வாசர்:- என்ன மூர்த்தி! இந்தத் தடவை சட்டசபை எலக்ஷன் நிரம்பவும் மோசமாய் முடியும் போலிருக்கின்றதே என்ன செய்வது?
மூர்த்தி :- ஏன் இந்த மாதிரி நினைக்கின்றீர்கள்? நமக்கென்ன குறைவு? காங்கிரசு இருக்கின்றது. காந்தி இருக்கின்றார். தவிர எல்லோரையும் விட வெகு தீவிரக்காரர்களாக வேஷம் போட்டுக் கொண்டு பூரண சுயேச்சை கேட்கின்றோம். இவைகள் தவிர சைமன் பகிஷ்காரத்தின் மூலம் நாம் பெரிய அமிதவாதிகளாகி இருக்கின்றோம். இவ்வளவு சங்கதிகள் நமக்கு அனுகூல மாயிருக்கும்போது நாம் ஏன் எலக்ஷன் விஷயத்தில் பயப்பட வேண்டும்?
வாசர்:- இதெல்லாம் இனி நடவாது. காங்கிரஸ் சாயம் வெளுத்துப் போச்சுது. இனி யாரும் காங்கிரஸின் பேரால் ஏமாறுவார்கள் என்று எதிர்பார்ப்பது முதுகில் ஒரு கை முளைக்க வைத்தியம் செய்து கொள்ளுவது போல் தான் முடியும். உதாரணம் வேணுமானால் ஒரு இரகசியம் சொல்லுகின்றேன் கேள்! நமது மிஸ்டர் சி.வி. வெங்கட்ட ரமணய்யங்கார் அசம்பளிக்கி நிற்கிறார். அவர் காங்கிரஸ் பேரால் நிற்க முடியாது என்று சொல்லிவிட்டு தனியாக நிற்கிறார் பார். நான் நேரில் கேட்டுக் கொண்டு கூட அவர் காங்கிரஸ் பேர் சொன்னால் இனி ஓட்டுக் கிடைக்காது என்று வெளிப்படையாய்ச் சொல்லி விட்டு ஜஸ்டிஸ் கக்ஷிக்காரர்களிடம் போய் தொங்கிக் கொண்டிருக்கிறார். இதிலிருந்தே காங்கிரசிற்கு எவ்வளவு யோக்கியதை என்பதைத் தெரிந்து கொள்.
மூர்த்தி:- சரி காந்தி இருக்கின்றாரல்லவா?
வாசர் :- அதுவும் இனி நடவாது. அவருக்கு ஆந்திர நாட்டில் ஏதாவது செல்வாக்கு இருக்குமோ என்னமோ தெரியவில்லை, தமிழ்நாட்டில் அவர் பாச்சா இனி பலிக்காது. ஆதலால் அவரை நம்புவதிலும் பயனில்லை.
மூர்த்தி :- பூரண சுயேச்சை, சைமன் பகிஷ்காரம் இவைகள் இருக்கின்றனவே?
வாசர் :- பூரண சுயேச்சை நாறிப் போய் விட்டது, சைமன் பகிஷ்காரமோ உதையும் அடியும் படாமல் தப்பித்துக் கொண்டால் போதும் என்கின்ற நிலைக்கு வந்து விட்டது. இவையெல்லாம் உனக்குத் தெரியாதா என்ன?
மூர்த்தி :- சரி, இவைகள் தான் போகட்டும், வழக்கம்போல் நம்மகூட ஆள்களும் பத்திரிகைகளும் உண்டல்லவா? அவர்கள் எப்படியும் நம்முடன் இருந்து நமக்கு வெற்றி சம்பாதித்துக் கொடுக்க வேண்டியது அவர்களது சுமையல்லவா?
வாசர் :- எல்லா பத்திரிகைகளின் யோக்கியதையும் போய் விட்டது. எல்லா கூலி ஆட்களின் யோக்கியதையும் கெட்டுப் போய் விட்டது. இனி எவன் இருக்கின்றான், முன் போல நமக்கு பாடுபடுவதற்கு? எல்லோரும் திருட்டுப் பயல்களாகி விட்டார்கள். அங்கும் வாங்கிக் கொள்ளுகின்றார்கள். இங்கும் வாங்கிக் கொள்ளுகின்றார்கள். நம்மிடம் ஒன்று பேசுகின்றார்கள். அவர்களிடம் ஒன்று பேசுகின்றார்கள். யாரையும் நம்புவதற்கில்லை பத்திரிகைகாரர்களும் ஒரு நாளைக்கு அவர்களை வைவதும் ஒரு நாளைக்கு நம்மை வைவதுமாகி யாதொரு நிலையும் இல்லாமல் போய் செல்வாக்கும் இல்லாமல் போய் விட்டது. நாமாவது ஒரு பத்திரிகை வாங்கி நடத்தலாம் என்றால் அதற்கும் நாட்டில் ஆதரவு கிடைப்பது கஷ்டமாயிருக்கின்றது. எப்படியும் இந்தத் தடவை நமது பாடு சற்று கஷ்டம் தான் என்று எனக்கு தோன்றுகின்றது.
மூர்த்தி :- நீங்கள் இப்படி எல்லாம் நினைத்து மனதை விட்டு விடாதீர்கள், தைரியமாயிருங்கள். எப்படியாவது வேலை செய்யலாம்.
வாசர் :- எப்படி வேலை செய்வது? நான்தான் எல்லாவற்றையும் பார்த்துதானே சொல்லுகின்றேன். இந்த ஒரு வருஷமாய் எல்லாத் தேர்தலிலும் அவர்களே வெற்றி பெற்று வருவதும், அவர்களுக்கு எதிரிடையாக கேண்டிடேட் போடக்கூட நமக்கு ஆளில்லாமல் திண்டாடி அன்அப்போஸ்டாய் விட்டு விட்டதும் அவர்களுக்குள்ளாகவே கட்சி உண்டாக்கலாம் என்று பார்த்தாலும் முடியாமல் போவதும் நாம் பார்த்துத்தானே வருகின்றோம்.
மூ:- என்ன இருந்தாலும் தாங்கள் பயப்பட வேண்டியதில்லை. நான் சில ஆசாமிகளிடம் கலந்தேன். அவர்கள் நமக்குத் தைரியம் சொல்லி இருக்கின்றார்கள்.
வா :- அது யார் சொல் பார்ப்போம்.
மூ:- மிஸ்டர் நமது அருமை முதலியார் மற்றும் அவர் மாதிரியே இன்னும் ஒன்று இரண்டு ஆசாமி ஆகியவர்களைப் பார்த்தேன்.
வா :- அவர்கள் என்ன சொன்னார்கள்?
மூ:- அவர்களும் தாங்கள் சொன்னது போல்தான் காங்கிரசு முதலிய நமது பழைய சூழ்ச்சி ஸ்தாபனங்களுக்கு மதிப்புப் போய் விட்டதென்றும். ஆனாலும் வேறு வழியில் ஏதாவது வேலை செய்யலாம் என்றும், ஆனால் அதற்குக் கொஞ்சம் செலவு அதிகம் பிடிக்குமென்றும், முன் போன்ற கூலிகளைப் பிடித்தால் முடியாதென்றும் வேறு மாதிரி ஆட்களைப் பிடிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள்.
வா:- அது என்ன? சொல் பார்ப்போம்.
மூ :- அதுவா? சென்ற தேர்தலில் ஒரு தந்திரம் செய்தோமே. அதாவது அவர்கள் தேவஸ்தான சட்டம் செய்ததால் மதத்தில் கை வைத்து விட்டார்கள், மதத்தில் சர்க்காரைப் பிரவேசிக்கச் செய்து விட்டார்கள் என்று கூப்பாடு போட்டோமே, அதுபோல் இந்தத் தேர்தலுக்கும் ஏதாவது தந்திரம் செய்யலாம் என்றும் அதாவது சுயமரியாதை இயக்கம்தான் ஜஸ்டிஸ் இயக்கம் என்றும் சுயமரியாதை இயக்கம் நாஸ்திக இயக்கம், அது மதத்தையும், மதப் பெரியார்களையும் வைவதுடன் ‘கடவுள் இல்லை’ என்று சொல்லுகின்றது என்றும் பிரசாரம் செய்வதன் மூலம் பாமர மக்களை ஏமாற்றி ஒரு விதத்தில் ஓட்டு வாங்கி விடலாம் என்றும், ஆனால் அதற்கு, முன்னைய கூலிகள் மாதிரி ஆட்களை வைத்தால் பொது ஜனங்கள் காது கொடுக்க மாட்டார்கள் என்றும், சற்றாவது தமிழ், புராணம், கதை முதலியவைகளில் பரிச்சயமுள்ளவர்களாக பார்த்துப் பிடித்து அவர்களுக்குப் பண்டிதர்கள், பக்திவான்கள், சமய அபிமானிகள் என்று பெயர் கொடுத்து பிரசாரத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும், ஆனால் அவர்கள் முன் போல் மாதம் 20, 30க்கு வர மாட்டார்கள் என்றும் குறைந்தது 50 ரூபாயும் செலவும் கொடுக்க வேண்டும் என்றும் இந்தப்படி செய்வதானால் தம்மிடத்தில் சில ஆட்கள் இருப்பதாகவும் தாமும் ஊர் ஊராய்ச் சுற்றுவதாகவும் தமது பத்திரிகையையும் இதற்கே விட்டு விடுவதாகவும் சொன்னார்கள்.
வா :- செலவைப் பற்றி கவலையில்லை காங்கிரஸ் பணந்தானே. நமக்கு என்ன நஷ்டம்? வேண்டுமானால் மதத்தையும் கடவுளையும் காப்பாற்ற வேண்டியது காங்கிரசின் கடமை என்று காங்கிரஸ் கமிட்டியில் (வர்க்கிங் கமிட்டியில்) ஒரு தீர்மானம் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த ஆசாமிகள் பிரளாமல் கட்டுப்பாடாய் இருப்பார்களா? என்பதுதான் பயமாயிருக்கின்றது. ஏனெனில் இவர்களை நான் நன்றாய் அறிந்தவன்.
மூ:- அதைப் பற்றி தாங்கள் பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், இந்த ஆட்களை இனி அவர்கள் கண்டிப்பாய் சேர்க்க மாட்டார்கள். ஆதலால் இவர்களுக்கு நம்மைவிட வேறு கதியில்லை. அதோடு அவர்களது சுயநலத்திற்கும் அனுகூலமாகின்றது. ஆகையால் இதுதான் நமக்கு அனுகூலம். வேறு யாதொரு மார்க்கமும் இல்லை.
வா:- சரி, அப்படியே செய்வோம். அந்த ஆட்களை நான் வரச் சொன்னதாக உடனே ஒரு ஆள் அனுப்பு. மேலும் சுயமரியாதை இயக்கத்தை வைத்துக் கொண்டு அவர்கள் நமக்கு எப்படி வேலை செய்ய முடியும்?
மூ:- எப்படி இது தங்களுக்கு தெரியாதா? சுயமரியாதை இயக்கத்துக்காரர்கள் மீது ஏதாவது பழியைப் போட்டு “ஆதலால் ஜஸ்டிஸ் கட்சிக்கு ஓட்டுக் கொடுக்காதீர்கள்” என்று சொல்ல வேண்டியதுதானே! அதெல்லாம் அவர்களைச் சேர்ந்தது. நமக்கு ஏன் அந்தக் கவலை. நாம் ஒப்பந்தம் பேசிக் கொள்ள வேண்டியது, அவர்கள் எப்படியாவது வேலை செய்ய வேண்டியது அவ்வளவுதான். ஏனென்றால் சென்ற தேர்தலில் மிஸ்டர் கல்யாணசுந்தர முதலியார், மிஸ்டர் ராமசாமி முதலியாருக்கு விரோதமாய் செங்கற்பட்டு ஜில்லாவில் நமக்காகப் பிரசாரம் செய்யும் போது “குழந்தைகள் சாகின்றன; அரிசி ரூபாய்க்கு இரண்டு படியாகி விட்டது. இந்தியரின் சராசரி வயது 23 ஆகி விட்டது. ஆதலால் ராமசாமி முதலியாருக்கு ஓட்டு செய்யாதீர்கள்” என்று சொல்லவில்லையா? அதுபோல் ஏதோ அவர்கள் பாமர மக்களை ஏமாற்றத் தக்கபடி சொல்லிக் கொள்ளுவார்கள். அவர்களுக்கு இம்மாதிரி காரியங்களில் எவ்வளவோ அனுபோகம் உண்டு. ஆதலால் அவர்களை நாம், நம்பித்தான் ஆக வேண்டும் வேறு கதியில்லை. நிற்க, இதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்று கருதித்தான் முன்னமேயே மிஸ்டர் கல்யாணசுந்தர முதலியாரைப் பிடித்து “ஆஸ்தீக சங்கம்” என்று ஒன்று ஏற்படுத்தி, அதற்கு நமது பழைய ஆசாமிகளையே அதாவது மெஸ்ஸர்ஸ் ஜயவேலு, குழந்தை, பாவலர், ஷாபி மகமது, சாயபு முதலிய ஆசாமிகளையும் மற்றும் சில புதிய நபர்களையும் சேர்த்து விட்டு வேலையும் துவக்கி ஆய்விட்டது. இதை அனுசரித்து சட்ட சபையிலும் சரமாரியாக கேள்விகளும் கேட்டாய் விட்டது. ஆதலால் இதுதான் சரியான மார்க்கமாகும். நாமும் இனிமேல் வீண் சங்கதி அதாவது சுயராஜ்ஜியம், பூரண சுயேச்சை ஆகிய பேச்சுகளைப் பேசாமல் மதம் போச்சு, கடவுள் போச்சு என்று கத்த வேண்டியதுதான். அதற்கேற்றபடி தேவாரம், திருவாசகம் ஆகியவைகளிலும் சில பாட்டுகள் பாடம் செய்து கொண்டேன். தாங்களும் பிரபந்தத்தில் சில பாட்டுகள் பாடம் செய்து கொள்ளுங்கள். மீட்டிங்கில் இவைகளைச் சொல்லிக் கண்களில் நீர் வடியவைத்து தேம்பித் தேம்பி அழுது கொண்டுதான் இனி பிரசங்கம் செய்ய வேண்டும். ஆதலால் தயவு செய்து மனதை விடாமல் தைரியமாயிருங்கள்.
வா:- என்னமோ அப்பா! இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்துல்காதர் சாயபுக்கும் ஆடி அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் என்று ஜனங்கள் கவனிக்க மாட்டார்களா? சுயமரியாதை இயக்கத்திற்கும் சட்டசபை ஓட்டுக்கும் என்ன சம்பந்தம் ஏற்படும்? எப்படி ஆனாலும் சரி, அதையும் பார்த்து விடுவோம், அந்த ஆசாமிகள் வந்தார்களா?
மூ:- இராத்திரிக்கு வருகிறார்களாம்.
வா:- ஏன் இப்பொழுது வருவதற்கென்ன?
மூ:- வீதியில் யாராவது பார்த்து கொள்வார்களாம். ஆதலால் இராத்திரிக்கு முக்காடு போட்டுக் கொண்டு வருவார்கள்.
வா:- சரி அவர்கள் வரும்போது நீயும் வா பேசலாம்.
மூ:- ஆகட்டும் போய்வருகிறேன்.
('சித்திரகுப்தன்' என்ற பெயரில் பெரியார் எழுதியது. குடி அரசு - உரையாடல் - 21.04.1929)