சட்டசபைத் தேர்தல்களின் முடிவானது தமிழ்நாட்டில் நாம் எதிர்பார்த்ததற்குச் சிறிது மாறாய் ஏற்பட்டு இருக்கிறது. ஆனபோதிலும் இதில் ஒன்றும் ஆச்சரியப்படத்தக்கதில்லை. பாமர மக்களுக்கு போதுமான அறிவு உண்டாகும்படி செய்வதற்கு முந்தி அவர்கள் வசம் ஓட்டு என்னும் ஆயுதத்தைக் கொடுத்த பிறகு அது அவர்களையே கெடுத்துக் கொள்ள உபயோகப் படுத்தப்பட்டால் அதற்காக யாரும் ஓட்டர்களைக் குற்றம் சொல்ல முடியாது. எனினும் இதுவரை வெளிவந்திருக்கும் தேர்தல் முடிவு களின்படி பார்ப்பனரல்லாதார் பயப்படத்தக்க மாதிரி ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை. பொதுவாக நாம் சட்டசபை மூலம் அரசியல் சம்பந்தமான ஒரு காரியத்தையும் செய்து கொள்ள முடியாது என்று அநேக தடவைகளில் எழுதியும் பேசியும் வந்திருப்பது வாசகர்களுக்கு நன்றாய்த் தெரியும்.
பார்ப்பனரல்லாதார் சமூக சம்பந்தமாக பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்கு பார்ப்பனரல்லாதார் செய்யும் முயற்சிக்கு பார்ப்பனர்கள் சட்டசபையின் மூலம் இடையூறு உண்டாக்காமல் இருக்கச் செய்யலாம் என்கிற ஒரே எண்ணத்துடன் மாத்திரம் சட்டசபையில் நம்பிக்கை உள்ளவர்களை இன்ன கொள்கைக்காரர்களுக்கு ஓட்டுச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண் டோமே தவிர இன்னும் சுயராஜ்யமோ சுயமரியாதையோ சட்டசபையில் கிடைத்துவிடும் என்பதற் கல்ல. எந்த விதத்திலும் சென்ற தேர்தல் முடிவைவிட இத்தேர்தல் முடிவு அதிகமான பார்ப்பனர்களை சட்டசபைக்கு தெரிந்தெடுத்து அனுப்பிவிட வில்லை. இரண்டாவது பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை விஷயத்திலாவது வகுப்புவாரி உரிமை பெறும் விஷயத் திலாவது அதிகமான எதிரிகள் சட்ட சபைக்கு தெரிந்தெடுக்கப்பட்டு விட்டார்கள் என்றும் சொல்லி விடுவதற்கு மில்லை.
உத்தியோக ஆசையின் காரணமாகவும் சுயநலத்தின் மூலமாகவும் பல பார்ப்பனரல்லாதார் தாங்கள் தெரிந்தெடுக்கப்படுவதற்கு பார்ப்பனர்களின் உதவியை நாடியே தீர வேண்டியதாயிற்று. ஏனெனில் ஓட்டர்களோ பாமர ஜனங்கள்; மொத்தத்தில் 100-க்கு 75 பேருக்கு மேலாகவே ஓட்டுரிமை இன்னதென்றறியாத அப்பாவிகள்; அதில் பலர் ஓட்டுக்களை சுயநலத்திற்கும் பண விலைக்கும் விற்க வேண்டிய அவசியமுடையவர்கள். இவை இரண்டுமல்லாமலும் எப்படி நமது மக்களின் 100-க்கு 90 பேருக்கு மேல் மோக்ஷம், புண்ணியம், தருமம் என்று 1000-க்கணக்கான வருஷங்களாக வைதீகத்தில் பார்ப்பனர்களுக்கு அடிமையாகி அறிவிலிகளாய் மூட நம்பிக்கையில் கட்டுண்டு இருக்கின்றார்களோ அது போல் காங்கிரஸ், சுயராஜ்யம், வரி குறைவு, அரிசி ரூபாய்க்கு 8 படி என்கிற லௌகீக ‘அறிவீனத்’திலும் பேராசையிலும் சுமார் 40 வருஷ காலமாய் முழுகி இருக்கிறவர்கள்.
அது மாத்திரமல்லாமல் மேல்படி வைதீகத்தின் பேரால் பார்ப்பனர் தங்கள் வயிறு வளர்க்க ஏற்படுத் தப்பட்ட வேதம், சாஸ்திரம், புராணம் என்பவைகளை தங்களுக்கே பொய் புரட்டு என்று தெரிந்திருந் தாலும் அவைகளை பாடம் பண்ணிக்கொண்டும் வைதீக வேஷம் போட்டுக் கொண்டும் பாஷாண்டிகளாய் புராணப் பிரசங்கம் செய்து கொண்டும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்து வயிறு வளர்த்து கீர்த்தி சம்பாதித்துக் கொண்டு சில பார்ப்பனரல்லாதார்கள் திரிவது போலவே இந்த லௌகீகத்திலும் காங்கிரஸ், சுயராஜ்யம், உரிமை, தேசம், தேசியம், சர்க்காரை எதிர்த்தல், அரசாங்கத்தைத் தகர்த்தல், முட்டுக் கட்டை ஆகிய சொற்களை சொல்லிக்கொண்டு சாண் வயிறு வளர்க்கவும் பொய்ப் புகழ் சம்பாதிக்கவும் திரியும் ஒரு போலி அரசியல் பாஷாண்டிக் கூட்டத்தார் பார்ப்பனரல்லாதாரி லேயே உண்டு. பெரும்பாலும் சமூகத்திற்கும் நாட்டிற் கும் கேட்டை வளர்க்கும் பார்ப்பனீயத்திற்கும் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் ஆதி முதல் இன்றுவரை உதவி செய்து வந்து நமது சுயமரியாதையை ஒழித்தவர்கள் இப் பாஷாண்டிக் கூட்டத்தாரேயாவர். ஒரு காலத்தில் மகாத்மா ஒத்துழையாமை யை குலைத்தது சுயராஜ்யக் கட்சியல்ல.
ஒத்துழையாமை யில் ஒரு காலும் சுயராஜ்யக் கட்சியில் ஒரு காலும் வைத்துக் கொண்டு “ஒத்துழையாமை தான் தேசத்திற்கு விடுதலை அளிக்க வல்லது, சுயராஜ்யக் கட்சிதான் தீவிரமான தேசீய கொள்கை உடையது” என்று சொல்லிக் கொண்டு இருதலைப் பாம்புகளாய் வாழ்வை நடத்திய வெளவால் கட்சி யார்களால்தான் ஒத்துழை யாமை ஒழிந்தது என்று சொன்னது போல் இப்போது பார்ப்பனரல்லாதார் சமூக சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் இந்த பாஷாண்டிகளே காரண மாயிருக்கிறார்கள் என்று சொல்வது மிகை யாகாது. இவ்வித பல நிலைமை கள் பார்ப்பனர்களுக்கு அநுகூலமாய் இருப்பதோடு இவைகள் அனைத் தையும் தங்களுக்கு ஒழுங்காய் உப யோகப்படுத்திக் கொள்ள சகல வசதியும் உடைத்தாயிருக்கிறார்கள்.
முதலாவது அவர்கள் பிறரை ஏமாற்றியே பிழைக்க வேண்டிய யோக்கியதையில் பாரம்பரியமாய் தலைமுறை தலைமுறையாய் இருந்து வருவதால் ஏமாற் றத்தக்க வழிகள் இன்னதென்றும் அதற்குற்ற சாதனங்கள் இன்னதென்றும் அறிந்திருப்பதோடு இத்தொழிலில் கைதேர்ந்த அநுபவமும் ஆற்றலுமுடையவர்களாகவும் நம்மில் பல பாஷாண்டிகளை எப்படி தங்கள் வசமாக்கி நம்மை ஏமாற்றச் செய்யலாம் என்கிற வகை தெரிந்தவர்களாகவும் இருக்கி றார்கள். அதற்கேற்றார்போல் நமக்கு ஏற்பட்ட அரசாங்க வர்க்கத்தாரும் அவர்களைப்போலவே மக்கள் அறிவீனத்தினா லேயே பிழைக்கத்தக்க வர்க்கமாக அமைந்து அறிவீனத்தை வளர்த்துக் கொண்டே வந்திருக்கிறார் கள். வியாஜ்ஜியக்காரர்களை ஏமாற்ற எப்படி வக்கீலும் அவர்களது (டவுட் கள்) புரோக்கர்களும் ஒன்று சேருகிறார்களோ!
வாலிபர்களை ஏமாற்ற எப்படி வேசிகளும் அவர்களது தரகர்களும் ஒன்று சேருகிறார்களோ அது போலவே நமது மக்களை ஏமாற்ற அரசாங்க வர்க்கத்தாரும் பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்து நமது பாஷாண்டிகளது உதவியால் நமது அறிவீனத்தை வளர்க்க வேண்டியதாயிற்று. ஆனபோதிலும் நமது நிலை முன் தேர்தல் காலத்தில் இருந்ததை விட இந்த தேர்தலின் பலனாய் ஒன்றும் பிற்போக்கடைந்து விடவில்லை. முன் தேர்தலை விட இப்போது சில ஸ்தானங்கள் நமது கொள்கையில் லக்ஷியமில்லாதார் வசம் போய்விட்டது என்று சொல்லுவதானால் அது வெறும் மாய்கைதானே ஒழிய அதனால் நமது முற்போக்குக்கு ஒன்றும் அதிகமான கெடுதி ஏற்பட்டு விடாது. நல்ல அறிவோடு யோசித்துப் பார்த்தால் நமது முற்போக்குக்கு நன்மை என்றே சொல்லலாம். அதாவது இத்தேர்தல் முடிவு மூலம் நமக்கு உள்ள குறை என்ன என்பதை உணரவும், அதை திருத்த ஊக்கத்தோடு முயலவும் இத் தேர்தல் முடிவு தூண்ட ஏற்பட்டது.
உத்தியோகம் பெறுவது மாத்திரம்தான் பார்ப்பன ரல்லாதார் கட்சியின் கொள்கை என்பது வாஸ்தவமானால் மாத்திரம் இத் தேர்தலால் பார்ப்பனரல்லாதாருக்கு தோல்வி என்று சொல்லலாம். பார்ப்பன ரல்லாதார் சுயமரியாதைக்கும் முற்போக்குக்கும் இக் கட்சி ஏற்பட்டது என்று சொல்லுவதானால் தேர்தல் முடிவு பார்ப்பனரல்லாதா ருக்கு அநுகூலம் என்றே சொல்லுவோம். இதுதேர்தல் முடிவைப் பார்த்த பிறகு சீ! புளிக்கும் என்று சொல்வதல்ல. தேர்தல் முடிவுக்கு முன்பே இதை நினைத்தோம். உதாரணமாக சென்ற மாதக் கடைசியில் சேரமாதேவியில் ஸ்ரீமான்கள் ஜோசப், எஸ். ராமநாதன், ராய சொக்கலிங்கம், காசி விஸ்வ நாதம், பிச்சயப்பா, சுப்பிரமணியம் முதலிய பல முக்கியஸ்தர்கள் கூடி பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையைப் பற்றியும் முற்போக்கைப்பற்றியும் பேசி அதற்காக என்ன செய்வது என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டி ருந்த சமயத்தில் நமது சமூகத்திற்கு முற்போக்கேற்பட அறிகுறி வேண்டு மானால் வரப் போகும் தேர்தலில் பனகால் அரசரும் ராமசாமி முதலியாரும் மற்றும் இரண்டொரு வரும் ஆகிய சக்தியும், அறிவும், ஊக்கமும் உள்ள குறிப்பிட்ட 10 கனவான்களுக்காவது தோல்வி ஏற்பட வேண்டும் என்றும் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி முதன் மந்திரியாகவும் ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய் யங்கார் இரண்டாவது மந்திரியாகவும், ஜனாப் அமீத்கான் மூன்றாவது மந்திரியாகவும் வரவேண்டுமென்றும் பிரார்த்தித்தோம்.
கோவையில் பனகால் அரசர் வெற்றிக் கூட்டத்திலும் இந்தக் கருத்தை வெளி யிட்டிருக்கிறோம். ஆதலால் இம்முடிவைக் கண்டு பார்ப்பனரல்லாத பிரமுகர்களோ, வாலிபர் களோ, தொண்டர்களோ மனச்சலிப்புக் கொள்ளக் கூடாது. இம்முடிவு நாம் செய்கிற வேலைக்கும் செய்யப் போகும் வேலைக்கும் வழியை ஒழுங்கு படுத்தி இருக்கிறது. மக்களின் அறியா மையை விளக்கதக்க சமயமாயும் ஏற்பட்டிருக்கிறது. பார்ப்பனரல்லாத மக்களுக்காக தியாகம் செய்யத் தயாராயிருப்பவர்களையும் பார்ப்பனரல்லாதார் கட்சி உத்தியோகத்திற்கு ஏற்பட்டதா அன்றி உண்மையாக அச்சமூகத்தின் முற்போக்குக்காக ஏற்பட்டதா என்று பரீக்ஷிப்பதற்கும் ஒரு உரைக்கல்லாய் இருக்கிறது. ஸ்ரீமான்கள் ராமசாமி முதலியார், தணிகாசலம் செட்டியார், நடேச முதலியார் போன்ற பார்ப்பன ரல்லாதார் கட்சித் தலைவர் களின் சமூக பக்தியைப் பொது ஜனங்கள் அறி வதற்கு ஒரு அவகாசமும் கிடைத்திருக்கிறது. இனி ஏற்படப் போகும் பார்ப்பன அடக்கு முறைக்கு மார்பு கொடுக்கும் வீரர்கள் யார் என்பதையும் நமது சமூகத்தார் அறிய காலம் வந்திருக்கிறது. ஆதலால் உலகம் இதோடு முடிந்து விட்ட தென்றாவது சட்டசபையைத் தவிர சுயமரியாதைத் தொண்டிற்கு வேறு இடமில்லை என்றாவது சட்டசபைக்கு இத்தேர்தல்தான் முடிவான தேர்தல் என்றாவது கருதி யாரும் நம்பிக்கையை விட்டுவிட வேண்டியதில்லை. ஒத்துழையாமைக்கு யோக்கியதை ஏற்பட்ட தெல்லாம் தியாகமும் தன்னல மறுப்புமே அல்லாமல் சட்டசபையாலல்ல. ஆதலால், சுயமரியாதைக்கு உழைக்க இஷ்டமுள்ளவர்களும் அவ்வுழைப் பினால் ஏற்படக்கூடிய கஷ்டங்களை அனுபவிக்கத் தயாராயிருப்பவர்களும் வெளியில் வர இதுவே தக்க சமயம். அதற்குற்ற நமது வேலைத் திட்டத்தை யும் வெகு சீக்கி ரத்தில் வெளியிட எண்ணியுள்ளோம்.
(குடி அரசு - தலையங்கம் - 14.11.1926)