வரப்போகும் சட்டசபைத் தேர்தலுக்குப் பார்ப்பனரல்லாதார்களுக்கு விரோதமாகப் பார்ப்பனர்கள் எல்லோரும் அதாவது, உத்தியோக பார்ப்பனர், வக்கீல் பார்ப்பனர், மிதவாதப் பார்ப்பனர், பஞ்சாங்கப் பார்ப்பனர், வாத்தியார் பார்ப்பனர், ஒத்துழையாமைப் பார்ப்பனர் ஆகிய எல்லோரும் ஒன்றுகூடி அவரவர்கள் தங்களுக்கும் எவ்வித அபிப்பிராய பேதமும் இல்லாமல், ஏதாவது கொஞ்சம் இருந்தாலும் அதை அடியோடு மறந்து விட்டு ஒரேமாதிரி பிரசாரம் செய்து வருகிறார்கள் என்பதைப்பற்றி பல தடவை எழுதி இருக்கிறோம். உதாரணமாக உத்தியோகப் பார்ப்பனர்கள் விஷயமாய், சர்.சி.பி. அய்யர் அவர்கள் ஜினிவா மகாநாட்டுக்கு அனுப்பப் பட்டபோது ‘இந்து’, ‘சுதேசமித்திரன்’, ‘சுயராஜ்யா’முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் இது சமயம் போகிறாரே என்று ஓலமிட்டதிலிருந்தே தெரிந்திருக்கலாம்.

periyar maniammaiமிதவாதப் பார்ப்பனர்கள் விஷயத்தில் மகா மகாகனம் சீனிவாச சாஸ்திரியார் ‘இந்திய ஊழிய சங்கம் வெந்து போனதற்காக பணம் சேர்க் கிறேன்’ என்கிற பேரால் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கு சென்று பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப் பற்றி வைது பேசுவதிலிருந்தே தெரிய லாம். வக்கீல் பார்ப்பனர்கள் விஷயத்தில் “ஜமீன்தார் தொகுதிக்கு நிற் கிறேன்” என்ற பெயரை வைத்துக் கொண்டு பார்ப்பனரல்லாதார் இயக்கத் தலைவரையே தோற்கடிக்க ஜமீன்தார்கள் இடம் பிரசாரம் செய்வதிலும் பணம் செலவு செய்வதிலுமே பார்க்கலாம். உபாத்தியாய பார்ப்பனர்கள் விஷயத்திலோ என்றால், உபாத்தியாயர்கள் ஆங்காங்கு ‘உபாத்தியாயர்கள் மகாநாடு’ என்று கூடி அதற்குப் பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு விரோதி களாயிருப்பவர்களையும் பார்ப்பனர்களையுமே அழைத்து தலைமை வகிக்கச் செய்து ஒவ்வொரு உபாத்தியாயரும் தேர்தல்களில் பார்ப்பனருக்கே வேலை செய்யவேண்டும் என்று இரகசியத் தீர்மானங்கள் செய்து கொண்டு போவதிலிருந்தும் அவர்கள் அக்கூட்டங்களில் பேசுவதிலிருந்தும் தெரிந்துகொள்ளலாம்.

பஞ்சாங்கப் பார்ப்பனர்கள் என்கிற விஷயத்திலோ லோக குருக்கள், மகந்துகள், மடாதிபதிகள் என்கிற ஆசாமிகள் பணம் கொடுப்பதிலிருந்தும் அவர்களது காரியஸ்தர்களுக்கும் முக்கிய சிஷ்யர்களுக்கும் ஊர் ஊர்களில் இருக்கும் ஆசாமிகளுக்கும் இரகசிய ‘ஸ்ரீமுகங்கள்’ அனுப்பும் விஷயத்திலிருந்தும் நன்றாய் அறிந்து கொள்ள லாம். ஒத்துழையா பார்ப்பனர் என்றும் யோக்கியமான பார்ப்பனர் என்றும் சொல்லிக் கொள்பவர்களிலோ இவற்றையெல்லாம் விட ஆபத்தாயிருக் கிறது. உதாரணமாக, மகாத்மா காந்தியின் சிஷ்ய கோடிகளின் சட்டாம் பிள்ளையாகிய தமிழ்நாட்டுக் காந்தி ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச் சாரியார் அவர்களும் அவர்களுடைய பார்ப்பன சிஷ்யர்களும் செய்துவரும் பிரசாரம் மற்றெல்லாவற்றையும் விட மீறின தாயிருக்கிறது. ஸ்ரீமான் ஆச்சாரியாரின் கோடு கட்டிய குறள்களும் ‘கருப்பாயி, பாவாயி’ சம்பாஷணைகளும் ‘பொய்மான் வேட்டை’ வியாசங்களும், ‘கள்ளு நிறுத்தும் பிரசாரங்களும்’ எவ்வளவு விஷமத் தன்மை பொருந்தியிருக்கிறது என்பதை நாம் விளக்கிக் காட்ட வேண்டியதில்லை.

ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளும் எம்.கே. ஆச்சார்ய சுவாமிகளும் கலம் கலமாய் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளுவதும் சரி, நமது ஆச்சாரியார் அவர்கள் இரண்டு வரி எழுதி கோடு கட்டுவதும் சரி, பத்து கல எழுத்தின் விஷம் இந்த இரண்டு வரி எழுத்தில் இருக்கும். உதாரணமாக, “நாட்டுக்கு நல்ல காலம் வந்து விட்டது. சுயராஜ்யக் கட்சியார் கள்ளை நிறுத்தி விட ஒப்புக் கொண்டார்கள். ஓடுங்கள், ஓடுங்கள் எல்லோ ரும் ஓடிப்போய் சுயராஜ்யக் கட்சிக்கு ஓட்டு செய்துவிட்டு வாருங்கள்” என்பது போல் எழுதிக் கொண்டி ருந்தார். இவற்றையெல்லாம்விட ஒரு பெரிய விஷமம் இவரது குறள்களுக்கு மகாத்மாவின் மேலொப்பமும் வாங்கி விட்டார். பிறகு என்ன காரணத்தாலோ கொஞ்சகாலம் அஞ்ஞாத வாசமாய் இரகசிய பிரசாரத்திலிருந்தவர் இப்போது மறுபடியும் தைரியமாய் வெளிப் பட்டு வெளிப்படையான பிரசாரத்திலிறங்கியிருக்கிறார். இறக்கினவர்தான் தனியாக ஊர் ஊராய்ப் போகாமல் கூட ஒரு பார்ப்பனரல்லாத பிரசாரகரையும் அழைத்துக் கொண்டுபோய் அவரை மனதாரப் பொய்யும் புளுகும் அளக்கச் செய்து இவர் பக்கத்திலிருந்து அந்த பொய்களை பாமர ஜனங்கள் நம்பும்படி செய்து கடைசியாக சுயராஜ்யக் கட்சிக்கு ஓட்டுச் செய்யுங்கள் என்று சொல்லி உறுதிப்படுத்திவிட்டு வருகிறார்.

சமீபத்தில் சேலம் ஜில்லா சுயராஜ்யக் கட்சி அபேக்ஷகருக்காக சேலத்திற்கு தானும் ஸ்ரீமான் கந்தசாமிப் பிள்ளையுமாய் கூட்டம் கூட்டி அக்கூட்டத்தில் தான் பக்கத் துணையாய் இருந்து கொண்டு ஸ்ரீமான் கந்தசாமிப் பிள்ளை அவர்களை விட்டு ஜஸ்டிஸ் கட்சியின் பேரில் பொய்யும் புளுகும் சொல்லி வையும்படி செய்திருக்கிறார். அவற்றில் ஒரு புளுகு மலையாள மாப்பிள்ளை மூடு வண்டிக் கொடுமையைப் பற்றி சட்ட சபையில் கேள்வி கேட்டதில் ஜஸ்டிஸ் கக்ஷியார் மாப்பிள்ளைகளுக்கு விரோதமாய் கை தூக்கினார்கள் என்றும், ஜஸ்டிஸ் கக்ஷியார் உப்புவரியை இரட்டிக்க மன்றாடி போராடி உயர்த்தினார்கள் என்றும், பல தியாகிகளை வைதார்கள் என்றும், கள்ளுகளை ஒழிக்கவில்லை என்றும், கல்விக்கு ஒன்றும் செய்யவில்லை என்றும் பேசச் செய்திருக்கிறார். உண்மையில் மலையாளக் கலவரத்தின் மூடுவண்டி சம்பவத்தைப் பற்றி கேள்வி கேட்டவர் ஒரு பார்ப்பனரல்லாதார் என்பதும் அதுவும் ஜஸ்டிஸ் கக்ஷியைச் சேர்ந்தவர் என்பதும் அதிலும் ஜஸ்டிஸ் கக்ஷி மந்திரிகளின் உத்தியோக தோரணை காரியதரிசியான ஸ்ரீமான் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் என்பதும் நமது ஆச்சாரியாருக்குத் தெரியும். உப்பு வரியை இரட்டிக்க மன்றாடிப் போராடினார்கள் என்பதும் அடியோடு பொய். உப்பு வரியை உயர்த்தவும் குறைக்கவும் சென்னை சட்டசபைக்கு அதிகாரமே இல்லை. அது சுயராஜ்யக் கக்ஷியாரும் சுயேச்சைக் கக்ஷியாரும் சேர்ந்து மெஜார்ட்டியாய் உட்கார்ந்திருந்த இந்தியா சட்டசபைக்குக் கட்டுப்பட்ட விஷயம்; அவர்களது அதிகாரத்திற்கு கட்டுப்பட்டது. இதுவும் நமது ஆச்சாரியாருக்குத் தெரியும். மந்திரிகள் கள்ளை ஒழிக்கவில்லை என்பதும் தப்பு, சட்டசபையின் மூலம் கள்ளை ஒழிக்க முடியாது என்று ஸ்ரீமான்கள் ஆச்சாரியாரும் சத்தியமூர்த்தியும் எத்தனையோ தடவை எழுதியும் பேசியும் இருக்கிறார்கள். மகாத்மா காந்தியும் சட்டசபை மூலம் கள்ளை ஒழிக்க முடியாதென்றே சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க, மந்திரிகள் கள்ளை ஒழிக்கவில்லையென்று சொல்வதில் எவ்வளவு புரட்டு இருக்கிறது.

தவிர ஸ்ரீமான் தாஸ் முதலானவர்களை கிரிமினல் குற்றவாளிகள் என்று ஜஸ்டிஸ் கக்ஷியார் சொன்னார் என்று சொல்லு வதும் பெரும் பொய். ஸ்ரீமான் தாசைப் பற்றி அவர்கள் யாரும் கொலைகாரர், திருடர் என்று சொல்லவே இல்லை. ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரைப் போலவே ஸ்ரீமான் தியாகராய செட்டியா ருக்கும் ஒத்துழையாத்திட்டம் பிடிக்காததால் அத்திட்டத்தின் கீழ் ஜயிலுக் குப் போனவர்களை தனிமரியாதை கொடுத்து ஆதரிக்கக் கூடாது என்று சொன்னார். தேசபந்து தாசர் நாக்பூர் கொடி சத்தியாக்கிரகத்தில் ஜயிலுக்குப் போனவர்களை காங்கிரஸின் மூலம் ஆதரிக்கவேண்டுமென்று ஒருவர் சொன்னபோது கொடி சத்தியாக்கிரகத்தில் ஜயிலுக்குப் போனவர்கள் கஞ்சிக்கில்லாத தத்தாரிகள் அவர்களை ஆதரிக்கக்கூடாது என்று தேசபந்து தாஸ் சொன்னார். அப்படிச் சொன்னவருடைய உருவத்தை சுதேசமித்திரன் ஆபீசில் வைக்கப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி சொல்லுவதற்கு ஆள்கள் நமது பார்ப்பனர்களுக்குக் கிடைப்பதில்லை.

தவிர, பார்ப்பனரல்லாதார் படிப்புக்கு ஜஸ்டிஸ் கக்ஷியார் யாதொரு கவலையும் எடுத்துக்கொள்ளவில்லையென்றும் சொல்லியிருக்கிறார். இது மேற்கண்டவைகள் எல்லாவற்றையும்விட வேண்டுமென்றே மனதறிந்து சொல்லும் பெரிய பொய். கடவுள் என்று ஒருவர் இருப்பது உண்மையாயிருந் தால் இந்த வார்த்தைகள் சொல்லும்போதே சொன்னவர் கண்ணையும் வாயையும் சொல்லச் செய்தவரின் கண்ணையும் குயுத்தியை யும் உடனே பிடுங்கி இருப்பார் என்றே சொல்லவேண்டும். ஜஸ்டிஸ் மந்திரிகள் வந்த பிறகு நமது மாகாணத்தில் இலவசக் கல்வியும் கட்டாயக் கல்வியும் ஏற்பாடு செய்து அநேக இடங்களில் அமுலில் கொண்டு வந்திருக்கிறார்கள். 5 வயது முதல் 12 வயது வரை ஒவ்வொரு குழந்தையும் கண்டிப்பாய் படிக்க வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் பெற்றோர் களுக்கு தண்டனை என்று சட்டமும் செய்திருக்கிறார்கள். அதன் மூலம் படிக்கும் லக்ஷக்கணக்கான பிள்ளைகளில் 100-க்கு 99 பேர் பார்ப்பனரல்லாதார். இதுவும் நமது ஆச்சாரியாருக்கு நன்றாய்த்தெரியும்.

இந்த மாதிரி “உயர்ந்த தத்துவமுள்ளவர்கள், பொதுவானவர்கள், உண்மையான தேசபக்தர்கள்” என்று சொல்லப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்த மேல்கண்ட பார்ப்பனர்களின் விஷமப் பிரசாரமே இப்படி இருந்தால் மற்ற சாதாரணப் பார்ப்பனர்களின் விஷமப் பிரசாரங்கள் எவ்வளவு பொய்யை யும் புளுகையும் கொண்டிருக்கும் என்பதை வாசகர்களே யோசித்துப் பார்க்கட்டும்.

தவிர, ஸ்ரீமான் ஆச்சாரியார் பேசும்போது “ஸ்ரீமான் முனுசாமிக் கவுண்டர் எக்காரணம் பற்றியும் ஜஸ்டிஸ் கக்ஷியார் மாய வலையில் அகப் படமாட்டார்; காங்கிரஸ் கட்சியிலேயே இருப்பார் என்று பொது ஜனங்க ளுக்கு ஜாமீன் கொடுத்திருக்கிறார். இதன் ரகசியம் என்ன? ஸ்ரீமான் முனு சாமிக் கவுண்டர் ஒரு சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டால் தங்கள் அடிமையாக இருக்க வேண்டுமென்று கவுண்டரிடம் உறுதிமொழி வாங்குவதுதானே. காங் கிரஸ் கட்டளைகள் என்ன அவ்வளவு யோக்கியமானது? காங்கிரசின் யோக் கியதையையும் நாணயத்தையும் பார்க்க ஒரே ஒரு உதாரணம் போதாதா? சட்டசபையை விட்டு எல்லோரும் வெளிக் கிளம்பினதும் மறுபடியும் உள்ளே நுழைந்ததும் யோசித்துப் பார்த்தால் ஸ்ரீமான் ஆச்சாரியார் போன்றவர்கள் கடுகளவாவது யோக்கியப் பொறுப்புள்ளவர்களாயிருப்பார் களானால் சுய ராஜ்ஜியக் கட்சி அபேக்ஷகருக்கு ஓட்டு போடும்படி சொல்ல மனம் வருமா?

ஸ்ரீமான் சர்.பி. தியாகராய செட்டியார் அவர்கள் ஒரு காலத்தில் அரசியல் பார்ப்பனர்கள் எல்லாம் அயோக்கியர்கள் என்று சொன்னார் என்று சமீபத்தில் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் எழுதியிருந்தார். இதிலி ருந்து ஸ்ரீமான் செட்டியாருக்காவது ஒரு வித தெளிவு இருந்ததாய் தெரிய வருகிறது. ஆனால் நமக்கு வேறு எந்த இயல் பார்ப்பனர்கள் தான் யோக்கியர் என்று சொல்ல முடியாமல் இருக்கிறது. ஆதலால் வரப்போகும் தேர்தல்களில் பார்ப்பனரல்லாத பொதுமக்கள் எந்தக் காரணம் கொண்டும் ஏமாந்து போய் பார்ப்பனருக்கு ஓட்டு செய்து தங்கள் சமூக முன்னேற் றத்திற்கே தடையும் அழிவையும் தேடிக் கொள்ளாமல் கண்டிப்பாய் பார்ப்பனரல்லாதாருக்கே ஓட்டு செய்து தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமாய்க் கோருகிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 24.10.1926)