குக் குறையாமலே ஜஸ்டிஸ் கட்சிக்கு முன்னிலும் அதிக மான நபர்கள் வெற்றி பெறுவார்கள் என்கிற உறுதி ஏற்பட்டு விட்டது.

தமிழ்நாட்டிலும் ஆந்திர நாட்டைப் போல் அவ்வளவு அதிகமான நபர்கள் முன்னிலும் அதிகமாய் வெற்றிபெறுவது சந்தேகமேயானாலும், குறைந்தது 3, 4 நபர்களாவது அதிகமாக வெற்றி பெறுவதில் ஆnக்ஷபணை யில்லை. உதாரணமாக, கோயமுத்தூர் ஜில்லாவில் சென்ற தேர்தலில் சுயராஜ்யக் கட்சிக்கு மூன்று மெம்பர்கள் அநுகூலமாய் வெற்றி பெற்றார்கள். இவ் வருஷமோ ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார் ஒருவர்தான் பார்ப்பனக் கட்சியின் சார்பாக நிற்கிறார். அவருக்கு வெற்றி கிடைப்பது இப்போது பெரிய சந்தேகத்தில் வந்துவிட்டது. மீதி இரு ஸ்தானங்களில் வெற்றி பெறுகிறவர்களில் ஒருவர் கண்டிப்பாய் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந் தவர். மற்றவரும் ஜஸ்டிஸ் கட்சி கொள்கையையே உடையவர். எப்படியா னாலும், சுயராஜ்யக் கட்சி என்கிற பார்ப்பனக் கட்சிக்கு 2 ஸ்தானம் இழக்கப் பட்டுப் போய்விட்டது என்பதும், ஒன்று கஷ்டத்தில் இருக்கிறது என்பதும், ஜஸ்டிஸ் கட்சி என்கிற பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு 2 ஸ்தானம் கூடுதல் என்பதும் உறுதியாகி விட்டதென்றே சொல்லலாம் .

இதுபோலவே தஞ்சை ஜில்லாவிலும் சென்ற தேர்தலில் பார்ப்பனக் கட்சிக்கே மூன்று ஸ்தானங்களும் அநுகூலமாக வெற்றி பெற்றிருந்தன. இவ்வருஷம் ஒரு ஸ்தானமாவது கிடைக்குமா வென்பதே சந்தேகமாயிருக் கிறது. அந்த ஜில்லாவிலுள்ள மூன்று ஸ்தானங்களுக்கு பார்ப்பனக் கட்சியின் சார்பாய் நிறுத்தப்பட்டிருந்த மூன்று கனவான்களுமே தங்களுக்குக் கிடைப்பது சந்தேகம் என்பதாய் கருதி தனித்தனியாய் கட்சியின் பெயரை விட்டுவிட்டு பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஸ்ரீமான் முத்தையா முதலியாரவர்கள் தேர்தல் அறிக்கையில், காங்கிரசைப் பற்றியாவது சுயராஜ்யக் கட்சியைப் பற்றியாவது ஒரு வார்த்தைகூட குறிப்பிடவேயில்லை. தவிர பார்ப்பனக் கட்சித் தலைவர்களான ஸ்ரீமான்கள் எ. ரெங்கசாமி அய்யங் கார், ஸ்ரீநிவாச அய்யங்கார் அவர்களும், ஸ்ரீமான் முத்தையா முதலியார் அவர்களின் பேரில் சந்தேகப்பட்டுக் கொண்டு ஸ்ரீமான்கள் சிவசுப்பிரமணிய அய்யருக்கும் மருதவாணம் பிள்ளைக் குமே ஓட்டுப் போடும்படிக் கேட்டு வருகிறார்கள். ஸ்ரீமான் முத்தையா முதலியாரும் தனக்குக் கட்டுப் பட்ட இடத்தில் தனி ஓட்டுகளே கிடைக்கும் படியாகவும் மற்றவிடத்தில் தனக்கு ஒரு ஓட்டு போட்டு விட்டு மற்றவை களை வேறு யாருக்கு வேண்டுமா னாலும் போட்டுக் கொள்ளுங்கள் என்றும் வேலை செய்து வருகிறார். அவர் வெற்றி பெற்றாலும் கண்டிப்பாய் பார்ப்பனர் கட்சியுடன் சேருவதில்லை யென்றே சொல்லி விட்டார். மற்ற இருவர்களோ ஸ்ரீமான் குன்னியூர் அய்யர் என்கிற கனவான் தனக்கு ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி என்கிற கவலையற்று இருக்கிறார். ஸ்ரீமான் மருதவாணம் பிள்ளையோ சென்ற வருஷத்தில் செலவு செய்ததில் 4-ல் ஒரு பாகம்கூட இவ்வருஷம் செல ழிக்க மனமில்லாதவராய் நடக்கிறபடி நடக்கட்டும் என்றிருக்கிறார்கள்.

மற்றபடி பார்ப்பனரல்லாத கட்சியைச் சேர்ந்த இரண்டு கனவான்களும், அதாவது ஸ்ரீமான்கள் பூண்டி வாண்டையார், நெடும்பலம் முதலியார் ஆகிய இருவர்கள் ஒற்றுமையாகவே வேலை செய்கிறார்கள். எவ்விதத்திலும் இவ்விருவருக்கும் வெற்றிக் குறிகள் வெளிப்படையாயிருக்கின்றன. ஏனெ னில் இவ்விருவர் களும் மற்ற அபேக்ஷகர்களைவிட பணக்காரர்கள். அதா வது ஒருவருக்கு சுமார் 1000 வேலியும் மற்றவருக்கு சுமார் 500 வேலியும் நிலம் உண்டு. அல்லாமலும் சென்ற தேர்தலில் செலவு செய்து சலிப் படையாதவர்கள். தங்கள் தங்களுக்கு கட்டுப்பட்டது என்று சொல்லும் படியாக தனித்தனியாய் 2, 3 தாலுக்காக்களில் செல்வாக்குள்ளவர்கள். தனி வோட்டுகள் வேண்டுமானால் 10,000 கணக்கான ஓட்டுகள் பெறக் கூடிய வர்கள். அல்லாமலும் நமது பார்ப்பனர்களின் வார்த்தையைக் கேட்டு அரசியல் கட்சிகளின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு இதுவரை எவ்வித நாணயக் குறைவான பெயர்களும் அடைந்தவர்களல்ல. தஞ்சை ஜில்லா விலுள்ள பார்ப்பனரல்லாதார் கட்சியைச் சேர்ந்த ஜில்லா போர்டு பிரசி டெண்டு நான்கைந்து தாலூக்காபோர்டு பிரசிடெண்டுகள் மற்றும் பல பெரிய கனவான்கள் ஆகியவர்கள் எல்லாம் இவ்விருவர்களுக்கே வேலை செய் கின்றார்கள். ஆதலால் இவர்களுக்கே வெற்றி கிடைப்பது உறுதியென்றே சொல்லி விடலாம். அதிலும், ஸ்ரீமான் வாண்டையாருக்கு இப்பொழுதே எழுதி வைத்து விடலாம். சுயேச்சைவாதியென்று சொல்லப்பட்ட ஸ்ரீமான் நாடிமுத்துப் பிள்ளை அவர்களுக்கும் வெற்றிக் குறிகள் பலமாகக் காணப் படுகின்றன.

பார்ப்பனரல்லாதார் கட்சி அபேக்ஷகர்களும் தங்களுக்கு இரண்டு ஓட்டுப்போக பாக்கியை ஸ்ரீமான் நாடிமுத்துப் பிள்ளைக்கே போடும் படி பிரசாரம் செய்கிறார்கள். ஸ்ரீமான்கள் மருதவாணம் பிள்ளை, குன்னியூர் அய்யர் ஆகிய இருவர்களும் தங்களுக்கு இரண்டு ஓட்டுப் போட்டு, மீதியை ஸ்ரீமான் நாடிமுத்துப் பிள்ளை அவர்களுக்கே போடும்படி சொல்லுகிறார்கள். ஸ்ரீமான் முத்தையா முதலியாரும் ஸ்ரீமான் நாடிமுத்துப் பிள்ளைக்கு அநுகூலமாயிருப்பதன் மூலம் அவருடைய சகாயமும் பெறலாமென்று கருதி அவருக்கு அநுகூலமாயிருக்கிறார். ஆகவே, பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு இரண்டு ஸ்தானமும், சுயேச்சைக் கட்சி என்கிற ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளைக்கு ஒரு ஸ்தானமும்தான் கிடைக்கும். இதில் ஏதாவது தவறும் பட்சத்தில் ஒரே ஒரு ஸ்தானம் தான் மாறலாம். அதுவும் இப்போது சுயராஜ்யக் கட்சி என்னும் பார்ப்பனக் கட்சியிலிருந்து பிரிந்திருக் கும் ஸ்ரீமான் முத்தையா முதலியாருக்குத் தான் கிடைக்கலாம். அது தவறும் பக்ஷம் ஸ்ரீமான் மருதவாணம் பிள்ளைக்கு கிடைக்குமேயல்லாமல் கண்டிப் பாய் அய்யருக்கு கிடைக்காது. அந்த ஜில்லாவைப் பொறுத்தவரை பார்ப்பன ரல்லாதார் என்கிற வகுப்பு உணர்ச்சி அவ்வளவு நன்றாக விளங்குகிறது. ஆதலால் சென்ற வருஷத்தைவிடப் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு அதிக ஸ்தானங்களே கிடைக்கும்.

இதுபோலவே மற்ற ஜில்லாக்களிலும் இதை அனுசரித்தேதான் இருக் கிறது. அல்லாமலும் சென்ற இரண்டு தேர்தல்களிலும் பார்ப்பனர்கள் வார்த் தையை நம்பி ஏமாந்து போனவர்களும், தங்கள் நன்மையையும் நல்ல பெய ரையும் கெடுத்துக் கொண்ட பலருக்கு இவ்வருஷம் புத்தி வந்துமிருக்கிறது. ஆதலால் எவ்வகையிலும் பார்ப்பனக் கட்சி தலையெடுப்பதற்கு இடமில் லாமல் இருப்பதோடு பார்ப்பனரல்லாதார் கட்சி மேலும் மேலும் உரம் பெற்று வருகிறது.

தவிர, பனகால் ராஜா விஷயத்தில் வெற்றிக்கு எவ்விதத்திலும் சந்தேக மேயில்லை. இதுவரை பதிவுசெய்து அனுப்பியிருக்கும் ஓட்டுக் களிலேயே மெஜாரிட்டி ஏற்பட்டிருப்பதாகவே தக்க ஆதாரத்தின் மீது நம்பத் தகுந்த இடத்திலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

ஸ்ரீமான் ஏ. ராமசாமி முதலியாரைப் பற்றியோவென்றால் வெற்றி யைப் பற்றி எவ்விதத்திலும் ஆnக்ஷபணை சொல்வதற்கே சிறிதுமிட மில்லை. ஆனால் பார்ப்பனர்களுக்கு சூழ்ச்சியும், தந்திரமும் , வஞ்சகமும் கூடிய பிரசாரங்கள் செய்வதற்கு பல வழிகளில் சவுகரியமிருந்தது. அதுபோன்ற சவுகரியங்கள் பார்ப்பனரல்லாதாருக்கு இல்லை. உதாரணமாக, பார்ப்பனர் தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்று தெரிந்தாலும் பனகால் ராஜா, ஸ்ரீமான் ராமசாமி முதலியார் போன்றவர்கள் வெளியிடங்களுக்குப் போய் பிரசாரம் செய்வதற்கில்லாமல் அவர்கள் தொகுதிகளில் எதிர் அபேக்ஷகர்களை நிறுத்தி இவ்விருவர்களையும் அவரவர்கள் தொகுதி யிலேயே கட்டிப்போட்டு விட்டார்கள். ஆனால் தாங்கள் மாத்திரம், அதாவது ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார் இருவரும் தங்களது சூழ்ச்சிகளால் போட்டியின்றி தெரிந்தெடுக்கத்தக்க மாதிரி ஏற்பாடு செய்து கொண்டு மற்றத் தொகுதிகளில் பார்ப்பனரல்லாதாருக்கு எதிராய்ப் பிரசாரம் செய்யத்தக்க இடம் செய்து கொண்டார்கள். அல்லாமலும், தேர்த லுக்கு சவுகரியமாய் தங்கள் ஆதிக்கத்தில் உள்ள இலாக்கா உத்தியோகஸ்தர் களை ஆங்காங்கு மாற்றி பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் இரகசிய பிரசாரம் செய்ய சவுகரியம் செய்து கொண்டார்கள். தவிர செலவு செய்யவும், காங்கிரஸ் பணம், மடாதிபதிகள் பணம், மகந்துகள் பணம் முதலிய பல பொதுப் பணங்கள் லட்சக்கணக்காய் இவர்களுக்கு கிடைத்திருக்கிறது.

செல்வாக்கு பெற்று விட்ட பத்திரிகைகளாகிய ‘இந்து’, ‘சுதேசமித்திரன்’, ‘சுயராஜ்யா’ முதலிய பத்திரிகைகளும் அவர்கள் சுவாதீனத்தில் இருக்கின் றன. மற்றும் ஒவ்வொரு ஜில்லாவிலும் ஒவ்வொரு பார்ப்பனப் பத்திரிகையும் இருக்கிறது. பார்ப்பன ரல்லாத பல பத்திரிகைகளையும் விலை கொடுத்தும், மிரட்டியும், கட்டிப் போட்டுவிட்டார்கள். இவ்விரண்டிலும் கட்டுப்படாத பார்ப்பனரல்லாதார் பத்திரிகைகளிலும் ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு பார்ப்பன ஒற்றர்களை அனுப்பித் தங்களுக்கு அநுகூலமாய் திருப்பி விட்டார்கள். மிகுதியும் பார்ப்பனரல்லாதார் கஷ்ட நஷ்டங்களாலும், தியாகத் தாலும் செல்வாக்கு பெற்றுவிட்ட காங்கிரஸ் முதலிய தேசீய இயக்கங்கள் என்பனவற்றையும் கைப்பற்றி மற்றவர்கள் உள்ளே Žநுழையாதபடி முற் றுகை போட்டுக் கொண்டார்கள். காங்கிரசின் மூலம் பொது ஜனங்களுக்கு அறிமுகமான தொண்டர்களையும் அவர்களது வயிற்றுக் கொடுமையின் காரணமாக பலவழிகளிலும் தங்களுடைய அடிமைகளாக்கிக் கொண்டார் கள். இனியும் இதில் எழுதத்தகாத பல வழிகளிலும் செல்வாக்குள்ளவர்கள் பிரபலஸ்தர்கள் என்கிற பேர் வழிகளையும் உள் சட்டப்பையில் போட்டிருக்கிறார்கள். இவ்வளவு சவுகரியங்கள் பார்ப்பனர்களுக்கு இருந்தும் ஒரு மயிர்க்காலாவது தங்கள் தங்களது நிலையை இருப்பிடத்தை விட்டு அசைக்க முடியாமல் போய் விட்டதோடு பார்ப்பனரல்லாதார் எவ்வளவோ முன்னுக்கு வர சவுகரியமும் ஏற்பட்டிருப்பதைப் பார்க்கும்போது நமது நாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட்டு விட்ட தென்றேதான் சொல்லவேண்டும்.

ஆதலால், பார்ப்பனர்களின் திண்ணைப் பிரசாரத்தை யாரும் நம்பி மோசம் போக வேண்டாம் என்று வேண்டிக் கொள்வதோடு எவ்விதத்திலும் பார்ப்பனர் தங்கள் கட்சி வெற்றி பெறுமென்று காணும் அவர்களது கனவு பலிக்காதென்றே உறுதி கூறுவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 31.10.1926)

Pin It